Saturday 5 December 2015

உலக சினிமா -THE SEVENTH SIGN-தீமையை அழிக்க வரும் தீர்க்கதரிசி


உலக சினிமா
ஏழாவது சின்னம் - தீமையை அழிக்க வந்த தீர்க்கதரிசி
செந்தூரம் ஜெகதீஷ்

மனிதன் மிருகமாக மாறுகிற காலம் கலியுகம். சக மனிதன் மீது ஈரம் சுரக்காத இதயம் கொண்டு அடுத்தவனை அழித்து சுகம் காண்பான். இறைவன் இருப்பதை மறந்து பாவங்களை செய்வான். அரசியலில் ஏழை மக்களின் எதிர்காலத்தை சுரண்டுவான். சினிமாவில் பெண்களின் ஒழுக்கத்திற்கு புகழ் ஆசை காட்டி விலை பேசுவான். வணிகத்திலும் தொழிலிலும் நேர்மையின்றி பணவேட்டையாடுவான். சகோதரியை புணர்வான். மோசஸ் காட்டிய பத்துக்கட்டளைகளையும் பலமுறை மீறுவான். அது பற்றிய குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருப்பான்.
இத்தகைய யுகத்தில் உலகையே அழிக்க தேவன் கோபம் கொண்டு சீறி எழுகின்றான். உலகை அழித்து விட்டு புதிய உலகம் படைக்க இறைவன் விரும்புகிறான். இயற்கைப் பேரிடர்கள், நிலநடுக்கங்கள், பிரளயங்கள் ஏற்படுகின்றன. அணு ஆயுதப் போர்கள் வெடிக்கின்றன. தீவிரவாதம், மத வன்முறைகள் தூண்டி விடப்படுகின்றன. மனிதனால் மனிதகுலம் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
உலகின் அழிவு இருப்பது குறித்து பகவத் கீதை, பைபிள், குரான், ஜரதூஷ்டிரனிசம்  போன்ற பல்வேறு மதங்களும் கூறுகின்றன. ஒவ்வொரு மதமும் இறைவன்இறுதியில் உலகை அழித்து விடுவான் என்றுநம்புகின்றன. நாம் கோவிலுக்குப் போகிறோம், தேவாலயங்களுக்கு போகிறோம். மசூதிகளில் தொழுகிறோம். குருதுவாராக்களில் வழிபடுகிறோம். ஆனால் யாருமே உலகை அழிக்கும் வேலையை நாம் தீவிரமாக செய்துக் கொண்டிருக்கிறோம் என்பது குறித்து கவலைப்படுவதே இல்லை. நமது நம்பிக்கைகளும் நமது வாழ்வியல் தேவைகளை சார்ந்ததாகி விட்டது. இறைவனின் எச்சரிக்கையை நாம் மதிப்பதே இல்லை.
உலகின் அழிவை சித்தரிக்கும் ஏழு அடையாளங்களை இறைவன் மனிதர்களுக்கு எச்சரிக்கையாக காட்டுகிறான் என்கிறது பைபிளின் புதிய ஏற்பாடு.அந்த ஏழு சின்னங்களை அடிப்படையாக கொண்டு ஒரு திரில்லர் படமாக எடுக்கப்பட்டதுதான் THE SEVENTH SIGN
இப்படத்தின் கதாநாயகி ஆபி குவின் (டெமிமூர் ) அவளுக்கு ஒரு முறை கர்ப்பம் கலைந்து மீண்டும் கருத்தறிக்கிறாள். இம்முறை குழந்தையை ஆரோக்கியமாகவும் உயிருடனும் பெற்றெடுக்க பதைக்கும் ஒரு தாயாக அவள் இருக்கிறாள், குழந்தை கர்ப்பத்தில் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 29ம் தேதி ஒரு லீப் ஆண்டில் அரிதினும் அரிதான தேதியில் குழந்தை பிறக்க இருக்கிறது.
அப்போது அந்தக் குழந்தையை அழிக்க நினைக்கிற ஏதோ ஒரு மாய சக்தியை அவள் உணர்கிறாள். அவள் வீட்டின் ஒரு பகுதியில் குடித்தனம் வந்துள்ள டேவிட் மீதுதான் அவளுக்கு சந்தேகம் எழுகிறது. டேவிட் ஒரு சிறிய பெட்டியுடன் குடிபுகுந்து வந்திருக்கிறான். அவனிடம் ஒரு டிவி கூட இல்லை. ஸ்டிரியோ இல்லை ஒரு தொலைபேசி கூட இல்லை. என்று ஆபி தனது கணவரிடம் கூறுகிறாள்.
