Sunday 13 May 2012

ஓஷோவும் ஜெயமோகனும்





ஓஷோவைப் பற்றி தனது இணைய பக்கத்தில் ஜெயமோகன்(www.jeyamohan.in  ) அண்மையில் எழுதிய கட்டுரைகளை காண நேர்ந்தது. நிமோனியா மாதிரி ஒரு ஓஷோமானியா நோய் எனக்கு இருப்பதாக பலமுறை அவர் நேராகவே கிண்டலடித்திருக்கிறார். ஓஷோவின் 700க்கும் மேற்பட்ட புத்தகங்களில் 600 புத்தகங்களை படித்துவிட்டேன். நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறேன். அதனால் அந்தப் பட்டம். தமிழ் அறிவுச் சூழலில் ஓஷோவை முதன் முதலாக தரமாக மொழிபெயர்த்து பரவலாக்கிய பெருமையும் எனக்குத்தான்.

90 களிலேயே ஜெயனுக்கு ஓஷோ மீது மரியாதை இல்லை என்பதை புரிந்துக் கொள்ள எனக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. காரணம் ஜெயமோகன் ஒரு ஒழுக்கவாதி. ஓஷோ தறுதலை, சுகவாசி, பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியவர் என்பது அவர் எண்ணம். ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுபவர் ஜெயன். அதை நானறிந்த வரை அவர் கடைபிடித்து வந்தார். அருண்மொழியைத் தவிர வேறு பெண்ணை மனத்தாலும் நினைக்காதவர். ஒரு முறை மட்டும் விளையாட்டாக ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண்ணால்தான் தன்னை மயக்க முடியும் என்றார்.அப்படி யாரிடமாவது மயங்கினாரா தெரியவில்லை.

மீடியாக்கள் வடித்த சித்திரப்படி ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார். இன்றைய நித்யானந்தாவுக்கெல்லாம் பிதாமகன் அவர்தான். ஆனால் நித்யானந்தன் ஒரு அயோக்கியன். ஓஷோ மகத்தான குரு. இந்த வித்தியாசம் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.ஓஷோவைப் பற்றி விரிவாக அடுத்தடுத்து எழுத நினைக்கிறேன். அதற்கு நன்றி ஜெயமோகனுக்கு.

ஜெயமோகனுக்கும் ஓஷோவைப் பற்றி செக்ஸ் சாமியார் என்ற இந்த பிம்பம்தான் மனதுக்குள் இருக்கும் என்பதை புரிந்துக் கொள்கிறேன்.ஏனெனில் அவர் காந்தியைப் போல ஒழுக்கம் சத்தியத்தின் ஒரு பகுதி என்று நம்புகிறவர்.

ஜெயன் பெரிதும் மதிக்கும் குரு நித்ய சைதன்ய யதி மீது எனக்கும் மரியாதை உண்டு. வாழ்வில் நான் நேரடியாக அறிந்த முதல் குரு அனுபவம் நித்ய சைதன்யாவுடையது.ஒருமுறை ஜெயமோகனிடம் நித்ய சைதன்ய யதிக்கு காம உணர்ச்சி இருக்குமா என்று கேட்டேன். துறவிகளுக்கு காமம் என்ற ஒருஉணர்வை கையாளும் மனப்பக்குவம் இருக்குமா அல்லது ஓஷோ கூறுவது போல காமத்திலிருந்து தான் கடவுளை அடைய முடியுமா என்பதுதான் என் குழப்பம்.
இந்தக் கேள்வியே ஜெயனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதலில் பதிலைக் கூறாமல் தட்டிக் கழிக்க முயன்று அதெல்லாம் இல்லை. யதி அதையெல்லாம் கடந்த மகான் என்று கூறினார். எப்படி கடந்தார் என்பதுதான் என் கேள்வி.

காமத்தை அடக்காதீர்கள் என்கிறார் ஓஷோ. அடக்கினால் அது கடந்ததாக அர்த்தப்படாது. தீர்த்தால் அது ஒழுக்கமாகாது. காமமே இல்லாதவன் மனிதப் பிறவியாக இருக்க முடியாது. திருநங்கைகளுக்கும் காமம் உள்ளது. ஏசுவுக்கும் குருநானக்குக்கும் காமம் இருந்ததா என்பது பற்றி தகவல் இல்லை. புத்தர் சித்தார்த்தனாக இருந்த போது சிற்றின்பத்தில் திளைத்தவர்தான். யசோதரா என்ற மனைவியும் மகனும் அடைந்தவர்தான் புத்தர்.

மகாத்மா காந்தி தன் காம உணர்வுகளைப் பற்றி அவரே அவரது சுயசரிதையில் மனம் திறந்து எழுதியிருக்கிறார்.

