Sunday 10 June 2018

பழைய புத்தகங்கள், சினேகா இன்னும் பிற

10-6-2018
இன்றைய தினம் திரைப்படங்களைக் காண்பதில் கழிந்தது. எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளையும் திரைப்படங்களையும் தேடுவது எனது வழக்கம்.இந்தியாவின் பல நகரங்களிலும் புத்தகங்களுக்காக பல காலமாக திரிந்ததை மறக்கவில்லை.
மும்பையின் ஃபோர்ட் பகுதியிலும் விலே பார்லே பழைய பத்திரிகைகள் கடைகளிலும் தாதர் விடி, சர்ச் கேட் போன்ற இடங்களின் பிளாட்பாரங்களிலும் புத்தகங்களை அள்ளியிருக்கிறேன். கால்பாதேவி ரோடு பகுதியில் பர்சனல் புக் ஷாப் என்ற  பழைய புத்தகக் கடை இருந்தது. இப்போது போனால் அதைக் காணவில்லை.
இதே போல் டெல்லியில் செங்கோட்டை அருகில் கொட்டிக் கிடந்த பழைய புத்தகக் கடைகளிலும் பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, நாகர்கோவில், பாண்டிச்சேரி, திருநெல்வேலி, பழனி போன்ற பல ஊர்களிலும் புத்தகக் கடைகளை நாடியிருக்கிறேன். சென்னை திருவல்லிக்கேணியிலும் மூர்மார்க்கெட்டிலும் எனக்கு மட்டுமே தெரிந்த எண்ணற்ற பழைய பேப்பர் கடைகளிலும் புத்தகங்கள் திரட்டியிருக்கிறேன். இப்போது ஏராளமான பழைய புத்தகக் கடைகளைக் காணவில்லை. இதே போல் இந்தியாவின் பல நகரங்களில் திரைப்பட டிவிடிக்களை தேடியிருக்கிறேன். சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், ட்ரூபாட், ஃபெலினி, அகிரா குருசோவா, சாப்ளின் படங்களையும் ஹிட்ச்காக், பெர்க்மென், படங்களையும் சேகரித்தேன். கணிசமான அளவுக்கு சென்னையில்தான் கிடைத்தன. 
மும்பை கல்யாண் பகுதியில் இருந்த டிவிடி கடைகளில் பழைய இந்திப்பட புதையல்கள் கிடைத்தன. டெல்லி சாந்தினி சவுக் அருகே உள்ள மின்னணு சாதன பஜாரில் பழைய கருப்பு வெள்ளை படங்களை ஒருவர் ஏராளமாக குவித்து வைத்துள்ளார். அவற்றின் அருமைகளை சொல்ல அசோகமித்திரன் இல்லாமல் போய்விட்டாரே.
இப்படி வாங்கிய புத்தகங்களும் படங்களும் குவிந்துக் கிடக்கின்றன. படிக்கவும் படம் பார்க்கவும் நேரம் குறைந்து வருகிறது.கண்பார்வை, தூக்கம்., சோர்வுடன் போராட வேண்டியுள்ளது. ஆயினும் ஒரே மூச்சில் வாரத்தில் ஏழு புத்தகங்களைப் படிக்கவும் 20-30 படங்களை பார்க்கவும் எனக்குப் பயிற்சி உள்ளது.அண்மையில் பார்த்த படங்களில் விஜய் -சினேகா நடித்த வசீகரா படம் பிடித்தது. வழக்கமான தமிழ்சினிமா கதைதான். பாடல்களில் எஸ்.ஏ.ராஜ்குமார் பிரமாதம். 




சினேகா என் அபிமான நடிகை. அவர் புன்னகை அரசிதான். கண்களும் கொள்ளை அழகுதான்.ஆனால் உடல்வாகு கை கொடுக்காமல் கவர்ச்சியாகவும் நடிக்கத் தெரியாமல் தேவயாணி போல் குடும்பப் பாங்காகவும் மாறாமல் திருமணம்  செய்து விலகிவிட்டார்.இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இன்று பழைய டி.எம்.எஸ். தனிப்பாடல்களைக் கேட்ட போது கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்றொரு பாட்டு....இதில் சில வரிகள்...


மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோவில் அம்மா....

உன்னை அழிக்க வந்த பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதை விடு....



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...