Sunday 13 December 2015

சிறகுப் பருவம் பற்றிய ஒரு விமர்சனம்


செந்தூரம் என்னும் சிற்றிதழ் வழி இலக்கிய உலகில், வெகுவாக அறியப்பட்டவர் ஜெகதீஷ். ‘செந்தூரம் ஜெகதீஷ்’ என்று பெயர் பெற்றவர். கிடங்குத் தெரு, செந்தூரம் ஜெகதீஷ் கவிதைகள் என்னும் தொகுப்புகளைத் தொடர்ந்து ‘சிறகுப் பருவம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பை அளித்துள்ளார். மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
‘வலியறிதல்’ முதல் கதை. சக எழுத்தாளர், தன்னால் உயர்வு பெற்றவன், தன்னை நினையாமல், மதியாமல் போனதால் ஏற்பட்ட வலியைக் கூறுகிறது. 'ஒரு நண்பனாயிருப்பது எத்தனை பெரிய வலி. ஒரு நல்ல மனிதனாக இருப்பது போன்ற வேதனைiயும் வலியும் வேறு எதிலும் உண்டா? வேலை இழப்பது ஒரு வலியில்லையா?’ என மற்ற வலிகளையும் பேசியுள்ளது. ஆசிரியர் கூற்றாக அமைந்துள்ளது. இரண்டாம் கதையும் ‘வலி’ பற்றியதே. வேலைக்கார பெண்ணின் தாய் இறந்ததற்காக மிகவும் வருந்தி தன் பிரிய மகளின் பிறந்த நாளைக் கவலையுடன் கொண்டாடுகிறான். ஆனால் அந்த வேலைக்காரப் பெண் படு எதார்த்தமாக பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறாள். இதனால் நாயகனுக்கு வலிக்கிறது. இது வேறுவிதமான வலி.
ஆசிரியரின் ‘குரல்’ வடிவத்தில் மாறுபட்டுள்ளது. கடித வடிவில் எழுதப்பட்டுள்ளது. மறுத்த, புறக்கணித்த காதலியின் குரலைக் கேட்க விரும்பும், கேட்டு அனுபவித்த ஒரு காதலனின் உணர்வு. ஆயினும் குரலில் வலிமை இல்லை.
இயல்புக்கு புறம்பாக புனையப்பட்டுள்ளது ‘கொல்லிப் பாவை’. கோவை குண்டு வெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளியைக் காட்டுக்குள் தேடிச் சென்ற ஒரு பத்திரிக்கையாளனை காட்டில் இருக்கும் ‘கொல்லிப் பாவை’ வசீகரித்து தழுவுகிறது. இவர்களைக் காடு விழுங்கி விடுவதாக கதை முடிகிறது. மாயையாக உள்ளது. கதையின் முன் பாதி மறைந்த சந்தன வீரப்பனைத் தேடிக் காட்டுக்குள் சென்ற ஒரு பத்திரிக்கையாளனை நினைவூட்டுகிறது.
'வாழ்க்கையில் துக்கம் வரும் போதெல்லாம் மனிதர்கள் பசுமை நிறைந்த பால்ய காலங்களை எண்ணி மகிழ்வர். அந்த நினைவுகள் நீங்காமல் மனித வாழ்வின் ஆதாரமாகவே இருக்கக்கூடும்' என்னும் தத்துவத்துடன் தொடங்குகிறது ‘சிறகுப்பருவம்’. ஒருவன் தீவிர இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் சேமிக்கிறான். புத்தகங்கள் பழைமையானவை. மற்றவன் காமிக்ஸ், துப்பறியும் நாவல்கள், சாகசக் கதைகள் தொடர்பான நூல்கள் சேமிக்கிறான். இவை புதியவை. பாதுகாக்கவும் ஓர் அறை. முன்னவனை பின்னவன் பரிகாசிக்கிறான். கேலிக்கிறான். வாழக்கையையே தொலைத்ததாக கிண்டலிக்கிறான். ஆனால் தீவிர இலக்கியம் பேசியவன் மேதைமையை இழக்காமல் ‘‘மேதைமை ஏழைகளுக்கு மட்டுமே உரிய செல்வம் ‘‘ என்று பெருமையுடன் கூறிச் செல்கிறான். இலக்கியவாதிகளைப் பெருமைப்படுத்துகிறது. ‘மயிலிறகு’ கதையும் புத்தகச் சிறப்பையே பேசுகிறது. புத்தக அருமைத் தெரியாமல் புத்தகங்களை எடைக்கு வாங்கி விற்கும் ஒரு பழைய புத்தக வியாபாரி. அங்கு வரும் நல்ல நூல்களை விலை கொடுத்து வாங்கி வாசிக்கும் ஓர் இலக்கியவாதி. கம்பராமாயணம் வாசிக்கும் ஓர் ஆட்டோக்காரன். புத்தகங்கள் விலை மதிப்பற்றவை என்று கதை உணர்த்துகிறது. புத்தக பிரியல்களை போற்றுகிறது. இடையே நூலகத்தையும் விமரிசிக்கிறது.
