Tuesday 26 June 2018

படித்தது -சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள்

படித்தது

சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள் 




சுஜாதா எழுதிய பழைய கட்டுரைகளின் தொகுப்பை கிழக்குப் பதிப்பகம் சின்ன சின்ன கட்டுரைகள் என வெளியிட்டது. பழைய எனக் குறி்ப்பிடுவதன் காரணம் கணையாழியில் 80 களில் படித்த ஒரு கட்டுரை முதல் கட்டுரையாக உள்ளது.
டெலிவிஷனில் இரண்டு சானல் வந்துவிட்டது. முதல் சானலில் ராஜீவ் காந்தியும் இரண்டாவது சானலில் ராஜீவ் காந்தியும் காட்டுகிறார்கள் ..... என்று உள்ளது.
இப்போதைய தொலைக்காட்சியில் ஆயிரம் சேனல்களுக்கு மேல் உள்ளன. ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன.
இதே போன்று புதுக்கவிதை, கம்ப்யூட்டர் போன்ற கட்டுரைகளும் அலாதிப் பழையது. புதுக்கவிதையின் கைடு போல் தன்னை நினைத்துக் கொண்டு அபத்தமாக எதையாவது உளறுவது சுஜாதாவின் வாடிக்கை. அப்படித்தான் இதில் உள்ள புதுக்கவிதை கட்டுரையில் கவிதைக்கு நான்கு மரபுகள் இருப்பதாக கூறியுள்ளார்.
மோஸாட்டின் வாழ்க்கையை சித்தரிக்கும் உலக சினிமாவான அமேடியன் பற்றிய கட்டுரை சிறப்பு.
தான் பார்த்த திரைப்படங்கள், படித்த புத்தகங்கள், நியுயார்க் அனுபவங்கள் என பல பதிவுகளை சுஜாதா இதில் செய்துள்ளார்.
தமது கதைகள் திரைப்படமாக்கப்பட்ட அனுபவம் பற்றிய சுஜாதாவின் வரிகள் அவருக்கே உள்ள நகைச்சுவை கலந்த ஐரனியுடன் (irony )எழுதப்பட்டுள்ளன.
விக்ரம் படம் உருவான கதையை அவர் விவரித்துள்ளார் .கமல் கதை கேட்ட விதம், ராஜசேகர் சுஜாதா கமல் மூவரும் விக்ரமுக்காக சீன் சீனாக யோசித்து எழுதிய அம்புலிமாமா கதை என சுஜாதாவின் விளையாட்டை ரசிக்கலாம். அம்ஜத்கான் ,ஜனகராஜ் காமெடி தமாஷாக இருந்ததாம். சகிக்கவில்லை படத்தில்.
இதே போல் தமது கரையெல்லாம் செண்பகப்பூ கதை ஆனந்த விகடனில் தொடராக வந்து முடிந்த போது அந்தக் கதையை படமாக்க உரிமம் கேட்டு ஒரு கிரிக்கெட் டீம் அளவுக்கு தயாரிப்பாளர்கள் தமது வீட்டை வட்டமிட்டதை எழுதிய அவர் காகித சங்கிலிகள் சாவியில் வந்த போது நேரிட்ட அனுபவத்தை விவரிப்பது கிளாஸ்.
முதலில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கமல் அம்பிகா முதலிரவு காட்சியுடன் படமானது. ஆட்டுக்கிடா வெட்டும் காட்சியும் வந்தது. கதையில் ஆட்டுக்கிடா இல்லையே என பஞ்சுவிடம் விசாரித்த போது அது காமெடி டிராக் என விளக்கம் தரப்பட்டதாம். படத்தில் அதை இதை என எதை எதையோ மாற்றி விட்டார்கள். கடைசியில் அது என் கதையே இல்லை என சுஜாதாவே சந்தோஷமாக கை கழுவிவிட்டாராம்.
இரண்டாவதாக இதே கதையை படமாக்க சி.வி.ராஜேந்திரன் வந்தார். லீகல் பிரச்சினைகள் வராமல் இருக்க பஞ்சு அருணாசலத்திடம் பேசி அக்கதையை சுலக்சணாவை வைத்து படமாக்கினார்கள். வைரமுத்து பொய்முகங்கள் என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப உருகி உருகி அத்தனை பொய்முகங்களையும் பட்டியலிட்டு பாடல் எழுதினார்.
மூன்றாவதாக ஒருவர் காகிதச் சங்கிலிகள் கதையை படமாக்க தொலைபேசியில் அழைத்த போது சுஜாதா என்ன செய்தார்? ராங் நம்பர் எனக் கூறி தொலைபேசி வயரையே பிடுங்கி எறிந்துவிட்டாராம்.
பழைய சோறுதான் ஆனால் ஆங்காங்கே பச்சைமிளகாய் போல் சுஜாதா டச் இல்லாமல் இல்லை.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...