கே.வி.மகாதேவன் நூற்றாண்டு

திரை இசைத் திலகம் 
கே.வி.மகாதேவன்  நூற்றாண்டு
தேவர் பிலிம்ஸ் படங்கள் வழியாக கே.வி.மகாதேவனின் இசை காதுகளில் தேன்பாய்ச்சிய காலம் ஒன்று இருந்தது. அவை யாவும் எம்ஜிஆர் நடித்த கருப்பு வெள்ளை படங்கள். தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், போன்ற படங்கள் தொடங்கி எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண், நல்ல நேரம் , பல்லாண்டு வாழ்க வரை ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் கே.வி.எம்.
சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் ,தில்லானா மோகனாம்பாள், குங்கும், இருவர் உள்ளம், சத்யம், வசந்த மாளிகை , உத்தமன் போன்ற படங்களும் கே.வி.மகாதேவனின் புகழ் மகுடத்தில் மின்னும் வைரக்கற்களாகும். படிக்காத மேதையில் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா பாட்டும் , எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் என்ற பாட்டும் யார் மனதிலும் மறையாது.

சில படங்களில் எஸ்.எஸ்.ஆருக்கும் இசையமைத்தார். முதலாளி படத்தில் வரும் ஏரிக்கரை மேல போறவளே பெண்மயிலே பாடல் மிகவும் பிரசித்தம். வானம்பாடியில் கடவுள் மனிதனாகப்பிறக்க வேண்டும், ஏட்டில் எழுதி வைத்தேன், கங்கைக் கரை தோட்டம் போன்ற பாடல்கள் காதில் இன்பத்தேன் ஊற்றுபவை.
கே.வி.மகாதேவனுக்கு கண்ணதாசன் மீது அலாதி பிரியம். அவர் தான் பாடல்கள் எழுத வேண்டும் என்பார். ஆனால் பின்னாட்களில் வாலியும் புலமைப்பித்தனும் அவருக்கு பாடல்களை எழுதிய போது அவையும்  பெரிய அளவில் பாடப்பட்டன. பல்லாண்டு வாழ்க படத்தில் நா.காமராசன் எழுதிய போய்வா நதியலையே பாட்டும் புலமைப்பித்தன் எழுதிய ஒன்றே குலம்என்று பாடுவோம் பாடலும் ஜேசுதாஸ் குரலில் நம்மை மெய்மறக்கச் செய்த நாட்கள் அவை.

எனக்கு நினைவில் இருக்கும்  ஒரு சம்பவம. அப்போது சிடிக்கள் அதிகமாக கிடைக்காது. ஆடியோ கேசட்டுகள்தாம். நானும் பித்துப்பிடித்தவனாக ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க், மியூசில் வோர்ல்ட் கடைகளுக்கு வாரம்தவறாமல் போய் விடுவேன். கண்ணில் படும் அத்தனை நல்ல பாடல் கேசட்டுகளையும் வாங்கி வந்து சேகரிப்பேன். கிடைக்காத பாடல்களை ரிட்சி தெருவில் போய் 30 ரூபாய்க்கு ஒரு கேசட் வீதம் ரிக்கார்டிங் செய்து வருவேன். இப்போது அந்த கேசட்டுகளை கேட்க சரியான மியூசிக் சிஸ்டம்இல்லாமல்அத்தனையும் மூர்மார்க்கெட்டிலும் பழையபேப்பர் கடைகளில் கிலோ12 ரூபாய்க்கும் விற்று காலி பண்ணி விட்டேன்.மடத்தனம்தான். எத்தனை அரிய பாடல்கள். இனி அவை அந்த ஒரிஜினல் ஹெச்எம்வியின் துல்லியமான ஆடியோவுடன் கிடைக்குமா.....
பேசாமல் அவற்றை சிடி வடிவில் மாற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது வேறு வடிவில் கணினியில் சேகரித்து வைத்திருக்கலாம். நேரமின்மை. பணமின்மை ஆர்வமின்மை அல்லது இடமின்மை காரணமாக அவை என்னை விட்டுநீங்கிப் போய்விட்டன. 
ஒரு முறை ஜெமினி பார்சன் காம்பிளக்சில் நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் கண் மருத்துவமனை நடத்தி வரும் இடத்தின் பேஸ்மேன்ட் பகுதியில் ஒரு ஆடியோ ஷாப் இருந்தது. அங்கு கே.வி.மகாதேவன் இசையமைத்த ஆடியோ கேசட்டுகள் 1,2 என கிடைத்தன. அற்புதமான பாடல்கள். பல பாடல்கள் எம்.எஸ்.வி இசையமைத்ததாக நான் நினைத்திருந்தவை.
வாமனன் கே.வி.மகாதேவன் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவசியம் படித்து பாருங்கள். 
இதே போல் வி.குமார், ஷ்யாம், வி.தட்சிணாமூர்த்தி, விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ், சிவாஜி ராஜா, எல்.வைத்தியநாதன், ஆர். சுதர்சனம், ஆர்.கோவர்த்தனன், டி.ஆர்.பாப்பா, போன்ற இசை மேதைகளின் திறன்கள் குறித்து மிகவும் குறைவாக எழுதப்பட்டுள்ளது. எம்.எஸ்.வி-ராமமூர்த்தி மற்றும் இளையராஜாவின் நீண்ட நெடுங்கால திரையிசை ஆட்சியில் இந்த மேதைகளுக்கும் தனி ராஜ்ஜியமே உண்டு. 

பல பாடல்களை கண்ணதாசன், வாலி பாடல்கள் எனநினைத்து ஏமாந்து விடுவோம். கடைசியில் பார்த்தால் அவை பூவை செங்குட்டவன்( நான் உங்கள் வீட்டுப் பிள்ளை) ஆலங்குடி சோமு ( இரவும் வரும் பகலும் வரும்)
அவினாசிமணி( அங்கே வருவது யாரோ ) என தெரிய வரும்.

அதே போல்தான் கே.வி.மகாதேவன் பாடல்களை எம்.எஸ்.வி பாடல்களில்இருந்து தனியாக பிரித்து விடுவது சுலபம். வசந்த மாளிகையும் உத்தமனும் சிவாஜிக்காக கே.வி.மகாதேவன் இசைத்தார். அந்தப் பாடல்களைக் கேளுங்கள். இசைக்கருவிகளின் ஒலி, பாடல் வரிகளுக்குத் தரும் அழுத்தங்கள் போன்றவற்றில்  கே.வி.மகாதேவனின் தனிமுத்திரை  தெரியும். 


கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்களில் எனக்குப்பிடித்த பாடல்களின் பட்டியல் மிகப்பெரியது. ஆனால் ஒரே ஒரு பாட்டை சொல்ல வேண்டும் என்றால் எதைச் சொல்வேன்....
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ....
அந்தப் பாடல் எனக்காகவே கண்ணதாசனும் கே.வி.மகாதேவனும் உருவாக்கியது போல் இருக்கும்.Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்