Sunday 17 June 2018

இறைவன் ஒருவனே

இறைவன் ஒருவனே

சீக்கிய மரபில் வளர்ந்த சிந்தி இனத்தில் பிறந்தவன் நான். பாகிஸ்தானில் சிந்துநதியின் மிசை நிலவினிலே வாழ்ந்தவர்கள் எனது மூதாதையர்கள். பிரிவினையின் போது பல கோடிமதிப்புடைய சொத்துகளை முஸ்லீம் வெறியர்களிடம் பறிகொடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ரயிலின் கூரைகளில் ஏறி பயணம் செய்து இந்தியா வந்த இந்து-சீக்கியர்களில் ஒருவர்தான் என் தாத்தா. அப்போது என் தந்தை கைப்பிள்ளை.அகதிகளாக வந்தவர்களுக்கு அப்போதைய இந்திய அரசாங்கம் உப்பை விற்க அனுமதியளித்து திருச்சியில் எங்களை குடியேற்றியது.அப்பா அங்குஉப்பு விற்றபடி படித்தார். கணக்கு எழுதப் பழகி புதுமைப்பித்தனின் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் போல் ஒருரூபாய் கூட கையாடல் செய்யாத நேர்மையான குமாஸ்தாவாகவும் கேஷியராகவும் கணக்குப்பிள்ளையாகவும் ராமச்சந்திரன் என்ற செல்வந்தரிடம் பணியாற்றினார்.தாத்தா உப்பு விற்றுவந்தார். வாடகை வீட்டில் ஒரு அறையில் உப்பு குவியல்குவியலாக கிடக்கும். படியளந்து தாத்தா பையுடன் வருவோருக்கு பரிமாறுவாராம். தாத்தாவுக்கு என் மேல் அலாதிப் பிரியம், உயிர் . எப்போதும் அவர்மடியில்தான் கிடப்பேன். பாகிஸ்தான் சிந்து பகுதியில் புகழ் மிக்கவராக விளங்கிய தத்தாசிங்( Thadha singh) மகனான சீத்தல்தாசின் பேரன் என்ற பெருமை எல்லாம் அப்போது எனக்கு விளங்கவில்லை.
தெரிந்தோ தெரியாமலோ தாத்தாவுக்குப் பின்னர் அந்த இடத்தை அப்பா எடுத்துக் கொண்டார்.அப்பா மடியில் அடங்காமல் நான் துள்ளும்போது அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். அந்தப் பழைய கருப்பு வெள்ளைப்படம் இன்னும்என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
இது ஏதோ என் சுயபுராணமோ சுயசரிதையோ அல்ல. அறிவுமதி பச்சியப்பன், நா.முத்துக்குமார் போன்ற சிலரால் மார்வாடி என துவேசத்துடன் நான கடுமையாக கழுவி ஊற்றப்பட்ட நாட்களை நினைத்தும் இதை நான் எழுதவில்லை.என் அருகில் நிற்கக்கூட பயந்து பழனிபாரதி போன்றவர்கள் ஒதுங்கி விலகி நின்ற நாட்கள் அவை.
போகட்டும்.
அப்பாவும் சீக்கிய மரபில் பற்றுக் கொண்டவர்தான். ஏக் ஓம்கார் சத்னாம் நிர்பவ் நிர்மய் அகால மூரத் அஜூனி என சிறுவயதில் இருந்தே ஜப்புஜிசாஹிம் வாசகங்கள் மனப்பாடம். ( JAPUJI SAHIB)

ஏக் ஓம்கார் என்றால் ஒன்றே ஒங்காரம் அதாவது இறைவன் ஒருவனே

சத்னாம் -சத்தியமே அவன் பெயர்

பிற்காலங்களில் சீக்கிய புனிதத் தலங்களை தரிசித்தேன். அமிர்தசரஸ் பொற்கோவில், நான்தேத்தில் உள்ள 11 குருதுவாராக்கள், டெல்லியில் பங்களா சாகிப், சாந்தினி சவுக்கில் உள்ள குருதுவாரா, உள்ளிட்ட இடங்களுக்குப் பயணித்து குரு கிரந்த சாகிப் நூலை ஆங்கிலத்தில் வாங்க தேடியலைந்தபோதும் கிடைக்கவில்லை. ஆடியோ வடிவில் ஜப்புஜி சாகிப் கிடைத்தது. 


