Monday 11 June 2018

காலா படம் பார்த்தேன்

காலா 
இன்று ஆல்பர்ட் திரையரங்கில் காலா பார்க்கப் போனேன்.மணி மாலை 5.45 .நான்கு அல்லது 5 பேர் மட்டுமே டிக்கட் வாங்கிக் கொண்டிருந்தார்கள். படம் வெளியாகி இன்று 4வது நாள். 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகி, செல்போன்களிலும் திருட்டி சிடிக்களிலும் படத்தை பல லட்சம் பேர் பார்த்தும் இ வரிசை வரை டிக்கட் நிரம்பியிருந்தது. ஆல்பர்ட் திரையரங்கை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இருசக்கர வாகன கட்டணம் பத்துரூபாய்தான். டிக்கட் விலையும் 100 ரூபாய்தான். இப்படி இருந்தால் எல்லாப் படத்தையும் பார்த்துவிடலாம்தானே...



நிற்க. காலா ரஜினி படமா, பா.ரஞ்சித் படமா என்றொரு பட்டிமன்றம் நடக்கிறது. அரசியல் படமாக இருக்க வேண்டியது, சாதிய படமாக அவதாரம் எடுத்துள்ளது.படம் நன்றாக இருக்கிறதா என்றும் ஒரு கேள்வி. 
உண்மையில் நல்ல படம்தான்- சில காட்சிகளைத் தவிர.
உண்மையில் நல்ல படம்தான்- சில காட்சிகளைத் தவிர.. தேவையில்லாமல் ராமனையும் விநாயகரையும் காட்டியிருக்க வேண்டாம். பாஜகவின் ராமர் அரசியலையும் நானா படேகரின் தோற்றத்தை மோடி போலவும் சித்தரிப்பது பலரது கோபத்துக்கு ஆளாக்கி விடக்கூடும்.
ஆனால் அதுதான் பா.ரஞ்சித்தின் அரசியல். தலித்தியம் ,பெரியாரியம் மூலம் அவர் கட்டமைக்கும் அரசியல் அது. நமக்கு அது புரிகிறது. ஆனால் அதனை விமர்சனமின்றி ஏற்கமுடியாது. பெரியாரும் அம்பேத்கரும் சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்களாக இருப்பினும் இருவரது அரசியலும் குறைபாடுகளுடையதுதான். அதனை உணர மறுக்கும் பலவீனத்திற்கு ரஞ்சித்தும் விதிவிலக்கு அல்ல.
படத்தின் இறுதிக் காட்சியில் வண்ண ரங்கோலியுடன் வில்லன் பழிவாங்கப்படும் காட்சியில் கருப்புப் பொடியும் சிவப்புப் பொடியும் தூவப்படுவதையும் பெரியாரிய மார்க்சீய திராவிட அரசியலாக எடுத்துக் கொள்ளலாம். அதே போல் அனைத்து மக்களின் பங்களி்ப்புடன் தான்  புரட்சிகள்  நடத்தப்படும் என்பதையும் பல வணணக் கோலங்களுடன் சித்தரிக்கப்படுகிறது.
ரஜினிக்கு இரண்டே சண்டைக்காட்சிகள்தாம். காலாவாக வாழ்ந்திருக்கிறார். வழக்கமான குறும்பு, குசும்பு, ஸ்டைல் எல்லாம் இருந்தாலும் வயசாயிடுச்சு தலைவா என்று சொல்லாமல் இருக்க முடியலே. இதில் சமுத்திரக்கனியின் நக்கல் வேறு...நீ உலகம் சுற்றும் எம்ஜிஆர் கணக்கா சும்மா இளமையாக அழகா இருக்கே.....
ஈஸ்வரி ராவும் ஹூமா குரேஷியும் மனைவி மற்றும் முன்னாள் காதலிவேடங்களில் ஆகச்சிறந்த பொருத்தம். அதிலும் ஈஸ்வரி ராவ் நானும் திருநெல்வேலி போறேன். பழைய காதலனைப் பார்க்க என்று கூறுவதும்  செல்வி நீ நிஜமாகவே அந்தப் பையனை லவ் பண்ணியா என்று ரஜினி கலாய்ப்பதும் கவிதை
நானா  படேகரை  தனியாக சொல்ல வேண்டும் . உடல்மொழியால் அசத்துகிறார். படத்தின் வேகத்திற்கு அவர்தான் காரணம். ஆனால் கடைசியில் சொதப்பலாக காலாவிடம் சிக்கி உயிரை விடுவதை நம்ப முடியவில்லை. அத்தனை போலீஸ் ,அரசு, அதிகாரம், பண பலம் எல்லாம் அப்படியா தோற்றுப் போகும் ரஞ்சித்?
ஆதவன் தீட்சண்யாவின் பெயர் வசனத்தில் வருகிறது. சந்தோஷ் நாராயணன் கண்ணம்மா பாடலில் மனம் கவர்கிறார். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், முரளியின் ஒளிப்பதிவு, அற்புதமான தாராவி மற்றும் உண்மையான தாராவியை மிஞ்சும் செட் காட்சிகள் இப்படி இன்னும் பல நல்ல அம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
காலா பலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனக்குப் பிடித்தது.காரணம் ரஜினியும் பா.ரஞ்சித்தும்தான். இந்தப் படம்பிடிக்காமல் போகவும் இந்த இரண்டு பேரிடம் நாம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள்தாம். அரசியல் புரிந்தால் படத்தை ரசி்க்கலாம். 



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...