Wednesday 13 June 2018

சினிமாவில் இலக்கியத்தின் சுவடுகள்

செந்தூரம் ஜெகதீஷ்
சினிமாவில் இலக்கிய சுவடுகள்

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.பைபிளை அடிப்படையாக நூற்றுக்கணக்கில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தல்ஸ்தோய், தஸ்தயாவஸ்கி, ஹென்றி மில்லர், பிரான்ஸ் காப்கா, மாக்சிம் கார்கி, எர்ணஸ்ட் ஹெமிங்வே, ஆன்டன் செக்காவ், சிக்மண்ட் பிராய்டு, காரல் யுங், நீட்சே, மார்க்யூஸ் டிசாட், மைக்காலாஞ்சலோ உள்பட உலகின் சிந்தனைப் போக்கை மாற்றியமைத்த அத்தனை மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளும் பயோ-பிக் படங்களாக திரைப்பட மேதைகளால் இயக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அவர்களின் மிக முக்கியமான படைப்புகள் திரைப்படங்களாக இயக்கப்பட்டுள்ளன.

தஸ்தோயவஸ்கியின் இடியட்டை அகிரா குருசோவா திரைப்படமாக்கியுள்ளார். இதே போன்று அவருடைய ட்ரீம்ஸ் படமும் தஸ்தயவஸ்கியின் படைப்பின் திரைவடிவமே. வெண்ணிற இரவுகள், கரம்சோவ் சகோதரர்கள், கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட் போன்ற தஸ்தவஸ்கியின் புகழ் மிக்க நாவல்கள் திரைப்படங்களாக பல முறை எடுக்கப்பட்டுள்ளன.
தல்ஸ்தோயின் அன்னா கரீனினா , போரும் அமைதியும் போன்ற புகழ் மிக்க நாவல்களும் திரைப்படங்களாகியுள்ளன.
கோர் விடால்எழுதிய கான் வித் தி விண்ட் (gone with the wind) மிலன் குந்த்ராவின் the unbearable lightness of being ) விளாதிமீர் நபகோவின் லோலிதா, மாக்சிம் கார்க்கியின் தாய், நிகோஸ் கஸான்ட்சாகிஸ் எழுதிய zorba the greek  போன்ற நாவல்களும் அற்புதமான திரைவடிவில் நமக்கு கிடைக்கின்றன. 
இலக்கியத்திற்கும் சினிமாவுக்குமான தொடர்பு நீண்ட நெடியது .அடர்த்தியானது. ஆழமானது. ஒன்றை ஒன்று வெகுமதி செய்வது, வியப்பது என்று நாம் அனுமானித்துக் கொள்கிறோம்.
அனாய்ஸ் நின்னும் ஹென்றி மில்லரும் எப்படி பழகினார்கள் என்பதை நாம் சினிமா மூலம் கண்களில் வரித்துக் கொள்கிறோம். 
உலக இலக்கியங்களிலும் சினிமாக்களிலும் நாம் காணும் இந்த போக்கை இந்திய திரையுலகிலும் காணலாம்
பஷீரின் மதிலுகள், எம்.டி. வாசுதேவன் நாயரின் வைஷாலி, தகழி சிவசங்கரனின் செம்மீன் போன்ற படங்களையும் ஆர்.கே.நாராயணனின் கைடு, யு.ஆர்.அனந்தமூர்த்தியின் சமஸ்காரா போன்ற புகழ் பெற்ற படங்களை நாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.
சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி முதல் பெரும்பாலான படங்கள் , தாகூரின் கதைகள், சரத் சந்திரரின் கதைகள் போன்றவை வங்காள சினிமாவுக்கு வளம் சேர்த்துள்ளன.
இலக்கியத்தை சினிமாவுடன் இணைப்பதற்காக தமிழிலும் சில முயற்சிகள் நடைபெற்றன புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற கதை இயக்குனர் மகேந்திரனால் உதிரிப்பூக்கள் என்றும் உமாசந்திரனின் முள்ளும்மலரும் அதே பெயரிலும் வெளியாகின.
