Friday 15 June 2018

உலக சினிமா -மிலாரபா

உலக சினிமா
மிலா ரபா -MILAREPA  -திபெத்திய திரைப்படம்
பாதையை வழிநடத்தும் வெளிச்சம்
செந்தூரம் ஜெகதீஷ்






கர்மத்தின் வினையை பகவத் கீதையும் உரைக்கிறது. தம்மபதமும் விளக்குகிறது. மனிதன் தனது கர்மவினைகளுக்குரிய வாழ்வை நடத்திச் செல்கிறான். அதனால்தான் அவன் செயல்களுக்கு உரிய காரணம் நமக்கு விளங்குவதில்லை. கர்மத்தை மாற்ற கடவுளாலும் முடியாது. ஆனால் நமது பாதையில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச இறைவனின் அருள் தேவை. அது கர்மத்தின் விளைவாய் ஏற்பட்ட துன்பங்களை புரிந்துக் கொள்ளவும் தாங்கிக் கொள்ளவும் கடந்து செல்லவும் உதவும்.
இப்படியொரு சிந்தனையை மையமாகக் கொண்டு திபெத்திய பௌத்த மரபின் அடிப்படையில் உருவான படம் மிலா ரபா.
மிலா ரபா யார்?
11ம் நூற்றாண்டில் வாழ்ந்த திபெத்தின் மகாகவி, ஆன்மீக குரு அதற்கு முன் அவர் ஒரு கொலையாளி- தனது குடும்பத்தை வஞ்சித்தவர்களை பழிக்குப் பழி வாங்கி பேரழிவை உருவாக்கியவர். ஆனால் வன்முறையால் எதையும் அடைய முடியாது என்ற ஞானம் அவருக்கு பௌத்த சிந்தனை மூலம் கிடைக்கிறது.
மிலா ரபாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் நெதின் சோக்லிங் இயக்கிய திரைப்படம் இது.
திபெத்தில் முன்னொரு காலத்தில் பறக்கும் யோகிகள் இருந்தனர் என்பார்கள். 11ம் நூற்றாண்டின் திபெத் இமய மலைப்பிரதேசம் ரிஷிகளாலும் ஞானிகளாலும் நிரம்பியிருந்தது. அவர்கள் எண்ணற்ற அதிசயங்களை செய்தார்கள். தந்த்ரா கலையை அவர்கள்தான் போதித்தார்கள். மந்திர சக்திகளை கைக்கொண்டு மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். ஒரு சாதாரண இளைஞன் மகா கவியாகவும் கவி ஞானியாகவும் மாறியது எப்படி?
மீலா ரபாவின் தந்தை பெயர்தான் மிலா. மிலாரபாவின் உண்மையான பெயர் தோபகா , தோபகா என்றால் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியான செய்தி, தமக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியால் தந்தை மிலாரபாவுக்கு வைத்த பெயர் அது. பால்ய ஸ்நேகிதி ஜேசாவுடன் ஆடிப்பாடி மகிழ்சசியுடன் வளர்ந்து வரும் சிறுவன் தோபகாவுக்கு தந்தையின் எதிர்பாராத மரணத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதல் நிகழ்கிறது.
தமது மரணப்படுக்கையில் மனைவி மற்றும் ஆண் பெண் என இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் படி சகோதரன் மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கிறார் மிலா. தனது சொத்துகள் முழுவதையும் அவர்களை நம்பி ஒப்படைத்துவிடுகிறார். தோபகாவின் சித்தப்பாவும் அத்தையும் சொத்துகளுக்கு ஆசைப்பட்டு அவன் தாயை கொடுமைப்படுத்துகிறார்கள். ஒருவேலைக்காரியைப் போல் நடத்துகிறார்கள். நாய்க்குப் போடும் எலும்பைக் கூட தரமாட்டார்கள். பாட்டுப் பாடுவதால் சிறுவன் மிலாரபாவுக்கு அடியும் உதையும் கிடைக்கிறது. குடும்ப கஷ்டம் தெரியாமல் பாட்டு என்ன பாட்டு என்று ஏசுகிறாள் அத்தை.
