Monday 14 December 2015

அரிதினும் அரிது கேள் 19 -நீளவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.....



வாழ்வே மாயம் திரைப்படத்தில் எனக்குப் பிடித்த சில பாடல்கள் உண்டு. அதில் நீளவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்ற பாடல் அற்புதம்
கங்கை அமரன் இசையில் வாலி எழுதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமையான குரலில் இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் நான் ஒருதலையாக காதலித்த ஒரு பெண்ணின் முகம் என் கண் முன்னே நிழலாடிச் செல்கிறது. படத்தில் அது ஒரு கல்யாண காட்சி. அம்பிகா கௌரவ நடிகையாக மணப்பெண்ணாக இருப்பார். ஸ்ரீதேவி பூவும் பட்டுப் புடவையுமாக மகாலட்சுமி போல மங்களகரமாக இருப்பார். கமலும் செம ஸ்மார்ட். இந்தப் பாடலின் ஒரு பகுதியில் கமல் முன்னகர்ந்து பாடியபடியே வர ஸ்ரீதேவி தயங்கி பின்னகர அருகில் மின்விளக்குகள் எரியும். அதில் அவர் மோதுவதைக் கண்டு கமல் பாடலை நிறுத்தாமல் ஜாடையிலேயே சுட்டிக் காட்டி ஸ்ரீதேவி விலகிச் செல்லும் காட்சி ஒரு மௌன கவிதை, இப்பாடலே உள்ளுக்குள் மௌனத்தை சுமந்த ஒரு இசைக்காவியம் என்று கூறலாம், பாடலின் இடையே வரும் பியானோ, வயலின்,கிட்டார், ஷெனாய் இசை ஒரு கல்யாண கச்சேரியின் காட்சிக்கு ஏற்ப இசை தாண்டவமாடுகின்றது.



நீளவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவி தாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
ஸ்ரீதேவியே என் ஆவியே ஊடல் ஏன் கூடும் நேரம்



நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்

விழியில் ஏன் சோகமோ
விரகமோ தாபமோ
நீயில்லையேல் நானில்லையே
தோளில் சாய்ந்து கூடும் நேரம்

இந்தப் படத்தில் வாழ்வே மாயம் என்ற தலைப்பு பாடல் ஜேசுதாஸ் பாடியது,இதுவும் வாலி எழுதிய பாடல்தான். தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரம் அம்மா என்ற வரிகள் கண்ணதாசன் பாடல் என்று எண்ண வைத்தன. பின்னர் இவை வாலி எழுதிய வரிகள் என்று தெரிந்தது.
கருவோடு வந்தது தெருவோடு போவது என்பது கண்ணதாசனுக்கும் வாலிக்கும் கூட நேர்ந்து விட்டதே. சாவே உனக்கொரு சாவு வராதா....

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...