Saturday 23 June 2018

சூப்பர் ஸ்டார்களின் காலம் முடியப் போகிறதா.?

சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிகிறதா...?செந்தூரம் ஜெகதீஷ்






தற்போது தமிழ் சினிமாவில் வசூலை வாரிக் குவிக்கும் நாயகர்களின் காலம் முடிவுக்கு வந்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம். ரஜினியே ஆனாலும் படத்தின் கதையோ திரைக்கதையோ தொய்வடைந்தால் படம் அவ்வளவுதான் என்பதை ஏற்கனவே பாபா மாதிரியான படங்கள் நமக்கு சொல்லி விட்டன.
ஒரு கதைக்கும் கதாசிரியருக்கும் யாரும் மெனக்கெடவில்லை. கதைதான் படத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை ஒப்புக் கொள்ள நமது சூப்பர் ஸ்டார்களின் மனசாட்சியும் அகந்தையும் இடம் கொடுப்பதில்லை. இயக்குனர்களும் அமெச்சூர்த்தனமான சிந்தனைகளையே பெரிய காவிய கனவுகளாக கண்டுவருகின்றனர்.
எந்த ஒரு கதாசிரியரை அழைத்து திரையுலம் மரியாதை செய்திருக்கிறது? எந்த படைப்பாளியை சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கிறது.?
சுஜாதாவுக்கே தமது கதைகள் சினிமாவில் படமாக்கப்பட்ட விதம் திருப்தியளிக்கவில்லை. இப்போது சினிமாவில் எழுதிக் கொண்டிருக்கும் நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் கவிதையே ஒழுங்காக எழுதத்தெரியாத பாடலாசிரியர்களுக்கும் சினிமா பற்றிய ரசனையும் அறிவும் சூன்யம்தான் என்பதைத்தான் மீண்டும்மீண்டும் தமிழ்த்திரைப்படங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
சினிமாவில் புதுமைப்பித்தனும் முயற்சி செய்து தோற்றார். ஆனால் இப்போதும் சினிமாவாக்கக் கூடிய பல நல்ல கதைகள் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் உள்ளன. எப்போதோ ஒருமுறை மகேந்திரன் போன்ற இயக்குனர்கள்தாம் உதிரிப்பூக்கள் என்ற தரமான வெற்றிப்படத்தைத் தந்து கதை புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்று நேர்மையாக டைட்டில் கார்டு போடுவார்கள்.
ஜெயகாந்தன் சினிமாவிலும் பெரிதாகப் பேசப்பட்டார். ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பீம்சிங் இயக்கியது என்பதால் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. ஜெயகாந்தன் இயக்கிய சில படங்கள் அதிக கவனம் பெறவே இல்லை. காரணம் சினிமா குறித்த தேர்ச்சியும் பயிற்சியும் ஜே.கே.வுக்கு இல்லை.
கு.ப.ரா. , க.நா.சு., லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன் போன்றோரின் புகழ்பெற்ற கதைகள் கூட சினிமாக்கப்படவில்லை. அந்த எழுத்தாளர்களை எந்த இயக்குனரும் எந்த சூப்பர் ஸ்டாரும் மரியாதை செய்யவில்லை. அவர்களின் கதைகளை படமாக்குவது பற்றி கனவுகூட கண்டதில்லை. பாலுமகேந்திரா கதை நேரம் என தொலைக்காட்சித் தொடர் இயக்கிப் பார்த்தார். முன்னதாக இயக்குனர் ஸ்ரீதர் பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகள் கதையைப் படமாக்கினார்.
கதைகளை சுட்டு சினிமா எடுக்க உதவி இயக்குனர்கள் பரபரக்கிறார்கள். சிலர் மற்றவர்களின் கதைகளையே தங்கள் கதைகளாக விற்று விடுகிறார்கள். சிலர் பாடல்களைக் கூட திருடி பிழைக்கிறார்கள். இசை பற்றி சொல்லவே வேண்டாம். இளையாராஜா கூட இசைத்திருட்டிலிருந்து தப்பவில்லை. கஸ்மே வாதே பியார் வஃபா என்ற மன்னாடேயின் உப்கார் பட இந்திப் பாடலைத்தான் ஜேசுதாசை பாட விட்டு கனவு காணும் வாழ்க்கை யாவும் என்று இளையராஜா இசைத்தார்.
கதைகள், கவிதை வரிகள், இசை என எல்லாவற்றையும் சுட்டு விடத்தான் தமிழ் சினிமா தேர்ச்சி பெற்றுள்ளது. சில நேரம் ஹாலிவுட்டிலிருந்து சில நேரம் பாலிவுட்டிலிருந்து சில நேரம் நமது அப்பாவி தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து.