ஆன்மீக வாழ்வுக்கும் பொது வாழ்வுக்கும் வரக் கூடிய பெரிய மனிதர்கள் காமத்தை எப்படி கடக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஆனால் நித்ய சைதன்ய யதி மீது நான் ஏதோ பழிசுமத்துவதாக எண்ணிய ஜெயன் எரிச்சல் அடைந்தார். அவருக்கும் எனக்கும் நட்பு முறிந்த தற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


குருவின் தன்மை பற்றியும் ஓஷோ எழுதியிருக்கிறார். முதல் குருவாக ஓஷோவையும் இரண்டாவதாக நித்ய சைதன்யாவையும் மூன்றாவதாக சூஃபி தர் நிர்வாகி தாதா ரத்தன்சந்த் அவர்களையும் நான் மானசீகமாக வரித்துக் கொண்டிருக்கிறேன். ஓஷோவைப் பார்க்கும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.
ஓஷோவைப் பார்க்க வேண்டுமென்று தீராத தாகத்துடன் நான் 1990ம் ஆண்டில் புனே போன போது தேதி 20
19 ஜனவரியில்தான் ஓஷோ காலமானார். அப்போது நான் ரயிலில் இருந்ததால் எனக்குத் தெரியாமல் போனது. ஓஷோ ஆசிரமத்துக்குப் போன போது அதிகமான கூட்டம். ஓஷோவின் உடலைப் பார்க்கக் கூட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பரபரப்பு. ஆனால் யார் முகத்திலும் இழவு வீட்டின் சோகம் இல்லை. பலர் ஒருவரை ஒருவரை அணைத்துக் கொண்டனர். சில வெளிநாட்டவர் அழுதபடி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். சிலர் தனிமையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். ஓஷோ பிரசங்கம் செய்த நாற்காலி காலியாக இருந்தது. ஓஷோ பேச வருவார் என சிலர் சுற்றிலும் கொசுவலையால் மூடப்பட்ட அரங்கினுள் அமைதியாக காத்திருந்தனர்.
இசையமைப்பாளர்கள் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி, மகேஷ்பட் போன்ற பல பிரமுகர்களையும் அங்கு காண முடிந்தது.





ஓஷோவின் நாற்காலியை வணங்கிவிட்டு குருவின் சொற்களை நினைத்துக் கொண்டேன். மரணத்தையும் கொண்டாடுங்கள் என்று கூறியிருந்தார் ஓஷோ.

ஜிந்தகி கோ பியார் பஹூத் தியா ஹம்னே
மௌத் சே பீ முஹபத் நிபாயேங்கே ஹம்

SAFAR படத்தில் ஒலித்த கிஷோர் குமாரின் இந்தப் பாடல்தான் எனக்கு நினைவில் எழுந்தது. வாழ்க்கையின் மீது மிகுந்த பிரியம் செலுத்தி விட்டேன். இனி மரணத்தின் மீதும் அந்தப் பிரியத்தை செலுத்துவேன் என்று கூறும் பாடல் அது.


ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓஷோவை கிரிமினல் என்றாராம். ஜெயன் கூறுகிறார். உண்மையில் ஜே.கேவுக்கும் ஓஷோவுக்கும் நடந்த சண்டை (?) பற்றியும் ஒருவர் பற்றி மற்றவர் என்ன சொன்னார்கள் என்பதையும் ஜெயன் படித்திருக்கிறாரா ?
ஜே. கிருஷ்ணமூர்த்தி பெயரால் ஓஷோ ஆசிரமத்திற்குள் அழகான ஒரு தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதையாவது ஜெயன் அறிவாரா? அதை அன்று நான் நேரில் பார்த்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களையும் நான் பெரும்பாலும் வாசித்து விட்டேன்.ஓஷோவுக்கும் ஜேகேவுக்குமான முரண்பாடு பகைமையற்றது. அது இரு நண்பர்களின் சண்டைதான்.ஆனால் நிச்சயம் ஜெயமோகன் மாதிரி ஒரு நண்பன் ஜெகதீஷ் மாதிரி ஒரு நண்பனிடம் செய்த சண்டையைப் போல் அல்ல அது.
ஜே.கே.மீது ஓஷோ எத்தனை மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு அடையாளம்தான் அந்தத் தோட்டம்.
ஓஷோவை ஆழமாக வாசிக்க வாசிக்க அற்புதமான பல தருணங்கள், பல கணங்கள் நிகழும் என்பதை அனுபவப் பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன். ஹென்றி மில்லர் முதல் லாப்சங் லாமா வரை எட்கர் காய்சிலிருந்து நீட்சே வரை என்னை பல நூல்களை வாசிக்கச் செய்தவரும் ஓஷோதான். ஓஷோவைப் படிக்கும் போது தனியாக கதறி அழுதிருக்கிறேன். வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். மௌனத்தில் உறைந்துப் போயிருக்கிறேன்.இத்தகைய எந்த ஒரு அனுபவத்தையும் ஜெயமோகனின் எந்த ஒருவரியும் ஏற்படுத்தியதில்லை.

