இறைவனை அடைதல்                                                               

இறைவனை அடைய பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.சூரிய வழிபாடு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை இறைவழிபாடு இயற்கை சார்ந்த வழிபாடாகவே இருக்கிறது. ஆனால் ஸ்தூலமான உலகின் காட்சிமயமான இறைவழிபாட்டை கடந்து, இறைமையை உள்ளத்தாலும் உணர்வாலும் அறியும் சில முறைகளும் உள்ளன. அற்புதமான குளிர் மாருதம் வீசும்போது நான் இறைவனைத் தொட்ட பரவசத்தை அடைந்திருக்கிறேன். மழைத் துளியின் ஸ்பரிசத்திலும் அவனது சருமத்தை உரசியிருக்கிறேன். எதுவம் அற்ற ஒரு சூன்ய வெளியிலும் ஆழ்ந்த நித்திரையிலும்கூட இறைமையையும் அவன் கருணையையும் அறிந்திருக்கிறேன்.

அண்மையில் 4 மாதங்களில் மூன்று முறை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பயணம் மேற்கொண்டேன். இரண்டு முறை குடும்பத்துடனும் ஒருமுறை தனியாகவும்.

முதல் முறை சென்றது திட்டமிடாதது. எனவே ரயிலில் முன்பதிவு  இல்லாமல் மூன்றரை மணி நேரமும் சிரமப்பட்டு பின்னர் களைப்புடனே மலையேறினோம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 50 ரூபாய், 300 ரூபாய் தரிசனம் எல்லாம் இல்லை என்று சுமார் 8 மணி நேரம் பொதுவரிசையில் நின்றிருந்தோம். சகோதரியின் குழந்தைகள் விக்கியும் சோனுவும் சோர்ந்து போயினர். சாப்பிட உப்புமாவும் பாலும் தேவஸ்தானம் அளித்தது. ஆனால் விக்கிக்கு தராமல் வரிசையில் வரச் சொல்லி விரட்டிய  ஊழியருடன் சண்டை போட்டதில் அதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த கொஞ்ச உணவை பகிர்ந்துக் கொண்டு கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தோம். திடீரென பல மணி நேரம் தரிசனம் கிடையாது என்றார்கள். மறுநாள் இரவு 9 மணிக்குத்தான் தரிசனம் என்றும் கூண்டை பூட்டிய காவலாளி கூறினான். அப்போது மணி இரவு மணி 3. சரி என காலைவரை தரையில் தூங்கினோம். அதிகாலை 4 மணிக்கே சுத்தம் செய்யும் பணியாளர்கள் வந்து தரையெல்லாம் தண்ணீர் ஊற்றி விரட்டியடித்தனர். ஒடுங்குவதற்கு கூட இடமின்றி கூட்டத்தைக் கண்டாலே எரிச்சல் எரிச்சலாக இருந்தது. திடீரென முடிவெடுத்து திரும்பி விட்டோம். பல கூண்டுகள் கதவுகளைத் தாண்டி வெளியே வந்தோம். பிளாக் மார்க்கெட்டில் இரவிலும் கூட லட்டு கிடைத்தது. வாங்கி பஸ்ஸையும் ரயிலையும் பிடித்து மலையிலிருந்து கீழிறங்கி சென்னை திரும்பி விட்டோம். பெண்களுக்கு சங்கடம். தரிசனம் செய்ய முடியாதது குறித்து வீணான கற்பனைகள், பயங்களும் ஆட்டிப் படைத்தன. அப்பாவிடம் கேட்டேன். திரும்பி வரலாமா இப்படி என்று. பெருமாள் கோவில் வாசலை தொட்டு வந்ததே புண்ணியம்தான் கவலைப்பட வேண்டாம் என்றார்.

அடுத்த இரண்டு வாரங்களில் எனது பிறந்தநாள். கடந்த ஆண்டு எனது பிறந்த நாள் ஏழுமலையான் சன்னதியில் கழிந்தது. இப்போதும் அப்படியே ஆகட்டும் என்று தியாகராஜ நகரில் உள்ள தேவஸ்தானம் அலுவலகம் போய் 50 ரூபாய் டிக்கட்டில் பதிவு செய்து வந்தேன். எக்ஸ்பிரஸ் ரயில்களை எதிர்பாராமல் அரக்கோணம் வரை செல்லும் மெட்ரோ ரயிலில் போய் அங்கிருந்து பேருந்து மூலம் திருப்பதி சென்றடைந்தேன். கிட்டதட்ட 6 மணி நேரமாகிவிட்டது. இரவு பத்துமணிக்குத் தான் தரிசன நேரம் தரப்பட்டிருந்தது. திருப்பதியில் சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர் படம் பார்த்து ஊரையும் சுற்றி நன்றாக சாப்பிட்டு, இரவு சரியாக பத்து மணிக்கு வரிசையில் நின்றேன். நள்ளிரவு 12.30 மணிக்கு தரிசனம் கிடைத்தது. அதாவது என் பிறந்தநாள் முடிந்துவிட்டது. ஆனால் பத்து மணிக்கே வரிசைக்கு வந்துவிட்டதால் பிறந்தநாளில் பெருமாளை தரிசித்த கணக்கு வைத்து அரக்கோணம் வழியாகவே திரும்பி விட்டேன்.
மூன்றாவது முறை மீண்டும் குடும்பத்தினருடன் குழந்தைகளுடன் புறப்பட்டோம். இம்முறை எல்லோரும் 50 ரூபாய் கொடுத்து பதிவு செய்துவிட்டோம். இம்முறையும் இரவு பத்துமணி தரிசனம்தான். மாலை 4.30க்கு ரயிலில் டிக்கட்டும் எடுத்து விட்டோம். ஆனால் 7 டிக்கட்டில் 3 மட்டுமே சீட் ஒதுக்கப்பட்டன. எனவே மீண்டும் அன் ரிசர்வ் பெட்டியில் ஏறி புளிமூட்டை போல திணிக்கப்பட்ட மக்களுடன் சண்டை போட்டபடி திருப்பதி சென்றடைந்தோம். இரவு 8 மணிக்கு மலையேற பஸ்ஸில் ஏறினால், பிரணாப் முகர்ஜி சாமி தரிசனம் பண்ண திருப்பதி வந்ததாக கூறி பேருந்தை 2 மணி நேரம் கிடப்பில் போட்டுவிட்டனர். பிரணாப்பின் கார் கடந்து போன பிறகே பேருந்து மலைப்பாதைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 11 மணிக்கே போய் சேர்ந்தோம். பரவாயில்லை என வரிசையில் போய் நின்றால் ஆச்சரியம். சர சர வென வரிசை நகர்ந்து அடுத்த ஒருமணி நேரத்திலேயே அற்புதமான பெருமாள் தரிசனம் வாய்த்தது. லட்டு பிரசாதம் வாங்கி குளத்தில் தலையி்ல் தண்ணீர் தெளித்து, உடைமைகளை வாங்கிக் கொண்டு பன்னிரண்டரைக்கே திருமலை யாத்திரை பூரணம் அடைந்துவிட்டது. பிறகு விடிய விடிய பிரதான வாசல் அருகே வெட்டவெளியில் நடுநடுங்கும் குளிரில் படுத்துத் தூங்கி விடிந்ததும் ஊர் திரும்பி வந்தோம்.