அப்போது எப்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெற்றி பெற இயலும்? ஷங்கர், மணிரத்னம், பாலா , பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படங்களில் உயிர்ச்சத்து எங்கிருந்து வரும். ஏ.ஆர்.ரகுமானும், இளையராஜாவும், வாலியும்  வைரமுத்துவும் பல படங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆர்.சுந்தரராஜன், பாக்யராஜ், கலைமணி, ஆர்.செல்வராஜ் போன்ற பல சிறந்த கதாசிரியர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். இவர்களையும் சினிமா சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சினிமா முதலில் ஒரு பொழுதுபோக்கு ஊடகம். சினிமா பார்க்க வரும் ரசிகன் முதலில் தனது சில மணி நேரங்களை சுவாரஸ்யமாகக் கழிக்கத்தான் வருகிறான். அந்த சுவாரஸ்யம் சில நேரம் ரஜினி மூலம் ,சில நேரம் இளையராஜா மூலம் சில நேரம் சந்தானம் மூலம் சிலநேரம் மணிரத்னம் மூலம் அவனுக்குக் கிடைக்கும் போது மகிழ்கிறான். இல்லையென்றால் அவன் யாரையும் பார்க்காமல் தூக்கிப் போட்டு போய்விடுகிறான்.
சினிமாவை திரையரங்கில் பார்ப்பது என்பது இப்போது ஒரு நபருக்கு 300 ரூபாய் செலவாகிறது. பாதி டிக்கட்டுக்கு போய்விடும். பார்க்கிங், ஆட்டோ, பெப்சி, பாப்கார்ன் என்று இதர செலவுகளுக்கு இந்தப் பணம் போதாது. திருட்டு சிடி மலிவானது. அதைவிட இலவசமாக டவுன்லோடு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. செல்போனிலேயே பலர் சினிமா பார்க்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு நல்ல திரைப்படத்தை திரையரங்கை நாடி ரசிகனை வரவழைக்க நல்ல கதைகளும் நல்ல நட்சத்திரங்களும் நல்ல இயக்குனர்களும் இணைந்துதான் முயற்சிக்க வேண்டும். நல்ல இசையும் பாடல்களும் இருந்தால் இரண்டாவது முறையும் திரையரங்குக்கு வருவார்கள்.
இவை யாவும் இன்று குறைந்து வருகிறது. நல்ல நடிகர்களே இல்லையா என்று கேட்குமளவுக்கு நாளொரு புதுமுகம். ஒரு படம் இரண்டு படத்துடன் அவர் அம்பேல். உடலைக்காட்டும் கதாநாயகிகள் பத்து முதல் 30 படங்கள் வரை தாக்குப் பிடிக்கிறார்கள். பாடலாசிரியர்கள் ஏராளமானோர் வந்துவிட்டாலும் பாடல்களே இல்லாமல் தான் படங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒலிப்பவை எல்லாம் குத்துப்பாடல்கள் ,கானா பாடல்கள் தாம். அவை டாஸ்மாக் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் கேட்டு மகிழ முடியாதவை.
மிகப் பெரிய படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி ஏமாற்றத்தில் முடியும் போது சினிமாவில் சூப்பர் ஸ்டார்களின் காலம் இருக்கா இல்லையா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.  ரஜினி, கமல், விஜய், அஜித் நடித்த படங்களும் இந்த அக்னிப் பரீட்சையில் தீக்குளிக்கத்தான் வேண்டும்.
சில தயாரிப்பாளர்களின் பேராசை. இரண்டு மூன்று நாட்களிலேயே நூறு முதல் 200 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கக் கூடிய வணிகபுத்தி, திரையரங்குகளின் அடாவடித்தனம். கட்டணக் கொள்ளை. எதையும் விலை கொடுத்து வாங்கி விடத்துடிக்கும் ஐடி நிறுவனங்கள், ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, கவர் கொடுத்தால் நாலு நட்சத்திரம் தந்து விமர்சனம் எழுதும் பத்திரிகைகள், நாளுக்கு நூறு முறை டிரைலரையும் படக்காட்சிகளையும் போட்டு பார்வையாளர்களை அதிகப்படுத்த நினைக்கும் தொலைக்காட்சிகள் என சினிமாவை எல்லோருமே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்கவும் .தமிழ் சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் கன்னடம் தவிர மற்ற மொழிகளிலும் ஹாலிவுட்டிலும் சினிமா பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.தென்இந்தியப் படங்கள் தமிழ்சினிமாக்களின் நகல்களாகவே இருக்கின்றன.