ஆனால் டேவிட்டின் பேச்சு அவளுக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த வீட்டில் ஒரு குருவி பறந்து வ ந்து சிறகடிக்க அதை விரட்ட துடைப்பம் எடுக்கிறாள் ஆபி. அப்போது வேண்டாம் அதை காயப்படுத்தாதே என்று குரலை உயர்த்தி கட்டளையிடுகிறான் டேவிட். இல்லை நான் குருவியை ஒன்றும் செய்ய நினைக்கவில்லை என்று அச்சத்துடன் அவள் கூறுகிறாள். அப்போது அவன் ஒரு புராதன ஹூப்ரூ மொழி குட்டிக்கதையை கூறுகிறான். இறைவனின் கஃப் என்றொரு மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையில் தூய்மையான ஆன்மாக்களை இறைவன் பாதுகாத்து வைத்திருக்கிறான். உலகிற்கு புதிதாக ஒரு குழந்தை பிறக்க வரும் போது இறைவன் அந்த தூய்மையான ஆன்மா ஒன்றை பிறக்க இருக்கும் குழந்தைக்கு அளிக்கிறான். இந்த தகவல் சிட்டுக்குருவிகளுக்கு மட்டுமே தெரியும். அதனால் அவை ஒரு குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியைக் கொண்டாட பாடி மகிழ்கின்றன.
அழகான கதையல்லவா என்கிறாள் கணவரிடம் ஆபி.
கணவன் ஒரு லாயர்
அவனுக்கு ஒரு விசித்திர வழக்கு கிடைக்கிறது. தாய் தந்தையை கொன்று குவித்த ஒரு பதின் பருவத்து சிறுவனுக்கு விஷவாயு அறையில் வைத்து மரண தண்டனை விதிக்க  கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுகிறது. அவனைக் காப்பாற்ற அவன் மன நலம் சரியில்லாதவனாக நிரூபிக்க முயற்சிக்கிறார் ஆபியின் கணவரான வழக்கறிஞர் மைக்கேல்( ரஸ்ஸல் குவின் ) அந்த சிறுவனோ ஒத்துழைக்க மறுக்கிறான்.நான் தெரிந்தேதான் முழு சுயநினனைவுடன்தான் கொலை செய்தேன் என்கிறான். அதற்கு அவன் கூறும் காரணம் தனது தாயும் தந்தையும் சகோதர முறை உறவினர்கள். இருவரும் காதலித்து மணம் முடித்து இறைவனின் கோபத்துக்கு ஆளாகியவர்கள். அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைக் கொல்வதற்காகவே இறைவன் அவர்கள் பாவத்திலிருந்து தன்னை படைத்திருக்கிறான். இதுதான் அந்த சிறுவனின் வியாக்கியானம். கடவுளின் கட்டளையை நான் நிறைவேற்றினேன் என்பதுதான் அவன் வாதம்.
அவனை ஒரு மத அடிப்படைவாதி என நாம் நினைத்து விடலாம். ஆனால் அவனோ உளப்பூர்வமாக கடவுளின் கட்டளையை நிறைவேற்றியதாக நம்புகிறான். அதற்காக மனிதர்களின் நீதிமன்றம் தனக்குமரண தண்டனை விதிப்பதுகூட ஒரு பொருட்டில்லை அவனுக்கு.
குழந்தையை பாதுகாக்க டெமி மூர் படாத பாடு படுகிறாள். டேவிட்தான் தன் குழந்தையை அழிக்க வந்ததாக நினைக்கிறாள். அவன் செயல்பாடுகள் மர்மமாக இருக்கின்றன. அவனைப் பின் தொடர்ந்து போகும் போது வயிற்றில் தீராத வலி வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாள், கர்பப்த்தில் இருக்கும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எப்படியோ அவளும் குழந்தையும் உயிர் பிழைக்கின்றனர்.
ஆனால் வாட்டிகளில் இருந்து வந்ததாக கூறும் பாதிரியார் லூசி தான் ( பீட்டர் ப்ரீட்மேன்) வில்லன் என்பது படத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும் போது பார்வையாளர்களுக்குத் தெரிகிறது.
