Friday 22 June 2018

மந்திரம் கோடி இயக்குவோன் -1

மந்திரம் கோடி இயக்குவோன் தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குனர்கள் 1 ஏ.சி.திருலோகசந்தர் செந்தூரம் ஜெகதீஷ் நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச்சுடர் வானில் செல்வோன் நான் பாரதி சிறுவயதில் மோரல் சயன்ஸ் வகுப்பில் பாடப்புத்தகமாக இருந்தது விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபிள்ஸ் நாவலின் சுருக்கப் பதிப்பு.நாவலைப் புரிந்துக் கொள்ள ஆங்கில ஆசிரியை அளித்த உரைகள் மிகவும் உதவிகரமாக இருந்தன.முழுக்கதையும் இப்போது நினைவில் இல்லை என்றாலும் ஒரு சம்பவம் மனதுக்குள் அழுத்தமாக சிறுவயதிலேயே பதிந்துவிட்டது. தேவாலயத்தில் வெள்ளி விளக்குகளைத் திருடுவான் நாயகனான ஜீன் வால்ஜின். அவன் தப்பிச்செல்லும் போது போலீசிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்வான். போலீசார் அவனை பாதிரியாரிடம் அழைத்து வருவார்கள். அவனை பாதிரியார் முன்னிலையில் விசாரிக்கும் போது, தான் திருடவில்லை என்று கூறி அவன் தப்ப முயற்சிப்பான். அப்போது பாதிரியாரும் அவன் திருடவில்லை .தான் பரிசாகத்தான் இரண்டு வெள்ளி விளக்குகளை ஜீன் வால்ஜினுக்கு தந்ததாக கூறுவார். இக்காட்சி பகைவனுக்கருள்வாய் என்ற ஏசுவின் போதனையை வெளிப்படுத்தியது. இதனால் மனம் திருந்தி ஜீன் வால்ஜின் பாதிரியாரின் கால்களைப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதான். திருடாதே படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலில், வறுமை நினைத்து பயந்துவிடாதே,திறமை இருக்கு மறந்துவிடாதே என்பார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றும் அதே பாடலில் பொன் எழுத்துகளால் பதித்துவைத்தார்.
விக்டர் ஹ்யூகோவின் நாவலைத் தழுவி திரைப்படமாக தமிழில் ஏழை படுத்தும் பாடு எடுக்கப்பட்டது. பின்னர் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய ஞான ஒளி படத்திலும் இந்த நாவலின் பாதிப்பு கதையோட்டத்தில் இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்ச்சிகரமான நடிப்பும் சட்டத்தின் நீண்ட கரங்களுடன் விரட்டும் மேஜர் சுந்தர்ராஜனின் பாத்திரமும் காவலே சட்ட வேலியே உன்பாதையில் பிள்ளைப் பாசம் இல்லையோ என்ற கண்ணதாசனின் காவிய வரிகளும் இப்படத்தை கருப்பு வெள்ளையில் கிடைத்த கட்டித் தங்கமாக ஜொலிக்க வைத்தன. ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய மற்றொரு சிறந்த படம் அவன்தான் மனிதன். இதிலும் கண்ணதாசனின் பாடல் வரிகளை மிஞ்சிய நடிப்பை சிவாஜி வெளிப்படுத்தினார். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடலும் சரி மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று என்ற பாடலும் சரி படத்தின் வைர மகுடங்கள். மனிதன் நினைப்பதுண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையும் தனியாக கூறப்பட வேண்டியது. ஒரு காட்சியில் கடற்கரையில் சிவாஜி பாடியபடி நடந்து வர எங்கிருந்தோ பறந்து வரும் வெள்ளைப்புறா ஒன்று சிவாஜியின் தோளிலும் முழங்கையிலும் அமர சிவாஜி நடந்து செல்லும் உடல்மொழியின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இன்றும் கண்முன்னே அந்தக் காட்சி நிழலாடுகிறது. கண்ணதாசன் பத்திரிகையின் கேள்வி பதில் பகுதியி்ல் கவியரசரிடம் ஒரு வாசகர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். நான்கு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகிறோம் என்ற வரிக்கு அர்த்தம் கேட்ட அந்த கேள்வியில் இரண்டு கைகள், இரண்டு கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் மனிதன் நடனமாடுகிறான் என்ற பொருளை வாசகர் அர்த்தப்படுத்தியிருந்தார். இதுகுறித்து கவியரசரிடம்விளக்கம் கேட்ட போது அவர் மற்றொரு விளக்கமும் அளித்தார். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை பற்றி திருக்குறள் போதிக்கிறது. இந்த மூன்றிலும் தேர்ந்த மனிதன்தான் வீடுபேறு அடைவதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. ஆனால் இவை நான்கும் கூட மனிதனை ஆட்டிப் படைக்கும் விலங்குகள்தாம் என்று கண்ணதாசன் தெரிவித்தார். எம்ஜிஆரின் அன்பே வா படத்தையும் ஏசி திருகோலசந்தர் இயக்கினார். டாக்டர் சிவா, பத்ரகாளி ,தெய்வமகன், ராமு, எங்க மாமா, அதே கண்கள்,பாரத விலாஸ்,பாபு, தர்மம் எங்கே, எங்கிருந்தோ வந்தாள், அவள், இருமலர்கள், தங்கை, வணக்கத்துக்குரிய காதலியே, விஸ்வரூபம்( சிவாஜி கணேசன் நடித்தது) போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார். இப்படங்களில் எனக்குப் பிடித்த பல விஷயங்களைப்பட்டியலிட முடியும். அன்பே வா எம்ஜிஆருக்கு ஒரே ஒரு சண்டைக்காட்சியுடன் எடுக்கப்பட்ட படம். முழுநீளவண்ணப்படம். கிட்டதட்ட பத்துபாடல்கள். எம்ஜிஆரும் சரோஜாதேவியும் திரையை அத்தனை அழகாக மாற்றுவார்கள். என் பள்ளிப்பருவத்தில் இப்படத்தைப் பார்த்த நினைவுகள் பசுமையானவை. பள்ளிக்கூட அரங்கி்ல் என் கடைசி தம்பியை மடியில் வைத்து அன்பே வா படத்தைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் பல முறை டிவிடியில் பார்த்து ரசித்திருக்கிறேன். இன்றும் அப்படம் உயிர்ப்புடன் உள்ளது. உள்ளம் என்றொரு கோவிலிலே என்ற பாடல்  காதலியின் பிரிவுக்கு கட்டியம் கூறும் பாடல். அசோகனின் கதாபாத்திரம் அபாரமானது. டாக்டர் சிவா தொழுநோயாளிகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மருத்தவரின் கதை. ஆனால் அப்படம் அந்தக் காலத்தில் சரியாகப் போகவில்லை என்று கேள்வி. மலரே குறிஞ்சி மலரே என்ற அற்புதமான பாடல் இதில் இடம் பெற்றது. நல்லவன் குரலுக்கு மதிப்பிருக்கும் பாடலில் மஞ்சுளா டூ பீஸ் பிகினி அணிந்து தமிழ் சினிமாவை பாலிவுட் ரேஞ்சுக்கு மாற்றினார்.இப்படத்தின் பாடல்களையும் வாலிதான் எழுதினார். பாபு படம் மற்றொரு உதாரணம். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடலில் வாலியும் விஸ்வநாதனும் மாயாஜாலம் செய்தார்கள். ஒரு ரிக்சா ஓட்டியின் பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை இது. தர்மம் எங்கே படத்தில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார். விடுதலைக்காகப் போராடும் புரட்சிக்காரர்களின் கதை. சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா .படுகவர்ச்சியாக ஒரு கேபரே ஆட்டம் ஆடியிருப்பார். சிவாஜியுடன் முத்துராமனும் நடித்தார். சிவாஜிக்கு அறிமுகப் பாடல் ஒன்று உள்ளது சுதந்திர பூமியில் பலவகை மலர்கள் என்ற அந்தப் பாடலில் சூரியன் செல்லும் திசையின் எல்லாம் செல்லும் சூரியகாந்தி என்றும் திறமை இருப்பவன் எங்கிருந்தாலும் உலகம் அவனிடம் ஓடும் என்றும் கண்ணதாசன் எழுதியிருந்தார். வீரம் எனும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள், பள்ளியறைக்குள் வந்த புள் ளி மயிலே போன்ற இனிய பாடல்களும் இப்படத்தில் இடம் பெற்றன. எங்கிருந்தோ வந்தாள் இந்தியில் கிலோனா என்ற பெயரில் சஞ்சீவ் குமார் மும்தாஜ் நடித்த படத்தின் ரீமேக். தமிழில் சிவாஜியும் ஜெயலலிதாவும் நடித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவராக சிவாஜி நடித்திருப்பார் .