அரிதினும் அரிது கேள் 22 - கால் போன பாதைகள் நான் போன போது.....

Image result for keladi kanmani songImage result for keladi kanmani song
அது எண்பதுகளின் இறுதியாண்டு.....ஓர் ஏப்ரல் மாதத்தில் அவன் கோ ஆப்டெக்ஸ் கைத்தறி வாசலில் பேருந்துக்காக காத்திருந்தான். அப்போது முன்னால் நின்ற பெண் மீது அவன் கவனம் திரும்பியது. கருப்பு புடவையும் கருப்பு ரவிக்கையும் அணிந்து கருகமணி மாலை போட்ட அவள் பின்னங்கழுத்தையும் ரவிக்கைக்கு கீழ் இருந்த இடுப்பின் பின்பக்கத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென அவன் கவலைகள், துயரங்கள் அத்தனையும் மறந்துப் போனது. அந்தப் பெண்ணுடன் பேசினான். அவள் ஏற்கனவே அவனுக்கு அறிமுகமானவள்தான். ஒரு கரும்பு ஜூஸ் சாப்பிடலாமா என்று அழைத்த போது வந்தாள். இருவரும் கோ ஆப்டெக்ஸ் உள்ளே நடந்தார்கள். பேசினார்கள், இருவருக்குள்ளும் அந்நியத்தன்மை மறந்து நட்பு மலர்ந்தது.
அப்புறம் அவள் வீட்டுக்கு அவன் போனான். ஒரு முறை முத்தமிட்டான். அத்துமீற முயன்ற போது அவள் தடுத்து விட்டாள். வேண்டாம் என்றாள் .ஏனென்றால் அவனுக்கு ஏற்கனவே மணமாகி விட்டது.
மனைவிக்கும் அவனுக்கும் கடும் சண்டை. இருவரும் ஒன்று சேரவே வழியில்லாத இடைவெளி அடைத்துக் கொண்டிருந்தது. இருவரும் தனித்தனி படுக்கையில் படுத்தனர். அவனை வார்த்தைகளால் அவள் தினமும் சுட்டெரித்தாள்.
அவன் பெண் ஸ்பரிசத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தான். 25 வயதில் திருமணமாகாத அவளும் ஆண்துணை தேடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் நெருங்கியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் அவள் சமூகத்திற்காக பயந்தாள். தினமும் வேலை இல்லாமல் கன்னிமாரா நூலகத்தில் பசியோடு புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு அவள் கீரையும் ரசம் சாதமும் கொண்டு வருவாள். அப்போது அந்த அன்பும் அவள் தரும் பத்து இருபது ரூபாய்களும் சொர்ககம். ஒரு முறை மியூசியம் உள்ளே அழைத்துச் சென்று அவளை திமிங்கலத்தின் எலும்புக்கூட்டுக்கு நடுவே வைத்து அவன் முத்தமிட்டான். அப்போது ஒரு ஊழியர் பார்த்து மிரட்ட கையில் இருந்த நூறு ரூபாயை அவள் தர அங்கிருந்து தப்பிவந்தார்கள். இன்னொரு முறை வள்ளுவர் கோட்டத்திலும் முத்தமிட்டார்கள். திருக்குறளின் காமத்துப் பால் கல்வெட்டுகளுக்குப் பின்னால் அவர்களின் உதடுகள் தாகத்துடன் ஒன்றை ஒன்று பருகின. ஒருமுறை ஒருமழை நாளில் அவன் விருப்பத்திற்காக அவள் பாவாடை தாவணி அணிந்து தேவதை போல் அவனுக்காக வந்தாள். கோவிலுக்குப் போனார்கள்.
இருவரும் நான்கைந்து சினிமாவும் பார்ததார்கள். பாலுமகேந்திராவின் வீடு, பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
புதுப்புது அர்த்தங்கள் அவர்களின் கதையேதான்.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்றமுதல் பாடலில் நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே என்ற வரிக்காக அவன் அழுதபோது அடையாறு கணபதிராம் தியேட்டரின் இருட்டில் அவள் அவனுக்கு ஆறுதல் தந்து கண்ணீரைத் துடைத்தாள். கைவிரல்களுடன் விரல்களைக் கோர்த்துக்கொண்டாள்.
கேளடி கண்மணி பாட்டில் நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா என்ற வரிக்காக மீண்டும் அழுதான்.

அவள் மீண்டும் ஆறுதல் தந்தாள்
இப்படியே நான்கு ஆண்டுகள் அவர்கள் பழகினார்கள்.....

அந்தப்பாடல் அவனுக்கு மறக்க முடியாத பாடல், அவள் மறந்துவிட்டாள்.  
வேறொரு வசதியான மாப்பிள்ளை வாய்த்தும் அவன் உறவைத்துண்டித்து அவள் போன நாளில் அவன் அதே பேருந்து நிலையத்தில் தனித்து நின்றிருந்தான்.  

கண்போன போக்கிலே கால் போகலாமா 
 கால்போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா


என்ற எம்ஜிஆரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.  

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்,  
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும், 
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் 

என்று வாலி எழுதிய வரிகள் ஒலித்த போது,அவனுக்குள் இருந்த காதலன் செத்துப் போய் ஒரு புத்தன் பிறந்தான். 

அவன் யார் என்று கேட்காதீர்கள்,நான்தான் என்றும் கூறி கேள்வி எழுப்பாதீர்கள். அந்தப்பெண் யார் என்று சொல்லமாட்டேன். மு.மேத்தாவின் கவிதை வரி போல் இந்த ஊருக்கு பழி சொல்ல தெரியும் வழி சொல்ல தெரியாது. அப்புறம் அது நான் அவனில்லை என்றும் கூற என்னால் முடியும் அல்லவா......
இதோ அந்தப்பாடல், பாடலாசிரியர் கால்போன பாதையில் மனம் போகலாமா என்று எழுதிய அதே வாலி தான்.
இசை இளையராஜா பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கோவாவின் கண்களை அள்ளும் கடற்கரையில் சித்தாரா அந்தப் பெண்ணின் திரைவடிவமாகவே தோன்றினாள். ரகுமானாக அவன் மாறிப்போனான்.


கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

நாள் முழுதும் நான் எழுதும் ஓர் கவிதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி

எந்நாளும் தான்தேநீர் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்

இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல்பாடல்தான்
 
கானல் நீராய் தீராத தாகம், கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை,நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
கேளடி கண்மணி........
நீங்காத பாரம்என் நெஞ்சோடுதான்....நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்....நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது.....
கால் போன பாதையில் நான் போன போது.....நீதானே கைசேர்த்து மெய்சேர்த்த மாது.....
கேளடி கண்மணி பாடகன் சங்கதி....... 

Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்