அஞ்சலி - இந்தி நடிகை சாதனா

பழம் பெரும் இந்தி நடிகை சாதனா டிசம்பர் மாதத்தின் இறுதியில் காலமானார். அவருக்கு வயது 74
சிறுவயதில் நான் பார்த்த சில இந்திப்படங்களில் சாதனா என்ற நடிகை மனதில் நின்றார்.
முதன்முதலாக மும்பை சென்ற போது எனக்கு வயது 20 கூட ஆகவில்லை. அ்போது மேரா சாயா படம் அங்கிருந்த நாவல்டி திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போதே அது பழைய படம்தான். பழைய படங்கள் திரையரங்கில் ஓடும் காலத்தைத்தான் நாம் காலாவதியாக்கிவிட்டோமே
மேரா சாயாவில் சாதனா மிகுந்த அழகும் திறமையும் கொண்டு நடித்திருந்தார். லதா மங்கேஷ்கரின் இனிமையான நான்கைந்து பாடல்களுக்காகவும் சாதனாவுக்காகவும் அநத்ப் படம் மனதைக் கவர்ந்தது. நைனோன் மே பத்ரா சாயே என்ற பாடல் இன்றும் எனக்குப் பிடித்த அருமையான பாடல் . சித்தார் இசையும் ஓர் எதிரொலி போல் ஒலிக்கும் லதாவின் குரலும் காதுகளில் ரீங்காரம் இசைக்கும்.

டைட்டான சுடிதார், லெகிங்ஸ், சல்வார் கமீஸ் என்று தமிழச்சிகள் உட்பட இந்தியப் பெண்கள் அணியும் இன்றைய நாகரீக ஆடைகளுக்கும் அவர்தான் முன்னோடி. பிறப்பில் சிந்தி இனத்தவரான சாதனா இயல்பாக என் கவனத்தைக் கவர்ந்தார். நானும் சிந்தி இனத்தில் பிறந்தவனாக இருப்பினும் இது சாதி இனப்பற்றை மீறிய ஈர்ப்புதான்.
சாதனாவை மீண்டும் ரசித்தது வக்த் என்ற படத்தில் மேரா சாயாவில் சுனில் தத்துடன் நடித்த அதே சாதனா அதே சுனில்தத்துடன். ஆனால் இந்தப்படத்தில் கூடுதலான கிளாமர். ஒருகாட்சியில் பிராவும் ஷார்ட்சும் அணிந்து நீச்சல் குளத்திலிருந்து எழுந்து வருவார். பல இரவுகளில் தூக்கம் கலைத்த காட்சி அது.
.யார் நீ என்ற இந்திப்படத்தின் மூலமான வோ கோன் தீ படத்தில் ஜெயலலிதா நடித்த வேடத்தில் நடித்தவர் சாதனா. இதிலும் லதா மங்கேஷ்கரின் இனிமையான பாடல்கள் அதே மதன்மோகன் இசையில் இடம் பெற்றிருந்தன. தமிழில் இதே பாடல்களை வேதா இசையமைத்து பி.சுசிலாவைப் பாட வைத்திருந்தார்.
இதே போல் ஏக் ஃபூல் தோ மாலி படத்தில் சஞ்சய் கானின் ஜோடியாக நடித்த சாதனா அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்திலும் ஒரு மழைக்காட்சியில் ஈரம் சொட்ட சொட்ட தனது அழகை சொட்டினார்.
ஆர்சூ என்ற படத்தில் ராஜேந்திர குமாருடன் இணைந்து ஒரு சோகமான காதல் பிரிவை நடித்துக்காட்டி கண்ணீர் ததும்ப வைத்தார். தனது ரசிகர்கள் தனது இளமையான அழகான தோற்றம் குறித்த கற்பனையை கலைத்து விடக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக தனது முதிய உருவத்தின் புகைப்படத்தைக் கூட அச்சிட அவர் அனுமதிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி அவருடைய சில முதுமைப்படங்கள் பத்திரிகைகளில் இடம் பெற்றன. அண்மையில் இவர் காலமான போதுதான் வயதான காலத்தில் சாதனா எப்படி காட்சியளித்தார் என்பதை ரசிகர்கள் தெரிந்துக் கொண்டனர்.

ஒரு தேவதைபோல் இந்தி சினிமாவில் வலம் வந்த அழகான பெண்ணின் மறைவுக்காக வருந்தலாம்.Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்