பைபளின் புதிய ஏற்பாடு உலகின்அழிவைக்குறிக்கிறது. நோவா ஒருமுறை உலகில் பிரளயம் ஏற்பட்ட போது இறைவனின் கட்டளைப்படி மனிதர்களையும் உயிரினங்களையும் ஒரு படகில் ஏற்றி காப்பாற்றினாள். அப்போது இறைவன் ஒரு வாக்குறுதியை அளிக்கிறான் .இனி ஒரு போதும் உலகை நான் முழுவதுமாக அழித்துவிட மாட்டேன். இந்த வாக்குறுதியை இறைவனுக்கு நினைவூட்டவே மழை வரும் போது வானவில் தோன்றுகிறது. இறைவனி கோபம் தணிகிறது.
ஆனால் உலகம் இறுதியில் அழிந்துவிடும் என்று பைபிள் கூறுகிறது. ஏனெனில் மனிதன் பாவங்களைச் செய்கிறான் இறைவனின் கோபத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கிறான்.
உலகம் எப்போது அழியும்? கஃப் எனப்படும் இறைவனின் சொர்க்க மாளிகையில் தூய்மையான ஆன்மாக்கள் காலியாகி விடும் போது. அப்போது இறைவன் உலகை அழித்து புதிய உலகைப் படைக்கும் ஒரு தீர்க்கதரிசியாக அவதரிப்பான்.
இந்தப் பின்னணியில் ஆபியின் கடந்த காலம் அவளது கனவுகளில் குழப்பமான காட்சிகளாக சித்தரிக்கப்படுகிறது.
ஏசு சிலுவையில் அறையப்படும் நாள். 12 சீடர்களில் யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுக்க அவருக்கு யூதர் மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுகிறது. ஏசுவை சிலுவையில் அறைகிறார்கள். தேவனின் மைந்தன் ரத்த வெள்ளத்தில் சிலுவையில் உயிர்த்துறக்கிறான். ஏசு சாகும் முன்பு அவரது தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முயல்கிறாள் ஒரு பெண்.அவள் பெயர் செராபியா. அவள் கையிலிருந்த மண் பானையை உடைத்து வீசுகிறான் ஒரு கொடியவன். அவன்தான் ரோமானிய வீரனான கார்ட்டபளிஸ் . ஏசுவின் உயிர் பிரிய அவன் அடிக்கும் கடைசி அடிதான் காரணமாகிறது. தேவமைந்தனை கொன்ற பாவக்கறை அவன் மீது படர்கிறது. தேவனால் அவன் சபிக்கப்படுகிறான். ஏசு கிறித்து ஒரு தீர்க்கதரிசியாக இவ்வுலகை வலம் வரும் வரை அவன் அக்கணத்திலேயே உறைந்துக்கிடப்பான். அவனுக்கு வயதாகாது,மரணம் வராது. வாழ்க்கை நரகமாக இருக்கும். வாழ்க்கையே போதும் போதும் என அவன் மரணத்துக்காக கெஞ்சுவான். இதுதான் இவனுக்கு விதிக்கப்படும் சாபம். சரி. இறைவன் எப்போது தீர்க்கதரிசியாக மீண்டும் அவதிப்பார்.....அவரது சொரக்க மாளிகையான கஃப்பில் எல்லா புனித ஆன்மாக்களும் காலியாகி அவரிடம் உலகிற்கு அனுப்ப ஆன்மா இல்லாமல் போகும் போது கோபத்துடன் உலகை அழித்துவிட இறைவன் தீர்க்கதரிசியாக அவதரிப்பார். உலகை அழித்து அதன் அழிவை பார்த்து அவர் சொர்க்கத்திற்கு திரும்பும் போதுதான் கார்ட்டபளிசுக்கு சாபவிமோசனம் கிடைக்கும்.
உலகின் அழிவை அவன் தூண்டிவிடுகிறான். இறைவனின் கஃப் சொர்கக மாளிகை காலியாக இருக்கக்கூடாது என ஏசுவே ஒரு குழநதை வடிவாக தனக்கு தண்ணீர் கொடுக்க முயன்ற செராபியாவின் வயிற்றில் மகனாக பிறக்கிறார். அந்தக் குழந்தை ஏசு என்பதை அறியாமல் அதை அழித்து விடவே பாதிரியால் லூசியாக வந்திருக்கிறான் கார்ட்டபளிஸ் . ஆனால் தேவனால் அந்த குழந்தையை பாதுகாக்க அனுப்பப்பட்டவர்தான் டேவிட்
இறைவனின் ஏழாவது சின்னம்தான் நீ. என்கிறார் டேவிட் இந்த சின்னத்தை அழிக்கத்தான் லூசி முயற்சிக்கிறார். அதாவது 5 வது சின்னம் தாய் தந்தையை கொன்ற சிறுவன். அவன் அழிந்தால் ஆறாவது சின்னமாக நிலநடுக்கம் போன்றவை ஏற்படும். இதை ஒரு பண்டைய ஹூப்ரூவின் ரகசிய குறிப்பு மூலம் ஆபி அறிகிறாள். அந்த குறிப்பு அவளுக்கு டேவிட்டின் வீட்டில் கிடைக்கிறது. அந்த குறிப்பை படித்து அவளுக்கு விளக்க உதவுகிறான் ஒரு இளைஞன்.