அப்போது தம்பி விஜய் மூலம் அறிமுகமானார் பாய் சமன்ஜித் சிங். (Bhai Chamanjit singh)




பாய் சமன்ஜித் சிங் சீக்கியர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான மிகப்பெரிய மகான். குருநானக்கின் வாரிசாக , அவர் மரபில்வந்த ஆன்மீக ஞானியாக போற்றுகின்றனர். அவருடைய குரலில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. டெல்லியில வசித்து வரும் அவரை குடும்பத்துடன் போய் சந்தித்து அவர் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். நான்தேதிலும் அவருடைய நிகழ்ச்சியை இரவு முழுக்க விடிய விடிய குருதுவாராவில் கேட்டது மறக்கமுடியாத அனுபவம்
அன்பு, பக்தி, இஸ்லாமிய படையெடுப்போரால் கொன்று குவிக்கப்பட்ட சீக்கியத் தலைவர்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு போன்றவற்றை அவர் தமது பிரசங்கம் மூலம் விளக்குவார். தாயையும் தந்தையையும் மதிக்க அவர் எப்போதும் கூறுவார்.
அவருடைய குரலில் ஏக் ஓம் கார் என்ற ஜப்புஜி சாகிப்பின் வாசகமும் க்யா லாகி மேரே என்பது போன்ற கீதங்களையும் யூடியூப்பில் கேட்கலாம். டெல்லி, அமிர்தரஸ் போன்ற இடங்களில் டிவிடிக்களாகவும் கிடைக்கலாம்.
எனக்கும் பஞ்சாபி மொழி தெரியாது. ஆனால் அவர் பாடுவதைக் கேட்டு கண்களில் கண்ணீர் ததும்பும். ஆழ்வார்கள், ஆண்டாள், மீரா வரிசையில் வந்தவர் போல் உருகி உருகி பாடுவார். இன்று -17.6.2018 சென்னையில் அவருடைய கச்சேரியை மீண்டும் ஜி என் செட்டி சாலையில் உள்ள குருதுவாராவில் கேட்டு மகிழ்ந்தேன்.
meetha laage tune jo kiya என்றொரு பாடலைப் பாடும் போது அழுதேன். நீ தந்தவை எல்லாம் இனிமையானவை எனஇறைவனுக்கு நன்றி கூறும் பாடல் அது.
அவருடன் சில நிமிடங்கள் பேசவும் முடிந்தது. தம்பி தன் வீட்டுக்கும் அவரை அழைத்துவந்திருந்தான்.இத்தனை பெரிய மகான் எங்கள் குடும்பத்தினருடன்  பேசுவதைக் காண பேரானந்தம்.

சென்னைக்கு அவர் அடுத்த முறை கச்சேரி செய்யும் போது இங்கு முன்கூட்டியே பதிவு செய்துவிடுகிறேன் . இறைவன் ஒருவனே எனநம்பிக்கை கொண்ட நண்பர்கள் குருதுவாராவுக்கு வாருங்கள். அந்த அனுபவத்தை உணருங்கள். 
குருதுவாராவில் முக்கியமான நடைமுறைகள் இவை
தலையை  பெரிய கர்ச்சீப் அல்லது சிறிய தொப்பியால்மூட வேண்டும். முடியை மறைப்பது சீக்கியர் வழக்கம்
கை கால்களைக் கழுவிய பின்னரே குருதுவாராவில் நுழைய வேண்டும்.
இறைவனை வணங்கி உண்டியலில் சிறிய காணிக்கை-பத்து ரூபாய் கூட போதும் செலுத்தி வந்து சம்மணமிட்டு அமர வேண்டும். கால் ஊனம், வலி இருந்தால் நாற்காலியில் அமரலாம்.
கச்சேரி முடிந்த பிறகு குரு கிரந்த சாகிப் புனிதநூலில் இருந்து வாசகம் ஒன்றை வாசிப்பார்கள். அது அன்றைய நாள் ஜோதிடம் போல் அனுபூதியாக ஒலிக்கும்.
பின்னர் கையில் சுடச்சுட கராவ் பிரசாதம் கொடுப்பார்கள். கராவ் என்றால் கேசரி.ரவா கேசரி.
இறுதியாக லங்கர் எனப்படும் விருந்தும் உண்டு. லங்கரில் தால்,சப்பாத்தி, காய்கறிகள், சலாட், சாதம், மோர் போன்றவை இடம்பெறுவதுவழக்கம். வீணடிக்காமல் வேண்டியதை உண்ண வேண்டும் ஏனெனில் அது பிரசாதம். வாங்கும் போது இரு கையை நீட்டி பிச்சையெடுப்பது போல் பெற வேண்டும். இறைவனிடம் கையேந்துங்கள்.

அவ்வளவுதான். 














No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...