வங்காளப் படங்களும் இந்திப் படங்களும் அபூர்வமான ரசாயன மாற்றத்துக்கு ஆளாகி வருகின்றன. ரஜினியை விட பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சன் இப்போது வயதான கிழவனாக ஒரு பழைய ஸ்கூட்டரை எட்டி உதைத்தபடி வில்லனிடமிருந்து அடிவாங்காமல் தப்புவதற்கு  ஒளிந்து செல்லும் சாதாரண மனிதராக நடிக்கிறார். நூற்றுக்கணக்கான படங்களில் வில்லன்களை புரட்டி எடுத்தவர்தான் அமிதாப்.ரஜினியும் கமலும் அப்படி நடிக்கத் தயாரா என்று தெரியவில்லை.
 தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு ரசிகர்களை மனநலம் பிறழ்வுடயைவர்களாக மாற்றும் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் துணிந்து நடிக்கிறார். விஜய்யும் அஜித்தும் அப்படி நடிப்பார்களா என்று தெரியவில்லை.
சத்யஜித்ரே, மிர்ணாள் சென், ரித்விக் கடக் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய வங்காள படங்கள் இன்று மெல்ல மெல்ல ஹாலிவுட் படங்களின் பாலியல், படுக்கையறைக் காட்சிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அங்கு எடுக்கப்படுவது புளுபிலிம்கள் அல்ல , மீனவர்களின் வாழ்க்கையும் கிராமப்புற பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், பெண்ணியமும்தான் இந்த திரைப்படங்களின் அடிநாதமாக உள்ளது.
சினிமாவை இரண்டு விதமாக பார்க்கலாம்.  கலையம்சம் மாறாமல் குறைந்தபட்ச வணிக சமரசங்களுடன் எடுக்கப்படும் தரமான திரைப்படங்கள். தமிழில் இத்தகைய படங்களாக சில முன்னுதாரணங்களை சொல்ல முடியும்.
அவள் அப்படித்தான், அவர்கள், அழியாத கோலங்கள், நிழல்கள், சின்னத்தாயீ, சில நேரங்களில் சில மனிதர்கள், உதிரிப்பூக்கள்,அழகி,  சாட்டை, போன்ற படங்கள் காலம் தோறும் வந்த வண்ணம் உள்ளன.
இன்னொரு வகை பெரிய நட்சத்திரங்களை வைத்து வணிக ரீதியான படங்கள். இவை பொழுதுபோக்கையே பிரதான அம்சமாக கொண்டிருக்கும். இதற்கும் ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு. சில நடிகர்களின் மிகச்சிறந்த சில படங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.
எம்ஜிஆர் (அன்பே வா) சிவாஜி ( பாசமலர்) ரஜினி ( பாட்சா ) கமல் ( நாயகன்) விஜய்( குஷி ) அஜித் ( காதல் கோட்டை) சூர்யா ( மௌனம் பேசியதே) விக்ரம் ( ஐ) சிம்பு ( விண்ணைத்தாண்டி வருவாயா ) தனுஷ் ( காதல் கொண்டேன்) சிவகார்த்திகேயன் ( எதிர்நீச்சல் )
இந்தப் படங்களில் பொதுவான அம்சம் சிறந்த நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை ,நெளிய வைக்காத காட்சிகள், அருமையான பாடல்கள், மயக்கும் இசை என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த வகைப்  படங்கள்தாம் இந்த நடிகர்களை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. இந்த வகைப் படங்கள்தாம் இந்த நடிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்குகின்றன. இந்தப் படங்களில் கதைக்காகத்தான் ரசிகர்கள் இந்த நட்சத்திரங்களையும் ரசித்தார்கள்.
பல திரைப்படங்களை பார்க்கவே முடியவில்லை. மிகச்சிறந்த படங்கள் என விருது வாங்கிய படங்களும் சரி ஆகா ஓகோ என பத்திரிகைகளால் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட அண்மைக்கால படங்களும் சரி, மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் சரி சகிக்கவே முடியாதபடி தான் பலபடங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.
எனில் சூப்பர் ஸ்டார்களின் காலத்தைத் தக்க வைக்க ஒரு சினிமா நல்ல கதையம்சம், நல்ல நடிப்பு, நல்ல திரைக்கதை, நல்ல இசை, பாடல்கள், நல்ல இயக்குனர் ஆகியவற்றுடன் பணம் பிடுங்காத திரையிடல் தேவை. இதுதான் சூப்பர் ஸ்டார்களை சூப்பர் ஸ்டார்களாக தக்க வைக்கும். இதில் ஓரம்சம் குறைந்தாலும் அது ரஜினி படமானாலும் சரி விஜய் படமானாலும் சரி ரசிகர்கள் கைவிட்டு விடுவார்கள்.இதை உணர வேண்டியவர்கள் இன்றைய சூப்பர் ஸ்டார்களும் அவர்களை வைத்து இயக்கும் சூப்பர் இயக்குனர்களும்தான். ரசிகர்களை குறை சொல்லி பயனில்லை. நல்ல சரக்குதான் சந்தையில் விலை போகும். இது ஒரு சாதாரண வியாபாரிக்குக்கூடத் தெரியும்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...