நீல பத்மனாபனின் தலைமுறைகள், ஜெயமோகனின் ஏழாம் உலகம்( நான் கடவுள்) என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுஜாதாவின் பல கதைகள் சினிமாவில் கமலும் ரஜினியும் நடித்தாலும் அவற்றை தமது கதைகள் போல் இல்லை என்று சுஜாதா நிராகரித்தார். பிரிவோம் சந்திப்போம் கதையை சேரன் இயக்கினார்.
கோமல் ஸ்வாமிநாதனின் தண்ணீர் தண்ணீர், ஒரு இந்திய கனவு போன்ற மேடை நாடகங்கள் சினிமாவாக்கப்பட்டன. இயக்குனர் கே. பாலசந்தரின் கைவண்ணம் இதற்கு அழகு சேர்த்தது.
பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகளை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியது வரலாறு. இதே போல் தில்லானா மோகனாம்பாள் படமும் ஆனந்த விகடனில் தொடராக வந்ததுதான்.
அனுராதா ரமணனின் சிறை மற்றும் சிவசங்கரியின் கதைகளும் சினிமாவுக்கு கொண்டு செல்லப்பட்டன
ஜெயகாந்தன் தமது சில நேரங்களில் சில மனிதர்கள், உண்மை சுடும், ஒருநடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான்,  போன்ற படங்களாக நமக்கு அளித்துள்ளார். பீம்சிங் போன்ற சிறந்த இயக்குனர்களும் எம்.பி .சீனிவாசன் போன்ற ஜெயகாந்தனின் தோழர்களும் இதற்கு பங்களிப்பு செய்தனர்.
சோ தமது உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை,முகமது பின் துக்ளக் போன்ற நாடகங்களை திரையில் வடித்தார்
தி.ஜானகிராமனின் மோகமுள் ஞானராஜசேகரனால் இளையராஜாவின் துணையுடன் நமக்கு கிடைத்தது. இசையில்லாமல் இந்தப்படத்தை கற்பனைகூட செய்ய முடியவில்லை.
நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் தொலைக்காட்சித் தொடராக வந்தது. மு.க.ஸ்டாலின் அதில் அரவிந்தனாக நடித்தார்.
தங்கர்பச்சான் தமது ஒன்பது ரூபாய் நோட்டை சினிமாவாக்கினார்.
மகிரிஷியின் பத்ரகாளியை ஏசி திருலோகசந்தர் இயக்கினார். இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை ராணி சந்திரா எதிர்பாராத விதமாக விமான விபத்தில் உயிரிழந்தார்.
புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். கமல்ஹாசன், சுஜாதா நடித்தனர்.
ஜாவர் சீதாராமனின் கதைகளும் படமாக்கப்பட்டுள்ளன.
இப்படி பட்டியலை நாம் போட்டாலும் கூட தமிழின் ஆகச்சிறந்த பல இலக்கியப் படைப்புகள் திரையுலகினரால் தீண்டத்தகாதவையாக இருக்கின்றன. அந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்தமாகவோ என்னவோ எழுத்தாளர்களை சினிமாவுக்கு வசனம் எழுத அழைக்கிறார்கள், பாகவதருக்கு வசனம் எழுத புதுமைப்பித்தன் புனேபோய் தங்கியிருந்த போது நோய்வாய்ப்பட்டார்.
புதுமைப்பித்தனின் வாக்கும் வக்கும் என்று எழுதிமுடிக்கப்படாத நாடகப்பிரதி ஏ.பி.நாகராஜனால் சரஸ்வதி சபதம் என்ற திரைவடிவம் பெற்றது.
அண்ணாதுரையும் மு.கருணாநிதி எழுத்தாளராகவும் சினிமா வசனகர்த்தாவாகவும் புகழுடன் விளங்குகின்றனர்
கண்ணதாசன், வாலி , வைரமுத்து ,மு.மேத்தா போன்ற பாடலாசிரியர்களும் கதை வசனம் எழுதியுள்ளனர்.
