Wednesday 23 December 2015

சந்திப்பு 7 அசோகமித்திரன்

எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் மீது மிகவும் ஈர்ப்பு இளம் வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பல முறை தமிழின் மிகச்சிறந்த மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பிறகு வளர்ந்த எழுத்தாளர்களில் முதல் இடத்திற்கு தகுதியானவர் சுந்தர ராமசாமியா, லா.ச.ராவா , ஜெயகாந்தனா, அசோகமித்திரனா என நான்கைந்து பெயர்களே முன்னுக்கு வந்து மெல்ல மெல்ல அசோகமித்திரனே வலிமை பெற்றதை உணர்ந்திருக்கிறேன்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் கனவு அசோகமித்திரன் சிறப்புிதழ் தயாரி்ப்பில் இருந்த ஜெயமோகன் என்னிடம் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு பற்றி கட்டுரை கேட்டார். அப்போது அந்த நாவலை ஆழமாக வாசித்தேன். அசோகமித்திரன் என்னுள் நீங்காமல் இடம் பெற்று விட்டார். அரசியலை துவேசம் இன்றியும் சார்பு இல்லாமலும் அதன் போக்கி்ல் விவரிக்கும் பாணி, மதரீதியான மோதல்களில் தொலைந்து போன மனிதநேயம் குறித்த அடங்கிய தொனியிலான விமர்சனம், நல்ல இனிப்பில் தூவிய முந்திரிப்பருப்பு போல ஆங்காங்கே மெலிதான நகைச்சுவை என அசோகமித்திரன் வடிக்கும் ஒவ்வொரு படைப்பின் செய் நேர்த்தியும் அதன் ஆழமான கருத்தியலும் என்னை கிறங்கடித்துள்ளன.
இளம் வயதில் காதல், காமம் நிரம்பிய சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை தேடித் தேடிப் படித்திருப்பேன். அது வயது கோளாறு. இலக்கியத்தின் பால் உண்மையான மதிப்பும் மரியாதையும் கூடிய போது புதுமைப்பித்தனும் குபராவும் மௌனியும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது.
அப்போதெல்லாம் அசோகமித்திரன் கவனத்தில் பதியாமல் போனது வயதுக் கோளாறும் அதீத ஆர்வமும்தான். சரோஜாதேவி புத்தகம் போல வணிக இலக்கியங்களில் பிரா, ஜட்டி, மார்பகங்களைத் தேடியதால் வந்த வினை. அசோகமித்திரன் கதைகள் டாக்குமென்ட்ரி படம் போலும் சத்யஜித்ரே போன்றோரின் ஆர்ட் பிலிம் போலும் அச்சமூட்டிய காலம் அது. ஆனால் பின்னர் உண்மையான கலை எது என்று தெளிவு வாசிப்பு அனுபவத்தாலேயே ஏற்பட்டு விட்டது.
முதன்முதலாக அசோகமித்திரனின் தி.நகர் வீட்டிற்கு எண்பதுகளின் இறுதியில் நண்பர்கள் சூர்யராஜன், நந்தா, அறிவுமணி உட்பட ஆறேழு பேருடன் சென்றேன். அவர் எனது செந்தூரம் இதழுக்கு கடிதம் போட்டதால் மிகவும் பெருமையாகவும் இருந்தது. அந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி அவரை சந்திக்க விரும்பிய நண்பர்களைத் திரட்டி அவர் வீட்டை அடைந்தேன். கதவைத் திறந்ததும் அதிர்ச்சியில் யாரோ அடிக்க வந்தது போல் அலறிய அசோகமித்திரன் இத்தனை பேர் ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு வரலாமா என கேட்டார். கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்க அவர் மறுத்துவிட்டார். சார் உங்க கதைகளை எழுத்தெண்ணி படித்திருக்கிறேன் என்ற சூர்யாவின் குரலும் அவர் காதுகளில் விழவே இல்லை.
மீண்டும் அதே வீட்டில் ஜெயமோகனுடன் அசோகமித்திரனை சந்தித்த போது மனம் விட்டு நீண்ட நேரம்  நாங்கள் அவருடன் பேசினோம்.
கோவையில் ஞானி நடத்திய நிகழ் கூட்டத்தில் ஒருமுறை அசோகமித்திரன் படைப்புகள் குறித்த விமர்சனக் கூட்டத்தில் அவரும் கலந்துக் கொண்டார். அப்போது மிகவும் நட்புடன் என் கரங்களைப் பிடித்து அன்பொழுக பேசினார். அந்த நினைவுடன் இருந்த அவர் ஜெயமோகனுடன் சந்தித்த போது நீங்க கோயமுத்தூர் காரரா எனக் கேட்டார். இல்லை என விளக்கினேன்.
தொடர்ந்து சில இலக்கியக்கூட்டங்களிலும் அசோகமித்திரனை பார்த்திருக்கிறேன். சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் விஷ்ணுபுரம் வெளியீட்டு விழா நடத்திய போது பார்வையாளர்களில் ஒருவராக  அசோகமித்திரன் அமர்ந்திருந்தார்.
ஒரு இலக்கியக்கூட்டத்தில் அசோகமித்திரனுக்கு ரூ 25 ஆயிரம் பணமுடிப்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தை விட்டு அவசரமாக அவர் வெளியேறிய காட்சியைக் கண்டு பணத்தை மீண்டும் பிடுங்கிக் கொள்வார்களா என்ற பயத்தில் அவர் ஓடுவதாக நண்பர்கள் சிலர் கிண்டலடித்தனர்
கலைஞரைப் பாராட்டி நடந்த கூட்டத்தில் நவீன எழுத்தாளர்கள் பலர் அவரைப் பாராட்டி பேசிய போது அசோகமித்திரனும் பேசினார். பின்னர் அதுகுறித்த வருத்தம் அவருக்கு இருந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் நிகழ்ச்சிக்காக அவரை வேளச்சேரி வீட்டில் சந்தித்த போது பி.எஸ்.ராமையா பற்றியும் அவரது குதிரைப்பந்தய ஆர்வம் பற்றியும் அசோகமித்திரன் பேசியவை இன்றும் மனதுக்குள் இனிய நினைவாக பதிந்துள்ளன. வெற்றி குதிரையின் மூக்கு குறித்து ராமையாவின் அவதானிப்பு பற்றியும் அவர் பேசினார்.
செந்தூரம் இதழ் மீண்டும் வெளியான போது வெளியீட்டுவிழாவுக்கு அவரை அழைத்தேன் அன்புடன் வந்து வாழ்த்தினார். அசோகமித்திரன் போல எனக்கும் இந்தி சினிமாவில் அதிகமான ஈடுபாடு உண்டு ,முகநூலில் ஒரு குறிப்பிட்ட பழைய இந்திப்படப் பாடலைப் பற்றிய விவரம் கேட்டார். தெரிவித்தேன்.
பழகிய நாட்கள் குறைவே ஆனாலும் அசோகமித்திரன் என்ற பிரம்மாண்டமான ஆலமரத்தின் நிழலில் சிறிது காலம் வாழ்கிற சுகத்தை நான் அனுபவித்திருக்கிறேன். அனுமனைப் போல் தன் பலம் அறியாத அற்புதமான மனிதர், எழுத்தாளர் அசோகமித்திரன் .

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...