ஒவ்வொரு முறையும் ஓஷோவின் புத்தகத்தை எடுக்கும் போதெல்லாம் அது என்னை எப்படியெல்லாம் அலைக்கழிக்குமோ எப்படியெல்லாம் என் வாழ்க்கையை மாற்றிவிடுமோ என்று பதற்றத்துடனே படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் ஓஷோமானியா என்றால் இருக்கட்டும்.

ஓஷோவின் பல புத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அதில் நான்கைந்து புத்தகங்களை நானும் மொழிபெயர்த்திருக்கிறேன். இதில் நான் ஒரு வெண்மேகம், புதிய குழந்தை, நம்பிக்கை நட்சத்திரமாய் ஆகியவை அதிகம் சேதமில்லாமல் அச்சாகி விட்டன. ஆனால் ஹைகூ கவிதை பற்றிய பிரபஞ்ச ரகசியம் என்ற ஓஷோவின் புத்தகம் பதிப்பாளராலும் அவரது நண்பர்களாலும் சிதைக்கப்பட்டு விட்டது. அதே போல நான் 90 சதவீதம் மொழிபெயர்த்த ஒரு புத்தகம் இன்னொருவர் பெயரில் வந்துள்ளது.இந்தப் புத்தகங்களுக்காக கவிதா பதிப்பக உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் எனக்கு அளித்த நட்பு உதவி பத்தாயிரம் ரூபாய்க்குள் தான் இருக்கும். எத்தனைப் பிரதிகள் விற்றன என்பதையெல்லாம் எழுதுபவனால் ஒருபோதும் பதிப்பாளரிடம் வெள்ளை அறிக்கை கேட்க முடியாது.


ஓஷோவைப் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளுக்கு வரிக்கு வரி எதிர்வினையாற்றும் அளவுக்கு எனக்கு பொறுமையோ, மன ஊக்கமோ, கால அவகாசமோ, வாழ்க்கை வசதிகளோ இல்லை. இன்டர்நெட் ரீசார்ஜ் செய்யவே பணமின்றி தவிக்கும் நிலை எனக்கு. நினைத்தபோதெல்லாம் பிளாக்கை அப்டேட் செய்யவும் என்னால் முடியாது. ஆகவே ஜெயமோகனின் கருத்துகள் வலுவாகத் தெரியலாம். வாசக நண்பர்கள் ஓஷோவைப் படிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதுமட்டும்தான் என் கோரிக்கை.முடிந்தால் ஜெயமோகன் நூல்களையும் படித்துப் பாருங்கள் ஆணவத்துக்கும் ஆன்மீகத்துக்குமான வித்தியாசம் புரியும். ஈரமற்ற அறிவின் சிரிப்பையும் அகந்தையையும் ஜெயமோகனிடம் காண முடியும். அதே சமயம் கண்ணீர் கசிய வைக்கும் ஞானத்தின் தெளிவை ஓஷோவிடம் நிச்சயம் காண முடியும்.

ஓஷோவை நன்கு அறிந்தவன் என்று எனக்கு என் மீது நம்பிக்கை உண்டு. நானறிந்தவரை ஓஷோ ஒரு ஜீனியஸ். ஒரு மகான். ஒரு அற்புதமான குரு. ஒரு அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர். ஏசுவையும் புத்தரையும் சமகாலத்தில் சந்தித்த பரவசத்தை அளிப்பவர்.

ஓஷோவே கூறியது போல அவரை பின்பற்றுபவர்களை வைத்தோ, அவரது நூல்களை நுனிப்புல் மேய்பவர்களை வைத்தோ அவரை கணித்து விட முடியாது. ஓஷோவுடன் மானசீகமாக நிகழும் அனுபவம்தான் அவரைப் பற்றிய உணர்வை உருவாக்கும்.

பாலக்காடு அருகில் வசிக்கும் நண்பர் மனோகரனிடம் ஒருமுறை ஓஷோவைப் படிக்கும்படி கேட்டுக் கொண்ட போது முதலில் மறுத்து பின்னர் படித்தார். படித்து விட்டுசொன்னைார் இனி ஓஷோவை மட்டும் படித்தால் போதும் என்ற உணர்வு எழுகிறது என்று.

ரயிலில் நான் வைத்திருந்த ஓஷோவின் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்த சக பயணி புத்தகத்தை திருப்பிக் கொடுக்காமல் அதன் விலையைக் கொடுத்து கெஞ்சி கூத்தாடி அந்தப் புத்தகத்தை வாங்கிப் போனார். இப்படி எத்தனையோ அனுபவங்களைக் கூற முடியும். இவை ஒரு போதும் ஜெயமோகனின் புத்தகங்கள் தராது.