மிலாரபா வளர்ந்து விட்டான் .இப்போது இவன் இளைஞன். வலிமையானவன். குதிரை சவாரி செய்வான். ஜேசாவுடன் அவன் காதலும் வளர்ந்துள்ளது. தாய் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறாள். ஊரே திரண்டு வருகிறது. சித்தப்பாவும் அத்தையும் வருகிறார்கள். என் மகன் பெரியவனாகிவிட்டான். என் கணவரின் சொத்துகளை கொடுங்கள் என்று கேட்கிறாள் அந்த தாய். ஆனால் பணம் ஏதுமில்லை என்றும் உன் கணவருக்கு கடனாக நாங்கள் கொடுத்த பணம்தான் நாங்கள் எடுத்துக் கொண்டோம் என்றும் பச்சையாகப் புளுகுகிறார்கள் அவர்கள். ஊரும் அவர்கள் பக்கம் இருக்கிறது. ஊரில் பெரிய மனிதர்கள் அவர்கள்தானே. அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்களிடம்தானே கையேந்த வேண்டும்.
விருந்து நிகழ்ச்சியில் தாயை அடித்த சித்தப்பாவை தாக்குகிறான் மிலாரபா. அவனை பத்து பேர் சூழ்ந்துக் கொண்டு நையப்புடைக்கிறார்கள். ஆள் பலம் இருந்தால் படை திரட்டி வா இல்லையென்றால் எங்களுக்கு பில்லி சூனியம் வைத்து விடு என்கிறாள் அத்தை அகங்காரமாக.
தாய் உள்ளத்தில் பழி உணர்வு தோன்றுகிறது. அப்போது வீட்டுக்கு ஒரு யோகி இரவு நேரத்தில் அடைக்கலம் நாடி வருகிறார். விளக்கில் எண்ணெய் இல்லாத நிலையில் அவர் மாய சக்தியால் விளக்கு எண்ணெய் இல்லாமல் ஒளி வீசுகிறது. தனது மகனை மாய சக்திகளை கற்றுவரும்படி தூண்டுகிறாள் தாய். நீ பில்லி சூனியம் , கருப்பு ஏவல் போன்ற சித்து வேலைகளை கற்று வந்து உன் சித்தப்பாவையும் அத்தையையும் கொன்று விடு என்று கட்டளையிடுகிறாள் தாய். அப்படி நீ செய்யாவிட்டால் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் எச்சரிக்கை விடுக்கிறாள்.
மிலா ரபா மாயாஜாலங்களைக் கற்க நான்கு மாதம் நெடும்பயணம் மேற்கொள்கிறான். அவன் பழி உணர்வை மறக்காதிருக்க அவன் கழுத்தில் பவள மாலை ஒன்றை அணிவிக்கிறாள் தாய். காதலியும் தன் பங்குக்கு ஒரு சங்கிலியும் சோற்றுமூட்டையில் வைத்து கட்டித் தருகிறாள்.
அற்புதமான காடுகள் மலைகளை கடந்து மிலாரபாவின் குதிரை பறக்கிறது. கேமராவின் மூலம் இந்திய -திபெத் எல்லையில் உள் ள இமயமலையின் கண்குளிரச்செயும் பேரழகை நாம் பார்த்தபடி மிலாரபாவை பின்தொடர்கிறோம்.
இரவு நேரத்தில்  கனப்பு மூட்டி ஓய்வெடுக்கிறான் மிலாரபா. அப்போது அங்கே ஒரு பயணி வருகிறான். தன் பெயர் தர்மா என்று அறிமுகம் செய்து இரவு அவனுடன் இருக்க அனுமதி கோருகிறான். மிலாரபாவும் அவனும் இரவு முழுவதும் பேசி நண்பர்களாகிவிடுகிறார்கள். காலை எழுந்து இருவரும் குதிரைகளில் செல்லும் போது சித்தப்பாவின் படையினர் அவர்களைக் கொல்ல துரத்துகிறார்கள். இருவரும் தப்பிச்செல்ல தர்மா ஒரு மந்திரம் ஏவுகிறான். எதிரிகள் வரும் பாதையில் மூடு பனி சூழ்கிறது. இதனால் அவர்கள் வழிதவறிச்செல்கிறார்கள். மற்றொரு இரவுப் பொழுதில் இருவரும் ஓய்வெடுக்கையில் எதிரிகள் எந்த நேரத்திலும் வந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறான் மிலாரபா. வர மாட்டார்கள் என உறுதியாக கூறுகிறான் தர்மா. " அவர்கள் மனங்களில் ஊடுருவி மாயையை ஏற்படுத்தி விட்டேன். மூடுபனியில்  சிக்கியதாக அவர்கள் நம்பி்க் கொண்டிருக்கிறார்கள் .பாதை மாறி வேறுபக்கம் போய்விட்டார்கள்" என்று விளக்குகிறான் தர்மா.