இறைவனின் 5 வது எச்சரிக்கை சின்னம் தனது கணவரின் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சிறுவன் என்பதை அறியும் ஆபி அந்த சின்னத்தை அழிய விடக்கூடாது என்று மரண தண்டனை அளிக்கப்படும் இடத்திற்கு தனக்கு உதவும் இளைஞனுடன் விரைகிறாள். அவனுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையை தடுக்க முயல்கிறாள். ஆனால் அங்கே வந்துவிட்ட பாதிரியார் லூசியோ துப்பாக்கியால் சுட்டு அந்த சிறுவனை கொன்று விடுகிறான். ஆபியின மார்பிலும் குண்டு பாய்கிறது. 5 வது சின்னம் அழிந்ததால் ஆறாவது சின்னம் அழிவை உணர்த்துகிறது. நிலநடுக்கம் ஏற்படுகிறது.நிலச்சரிவுகள், கடல் கொந்தளிப்புகள், பெருமழை ஊழித்தாண்டவமாடுகிறது.
பைபிள் கூறுவது போல் நிலவு செந்நிறமாகிறது .சூரியன் கருப்பாகி விடுகிறது.உலகின் அழிவு நள்ளிரவில் வரும் ஒரு திருடன் போல் நுழைந்து விடும் என்று தேவமைந்தன் ஏசு பைபிளில் கூறுகிறார்.
மார்பில் குண்டடி பட்ட நிலையில் கடும் இயற்கைப் பேரிடர் தாக்கிய சூழலில் ஆபிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
இறைவனின் இறுதி ஏழாவது சின்னத்தையாவது காப்பாற்றி விடத்துடிக்கிறாள் ஆபி. தனது ஆன்மாவை இறைவனுக்கு தனது குழந்தைக்கு அளித்து அவள் உயிர் பிரிகிறது. அவளது இறை நம்பிக்கை அவளது குழந்தையை காப்பாற்றிவிடுகிறது. தீமையை நன்மை அழித்துவிடுகிறது. சாபவிமோசனம் பெற முயற்சித்த பாதிரியார் லூசியும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் மரணமே வராமல் மரணத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கப் போகிறான். ஏசுவின் உயிர்பிரிய தாக்கிய அவன் மீண்டும் தேவனின் குழந்தையை அழிக்க முயன்று பெரும் சாபத்துக்கு ஆளாகிவிடுகிறான்.
டேவிட் கூறுகிறார். உலகில் ஒரே ஒருவரின் நம்பிக்கைக் கூட உண்மையாக இருந்தால் போதும் அது இந்த உலகை அழிந்துவிடாமல் காத்து விடும். ஆபியின் தியாகத்தாலும் உண்மையான இறை நம்பிக்கையாலும் காலியாகி விட்ட இறைவனின் கஃப் மீண்டும் புனித ஆன்மாக்களால் நிரம்பி விட்டது. இனி உலகை தேவன் அழிக்க மாட்டான். உலகை அழிக்க மாட்டேன் என்ற தனது வாக்குறுதியை நினைவுபடுத்த இறைவன் வானவில்லை படைத்து மழை பெய்யும் போது அதை வானத்தில் மிதக்க வைக்கிறான்.
படம் டிசம்பர் 25ம் தேதி ஏசு கிறிஸ்து பிறந்த நாளிலிருந்து தொடங்குகிறது. ஹைதி கடற்கரையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கடலில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் செத்துக் கிடக்கிறது. கடலே செத்துப் போனது. அந்த கடற்கரையில் டேவிட் என்பவர் வந்து ஒரு சின்னத்தை இரண்டாக உடைத்துப் போட்டுவிட்டு போகிறான். இறைவனின் முதல் எச்சரிக்கை இயற்கை அழிவது. சுற்றுச்சூழல் மாசுபடுவது. உயிரினங்கள் அழிவது. கடலில் மீன்கள், ஆமைகள், நண்டுகள் உட்பட அனைத்தும் மடிகின்றன. அறிவியல் ரீதியாக அது மாசு என நாம் விளக்கம் கொண்டு விடலாம். எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவியல் பூர்வமான விளக்கங்கள்இருக்கின்றன. ஆன்மீகமாக பார்த்தால் அது இறைவனின் எச்சரிக்கை. அறிவியலாக பார்த்தால் அது சூழலியல்.