என்னுடைய வாசிப்பு அனுபவம் அறிந்தவர்களுக்கு நான் கூற விரும்பும் செய்தி இதுதான் .ஒருவர் வாழ்நாளில் கம்பனையும் ஓஷோவையும் படித்தால் போதும். தஸ்தயேவஸ்கி கூட தேவைப்பட மாட்டார். ஜெயமோகன் மாதிரி அறிவாளிகளை சுலபமாக தூக்கி கடாசிவிடலாம். அதைவிட கொஞ்சம் கண்ணதாசனும் பாரதியும் இருந்தால் தேவலாம்.

நான் வணங்கும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அருளால் ஓஷோவின் புகழ் ஜெயமோகனின் பெயரை விடவும் அதிக காலத்திற்கு நிலைத்திருக்கும்.
சலாம் அலேக்கும்.

















9 comments:

  1. //வாசக நண்பர்கள் ஓஷோவைப் படிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதுமட்டும்தான் என் கோரிக்கை.//100%
    அருமையான பதிவு ஓஷோ என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டவர்.. எந்த விசயத்தையும் வெவ்வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தவர். அவரைப் பற்றிய ஒரு அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி.. ஜே.கே , ஓசோ என்று முரணாக பார்க்கும் பாங்கை தகர்த்தேரிந்தமிக்கு நன்றி , நானும் அதை உணருகிறேன்

    ReplyDelete
  2. ஓஷோவைப் பற்றி தொடர்ந்து எழுத நினைக்கிறேன். மிகப் பெரிய தரிசனமாக அது சிலருக்கு கைக் கூடும். உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. I am lover of Osho for Past 13 Yrs....I dedicate some blogs to osho ....please visit...

    http://belovedmaster.blogspot.in/
    http://behereandnow.blogspot.in/
    http://passionforimpossible.blogspot.in/
    http://real-rebel.blogspot.in/

    I will keep updating blogs more...Keep Reading and Write new posts....SHARING is REJOICING...

    ReplyDelete
  4. your statement is very true. i read Osho Books since 1999,

    i have more than 90 Tamil Osho Books....

    Each Indian Must Know About Osho.

    He is Really True Guru and Philosopher...

    thanks to you....

    ReplyDelete
  5. ஓஷோ மனிதர் அல்ல மனித வாழ்வுக்கு அவர் ஒரு சந்தர்ப்பம் .அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்டவர்கள் கணக்கில் இல்லை .உங்களைப்போல .

    ReplyDelete
  6. எனக்கு வாழ்கை பாடத்தை சொல்லி தந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள்.அவருடைய கதைகளை படிக்க ஆரம்பித்த பின், வேறு எவரையும் படிக்க தோன்றவில்லை.ஒரு முறை பேருந்தில் பயணம் செய்யும் பொழுது ஒரு புத்தகத்தின் அட்டையில் இருந்த வரியை படிக்க நேர்ந்தது அந்த வரி "புல் தானே வளர்கிறது" அந்த புத்தகம் ஓஷோவினுடையது.அதன் பின் ஓஷோ தவிர வேறு யாரையும் வாசிக்க முடியவில்லை.அவரோடு எத்தனையோ கருத்துகளில் முரண்படுகிறேன்.ஏன் அவரே முரண்பாடானவர்தான்,ஆனாலும் எனக்கு,அவரை போல் ஞானத்தை வழங்கியவர் எவரும் இல்லை.

    ReplyDelete
  7. என்னமோ மீண்டும் இந்தப் பதிவை வாசிக்க வேண்டும் என்று இருந்தது... காரணம் மீண்டும் ஜெயமோகன் தான்

    ReplyDelete
  8. மிகத் தெளிவான விளக்கம்.

    ReplyDelete
  9. அற்புதம் நண்பரே
    நாத்திக வாதியாக இருந்த நான் ஓஷோவை வாசித்த பின்பு தான் ஆஸ்தீகம் நாஸ்தீகம் தன்மையின் உண்மை புரிந்தேன் இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை உணர்ந்தேன்
    என் முதல் குருவானார் ஆன்மீகம் சுவையையும் ஞானத்தின் நிலையையும் உணர்த்தினார்
    எப்போதும் இப்பிரபஞ்த்திற்க்கு நன்றி உள்ளவனாக இரு என்பதை தெளிவுபடுத்தினார்

    காமம் கடந்துபோகனுமே தவிர ஒதுக்கி செல்ல கூடாது அவ்வாறு ஒதுக்கி செல்ல முயன்றால் உன்பயணம் எல்லையை சேராது எத்தனை எதார்த்தமாக விளக்கியுளார் the man of philosophy என்னை செதுக்கிய நூல்

    நன்றிகள் கோடி,,,,,,

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...