மருமகளை மற்றவன் தவறாக பார்ப்பதை விரும்பாத மாமனார். மாமனாரே தவறாக பார்க்கிறார் என குற்றம் கூறும் மருமகள். துணை போகும் மகன். மூன்று பாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை ‘முறிவு’. மழையை ரசிக்கும் மென்மையான குணம் கொண்டவர் மீதான களங்கம். முதியோர்களின் பிரச்சனைகளைப் பேசியள்ளது.
‘ஆளும் வளரனும் அறிவும் வளரனும். அதுதான் வளர்ச்சி’ என ஒரு திரைப்பட பாடல் உண்டு. இந்நூலாசிரியர் எழுத்தை ‘வளர்ச்சி’ என்கிறார். 'எழுத்தும் ஒரு மனிதன். அது ஒரு மன வளர்ச்சி. மன முதிர்ச்சி’ என எழுத்தின் அவசியத்தை ‘வளர்ச்சி’ மூலம் அறிவுரைத்துள்ளார். எழுத்தின் மூலம் வெற்றிக் கிட்டும் என் இக்கதைச் சுட்டுகிறது.
‘தும்சே களூP இக் பாத்’ என்னும் தலைப்பில் ஒரு கதை. இது ஒரு சினினா பாடல் வரி. ‘இந்தி சினிமா பார்ப்பதுண்டா மீனாட்சி?' என்னும் உரையாடலுடன் கதைத் தொடங்குகிறது. கதையே மீனாட்சி யார் என்பது தான். பல வருடங்களுக்கு முன் ஒரு விளம்பரத்தில் கண்ட பெண் முகமே தற்போது மீனாட்சியாக கனவில் வந்துள்ளது என்கிறார். 'தமிழிலேயே படிக்க வேண்டிய புத்தகங்களும் பார்க்க வேண்டிய படங்களும் குவிஞ்சிக் கிடக்கிறன்றன. ஆனால் தமிழையும் சேர்த்துதான் புறக்கணிக்கிறோம். ஆனாலும் வாய்க்கிழிய தமிழ் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். ஒரு மொழி எப்போதும் இன்னொரு மொழிக்கு விரோதமல்ல. ஒரு மதம் மற்றொரு மதத்துக்கு விரோதமானது அல்ல. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எதிரியல்ல் என உரையாடலின் வழி அரிய கருத்துக்களை அலசியுள்ளார்.
ஒரு குடும்பத்தில் முதல் ஆண் மகனாக பிறப்பது எவ்வளவு சிரமம் என்னும் பொருளில் அமைந்த கதை ‘மிதப்பு’. குடும்பத்துக்காக பல தியாகங்களை செய்தும் இறுதியில் அவன் குடும்பம் ‘அதாவது அவனும் மனைவியும்’ ஆதரவற்ற நிலையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் அவன் தோற்கடிக்கப்பட்டதாக கதைக் கூறுகிறது.
