மாத நாவல்கள் படிக்கலாமா ?

மாத நாவல்கள் படிக்கலாமா?


இன்று காலை முதல் பல்வேறு யோசனைகள். ஏதாவது லைட்டாக படிக்க வேண்டும். குமுதத்தைப் புரட்டியாகிவிட்டது. மனம் நிரம்பவில்லை 
பலநாட்களாக படிக்கலாமா வேண்டாமா என்று எடுத்து வைத்திருந்த பத்து பன்னிரண்டு மாத நாவல்களை எடுத்து ஒரே மூச்சாக படிக்கலானேன்.
எல்லாமே பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. தமிழ்ச்செல்வி, ஆர்.கீதாராணி, பத்மா துரை, சி.வி. இந்திராணி, லதா சரவணன் என்றெல்லாம் பெயர்களை நீங்களும் அறிந்திருக்கலாம்.
பெரும்பாலும் ஒரே மாதிரியான எழுத்து. சினிமா பாட்டை தலைப்பாக கொண்டது, காதல், தனிக்குடித்தனம், மாமனார் மாமியார்., குழந்தை வளர்ப்பு, கணவருடன ் பிரிவு ,முன்னாள் காதலன், நட்பு, தோழிகள், குடும்பம் என்று ஒரே செக்கில் சுற்றிவரும் மாடுகள் போல் இந்த நாவல்கள்.
இந்தப் பெண்கள் மனங்களில் என்ன இருக்கிறது என்பதை உளவியல் ரீதியாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்தேன். பெண்ணின் மனதுக்குள் ஆண்தான் மறைந்திருக்கிறான். ஆண்களின் குரூரம் சிறிதும் குறையவில்லை. ஆண்களின் உலகிலே வளர்ந்த பெண்கள் ஆண்களைப் போல் சிந்திப்பது தவிர்க்க முடியாதது. 
அவர்கள் எழுதும் வர்ணனைகள், பாலியல் உறவு யாவும் இப்படித்தான்.
உதாரணமாக லதா சரவணன் எழுதிய  உன் பேரைச் சொல்லும் போதே நாவலில் சில வரிகள்...
                                            
அவன் கைககளைப் பிடித்துக் கொண்டாள் வர்ணிகா. என்மனம் என்றுமே உங்கள் வசம்தான் சித்து என்று சொல்வதைப் போல.வார்த்தைகளால் சொல்ல முடியாத நிலையில் அவனை அணைத்துஅவன் உதுடுகளோடு தேன் இதழ்களை அவள் பொருத்த  அவன் நெகிழ்ந்து போய் இனிய அதரங்களை சுவைத்தான். 
அப்பப்பா என்ன முரட்டுத்தனம்
பொய்யான சலிப்போடு விலகினாலும் அவன் கைகள் அணைப்பை விடுவிக்காததால் அவன் விருப்பம் அறிந்து மீண்டும் முகம் பொருத்த இந்த முறை முரட்டுத்தனம் அவளிடமிருந்தது.

இப்படி எழுதுவது இளம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆதிகாலத்து பழை யஉத்தி. இதை எழுத்தாளர்கள் இன்னும் கைவிடவில்லை. அதிலும் பெண்கள்..

அந்தக் காலத்திலும் மாத நாவல்கள் வந்தன. ஜெயகாந்தனின் புகழ் பெற்ற நாவல்கள் சில நேரங்களில் சில மனிதர்கள், இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் நாவல்களும், பாலகுமாரனின்  புருஷ விரதம், இரவல் கவிதை போன்றவை மாத நாவல்களில் படித்ததுதான். 
தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கநாசு, சுந்தர ராமசாமி, நா.பார்த்தசாரதி, கல்கி, போன்ற பலரின் புகழ் பெற்ற நூல்களும் மாத நாவல்களாக வெளியாகி உள்ளன.
மாத நாவல்களில் என்னதான் இருக்கு என்றறிய இளம் வயதில் மூர்மார்க்கெட் போய் 300 மாதநாவல்களை வாங்கி வந்து படித்துப்பார்த்திருக்கிறேன், ராஜேஷ்குமார் , சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, இந்திரா சௌந்தரராஜன், ராஜேந்திர குமார், போன்ற எழுத்தாளர்களின் நாவல்களில் இரண்டு அல்லது மூன்று மட்டுமே மிகச்சிறப்பாக எழுதப்பட்டவை. மற்றவை வெறும் குப்பைகள்.

அப்போதே அவற்றை தூக்கிப் போட்டு விட்டேன்.

ஆனால் பெண் எழுத்தாளர்களின் வருகையால் மீண்டும் புற்றீசல்கள் போல் மாத நாவல்கள் பெருகிவிட்டன. இவற்றின் வாசகர்களும் பெண்கள்தாம். 
அம்பையைப் போல் தமயந்தியைப் போல் யாராவது எழுதினால் பரவாயில்லை. அப்படி யாரும் இல்லை என்பதுதான் ஏமாற்றமாய் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்