Friday 27 April 2012

எனக்குப் பிடித்த எனது கவிதைகள்

பூமிப் பந்து

பொய்களுக்கு எதிராகப் போராடிப் போராடி சலித்துவிட்டது.
ஸ்தூலத்தில் நிலைபெறாத வாழ்வு
சொர்க்கத்தில் எக்கேடு கெட்டால் என்ன?
பூமிக்கு பாரமாக நான்
எனது தோள்களிலோ
பூமியின் பாரம்.
பூமியைப் பந்து என்பார்கள்.
தேர்ந்த ஆட்டக்காரர்களுக்கு அது சரிதான்.
நானோ பார்வையாளன்.
எல்லோரும் சேர்ந்து என்னை ஏன் தோற்கடித்தீர்கள் ?

முகாரி

அனுபவத் துணுக்குகள், சதைகளுடன்
சிதறிக் கிடக்கும்
வாழ்க்கை வீதிகள்.
காலமரங் கொத்தியின்
ஓலம் எதிரொலிக்கும்
கானகப் பிரபஞ்சத்தில்
பாதை தவறிய பயணங்கள்.

வானத்தில் வட்டமிடும் வல்லூறுகளால் பரவும்
நிணத்தின் வீச்சம்.

எங்கோ பூத்து மணக்கும் ஓரிரு பூக்களின் வாசனையும்...
மௌனங்களில் புதைந்த அழுகைகளை
சுமந்து திரியும் எனது சிரிப்பலைகள்.

தெறித்து விழுந்த கணங்களில் தனதாவதைத் தேர்வு செய்ய இயலாத
பலவீனம்.

உடைந்து நொறுங்குகின்ற நேரங்களும் உண்டு.

காலப் பரிணாமத்தை மனப் பரிமாணங்களால் செரிக்கவே முடிவதில்லை.
தூர்வார முடியாத சகதிகளால் நிரம்பி வழியும்
கிணறுகளில்
அந்தரத்தில் தொங்கும் வாளியாய் வாழ்நாட்கள்.

நோய்ப்பட்ட மனதுக்கு காய்ச்சிய கம்பிகளையே
பாய்ச்சிப் பார்க்கிறார்கள்.

முகாரியே பாடுவதால்
அனுதாப வேடமணிந்து வரும்
வேட்டைக்காரர்களிடம்
எல்லாவற்றையும் பறிகொடுத்து நிற்கும் என் பிள்ளை மனம்.

எனதேயான சோகங்களையும்
சிலுவைகளையும்
உயிர்த்தெழுகிற சாபம் வேண்டாமல் சுமந்து
கரைந்து காணாமல் போகிற ஆசையுடன்
அறையப்பட்ட ஆணிகளில் தொடர்கிறது எனது தவம்.

வலியுடன் நிகழ்ந்தன யாவும்
செதில் செதிலாய் நடந்த உடைப்பு
சுக்குநூறாய் சிதறியது வாழ்க்கை.
காக்கைச் சிறகுகளில் செதுக்கப்பட்ட
கவிதைக் கனவுகள்
குரூரமாகப் பிடுங்கியெறியப்பட்டன.

மறுக்க முடியாத வலிய மௌனத்தில்
வலியுடன் நிகழ்ந்தன யாவும்.
நசுங்கிப் போன ஆன்மாக்களுக்கு நினைவுத் தூண்
யார் எழுப்புவது ?

யாவும் மறக்கப்படும்
ஒரு யுகப் புழுக்கத்தில்
யார் வியர்வைக்கு யார் விசிறுவது ?

தீய்ந்து கருகிய கனவுக் குவியல்களின்
தீசல்களிலிருந்து
ஏதேனும் ஒரு கங்கு அணையாதிருக்கத்
தேடித் துழாவும் கண்ணீரை
யார் அர்த்தப்படுத்துவது ?

சும்மா போய்க் கொண்டிருப்பவனையும் அருகழைத்து
அறை விட்டு அனுப்பும் வாழ்க்கை.

மீண்டும் மீண்டும் துரோகங்களின் சாட்டையில்
சுழலுகின்ற இந்த பம்பரத்தின் ஆட்டம் தள்ளாட்டமே.
ஆயினும் அதுதான் அதன் நடனம்.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...