பிரபஞ்சன் கங்கை கொண்டானுடன் பிரியமுடன் பிரபு படத்தில் பணியாற்றினார். பாலகுமாரன் பாக்யராஜூடன் இணைந்து இதுநம்ம ஆளு படத்தைத் தொடர்ந்து பாட்ஷா, நாயகன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி புகழ் பெற்று விளங்குகிறார்.
சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என வசனம் எழுத பலர் அழைக்கப்பட்டனர். 
சூர்யராஜன், ஜெயபாரதி, எம்.ஜி.வல்லபன், போன்ற சிலர் மட்டுமே இலக்கியத்தில் இலக்கியம் சினிமா போன்றவற்றை இணைக்க உண்மையான முயற்சி மேற்கொண்டனர். நண்பர் சூர்யராஜன் இயக்கிய புதிய பூவிது படத்தில் ஆன்டன் செக்காவின் ஒரு குட்டிக்கதையை ஒரு காட்சியாக வடித்திருந்தார். ஆனால் சொதப்பி விட்டது.
பலவருடங்களாக புத்தகங்களாக மட்டுமே கிடைத்த மனுஷ்யபுத்திரன், பிரான்சிஸ் கிருபா, குட்டி ரேவதி, யுகபாரதி, தமிழச்சிதங்கபாண்டியன், தமிழ்மணவாளன் , எஸ்.அறிவுமணி உள்ளிட்ட கவிஞர்கள் பாடலாசிரியர்களாக கவனம் பெற்றனர்.
இப்படி கூறிக் கொண்டே போனாலும் சினிமாவுக்கும் இலக்கியத்திற்குமான உறவை நாம் சிலாகித்த வண்ணம் இருந்தாலும் சினிமாவாலும் தொலைக்காட்சியாலும் வறுமையில் வாடிய சில எழுத்தாளர்களுக்கு வளமான வாழ்வு கிடைத்ததைத் தவிர இலக்கியப் படைப்புகளுக்கு பெரிய கௌரவமோ அங்கீகாரமோ வாசகர் வட்டமோ கிடைத்து விடவில்லை. தஞ்சை ப்ரகாஷ் கூறியது போல் இன்னும் அந்த 300 பேர் தான் விதியின் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். இலக்கியத்தின் மேன்மையை எந்த சினிமாக்காரனும் மதிப்பதாக தெரியவில்லை. கமலுக்கும் ஷங்கருக்கும் ஜெயமோகனைத் தவிர வேறு யாரும் தெரியாது.
பல கதைகள், நாவல்கள், கவிதை வரிகள் சினிமாக்காரர்களால் களவாடப்பட்டுள்ளன. கதைகளை சுடுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள். கொஞ்சமும் கூச்சமும் வெட்கம் மானமும் இன்றி சினிமாக்காரர்கள் சுடுவதை தங்கள் உரிமை போல் இன்றும் கையாளுகின்றனர். அவர்கள் இயக்கிய படங்களும் திருட்டி சிடிக்களாக களவாடப்படுவதில் வியப்பில்லை. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் ....
சரி தமிழின் முக்கியமான படைப்புகள் யாவும் உலக சினிமாவைப் போல் திரைப்படங்களாக கிடைக்குமா என்றால் இல்லை. பல கதைகளை யாரும் இன்னும் படிக்கக் கூட இல்லை. வாசகர்களே 300 பேர்தான் எனும்போது அதில் சினிமாக்காரர்கள் எத்தனை பேர்?
புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம், செல்லம்மாள், போன்ற பல கதைகளுடன் காஞ்சனை போன்ற பேய்க்கதைகளும் சினிமாவுக்கு உகந்தவையே .ஆனால் படம் எடுக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை.
சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் அருமையான பயோ பிக் படமாக எடுக்கப்படலாம். எடுக்கப்படவில்லை.
