Tuesday 12 June 2018

முகநக நட்பன்று அகநக நட்பு









முகநூலில் நண்பர்களுடன் பகிர்வதற்கு நிறைய விஷயங்கள் இருப்பினும் துன்பகரமான விஷயங்களை மட்டும் பகிர்வதாக சில நண்பர்கள் குறையும் சொல்லி, அறிவுரைகள் தந்து ஊக்கமும் தந்தனர். மனம் மிகப் பெரிய ரகசிய சுரங்கம் .அதில் எத்தனையோ வலிகளும் தோல்விகளும் அவமானங்களும் இழப்புகளும் மறைந்துக் கிடக்கின்றன. இன்று காலை ஹிப்னாடிசம் பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அதில் உள்ளே மறைந்த நனவிலி மனம், வெளியே தெரியும் மனம் என இரண்டு வகையாகப் பிரித்து விவரிக்கின்றார். சிக்மண்ட் பிராய்டு படித்த எனக்கு இது எளிதாக புரிகிறது. ஆனால் என்னுடைய சிக்கலே அப்படி இரண்டு மனம் இல்லை என்பதுதான். இரண்டும் ஒன்றுடன் ஒன்று நீக்கமறப் பிணைத்துக் கொண்டு எது நனவிலி எது நிஜம் எனப்புரியாத வாழ்க்கையை அது வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நினைவுகள் ஒரு ரயில்வண்டியைப் போல் பெட்டி பெட்டியாக ஒன்றின் பின்னால் ஒன்று வந்து கடந்து சென்றால் பச்சைக்கொடி காட்டிவிடலாம். ஆனால் அதுவோ காட்டாறு வெள்ளம் போல் பாய்கிறது. எந்த நீர் எந்த நீருடன் கலக்கிறது என்றே தெரியவில்லை. ஒருநதியில் இரண்டு முறை இறங்கமுடியாது என்ற ஹெராகுலிடிஸ் வாக்கு நினைவாக எழுகிறது. வெள்ளம்  ஓடிக் கொண்டிருக்கும் போது எங்கே கால் வைத்தேன். அது என்னை எங்கே இழுத்துக் கொண்டு போகிறது என்றே புரியவில்லை. தஸ்தயோவஸ்கி தனது குற்றமும் தண்டனையின் நாவலில் ஒருஇடத்தில்குறிப்பிடுவது போல் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் காரின் பின்புற பானட்டில் என் சட்டை சிக்கிக்கொண்டு விட்டது. அதுபோகும் வேகத்திற்கு ஓடவும் முடியவில்லை. ஓடமாட்டேன் என்று நிற்கவும் முடியவில்லை.
LIFE IS COMEDY AT LONGSHOTS BUT A TRAGEDY AT CLOSE UPS என்று மாமேதை சார்லி சாப்ளின் கூறுகிறார்.


அது கிடக்கட்டும். நண்பர்கள் அருமையானவர்கள் .அவர்களை அணுகும் முறையில் நான்தான் குறைபாடு கொண்டவன். கண்மணி குணசேகரன், தஞ்சை தவசி போன்ற நண்பர்களைக் கொண்டாடவேண்டும்.
முகநூல் வேஸ்ட் எனநினைக்கும் நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை. என்னை மீட்டுக்கொள்ள முகநூலும் உதவியிருக்கிறது .அகநக நட்பல்லவா அது....

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...