இப்படி இறைவனை அடையும் பொருட்டு எத்தனையோ பேர் எத்தனை விதமான சிரமங்களை அடைகின்றனர். திருமலைக்கு கால்நடையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. இறை நம்பிக்கை என்ற ஒற்றை துடுப்பைக் கொண்டு எத்தனை லட்சம் தோணிகள் வாழ்க்கையின் சூறைக்காற்று மற்றும் புயலை சந்திக்கின்றன. எத்தனை லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை சில கணங்கள் தரிசிப்பதற்காக நாள் கணக்கில் உடலையும் மனத்தையும் வருத்துகின்றனர். எத்தனை நாட்களாக திட்டமிடுகின்றனர். எத்தனை கோடி ரூபாய் வணிகமும் போக்குவரத்தும் வாழ்வாதாரமும் ஏழுமலையானின் புண்ணியத்தால் திருப்பதியில் வாய்த்திருக்கிறது. எத்தனை டூரிஸ்ட்டுகளால் லாட்ஜ், தியேட்டர், உணவகங்களுக்கும் இதர கோவில்களுக்கும் வருவாய் கிடைக்கிறது.

இப்படி பல்வேறு எண்ணங்களுடன் சென்னை திரும்பிய போது மனத்தில் இரண்டு எண்ணங்கள் மேலோங்கின. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அமர்த்திய பணியாளர்கள் பெருமாளை தரிசிக்க வருவோரை பிடித்து பிடித்து தள்ளுகின்றனர். ஒரு அழகான இளம் பெண் என்னை கூச்சமின்றி தொட்டு இறுக்கிப் பிடித்து தள்ளி விட்டாள். அந்தப் பணியாளர்கள் பெருமாள் சன்னதியருகே பல மணி நேரம் நிற்கின்றனர். பெருமாளை தரிசிக்கும் சில கணங்களுக்காக நாள்கணக்கில் மாதக்கணக்கில் நாங்கள்  பல நடைமுறைச் சிக்கல்கள், பொருளாதார பிரச்சினைகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க இவர்களுக்கு எப்படி இப்படி ஒரு எளிதான தரிசனம், வாய்த்த்து. பிரணாப் முகர்ஜியைப் போன்ற மனிதர்களுக்கு 40 ஆண்டுகளாக மத்திய அமைச்சராகவும் எம்பியாகவும் இருந்து அத்தனை சுகபோக சொகுசுகளை அனுபவித்தவருக்கு கடைசிக் காலத்தில் குடியரசுத் தலைவர் பதவி வேறு.
எப்படி இத்தனை கொடுப்பினை.....அவர் என்ன மகாத்மா காந்தியைப் போல நாட்டுக்கு பாடுபட்டவரா, விவேகானந்தரைப் போல ஆன்மீக நெறியுடன் வாழ்ந்தவரா.......அரசியலால் சுகம் கண்ட இருபத்தியோரம் நூற்றாண்டு மன்னாதி மன்னரா.....இவர்களுக்கெல்லாம் எளிதாக பெருமாள் தரிசனம் தருகிறாரே என்று ஆற்றாமை எழுந்தது. பிரணாப்பின் கார் மலையில் உருண்டு மறுநாள் தலைப்புச் செய்தியாகிவிட்டதைப் போல கனவுகளும் கற்பனைகளும் ஆட்டிப் படைத்தன.குடியரசுத் தலைவராகி விட்டாரல்லவா.....பெரிய பதவியில்இருப்பவர்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது என யாரோ எச்சரிப்பதும் தெரிகிறது. சாரி பிரணாப்ஜி.ஒரு பித்தனின் பிதற்றல்களாக இவற்றை ஒதுக்கி விடுங்கள்.
கோபம் பிரணாப் மீது அல்ல. இவ்வுலகைப் படைத்த கடவுள் மீதும் அல்ல. ஆனால் இடையில் நடந்துவிட்ட பல குழப்பங்கள் மீதும் அந்த குழப்பங்களுடன் மேலும்மேலும் குழப்பத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் எளிய மனிதர்கள் மீதும் என்மீதும்தான் எனக்கு கோபம்.

அல்லது எல்லோர் மீதும்.


Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்