சந்தி்ப்பு-6 ஆ.மாதவன்திருவனந்தபுரம் சாலை தெருவில் ஆ.மாதவன் அவர்களை அவரது பாத்திரக்கடையில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அது தொண்ணூறுகளின் ஆரம்பக் காலம். நானும் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். புதிய பார்வை, கணையாழி, செந்தூரம் இதழ்களில் எனது படைப்புகளுடன் ஆ.மாதவனுக்கு அறிமுகம் ஆனேன். சுந்தர ராமசாமியை சந்தித்து வந்ததை சொன்ன போது மிகுந்த அன்புடன் அமர வைத்து பேசினார். தமது கடைக்கு வந்த நவீன கவிஞர் ஒருவர் குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும் பஸ், உணவுக்கு மட்டும் பணம் தருவேன் என்ற தமது கொள்கையை விளக்கியதாகவும் ஆமாதவன் கூறினார். ஆனால் குடிக்க பணம் கிடைக்காத ஆத்திரத்தில் கடையில் இருந்த சாமான்களையெல்லாம் தூக்கி எறிந்து வீதியில் அதகளம் பண்ணி மண்ணை வாரி சபித்து விட்டுச் சென்றாராம் அந்தக் கவிஞர். சொல்லி மாளவில்லை மாதவனுக்கு. எனக்கு சிரிப்பு வந்தபோதும் அந்த கவிஞருக்காகவும் மாதவனுக்காகவும் மனதுக்குள் அழுதேன். எனக்கும் இதுபோன்ற சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன
அவரது சிறுகதைகளை அப்போதே பழைய புத்தகங்களில் தேடிக் கண்டுபிடித்து தனித்தனி தொகுதிகளில் படித்திருக்கிறேன். பல கதைகள் அற்புதமாக இருந்ததையும் வாசிப்பு அனுபவத்தில் இன்றும் பசுமையாக உள்ளன. கடந்த வாரம் ஒருமுறை வீட்டில் புத்தகங்களை சுத்தம் செய்த போது ஆ.மாதவனின் முழுத் தொகுப்பு சிக்கியது. நண்பர் தமிழினி வசந்தகுமார் இதனை வெளியிட்டுள்ளார். வேதசகாயகுமாரின் விரிவான முன்னுரை ஒவ்வொரு கதையாக அலசுகிறது.ஆனால் வி.எஸ்.கே சாரின் இலக்கியப் பார்வையுடன் பல முறை நான் மிகுந்த மரியாதையுடன் முரண்பட்டிருக்கிறேன். சில நேரங்களில் அவரும் ஜெயமோகனைப் போல் தடாலடியாக மதிப்பீடுகளை வைப்பார்

ஆ.மாதவன் கதைகளை மீண்டும் படிக்கலானேன். சில நல்ல கதைகளை குறித்து விரிவாக எழுதவும் நினைத்தேன். கூடவே ஜெயமோகன் எழுதிய கடைத்தெரு கலைஞன் என்ற விமர்சன நூலையும் எடுத்து வைத்தேன்.

இந்நிலையில்தான் நேற்று( 17.12.21015) ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக குறுஞ்செய்தி கிடைத்தது. மகிழ்ச்சியடைந்தேன்,
ஆனால் அவருக்கு இந்த சாகித்ய அகாடமி விருது சிறுகதைகளுக்காகவோ, கிருஷ்ணப் பருந்து போன்ற நாவலுக்காகவோ கிடைக்கவில்லை. இலக்கியச் சுவடுகள் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக கிடைத்திருக்கிறது. இநத் தொகுப்பை நண்பர் உதயகண்ணன் தமது அன்னை ராஜேஸ்வரி புத்தக நிலையம் மூலம் வெளியிட்டுள்ளார். இதே பதிப்பகம்தான் எனது சிறகுப் பருவம் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டது.ஆ.மாதவன் சாருக்கு மானசீகமாக வாழ்த்து கூறிக் கொண்டேன்.நுட்பமான படைப்பாளிகளை ஏதோ ஒரு நகரத்தின் மூலையில் ஏதோ ஒரு பிழைப்பு நடத்தி வாழ விதித்துள்ள தமிழ்சாதி அவரை பிரபல எழுத்தாளராக்கி விருது கிடைத்ததை சிலாகிக்கிறது.

இன்னும் எத்தனை மாதவன்களையும் செந்தூரம் ஜெகதீஷ்களையும் நாம் விருதுகள் மூலமாக மீட்டெடுக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. இந்த விருதுகளும் பாராட்டுகளும் அவரது படைப்புகளுக்கு கிடைத்த மரியாதை என்று கொள்ள வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் ஆ.மாதவனை தீவிரமாகப் படித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்

விருதுகளால் படைப்பாளிக்கு சில பலன்கள் கிடைக்கும். அவரது புத்தகங்களுக்கு பதிப்பாளர்கள் கிடைப்பார்கள்.பழைய நூல்கள் மறுபிரசுரம் ஆகும். வீட்டில் கொஞ்சம் மரியாதை கிடைக்கும். விலகிப் போன நண்பர்கள் தேடி வருவார்கள். கொஞ்சம் பணம் கிடைக்கும். அப்புறம்.......
மீண்டும் அவர் ஏதோ ஒரு மூலையில் பெட்டிக்கடையோ பாததிரக்கடையோ வைத்து பிழைப்பை பார்க்க போக வேண்டியிருக்கும்.
Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்