Wednesday 25 April 2012

க.நா.சுப்பிரமணியம் என்ற இலக்கிய ஆளுமை

கநா.சு என்ற இலக்கிய ஆளுமை புத்தக வாசிப்பு என்பது ஒரு ரசனையாக இருந்த காலம் இப்போது இல்லை. பைண்டு செய்த தொடர்கதைகளின் காலம் முடிந்துவிட்டது.பேஸ்புக்கும் டிவிட்டரும், ஷாப்பிங் மால்களும் இளைஞர்களின் ஏரியாவாகி விட்டது.புத்தக வாசிப்பின் இடத்தை அசட்டுத்தனமான பெரிய பத்திரிகைகளும் சீரியல்களும் அபகரித்துக் கொண்டன.ஆயிரம் பிரதிகள் புத்தகம் அச்சிட்டு முந்நூறு பிரதிகளே விற்று, வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்கும் படைப்பாளிகளும் இப்போது குறைந்து விட்டனர். இணைய வலைப் பூ மூலம் உலகம் முழுவதும் நண்பர்களை இணைத்துக் கொண்டு துபாய், கனடா, மலேசியா என உலகம் சுற்றும் எழுத்தாளர்கள் எப்படியோ தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டுவிட்டனர். சாக்கடையிலிருந்து அழுகிய ஆப்பிளை எடுத்த புதுமைப்பித்தனின் சேரிக் குழந்தைகள் இப்போது வளர்ந்து போர்ட்டிகோவில் காரில் இருந்து இறங்கிக் கொண்டுள்ளனர். (இந்த வரி நண்பர் ஆர்.மோகனரங்கனுக்குரியது.) எழுத்து என்பது தமிழ்ச்சூழலில் பணம் பெயராத காரியமாகி விட்டது.எந்த தமிழ்ப் படைப்பாளியும் இன்று எழுத்தை ஜீவனோபயமாக கருதுவதில்லை.அரசியல், திரைப்படப் பாடல், தொலைக்காட்சி, வணிகம் என்று அவர்கள் தங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டனர்.சினிமா முதல் ஜீன்ஸ் கடைவரை எழுத்தாளர்கள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். தன் எழுத்தை நம்பி ஒருமாதம் கூட குடும்பம் நடத்த முடியாது என்பதில் எல்லோருமே ஓரளவு தெளிவு பெற்றுவிட்டார்கள். இத்தகைய சூழலில் வாசிப்பதற்காகவே வாழ்ந்து வந்த அரிய மனிதரான க.நா.சுவின் நூற்றாண்டு நடைபெற்றது. கும்பகோணம் அருகே உள்ள திருவாலங்காடு எனும் கிராமத்தில் வசித்த நாராயணசாமி என்ற பிராமணருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணியம். குழந்தைப் பருவத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் நூலகங்களுக்குச் சென்று படிப்பதிலும் சிறுவர்களை சேர்த்து வைத்து கதை சொல்வதிலும் ஈடுபாடு செலுத்தினார். சிதம்பரத்தில் படித்து பட்டம் பெற்ற அவர் 1965 முதல் 85ம் ஆண்டு வரை டெல்லியில் வாழ்ந்தார். பின்னர் இறுதிக்காலம் வரை சென்னையில் வசித்தார். நாள்தோறும் மிக அதிகப்படியான நேரத்தை படிப்பதற்கும் எழுதுவதற்கும் செலவிட்ட அபூர்வ மனிதர் க.நா.சு. இதனால் அவரை பொறுப்பற்றவர் என்று சிலர் கூறியதுண்டு. இவ்வுலகின் ஒவ்வொரு காரியமும் தன்போக்கில் நடந்தேறும் என்பதும் அதில் தனியொரு மனிதனின் பொறுப்பு என்பது எத்தனை சிறிய பாத்திரம் என்றும் அறியாதவரல்ல க.நா.சு. வாசகராகவும் எழுத்தாளராகவும் திருப்தியடையாத க.நா.சு. தமிழ்நாட்டு வாசகர்களை உய்விக்க விமர்சகராகவும் மாறினார். இலக்கிய விமர்சனத்தின் முக்கியமான நோக்கம் இலக்கியத்துக்கு உதவி செய்வதுதான் என்றும் அவர் கூறிவந்தார். பட்டியல் போடுவதில் பிரசித்தி பெற்றவராக விளங்கிய க.நா.சு தமது பட்டியலில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் யாவரும் இன்று அவரவருக்கான மதிப்புடன் விளங்குவதைப் பார்த்தால், க.