எதார்த்த வாழ்க்கைக்கும் இலக்கிய மனத்துக்கும் எவ்வளவு இடைவெளி என அளந்து காட்டியது ‘கனவு தேசத்து ராஜாக்கள்’. வாழ்க்கை என்னும் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் இலக்கியவாதியின் நிலையைக் காட்டியது. ஓர் இலக்கியவாதியை எந்த பெண்ணும் மணக்க முன்வர மாட்டாள் என்று கூறும் கதை ‘கனவுகள்’. கவிதை மயத்துக்கும் கணித மயத்துக்கும் ஒத்து வராது என்கிறார். எதார்த்த வாழ்வினர் இலக்கிய வாழ்விற்குள் வரமாட்டார் என்றும் விவரிக்கிறது.
ஓரு புதிய தரிசனத்தை ஏற்படுத்தியது ‘தரிசனம்’. கடவுள் பக்தி மிகுந்த அம்மா. நம்பிக்கை இல்லை எனினும் அம்மாவிற்காக கடவுளை வணங்குகிறான். ஒரு கலவரத்தில் வெட்டுப்பட்டும் பிழைத்தவனை அல்லா காப்பாற்றியாக குறிப்பிடும் மருத்துவர். முடிவில் பிரசாதத்தை மகன் தந்தும் நெற்றியில் வைத்துக் கொள்ளவில்லை அம்மா. கடவுள் இல்லை என்னும் கருத்துடன் அம்மாவே தெய்வம் என்னும் உண்மையையும் புலப்படுத்துகிறது. நதியை, குருவியை, தவளையை தெய்வம் என்றும் ‘இயற்கையோடு ஒன்றி வாழ்வதெல்லாமே தெய்வீகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
மனம் ஒரு குரங்கு என்பர். செந்தூரம் ஜெகதீஷ் ‘மனம் ஒரு பறவை’ என்கிறார். ஆனால் அப்பறவை ஒரு குரங்கின் கையில் சிக்கியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை ‘மனப்பறவை’. சந்தேகப் படுபவன் மனைவியையும் படுவான் மற்றவரையும் படுவான் என்று உணர்த்துகிறது. சந்தேகர்களைச் சாடுகிறது. பறவை என பொதுவாகச் சொல்லாமல் அமைதியான வேளையில் புறா என்றும் ஆர்ப்பாட்ட சூழலில் கழுகு என்றும் குறிப்பிடலாம் என்கிறார்.
இரத்தல் இழிவு என்பர். இழிவு மட்டுமல்ல கடிதுமாகும். இரப்பவரின் ‘மனசு’ என்ன பாடுபடும் என காட்டுகிறது மனசு. பசிக்கிறது என்றவரை ஒரு பெண்மணி உழைக்க அறிவுறுத்தி சோறு போட மறுத்து காக்கைக்கு உணவிடுகிறார். மற்றொருவன் உதவாமல் மார்க்சியம் பேசி பிரச்சாரம் செய்கிறான். ஒரு சிறுமி மட்டுமே தன்னிடமிருந்த முறுக்கை உடைத்துத் தருகிறது. அவனுக்கு மனமும் வயிறும் நிறைகிறது. சிறியதாயினும் பல்வேறாய்ச் சிந்தனைகளை விரியச் செய்கிறது..
ஒரு நல்ல கலைஞன் ஒரு நல்ல மனிதனாக இல்லை என எழுதத்தோவியமாய்க் காட்டுகிறது ‘முரண்’. ‘கலைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள முரண்களின் குரூரம் என்னை உலுக்கி விட்டது ் என்கிறார். வாசகரையும் உலுக்கச் செய்கிறது.
மரணம் நெருங்கும் நிலையிருக்கும் ஒரு மனிதன் விற்பனையாளனிடமிருந்து ஒரு ‘கூண்டுப்பறவை’யை வாங்கி பறவையையும் சுதந்திரமாக பறக்கச் செய்து கூண்டையும் தொடர் வண்டி சக்கரத்தில் வீசி நசுக்கச் செய்து விடுகிறான். சிறைச் சாலைகளையும் திறந்து விட வேண்டும் என்கிறார். முடிவில் ‘காயத்ரி’ கூண்டுக் கிளியாக வாழ்வதற்கு வருந்துகிறான். பல ‘காயத்ரி’கள் கூண்டுக்கிளிகளாகத்ததானே வாழ்கிறார்கள். இக் ‘கிளிக்கூண்டு’ அனைத்து உயிர்களுக்குமே சுதந்திரம் வேண்டுகிறது.
