Wednesday 23 December 2015

சந்திப்பு 8 பிரபஞ்சன் என்ற மனிதர்

இலக்கிய உலகில் புதிதாக நுழைந்த போது, 1980களில், எனக்கும் நண்பர் சூர்யராஜனுக்கும் சமகாலத்தின் ஆதர்ச எழுத்தாளர்களாக இருந்தவர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் மற்றும் திலீப்குமார் ஆகியோர் மட்டுமே. லாசரா, சுஜாதா, போன்ற சிலரையும் தீவிரமாக வாசித்தோம்.இதில் ஜெயகாந்தனுடனும் சுந்தரராமசாமியுடனும் அசோகமித்திரனுடனும் பழகும் வாய்ப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது. ஆனால் பிரபஞ்சனும் திலீப்குமாரும் மிகவும் நெருக்கமாக மாறிப் போனார்கள். அதற்கு காரணம் அவர்களின் இயல்பான சுபாவம்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத, எந்த ஒரு மனிதரையும் அலட்சியப்படுத்தாத, எந்த ஒரு பகிர்தலையும் இருதரப்புக்கும் சாத்தியமாக்க முடிந்த அற்புதமான மனிதர்களாக திலீப்குமாரும் பிரபஞ்சனும் இருந்தனர்.
பிரபஞ்சன் என்ற ஆகிருதியை அவரது பிரும்மம் கதையைப் படித்ததும் நொடிப்பொழுதும் தாமதமின்றி புரிந்துக் கொண்டேன். அப்போது அவர் நாவல்களை அதிகம் எழுதியிருக்கவில்லை,மணிமணியான சிறுகதைகள் எழுதியிருந்தார்.குங்குமம், குமுதம் என பத்திரிகைகளில் பணியாற்றி தனக்கான அக வெளியைத் தேடி வெளியேறியிருந்தார். குமுதம் குவார்ட்டர்சை அவர் காலி செய்த போது, மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து அவரது மூட்டை மூட்டையான புத்தகங்களை சுடும் வெயிலில் கே.கே.நகரில் புதிய வீட்டிற்கு அவர் எடுத்துச் செல்ல உதவியபோது அவருடனான நெருக்கம் அதிகரித்தது.
அது 1986ம் ஆண்டு. எனக்கு திருமணமான புதிது. பிரபஞ்சனை வாரம் ஒரு முறையாவது பார்த்து விட துடிப்போம் நானும் சூர்யாவும். திருமணமான புதிது என்பதால் மனைவியிடம் சொல்லாமல் எங்கேயும் போகமுடியவில்லை. என் நண்பர்கள் அனைவரும் வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள் என்ற பிம்பம் என்மீது படிந்திருந்ததால், நண்பர்களை சந்திப்பதை என் அம்மாவும் மனைவியும் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி முடிவெட்டப் போவதாகவும் சினிமாவுக்குப் போவதாகவும் பொய் சொல்லி பிரபஞ்சனை கே.கே.நகருக்குப் போய் பார்த்து வருவேன்.
குடும்பத்தை பாண்டிச்சேரியில் பிரிந்து தனியாக இருக்கும் அவருக்கு வீட்டுச் சாப்பாடு போட ஆசைப்பட்டு ஒருநாள் மனைவியிடம் பிரியாணி செய்யச் சொல்லி அவரை அழைத்து வந்தேன். அப்போது பிரியாணி முழுவதும் தீய்ந்து கருகி விட்டது. அரைக்கிலோ கறியையும் பாஸ்மதி அரிசியையும் என் மனைவி வீணாக்கமாட்டாள் என்பதால் இதை தற்செயல் என்று நம்பினாலும், அதன் பிறகு அவர் வீட்டுக்கு வருவதில்லை. ஒருமுறை நான் வீடு காலி செய்யும் போது வந்து, ஆட்டோவில் ஏராளமான புத்தகங்களை அள்ளிச்சென்றார்.
பின்னர் அவர் மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி, சந்தியா என பல நாவல்களை எழுதி சாகித்ய அகடமி வரை பேசப்பட்டார்.
எப்போதும் பண நெருக்கடியுடனும், வாழ்க்கையின் சோர்வுடனும், பெண்கள் மீதான மதிப்பு கலந்த காதலுடனும் இருந்த அவரை நாங்கள் எப்போதுமே உடன்பிறவா சகோதரராகவே நேசித்திருக்கிறோம்.
வாழ்க்கையின் அலைக்கழிப்புகள் அவருக்கும் எனக்குமான இடைவெளிகளை அதிகரித்துவிட்ட நிலையில் ஒருமுறை அவரது தொலைபேசி அழைப்பு. இப்போது பீட்டர் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்ற போது வழக்கம் போல சரவண பவன் வரை காபி சாப்பிட அழைத்துப் போனார். இப்படி நூற்றுக்கணக்கான பேருடன் காபி சாப்பிட நடந்துப் போன அனுபவங்களையும் பேசிய விஷயங்களையும் அவரால் தொகுக்க முடிந்தால் அது சமகால இலக்கியத்திற்கு மிகப் பெரிய கொடையாக இருக்கும்.
பத்திரிகைகள் கதைகளை பிரசுரிப்பதை, தீராத பாவமாக கருதுகின்றன என்பதால் முன்பு போல உற்சாகமாக எழுத முடியாமல் தவிக்கிறார்.மனைவியை இழந்தது, மகன்களை வெளிநாடு அனுப்பி பிரிந்து வாழ்வது போன்ற குடும்பச் சூழல்களும் பல்வேறு இழப்புகளும் அவரது இருப்பைக் குலைத்திருக்க கூடும். ஆனால் பிரபஞ்சன் என்ற படைப்பாளியும் மனிதரும் அப்படியே இருந்தனர். கூடவே அவர் வாசிப்பும். வீடுநிறைய இப்போதும் புதிய புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன.
உயிர் எழுத்து இதழில் தொடராக இளம் படைப்பாளிகளைப் பற்றி எழுதி வரும் பிரபஞ்சன் எனது கிடங்குத் தெரு நாவலைப் பற்றி எழுதவும் விருப்பம் தெரிவித்தார். அந்தப் புத்தகம் வந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. பாஷா பாரதி சம்மான், தஞ்சை பிரகாஷ் என விருதுகள் கிடைத்தன. அந்த நாவலையும் அதில் எழுதப்படாத பல விஷயங்களையும், தழுவி எடுக்கப்பட்ட வசந்தபாலனின் அங்காடித்தெருவும் வந்து போய்விட்டது. அந்த புத்தகத்தை மறுபதிப்பு போட பதிப்பாளர்கள் முன்வரவில்லை. மீண்டும் தமிழினியே போடலாம், என்னிடம் சில ஆயிரங்கள் இருந்தால் சாத்தியமாகலாம். என் நாவல் பற்றி பிரபஞ்சன் எழுதும் அளவு நான் வளர்ந்து விட்டேனா அல்லது எழுத வேண்டிய காலம் தவறி்ப்போய் விட்டதா என்று தெரியவில்லை.மறுபதிப்பு வரட்டும்.அப்புறம் பார்க்கலாம் சார்.




No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...