Tuesday 26 June 2018

படித்தது- யுகபாரதியின் தெருவாசகம்

யுகபாரதியின் தெருவாசகம்

நண்பர் கவிஞர் யுகபாரதியின் தெருவாசகம் கவிதைத் தொகுப்பை படிக்க நேர்ந்தது. உழைக்கும் மக்கள், விளிம்பு நிலை மக்களைப் பற்றிய தொகுப்பு. விகடனில் தொடராக வந்து புத்தகம் ஆகியுள்ளது.

யுகபாரதியின் மனப்பத்தாயம் படித்திருந்தேன். தஞ்சை ப்ரகாஷின் ஆசி பெற்ற கவிஞர் என்று அவர் மீது பிரியமும் உண்டு. ஆனால் கவிதைகள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. இளம் வயது, படிப்பு அனுபவம் குறைவு போன்ற காரணங்கள் இருந்தாலும் பழனிபாரதி அறிவுமதி நா.முத்துக்குமார் வகையறாவில் சேராமல் தனித்து இருக்க வேண்டும் என ஆசை. அது அளித்த ஏமாற்றத்தால் பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசும் போது யுகபாரதியின் கவிதைகள் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும். இப்போதுள்ள நிலையில் இந்தக் கவிதைகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று நான் பேசினேன். இந்த விமர்சனத்தால் மேடையில் இருந்த ஆண்டாள் பிரியதர்சினி கொதித்து எழுந்தார். அதை தீர்மானிக்க நீங்கள் யார். காலம் தீர்மானிக்கட்டும் என்று பேசினார். நான் சொன்னேன்.நான்தான் காலம். காலம் என் வாய் வழியாகத்தான் பேசுகிறது.நாங்கள்தான் தீர்மானிக்கிறோம் என்று.
இறுதியாகப் பேசிய நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் , நான் அறிந்தவரை செந்தூரம் ஜெகதீஷ் சிறந்த படைப்பாளி நிறைய படிக்கக் கூடியவர்.கவிதைகளின் தரம் அறிந்தவர் அவர் விமர்சனம் நியாயமாக இருக்கும். தவிர யுகபாரதி மேல் அவருக்கு எந்த காழ்ப்புணர்வும் கிடையாது. அவர் கருத்தை நாம் ஏற்கிறோமோ இல்லையோ அதற்குரிய மதிப்பு தரப்பட வேண்டும் எனப் பேசினார்.
தெருவாசகம் தொகுப்பிலும் அதே கருத்தைத்தான் மீண்டும் கூற வேண்டியிருக்கிறது. கவிதைகள் எனில் பிரம்மராஜன், பிரமிள், பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், அபி,  பசுவய்யா, ஞானக்கூத்தன், வைதீஸ்வரன், தேவதேவன்,  சுகுமாரன், வில்வரத்தினம், சேரன், வ.ஐ.செ.ஜெயபாலன், ராணிதிலக், யூமா வாசுகி, லட்சுமி மணிவண்ணன், கண்டராதித்தன், காலபைரவன், விக்ரமாதித்யன், சங்கர் ராமசுப்பிரமணியன், கல்யாண்ஜி, கலாப்ரியா, நகுலன், ஷண்முகசுப்பையா, சி.மணி, கௌரிஷங்கர்,  என என்னிடம் ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் யுகபாரதி இல்லை. ஆனால் அப்துல்ரகுமான், மு.மேத்தா,வைரமுத்து, நா.காமராசன், எஸ்.அறிவுமணி, மீரா, புவியரசு, சிற்பி என்று இன்னொரு பட்டியல் போட்டால் அதில் யுகபாரதிக்கும் முக்கியமான இடம் உண்டு. பிரச்சினை அவர் எந்தப் பட்டியலில் இடம் பெறவேண்டும் என்பதுதான். தஞ்சை ப்ரகாஷ் போன்ற நுட்பமான படைப்பாளியிடம் பழகி அவர் வழியாக வளரக்கூடிய இளம் கவிஞர் என்றுதான் யுகபாரதியை நினைத்திருக்கிறேன்.

அவர் எழுதிய சினிமா பாடல்களில் காதல் பிசாசே (ரன்) கண்ணம்மா, கண்ணை காட்டு போதும் ( றெக்கை) கூடை மேல கூடை வச்சு , பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், செந்தூரா செந்தூரா போன்ற பாடல்களை நான் பலமுறை விரும்பிக் கேட்கிறேன் .அவர் மிகச்சிறந்த பாடலாசிரியராக மலர்ந்துவிட்டார். மகிழ்ச்சிதான். வைரமுத்துவும் நல்ல பாடலாசிரியர்தான்.ஆனால் கவிதை மதிப்பீட்டில் அவர் எங்கே இருப்பார் என்பதை காலத்திடமே விட்டுவிடுகிறேன் .காலத்தின் குரலாக நான் பேசினால் பலர் சண்டைக்கு வருவார்கள்.

தெருவாசகம் தொகுப்பிலும் கரகாட்டக்காரி முதல் இஸ்திரி போடுபவன், போக்குவரத்து காவலர், உதவி இயக்குனர் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்நிலையை கவிதையாக்க முயற்சித்துள்ளார் .எஞ்சியது வெறும் சொல் வளமும் ஓசை நயமும்தான் .கவிதைக்கான பாதையில் அவர் பயணித்தாலும் அதன் இலக்கை அவர் எட்டவில்லை. 

நீ என்ன பெரிய கவிஞனா என்று கேட்பது தெரியும். ஒரு கவிதை உதாரணம் சொல்லவா....
பயணங்கள் என்றொரு கவிதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமானது. எனது அந்தக் கவிதை தொகுப்பிலும் இடம் பெற்றது. கவிதை சாதாரணமானதுதான் . ஓடும் பேருந்துகளில் ஒரு சேல்ஸ்மேனாக நான் பயணித்த அனுபவம்தான் கவிதை. ஆனால் அது கவிதையாகி விடாது. அதனால்தான் இறுதி வரியை இப்படி அமைத்தேன்

ஓடும் சக்கரங்களில் ஒருகணம் ஓடாமல் மனத்தை இருக்க செய்தபடி தொடர்கின்றன எனது பயணங்கள் 

இங்குதான் கவிதை எட்டிப்பார்க்கிறது. ஒரு அனுபவம் அகவயப்படும்போது புறம் அகமாகும்போது கவிதை பூக்கிறது. 





No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...