‘மின்தடை’யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது ‘குழப்பமும் தெளிவும்’. ஒரு குடிமகனின் நியாயமான கோபத்தையும் புலம்பலையும் காட்டி அரசு ஊழியர்களையும் அமைச்சர்களையும் விசாரணைச் செய்துள்ளார்.
இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்கக் கதை ‘மூர் மார்கெட்’. மூர் மார்கெட் எரிந்து சாம்பலான போது பல இலக்கியவாதிகள் பெரிதும் கவலைப்பட்டார்கள். இக்கதையாசிரியரின் கவலையே இச்சிறுகதையாக வெளிப்பட்டுள்ளது. கதை நெடுக இளம் பிராய அனுபவங்களை நினைவுக் கூர்ந்ததுடன் மூர் மார்க்கெட் சிறப்பையும் சொல்லியுள்ளார். ்இன்று நாம் பார்க்கிறது நாளைக்கு இருக்கும்னு நிச்சியமில்ல. உத்தரவாதம் கிடையாது. ஒரு முறை மூர் மார்கெட்டைப் பார்த்துடலாம்’’ என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையற்று வாழ்பவன் ஒருவன். நம்பிக்கையுடன் இயங்குபவன் மறுவன். முன்னவனின் மனம் இருளாகவே இருக்கிறது. ஒர மனநோயாளியாக நடமாடுகிறான். பின்னவன் நேர்மாறாக உள்ளான். ஆனால் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டான் இரண்டாமவன் என கதையை முடித்து அதிர்ச்சியேற்படுத்துகிறார். ஒரு கணத்தின் முடிவே தற்கொலைக்கு போதுமானது என்கிறார். மனிதர்களின் மனப்போக்கைக் காட்டுகிறது
‘சிறகுப் பருவம்’ என்னும் இத்தொகுப்பில் இருபது கதைகள் உள்ளன. இருபதிலும் எழுத்தாளாpன் இளகிய மனமும் இலக்கிய மணமும் வெளிப்பட்டுள்ளன. பெரும்பாலான கதைகளை இலக்கிவாதியை மையப்படுத்தியே எழுதியுள்ளார். எழுத்தையும் எழுத்தாளனையும் உயர்வாகவே காட்டியுள்ளார். எதார்த்தமான வாழ்வுக்குள் சிக்கிச் சுழலும் மனிதர்களின் உணர்வுகளையே பேசியுள்ளார். வாழ்வின் முரண்களையும் மனிதர்களிடையேயுள்ள வேறுபாடுகளையும் கதைகளின் வழி அறியச் செய்துள்ளார். எழுத்தாளரின் சித்தரிப்புகளில் காணப்படும் மனிதர்கள் சராசரியாக சமூகத்தில் இயங்குபவர்களே என்பது கவனிப்பிற்குரியது. ஒன்றிரண்டு கதைகள் புனைவாக ஒரு மாய உலகத்தைக் காட்டுகின்றன. ஆசிரியரின் கூற்றாகவே அனேகக் கதைகள் அமைக்கப்பட்டு ஒரு நல்ல ‘கதை சொல்லி’யாக விளங்குகிறார். கதைகள் எழுதிய காலங்கள் பல ஆகி விட்டதால் வீரியத் தன்மை குறைந்துள்ளதை மறுப்பதிற்கில்லை. ்சில கதைகள் தவிர என்னுடைய முத்திரைக் கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன் என்கிறார் என்னுரையில் செந்தூரம் ஜெகதீஷ். தொடர்ந்து முத்திரைப் பதிக்க வாழ்த்துக்கள்.
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 41 கல்யாண சுந்தரம் தெரு பெரம்பூர் சென்னை 600011
விலை ரூ 70.00

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...