தமக்கு மாயாஜால வித்தைகளை கற்றுத்தரும் யோகிகளிடம் அழைத்துச் செல்லுமாறு மிலாரபா கூறுகிறான். தர்மா மிலாரபாவை தமது தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கிறான் . தர்மாவின் தந்தை மிகப்பெரிய யோகி. எதிரியை வெல்ல அவர் சில சூட்சுமங்களை மிலாரபாவுக்கு கற்றுத்தருகிறார். அதில் முதல் பாடம் தான் கர்மவினை,
ஒருவர் செய்யும் நற்செயல்கள் வெண்ணிற நாட்களாகவும் தீமைகள் கரிய நாட்களாகவும் மாறுகின்றன. வெண்ணிற நாட்களில் நமது பலம் ஓங்கும். நாம் நினைத்த காரியங்கள் நடக்கும். நாம் சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம். எதிரியை வெல்ல நினைத்தால் வெல்லலாம். ஆனால் கரிய நாட்கள் தோல்வியை தரும். அவமானம், இழப்பு, வேதனை, துன்பத்தைத் தரும். உனது கரிய நாட்களில் எதிரியுடன் மோதாதே .அவனை விட்டுவிலகிவிடு. ஆனா்ல் எதிரியின் கரிய நாள் தெரிய வரும் போது உன்னுடைய வெண்ணிற நாட்களில் அவன் மீது படையெடு. அவனை அழிப்பது சுலபம் என்கிறார் குருஜி.
பாவம் மாய வித்தைகள்தான் ஏழைகள் தங்கள் அநீதிக்கு பயன்படுத்தும் ஆயுதம் என நினைப்பதாக மிலா ரபா மீது அவர் பரிதாபம் கொள்கிறார்.
ஆனால் அவரிடம் கல்லை பறக்க வைப்பது போன்ற சில வித்தைகளைக் கற்றாலும் மிலாரபாவுக்கு திருப்தி வரவில்லை. இந்த சின்ன சின்ன கண்கட்டு வித்தைகளால் என் பலம் வாய்ந்த எதிரிகளை என்னால் அழிக்க முடியாது. எனக்கு மிக மிக ரகசியமான வித்தைகளை கற்றுத்தாருங்கள் என்று குருவிடம் கோருகிறான் மிலா ரபா.
அப்போது யோன்டன் என்ற குருவிடம் மிலாரபாவை அனுப்பி வைக்கிறார் தர்மாவின் தந்தை.
மிலா ரபா அவரிடம் தனது கதையைக் கூறி மகத்தான வித்தைகளை தமக்கு கற்றுத்தரும்படி கேட்டுக் கொள்கிறான். ஒரு குருவானவர் தனது சீடனுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் கற்றுத் தரக்கூடிய மந்திர தந்திர சக்திகளை நான் கற்றுத் தருகிறேன் என்று யோன்டன் கூறுகிறார். ஏழு நாட்களுக்கு இதைப் பயில தியானம் மேற்கொள்ளுமாறு அவர் கூற மிலாரபா ஏழு நாள் தியானத்தில் அமர்கிறான்.
அப்போது அவன் மனம் ஒருமுகப்படவில்லை. எண்ணங்கள் அலை மோதுகின்றன. தியானம் கலைகிறது .உன் மனம் உன் வசம் இல்லை என்கிறார் குருஜி. ஆம். தாயின் துன்பங்கள், காதலியின் பிரிவு, எதிரிகளின் துரோகம் அவனை அலைக்கழிக்கிறது.
