Thursday 14 June 2018

ஜெயகாந்தன் நினைவுகள்

ஜெயகாந்தன் நினைவுகள்





ஜெ.கே என்று நினைக்கப்படும் ஜெயகாந்தனுடன் நானும் சில நாட்கள் பழகியிருக்கிறேன். ஜெயமோகனுடன் அவரை ஒரு பேட்டியும் எடுத்து ஜெமோவின் கத்திரிக்கு பலியாகி அவரை பிரதான பேட்டியாளராக்கி சொல்புதிது இத ழில் வெளியாகி புத்தகத்திலும் தொகுக்கப்பட்டது. ஜெ.கே.வை அதிக கேள்விகள் கேட்டு அதிகளவி்ல் கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்கியவன் நான்தான். ஜெமோ அப்போதுதான் ஜெயகாந்தனை முதன்முதலாக சந்திக்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு ஜெ.கே.சாந்தமாகவே பதில் அளித்தார்.

ஜெயகாந்தன் பற்றி கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்ற பெயரில் உரை நிகழத்தி கட்டுரை வடிவில் தமிழ் இந்துவிலும் வந்திருக்கிறது.
ஜெயமோகனும் வைரமுத்துவும் மட்டும்  ஜெயகாந்தன் போன்றோரை குறித்து எழுத முடியும் என்ற பிம்பத்தை தமிழ்ச்சூழல் ஏற்படுத்தியுள் ளது. இதனை உடைக்கப் போகிறேன். விரைவில் இப்பகுதியில் ஜெ.கே குறித்த பதிவுகளைப் பார்க்கலாம்.

ஜெயகாந்தனின் சில கூட்டங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் எந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டாலும் ஜெகதீஷ் வரலீயா என நண்பர்களிடம் விசாரிப்பதை அறிந்திருக்கிறேன்.
அவருடைய வீட்டில் கூடும் சமபந்தி அரட்டைகளிலும் பல பகல், இரவுகள் கழிந்துள்ளன. ஒருமுறை வேசிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். விபச்சார விடுதிகளில் உங்கள் காதலிகளைத் தேடாதீர்கள், சகோதரிகளைத் தேடுங்கள் என்ற டால்ஸ்டாயின் மேற்கோளை ஜெ.கே தமது நாவல் ஒன்றி்ல் பயன்படுத்தியதை நான் இடைமறித்து சுட்டிக்காட்டினேன். ஒரு நிமிடம் மௌனமாக ஆழ்ந்து யோசித்தார். எந்த நாவல் என என்னைக் கேட்டார். இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் நாவல், மேகலா மாத இதழாக வந்தது என்று கூறினேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஒரு எழுத்தாளனுக்கு இதை விட பெரிய மகிழ்ச்சி இருக்காதுதான். பாருங்க எவ்வளவு ஆழமா உள்வாங்கி படிச்சிருக்கான். அதனால்தான் அவனுக்கு அது நினைவுல பதிஞ்சிருக்கு என்று பாராட்டினார். அதன் பிறகு எந்த கூட்டத்திலும் அவர் கண்கள் என்னைத் தேடுவதை அறிவேன்.
காந்தி கண்ணதாசனின் மகன் திருமணத்திற்கு சென்ற போது ஜெ.கே.வந்திருந்தார். நடந்து மேடை நோக்கி போன அவர், வழிமறி்த்து வணக்கம் சொன்ன என்னை கண்டு புன்னகைத்தார். பின் மேடையில் இருந்துதிரும்பி வரும் போது நான்கு நாற்காலிகள் தள்ளி உட்கார்ந்திருந்த என் அருகே உட்புகுந்து என் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றார். அந்த அன்பு எனக்கு அற்புதமாக இருந்தது.
எம்.வி.வி. இறந்த போது தினமணியில் மறுநாளே ஜெமோ ஒரு கட்டுரை எழுதினார். எம்.வி.வியின் இரண்டு நாவல்கள் மட்டும்  பொருட்படுத்தத்தக்கவை என்று ஒரு விமர்சனம் அதில் இருந்ததாக நினைவு. அன்று மாலை மயிலாப்பூர் லஸ் கார்னர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே ஒரு காரில் அமர்ந்திருந்த ஜெயகாந்தனுடன் பேசிக் கொண்டிருந்த போது ஜெயமோகனை வசை பாடினார்.
மனுசன் செத்து பால்கூட ஊத்தியிருக்க மாட்டாங்க அதுக்குள்ள விமர்சனம் எதுக்கு....என்று சீறினார் ஜெ.கெ.
சார் உங்களுக்கும் அதுதான் நடக்கும் என்றேன். அவர் கோபம் அதிகமானது. அப்புறம் என்னவெல்லாம் திட்டினார் என்பதை என்னால் நினைவில் வைக்க முடியவில்லை. அவருக்கும் அதுதான் நடந்தது.



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...