நா.சு.வின் ரசனை, தீர்க்கதரிசனம், நேர்மை ஆகியவை குறித்து விளங்கும். அவரது பட்டியல்கள் சுயவிருப்பு வெறுப்பு சார்ந்தவையல்ல. அவை ரசனையின் வெளிப்பாடுகள். பொய்த்தேவு க.நா.சு.வை படைப்பாளியாகவும் நிலைநிறுத்திய நாவல்.இது சாதியத்தை அப்பட்டமாக போற்றும் நாவல் என்று இடதுசாரிகளாலும் பெரியாரியவாதிகளாலும் இதனை தூற்றினர். கைலாசபதியும் க.நா.சு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். சாதியின் கீழ்மையை அகற்ற பொருளாதார உயர்வு பெற வேண்டும் என்றும் பிராமணியமே சிறந்த வாழ்க்கை நெறி என்று இந்நாவல் கூறுவதாக விமர்சகர்கள் கடுமையான தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் பொய்த்தேவும் நீங்காத இடம்பெற்றுவிட்டது. விமர்சித்த கைலாசபதி போன்றவர்கள்தான் காலாவதியாகிவிட்டனர். க.நா.சுவின் ஒருநாள், தாமஸ் வந்தார், சர்மாவின் உயில், பித்தப்பூ போன்ற நாவல்களும் பாராட்டைப் பெற்றன. அவதூதர் நாவலில் சித்தர் வாழ்க்கை சித்தரிக்கப்படுவதை கோவை ஞானி விரிவாக எடுத்துரைத்துள்ளார். சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் ஆன்மீகம் துணைக்கு வரும் என்று ஞானி,  க.நா.சுவை மெய்யியல் நோக்கில் நிலை நிறுத்துகிறார்.ஒருநாள் நாவல் இந்திய மரபின் சில அம்சங்கள் மீது க.நா.சு கொண்டிருந்த நம்பிக்கையை விளக்குவதாகவும் ஞானி கூறுகிறார். தான் வாழ்ந்த காலத்தில் இலக்கியவாதிகளுக்கும் மாற்றுக் கருத்துடையவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் க.நா.சு.என்று குறிப்பிடுகிறார் மறைந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். வாழ்வின் பல்வேறு அகலங்களையும் ஆழங்களையும் வெளிப்படுத்த இப்படிப்பட்ட சிம்ம சொப்பனம் தேவைதான் என்பதும் பிரகாஷின் கூற்று. இறுதிக் காலத்தில் சென்னையில் வாழ்ந்து 1988ல் காலமான க.நா.சு தமது 76 முதிய வயதிலும், பார்வையை இழந்த நிலையிலும் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு புத்தகங்களைப் படித்ததும், பதிப்பகம் பதிப்பகமாக தான் எழுதிய நூல்களை பதிப்பிக்க அலைந்ததும் துயரமான ஒரு கதையின் எழுதப்படாத வரிகள்.க.நா.சுவுக்கு உரிய கௌரவத்தை இன்றும் கூட தமிழ்ச்சூழல் அவருக்கு வழங்கவில்லை என்பதுதான் நன்றிகெட்ட செயல். ராமகாதை கூறப்படும் இடத்தில் எல்லாம் அனுமன் கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருப்பார் என்பார்கள் கம்பராமாயணத்துக்கு உரை எழுதிய தமிழ் அறிஞர்கள். அதே போல காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கநாசு நூற்றாண்டு விழாவில் பேசிய நான் எந்த ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அங்கு க.நா.சு கண்களில் நீர்க்கசிய அமர்ந்திருப்பார் என்று குறிப்பிட்டேன். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். தமிழ் மக்களுக்கு நல்ல இலக்கியங்களை அடையாளம் காட்டி, தாமும் அரிய சில படைப்புகளை படைத்த க.நா.சு என்ற இலக்கிய ஆளுமை காற்று போல பிறருக்கு சுவாசமாக இருந்தவர். சில நேரங்களில் புயலாகவும் வீசியவர். ஆனால் புயலும் காற்றுதானே.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...