இயற்கையை அழிக்கும் வேலையை மனிதன் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன. தனக்குத் தானே கல்லறை தோண்டிக்கொண்டிருக்கிறது மனித குலம். கார்பன் ஆக்சைட் அதிக அளவில் உற்பத்தியாக தொழில் கழிவுகளாக பனிப்பாறைகள் உருகுகின்றன. துருவங்களில் பனி உருகி விஞ்ஞானிகளை அலற வைக்கிறது. கடல்,நதிகள், குளங்கள் யாவும் கழிவுகளால் மாசு படுகின்றன. மழை குறைகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. வயல்கள் வறண்டு போகின்றன. விவசாயம் மடிகிறது. விவசாயிகள் கடன்களைத் திருப்பித் தரமுடியாமல் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தொலைக்காட்சிகளில் ஆபி செய்திகளைப் பார்க்கும் ஒரு காட்சி படத்தில் இடம் பெறுகிறது. தீவிரவாதம் குண்டு வீசித்தாக்குதல், கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற செய்திகளே இடம் பெறுகின்றன. எந்த சானலை திருப்பினாலும் இவைதான் விவாதிக்கப்படுகின்றன.
இறைவனின் எச்சரிக்கையை நாம் உணர்ந்தோமா......
இத்திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியானது. தற்போது 52 வயதாகும் ஹாலிவுட்டின் செக்ல் பாம் டெமி மூர் மிக இளமையான தோற்றத்தில் இப்படத்தில்நடித்திருந்தார் .அவர் கர்ப்பமாக இருக்கும் காட்சிகள் தத்ரூபமாகவே படமாக்கப்பட்டன. நிஜமாகவே அவர் கர்ப்பத்துடன்இருந்த போது இப்படத்தில் நடித்துக் கொடுத்தார். ஆங்கில இதழ்களில் நிறைமாத வயிற்றுடன் முழுநிர்வாணக் கோலத்தில் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் டெமி மூர் .படத்திலும் இதுபோன்ற ஒரு நிர்வாணக் குளியல் காட்சியில் நிறைமாத கர்ப்ப வயிற்றுடன் அவர் தனது அழகை அள்ளித்தருகிறார்.
இப்படம் வெளியான போது பல்வேறு கிறித்துவ அமைப்புகளின் விமர்சனத்துக்கு ஆளானது. சிலர் இதை மகத்தான படம் என பாராட்டினார்கள். பைபிளின் ஒரு நம்பிக்கையை அடிப்படையாகவே கதை நகர்கிறது.
இப்படத்தின் இயக்குனர் காரல் சல்ட்டஜ் ( CARL SHULTZ)
தீமை மேலோங்கி அதை தண்டிக்க முடியாத சமூகம் நன்மையின் பக்கம் நிற்பவர்களையும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவர்களையும் தண்டிக்கும் நிலை வரும் போது உலகை அழிக்க தேவன் ஆன்மா இல்லாத குழந்தையாக அவதரிப்பான். அவன் கஃப் சொர்க்க லோகம் ஆன்மாக்கள் இல்லாமல் காலியாகி கிடக்கும் போது ஆன்மா இல்லாத ஒரு குழந்தை உலகின் அழிவுச்சின்னமாக பிறக்கும்.
ஆனால் இன்னும் தேவனின் கையிருப்பு காலியாகிவிடவில்லை என்று பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது களங்கமற்ற புன்னகையுடனும் ஆன்மாவின் ஒளியுடனும் உலகிற்கு வானவில்லாக நம்பிக்கையை சுடர்வீச செய்துக் கொண்டிருக்கிறது.
இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி.
ஒளியைக் கூட்டுவோம். இருளை வெல்வோம். பைபிள், குரான், கீதையைப் படிக்கும் நாம் அழிவிலிருந்து உலகைக் காக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.

--------------------குமுதம் தீராநதி டிசம்பர் 2015 இதழில் வெளியானது---------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...