மாயையான எண்ணங்களில் நீ சிக்கி்க் கொண்டால் உன்னால் எதையும் சாதிக்க முடியாது. மனத்தை வசப்படுத்து என்றும் மேலும் ஏழு நாட்கள் தியானம் செய்யுமாறும் கூறுகிறார் குரு.
அடுத்த ஏழு நாட்களில் மிகப்பெரிய மந்திர சக்திகளைப் பெறுகி்றான் மிலா ரபா.
ஆயிரமாயிரம் அமானுஷ்ய சக்திகள், பேய் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள், ஆவிகள் யாவும் மிலாரபாவின் உடலுக்குள் அடங்குகின்றன.
தனது சொந்த ஊருக்குத் திரும்பி அங்கு பேரழிவை ஏற்படுத்தும் புயலை கிளப்புகிறான் மிலா ரபா. விறகு வெட்டி வரும் ஒரு மூதாட்டி அவன் அருகே ஓய்வெடுக்கும் போது அவன் மந்திர சக்திகளால் ஊரையே அழித்து நாசம் செய்வதை கண்டு கண்ணீர் வடிக்கிறாள். அந்தக் கண்ணீர் மிலா ரபாவை சுடுகிறது.
சித்தப்பா, அத்தை உள்பட தீங்கு செய்தவர்கள் அனைவரும் அழிந்து விடுகிறார்கள்,அவர்களுடன் ஆயிரமாயிரம் அப்பாவிகளும் அந்த ஊழிப்பெருவெள்ளத்திலும் புயலிலும் உயிரிழந்துவிட்டார்கள். எங்கும் சடலங்கள். அனாதையான குழந்தைகள், விதவையான பெண்கள். ஆதரவற்ற முதியவர்கள் என்று மனிதத்தின் கோரமான காட்சிகள் மிலாரபாவை உலுக்குகின்றன.
இரவுகளில் அவனால் தூங்க முடியவில்லை. மிகப்பெரிய மனித துயருக்கு தாம் காரணமாகி விட்டோம் என்று அவன் தவி்க்கிறான். தன் அருகில் படுத்திருந்த கிழவியின் சுருக்கம் தோய்ந்த முகத்தில் வழிந்த கண்ணீர் மனிதத்திற்காக வடித்த கண்ணீர் என்பதை அவன் உணர்கிறான். அவனுள் மாபெரும் மனிதநேயமும் அற உணர்வும் எழுகிறது. அப்போது இரவில் அவன் ஒரு புத்த ஆலயத்தில் அடைக்கலம் நாடிச் செல்கிறான். அங்குள்ள புத்தபிட்சு ஒருவர் புத்தரின் தம்மபதத்தை அவனுக்கு வாசிக்கிறார். அதில் உள்ள போதனைகளை அவனுக்கு உரைக்கிறார்.
பழிவாங்கும் உணர்வால் எதையும் நீ அடைய மாட்டாய்.எதிரிகள் முடிவற்றவர்கள் , நீ அவர்களை அழிக்க அழிக்க அவர்கள் மேலும் மேலும் பெருகி வருவார்கள். நீ அவர்களைப் பழி வாங்க அவர்கள் உன்னை பழி வாங்குவார்கள். இது ஒரு தீராத நோய். எதிரிகள் வெளியுலகில் இல்லை. அவர்கள் உன் மனதுக்குள் தான் இருக்கிறார்கள். உன் மனம் தீமையான எண்ணங்களால் நிரம்பும் போது இந்த எதிரிகள் தோன்றுவார்கள் ,மனத்தை கட்டுப்படுத்து எதிரிகள் மாயமாகிவிடுவார்கள் என்று போதிக்கிறார் அந்த பிட்சு
பாதகமான செயல்களை செய்யாதே சாதகமான செயல்களில் கவனம் செலுத்து என்று புத்தபகவான் கூறியதை வேதவாக்காக உணர்கிறான் மிலாரபா.
மனித குலத்திற்கு தீமை செய்ய நினைப்பது தீய உணர்வுகளைத் தூண்டுவதுதான் நமது தீவினைக் கர்மாவாக மாறுகிறது என்பதையும் மிலாரபா உணர்கிறான். அவை நமது கரியநாட்களாகவும் மாறுகின்றன.