இப்படத்திலும் பாடல்களை கண்ணதாசனே எழுதினார். இப்படத்திலும் என்ன தவறு செய்து விட்டேன் அதுதான் எனக்கும் தெரியவில்லை. வந்து பிறவந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை போன்ற அற்புதமான வரிகளை கவியரசர் எழுதினார். ஏசி திருலோகசந்தர் இயக்கிய மற்றொரு படம் அவள். இதில் சசிகுமார் கதாநாயகனாகவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஸ்ரீகாந்தும் நடித்தனர். இதுவும் இந்தியில் தோரகா என்ற பெயரில் வெளியான படம் .இந்தியில் ராதா சலூஜாவும் அனில்தாவனும் நடித்தனர். ராதா சலூஜா பின்னர் எம்ஜிஆருடன் இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க படங்களில் நடித்தார். தோரகா என்றால் அந்தக் காலத்தில் கற்பழிப்பு எனப் பொருள்படும் படி பத்திரிகைகள் எழுதின. ஆனால் தோ-ரஹா என்பது இரண்டு பாதைகள் எனப் பொருள்படும்.கற்பழிப்பு காட்சிகள் அதிகளவில் இடம் பெற்ற திரைப்படங்களின் காலத்தை அப்படம் உருவாக்கியது. நாகரீக வாழ்க்கைக்கு அடிமையாகும் கணவன் மனைவியை காமுகனிடம் பறி கொடுக்கும் கதை.இந்தியில் பலாத்கார காட்சி-ரூபேஷ்குமார் என்ற வில்லன் நடிகர் ராதா சலூஜாவின்  வெள்ளை பிராவை கிழித்து எறியும் வரை கோரமாக படமாக்கப்பட்டிருந்தது. தமிழில் இந்த வில்லன் வேடத்தை ஸ்ரீகாந்த் ஏற்றார். இந்திப்படம் அளவுக்கு இதில் பலாத்கார காட்சி அத்தனை குரூரமாக இல்லை. வெண்ணிற ஆடை நிர்மலாவும் கூடிய வரை கிளாமராக நடிக்க முயன்றார். ஆனால் ராதா சலூஜா அளவுக்கு எடுபடவில்லை. இப்படத்தின் நாயகனான சசிகுமார் பின்னர் தீ விபத்து ஒன்றில் மனைவியைக் காப்பாற்ற முயன்று தானும் தீயில் கருகி உயிரிழந்தார். தெய்வ மகன் படத்தில் கேட்டதும் கொடுப்பவனே பாடலும் ராமு படத்தில் கண்ணன் வந்தான் பாடலும் உருக்கமான பக்தி கீதங்கள், இரண்டுமே கண்ணதாசனின் பாடல்கள் தாம். இ்ததகைய பாடல்களைத் தேர்வு செய்து படமாக்குவதில் ஏ.சி திருலோகசந்தர் தனித்துவம் பெற்றவராக இருந்தார். வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்த படம். ராஜேந்திரகுமார் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை. தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் வாக்கை ஊர்மக்கள் நம்புவதும் வாக்கு பலிக்காத போது போலி என வெறுப்பதும் கதை.
பத்ரகாளியும்  எழுத்தாளர் மகிரிஷி எழுதிய கதை. தன்னை அழித்தவனை பத்ரகாளி அவதாரமாக பழி வாங்கும் பெண்ணின் கதை. சிவகுமாருடன் ஜோடியாக நடித்திருந்த ராணி சந்திரா என்ற மலையாள நடிகை விமான விபத்தில் பலியானார்.
விஸ்வரூபம் படத்தில் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அற்புதமானது. அநேகமாக அந்தப் பாடல் யாரிடமும் இருக்காது. ஜெயம் ஆடியோஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட டிவிடியில் சுமரான ஒரு பிரிண்டில் கிடைக்கிறது. கிடைத்தால் அதிர்ஷ்ட்டம்தான் அள்ளிக்கொள்ளுங்கள். சிவாஜியும் சுஜாதாவும் நடித்த இப்படத்தில் அந்தப் பாடல் இதுதான்.... நான் பட்ட கடன் எத்தனைையோ பூமியில் பிறந்து அடைபட்ட கடன் எதுவும் இல்லை ஆயிரம் இருந்தும்-செல்வம் ஆயிரம் இருந்தும்... தாயிடம் பெற்ற கடன் ,தகப்பனிடம் பெற்ற கடன் என்று ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற்ற கடன்களைப் பட்டியலிட்ட கவிஞர், எந்தக் கடனிலும் மிகப்பெரியது நல்ல மனைவியின் சேவை. அந்த கடனை அடைப்பதற்கு பல பிறவிகள் தேவை என்று பாடலை முடிப்பார். ஏசி திருலோகசந்தர் எனக்கு எப்போதும் பிடித்த இயக்குனர். அவர் மறைந்தாலும் அவர் திரைப்படங்கள் காவியங்களாக தமிழ் சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...