கு.ப.ராவின் பல சிறுகதைகள் அழகான காட்சிகளாக புனையப்படலாம். யாருக்கும் அதன் ஞானமில்லை.
பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, கி.ராஜநாராயணன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ் போன்ற பல இலக்கியவாதிகளின் புத்தகங்களும் சினிமா வாசனையை எட்டியதில்லை. மௌனியைப் புரிந்துக் கொண்டு அவருடைய சிறுகதைகளில் ஒன்றையாவது படமாக்கும் துணிச்சல் யாருக்கும் உண்டா என்ன? சம்பத்தின் இடைவெளியை யாரால் படமாக்க முடியும் ?இதெல்லாம் ஒரு 50 முதல் 100 வருடங்கள் வரை பழைய கதைகள் என்றாலும் 
ஆதவன், லா.ச.ராமாமிர்தம், பிரபஞ்சன், திலீப்குமார், சு.வேணுகோபால், வா.மு. கோமு , போன்ற யாருடைய கதைகளையாவது சினிமா எடுக்க முடியாதா?
அசோகமித்திரன் தமிழின் சமகால எழுத்தாளர்களில் மிகச்சிறந்த முதன்மையான படைப்பாளி. அவருடைய நாவல்களும் சிறுகதைகளும் சினிமாவுக்கு தகுதி படைத்தவை அல்ல போலும்.
                                            2
சின்ன வயதில் பார்த்த திரைப்படங்கள் மனத்தில் பதிய காரணம் அவற்றின் கலை நேர்த்தியும் வெகுளியான மனத்தால் ரசிக்க மட்டுமே தெரிந்த வயதும்.
இப்போது தியேட்டருக்கு போய் ஒரு தமிழ்ப்படத்தைப் பார்க்கப்போவது அரிதாகவே உள்ளது. வீட்டில் டிவிடியில் உலகத்திரைப்படங்களையோ அல்லது பாடல்களையோ பார்ப்பது தான் என்னைப் போன்ற பலருக்கும் பொழுதுபோக்கு. அல்லது பழைய படங்களைப் பார்ப்போம்.
செலவு ஒரு காரணம் என்றாலும் நல்ல படத்தைப் பார்க்கும் அனுபவத்திற்கு செலவு ஒரு பொருட்டல்ல. பல நண்பர்களை நான் என் செலவில் படங்களுக்கு அழைத்துப் போயிருக்கிறேன். 
நல்ல படம் என்பதுதான் எது என்று காலம் தோறும் மாறிவிடுகிறது. நேற்று வரை பாரதிராஜாவும் பாக்யராஜூம் மகத்தான கலைஞர்களாக தெரிந்தார்கள். இன்று மீண்டும் புதிய வார்ப்புகளைப் பார்க்கையில் வறுமையால் அடிபட்ட ஒரு ஏழை உடுத்திப் போட்ட பழைய துணி போல இருக்கிறது.இளையராஜாவும் ரதியும் இல்லையென்றால் படம் அம்போ.
நேற்று சிறப்பாக இருந்த படங்கள் இன்று சாதாரணமாகி விட்டன. நேற்று சாதாரணமாக தெரிந்த படங்கள் இன்று மீண்டும் பார்க்கத்தூண்டுகின்றன. புதிய பறவை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவில், இளமை ஊஞ்சலாடுகிறது, அன்னக்கிளி,  போன்ற பல படங்கள் இன்றும் ரசிக்கக்கூடியவையாக உள்ளன. இப்படங்களின் இசையும் பாடல்களும் நடிகர்களும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை,
இன்றும் ஆங்கிலப் படங்களும் பழைய இந்திப் படங்களும் சில மலையாளப் படங்களும் பார்க்க பரவசமூட்டுகின்றன. இவற்றையே மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்கிறேன்.
நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது எழுதி வைப்பது வழக்கம். 80 களின் மையத்தில் சினிமா சிறப்பிதழ் ஒன்றை செந்தூரம் ஆசிரியர் குழுவில் இருந்த சூர்யராஜன். நந்தா மற்றும் நான் இணைந்து தயாரித்தோம். அதுவரை சிற்றிதழ்கள் எதுவும் சினிமாவைப் பற்றி தீவிரமாக எழுதியதில்லை. எம்ஜி வல்லபன் மட்டும் பிலிமாலயாவில் பலமுக்கியக் கட்டுரைகளை எழுதினார். அறந்தை நாராயணன் கொஞ்சம் எழுதினார். பேல பெலாஸ் எழுதிய சினிமா கோட்பாடு மொழிபெயர்ப்பும்,மிர்ணாள் சென் பற்றிய புத்தகமும் தமிழில் பிரசுரமாகியிருந்தது. ஜெயகாந்தன் கலையுலக அனுபவங்களை எழுதியிருந்தார். சுஜாதா கனவுத் தொழிற்சாலையும் அசோகமித்திரன் கரைந்த நிழல்களும் எழுதியிருந்தனர். விட்டல் ராவ் தீபம் , கணையாழி இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் இவை யாவும் வேறு வட்டத்தில்இருந்தன. தீவிரமான சிற்றிதழ் வாசகர்கள் பெரும்பாலும் சத்யஜித் ரே , மிர்ணாள் சென், ஹிட்ச்காக் தவிர வேறு யாரையும் தெரிந்து வைத்திருக்கவில்லை. தமிழ் சினிமாவைப் பற்றி எழுதுவதே தீண்டத்தகாத காரியமாக இருந்தது. எம்ஜிஆர் பற்றியும் சிவாஜியைப் பற்றியும் கூட யாரும் எழுதமாட்டேன் என்று முகம் சுணங்கி இருந்தார்கள். அதனால் சினிமாவைப் பற்றிய அடர்த்தியான கட்டுரைகளுடனும் சார்லி சாப்ளினின் நீண்ட இறுதிப் பேட்டியுடனும் வந்த சினிமா சிறப்பிதழ் சினிமா ரசனையின் பால் தீவிர வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்றது.அதன்பிறகு சலங்கை, நிழல் ,காட்சி்ப் பிழை போல் பல பத்திரிகைகள் வந்தன என்றாலும் செந்தூரம்தான் முன்னோடி.
அதன் பிறகுநானும் பல்வேறு இதழ்களில் சினிமா பற்றி எழுதினேன். குமுதம் தீராநதியில் எழுதிய உலக சினிமா மற்றும் இந்திய சினிமா கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை
5 முதலமைச்சர்களை தமிழ்நாட்டுக்கு தந்தது சினிமா தான். இதனை இனியும் நான் தியேட்டரில் பார்த்து மறந்துவிட முடியாது. இதன் ஆழ அகலங்களையும் அசல் கலையையும் போலியையும் பிரித்துப் பார்க்கப் பழக வேண்டும். நாவல்களைத் திருடுபவர்கள், பிறருடைய பாடல் வரிகளைத்திருடுபவர்கள் நிரம்பியுள்ள திரையுலகில் எப்போதாவது அசலான சில முயற்சிகள் நடக்கும் போது அவற்றை வரவேற்க நல்லசினிமா குறித்தும் இலக்கியம் குறித்தும் நமக்கு போதிய அறிவு வேண்டும். தொழில்நுட்பத்தை நான் பெரிதாக கருதவில்லை. அது மாறிக்கொண்டே இருக்கும். நான் படம் இயக்க நேர்ந்தால் கிடைக்கக் கூடிய மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் தான் படத்தை இயக்குவேன். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். படத்தின் அடித்தளமான ஆன்மாவான அதன் கதை சொல்லும் ஆற்றலைத்தான் ஒரு கதைசொல்லியாக நான் காண்கிறேன்...சினிமாவை இலக்கியத்தின் சாயையாகவே நான் காண்கிறேன்.நல்ல சினிமா ஒரு நல்ல புத்தகத்திற்கு ஈடானது. 
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...