துன்பம் நமது தோழன்

இன்று முதல் தினம் ஒரு பதிவு
9-6-2018


துன்பம் தான் நமது தோழன்.....தோஸ்தி திரைப்படப் பாடல்


என் அப்பா மறைந்து விட்டாலும் சிறிய வயதில் எனக்கு அவர் தந்துவிட்ட பல்வேறு முக்கிய நினைவுகளில் இந்தித் திரைப்படப் பாடல்கள் குறித்த நினைவுகள் சுகமானவை. அப்பா இல்லையென்றால் முகேஷ், முகமது ரபி, லதா மங்கேஷ்கர், கிஷோர்குமார், மன்னாடே, மகேந்திர கபூர், தலத் மெஹ்மூத், ஹேமந்த் குமார், ஆஷா போன்ஸ்லே, எஸ்.டி.பர்மன், லட்சுமிகாந்த் பியாரேலால், ஆனந்த் பக்சி என்ற பெயர்களையெல்லாம் நான் அறிந்திருக்கமாட்டேன்.
சிறுபிராயத்தில் பாதித்த திரைப்படங்கள், பாடல்களில் தோஸ்தி படத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.
கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம். இரண்டுநண்பர்கள் தான் இப்படத்தின் மையம். நட்பு, பிரிவு என சுழலும் கதை.

இப்படத்தில் ஒரே ஒரு பாடல் பெண்குரலில் மற்ற 5 பாடல்களையும் சோலோவாக முகமது ரபியே பாடியிருப்பார். அத்தனைப் பாடல்களும் தேனிசைதான். ஆனால் என் அப்பா அடிக்கடி கேட்ட பாடல் சிறுவயதில் இனம் தெரியாத பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

பாடல் இப்படி போகும்.....ராஹி மன்வா துக் கீ சிந்தா.....
இந்தியை படிக்காதவர்களுக்கு என் அனுதாபங்கள். எளிய மொழிபெயர்ப்பு இது....

யாரும் துணை என்று இல்லாத நிலை வரும் போது துன்பம் கொள்ளாதே...துன்பத்தையே துணையாகக் கொண்டு செல்....

பயணியான மனமே...துன்பத்தின் வேதனை ஏன் வாட்டுகிறது.துன்பம்தானே நமது தோழன். 
இன்பம் என்பது ஒரு மர நிழல். பயணத்தின் இடையில் வந்து செல்லும், ஆனால் துன்பம்தான் நமது பாதை.....

இப்பாடலைப் புரிந்துக் கொள்ளும் பக்குவம் அந்த வயதில் இல்லை என்றாலும் என் பதின்பருவம் தொட்டு இன்றைய நடுத்தரவயது வரை இந்தப் பாடல் என்னோடு பயணித்து வந்துள்ளது.
துன்பத்தை தோழனாகவும் இன்பத்தை மர நிழலாகவும் ஏற்கும் மனப்பக்குவத்தை எனக்கு அளிப்பதற்காகவோ இந்தப் பாடலை என் தந்தை எனக்கு அறிமுகம் செய்தார் என்று பல முறை நினைத்திருப்பேன்.
கண் தெரியாத ஒருவனும் கால்முடமான ஒருவனும் நண்பர்களாகிறார்கள். காலில்லாதவனுக்கு அவன் காலாகிறான். கண்  தெரியாதவனுக்கு இவன் விழியாகி விடுகிறான். இருவரும் பயணத்தில் நட்பின் மரநிழலைக் காண்கிறார்கள்.ஆனால் சோதனைகள் அவர்களைப்பிரித்து விடுகின்றன. இருவரும் தனித்தனியே அலையும்போது தங்கள் ஊனத்தை அறிகிறார்கள். மீண்டும் இணைகிறார்கள்.
நட்பின் பெருமையை விளக்க எத்தனையோ படங்கள் வந்தாலும் இதுபோன்றதொரு படத்தை யாரும் பார்க்க முடியாது. இப்படத்தின் டிவிடிக்களை மோசர்பேர் நிறுவனம் வெளியிட்டது. இப்போது எப்போது விரும்பினாலும் இப்படத்தின் பாடல்களைக் கேட்கிறேன். பழகிக் கழித்த தோழர்களே என்று கண்ணதாசன் வரிகளும் நினைவில் மோதுகின்றன. எங்கிருந்தோ என் அப்பாவும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பாரோ.....அவருடைய உயிர் பிரிந்து துன்பத்தின் பாதையில் பயணிக்கிறதா மரநிழலில் இளைப்பாறுகிறதா என்று இப்பாடலின் ஊடாக எண்ணும் போது இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது .ஒரு மனிதனின் முதல் நண்பனே அவன் தந்தைதானே.....

Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்