மனிதர்களுக்கு நன்மையைச் செய்வது ,மனிதகுலத்தின் துன்பங்களைத் துடைக்க சேவை செய்வது, மனிதத்திற்காக இயங்குவது நமது வெண்ணிற நாட்களாகி அவை கர்மாவின் துன்பங்களைத் துடைக்க பாதைக்கு வெளிச்சமாகின்றன என்றும் மிலா ரபாவின் விழிப்புணர்வு உரைக்கிறது.
மரணம் பற்றியும் சிந்திக்கிறான் மிலா ரபா. மரணம் முடிவல்ல ஒரு தொடர்ச்சி. முந்தைய கர்மவினைகள் மனிதனை துரத்துகின்றன. அதை மாற்றுவது எப்படி என்று கேட்கிறான் மிலாரபா.
மாபெரும் ஞானிகளை உன்பாதையி்ல் வந்து உன்னை வழிநடத்திச் செல்ல அனுமதி. புத்தர் போன்ற மகத்தான ஞானிகள் அந்தப் பாதையின் வெளிச்சமாக உன்னை வழிநடத்திச் செல்வார்கள் என்று புத்தபிட்சு கூறுகிறார். இறைவன் அளி்த்த மகத்தான மனிதப்பிறவியை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மிலா ரபா உணர்கிறான். அன்று முதல் அவன் சாதாரண நபரில் இருந்து ஞானம் அடைகிறான். அவனும் ஒரு ஞானியாகிறான். ஞானத்தின் பாதையில் தனது பயணத்தைத் தொடர்கிறான்.







இப்படம் கொலைவெறியுடன் பழிக்குப் பழி வாங்கத் துடித்த மிலா ரபாவின் வாழ்க்கையின் முற்பகுதியை மட்டும் உரைக்கிறது. மிலா ரபா ஞானமடைந்து தனது தாய் தந்த பழி உணர்வின்  அடையாளமான பவள மாலையை கழற்றுவதும் காதலி தந்த மலையை கூட கழற்றி விட்டு பந்தங்களில் இருந்துவிடுபடுவதும் படத்தின் இரு சிறிய காட்சிகளில் விளக்கப்படுகிறது.
படத்தின் தொடக்கம் முதலே மனத்தை மயக்கும் ஓர் அசீரிரீ போல் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது, அந்த அசீரிரீ நம் மனங்களை படத்தின் மனநிலைக்கு தயார் செய்கிறது.
2006ம் ஆண்டில் வெளியான இ்ப்படத்தின் இரண்டாம் பாகம் 2009 ல் வெளியாகும் என்று படத்தின்  இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது வரவே இல்லை. அந்த இரண்டாம் பகுதியில்தான் மிலா ரபா தனது ஆன்மீக குருவை சந்திக்கும் படலம் உள்ளது.
மிலா ரபாவின் கவிதைகளை ஓஷோ அடிக்கடி மேற்கொள் காட்டுவதுண்டு. மிலா ரபாவை தேடி அலைந்த நாட்கள் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மோதிலால் பனாரசிதாஸ் கடையில் மிலா ரபாவின் கவிதைகள் புத்தகமும் மிலா ரபாவின் வாழ்க்கையை விளக்கும் புத்தகமும் வாங்கி வந்து பத்தாண்டுகள் ஆகி விட்டன. தமிழாக்கம் செய்ய்பட வேண்டிய எண்ணற்ற அரிய பொக்கிஷங்களில் மிலாரபாவின் கவிதைகளும் உண்டு. மிலா ரபாவைப் பற்றிய திரைப்படம் ஒன்று வெளியாகி இருப்பது அந்த மகத்தான கவிஞானியைப் புரிந்துக் கொள்ள ஒரு எளிய மார்க்கமாகி விட்டது. சில நேரங்களில் ஒரு புத்தகம் அல்லது ஒரு திரைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தியானம், லயிப்பு, நம்மை அற்புகமான உணர்வுகளுக்கு ஆட்படுத்துகிறது. நமது தீய எண்ணங்கள் கரைந்து விடுகின்றன. நாம் ஞானிகளாகவே மாறிவிடுகிறோம்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...