Tuesday 15 December 2015

அரிதினும் அரிதுகேள் 20 மாயனின் லீலையில் மயங்குது உலகம்




அன்னக்கிளியைத் தொடர்ந்து இளையராஜா இசையமைத்த பாலூட்டி வளர்த்த கிளி, கவிக்குயில், சிட்டுக்குருவி போன்ற பறவை பெயரில் படங்கள் வந்தன, அதிலும் இளையராஜா சலிக்காமல் அபாரமான பாடல்களை தந்தார். தாம் இசையமைக்க வந்த போது சுசிலா டிஎம்எஸ் போன்றவர்கள் புதிய தலைமுறை நடிகர்களுக்கு பொருந்தாமல் போனதாக கூறியுள்ளார். அதனால் எஸ்.பி.பி. எஸ்.ஜானகி ஆகியோரையே தாம் அதிகமாக சார்ந்திருக்க நேர்ந்தது என்றும் இசைஞானி குறிப்பிட்டுள்ளார். கவிக்குயில் வந்த போது ஸ்ரீதேவிக்கு இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. அவருக்கு எஸ் ஜானகியின் குரல் அற்புதமாக பொருந்தியது. சின்னக்கண்ணன் அழைக்கிறான், குயிலே கவிக்குயிலே போன்ற எஸ்.ஜானகியின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக இருந்தன. உதயம் வருகின்றதே மலர்கள் மலர்கின்றதே என்று இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஹம்மிங்குடன் ஜானகி பாடிய பாடலும் படத்தில் இடம்பெறாத நிலையிலும் செம்மை ஹிட் பாடலாக மாறியது. பாடகி சுஜாதா ஒருபாட்டு பாடினார், இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் புல்லாங்குழலும் கையுமாக இருப்பார்.அன்னக்கிளியைப் படைத்த இயக்குனர்கள் தேவராஜ் மோகன், இசையமை்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அணி இப்படத்திலும் அன்னக்கிளியைப் போல் அனைத்துப் பாடல்களுக்கும் பெண் குரலைப் பயன்படுத்தி ஒரு பாட்டுக்கு மட்டும் ஆண்குரலை அதாவது டிஎம்எஸ் குரலைப் பயன்படுத்தினர். இதே போல் கவிக்குயில் படத்திலும் பெரும்பாலான பாடல்களையும் பெண் குரலுக்கு - எஸ்.ஜானகிக்கு தந்து ஒரு பாடலை ஆண்குரலில் தந்தனர். அந்தப் பாடல் சின்னக்கண்ணன் அழைக்கிறான். ஆண்குரலுக்கு சொந்தக்காரர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. அவருடைய அடர்த்தியான குரல் இப்பாடலுக்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து.

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனைக் கோடி
எந்தன் காதலைக் கொண்டாடும் காவியமே இளமை அழகின் புதுமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

சின்னக்கண்ணன் அழைக்கிறான்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா 
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

 அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் என்ற மாய வரிகளில் பஞ்சு மயக்க, இசையால் இசைஞானி உருக வைக்க பாலமுரளியின் குரல் தேவமயக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது.
இதே பாடலை கிளைமேக்சில் ஜானகியம்மா பாடினார்.
பாலமுரளி கர்நாடக இசைக் கலைஞர் அவரை முதன்முதலில் இயக்குனர் ஸ்ரீதர் கலைக்கோவில் படத்தில் தங்கரதம் வந்தது வீதியிலே என்ற பாடல் மூலம் பிரபலப்படுத்தினார். தொடர்ந்து பாலசந்தர் படத்தில் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே என்றும் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் படத்தில் குருவிக்கார மச்சானே என்றும் திருவிளையாடலில் கே.வி.மகாதேவன் இசையில் ஒருநாள் போதுமா என்றும் பாடிய பாலமுரளிகிருஷ்ணாவை நம்மால் மறக்க முடியாது.
இப்பாடல் இளையராஜா இசை என்பதால் இன்னும் கூடுதலான முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் ஸ்ரீதேவி, சிவகுமாரின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. பதினாறு வயது பருவ மயிலாக ஸ்ரீதேவியின்  உருவம் அவரது தாவணியில் படர்ந்த மெல்லிய இடை கணுக்கால் அழகு யாவும் இன்று வரை கண்களில் இருந்து அகலவில்லை. படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போது அவர் சிறிய நடிகர்.

--------------------------------





No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...