Wednesday 1 July 2015

அரிதினும் அரிது கேள் 8 என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே

அமிதாப் பச்சன் இந்தியில் நடித்துள்ள எண்ணற்ற திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்ட அமர் அக்பர் ஆன்டனி, தீவார், ஷோலே, நமக் ஹராம், நாஸ்திக், குத்தார், அபிமான் போன்ற சிறந்த படங்களின் வரிசையில் முக்கியமான ஒரு படம் முக்கந்தர் கா சிக்கந்தர்.

இந்தப்படத்தின் கதை மிகவும் நீளமானது. ஆனால் சுவையானது. ஐந்து முக்கியப் பாத்திரங்கள். அருமையான பாடல்கள், நேர்த்தியான திரைக்கதை, பல இடங்களில் பரவசமூட்டும் வசனங்கள். அமிதாப் சிறுவயது முதல் ராக்கியை காதலிப்பார். ராக்கியும் அவர் அப்பாவும் அவரை புரிந்துக் கொள்ளாமல் வெறுப்பார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பல உதவிகள் செய்வார் அமிதாப். ராக்கியோ அமிதாப்பின் நண்பர் வினோத் கன்னாவை காதலிப்பார். இதை அறிந்ததும் உடைந்து நொறுங்கிப் போவார் அமிதாப் , அவர் மன உளைச்சலுக்கு ஆறுதலாக இருப்பவர் நடன மங்கையான ரேகா. ரேகாவின் மீது தீராத காதல் கொண்ட வில்லன் அம்ஜத்குமார் தனக்கு தடை அமிதாப் என நினைத்து அவரைக்குத்திக் கொலை செய்வார். நண்பனையும் காதலியையும் இணைத்து வைத்து அமிதாப் தியாகியாகிவிடுவார்.

அபத்தமான சினிமா கதை போலத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்ட மகத்தான காவியம்.காரணம் படத்தின் நேர்த்தியும் அமிதாப், ராக்கி, ரேகா, வினோத் கன்னா,அம்ஜத்கான் நடிப்பும் பாடல்களும்தான்.
படத்தில் எனக்குப்பிடித்த அம்சங்களை தொகுத்துத் தர முயற்சிக்கிறேன். முதன் முதலாக பால்ய கால காதல். ராக்கி சிறு பெண். தாய் இறந்துவிடுவார். காரணம் வேலைக்காரன் ஒருவன் நகைக்காக அவளை கொன்று விடுகிறான். இதனால் ராக்கியின் தந்தை ஏழை சிறுவர்களை வெறுப்பார்.ராக்கி குழந்தைத்தனமான அன்புடன் சிறுவயது அமிதாப்புடன் பழகுவாள். அமிதாப்பும் அவள் மீது உயிரை வைத்திருப்பான். அவள் ஒரு பொம்மையை பார்த்து ஆசைப்படுவாள். அந்த பொம்மையை வாங்கித்தர அமிதாப் முயற்சித்தாலும் பணம் போதாது. ஒருவழியாக பொம்மையுடன் அமிதாப் அவள் பிறந்தநாளுக்கு வரும் போது ராக்கி அவனை நினைத்து ஒ சாத்தி ரே என உருக்கமாக பாடுவாள்- குரல் ஆஷா போன்ஸ்லே, இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி
அமிதாப் பொம்மையுடன் வரும் போது திருடன் என விரட்டுவார்கள். நீயும் என் அம்மாவைக் கொன்ற திருடன் போன்றவன்தானா என் முகத்திலேயே முழிக்காதே என ராக்கி விரட்டிவிடுவாள். அவள் அப்பா அவளை அழைத்து வேறு ஊருக்குப் போய்விடுவார்.

அனாதாயான சிறுவன் அமிதாப் தன் பால்ய சகியைத் தேடி மும்பைக்கு வருவான். அங்கு நிருபமா ராய் பணத்தைப் பறிக்கும் பொறுக்கிப் பயல்களுடன் சண்டைபோட்டு பணத்தை மீட்டுத் தருவான். இதனால் அவனை மகனாக பாவித்து அந்த தாய் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். உன் பெயர் என்ன என்று அவர் கேட்கும்போது எனக்கு என் பெயரே தெரியாது. சிலர் பொறம்போக்கு என அழைப்பார்கள். சிலர் தேவடியா பையா என்பார்கள் சிலர் டேய் என்பார்கள்.யார் எப்படி அழைத்தாலும் என் பெயர் சொல்லி யாரும் அழைத்ததில்லை என்பான் சிறுவன்.
அவனுக்கு விஜய் என பெயரிடுகிறாள் அந்தத் தாய். அவனுக்கு ஒரு தங்கையும் கிடைக்கிறாள். தாய் இறந்த நாளில் துக்கம் தாளாமல் சுடுகாட்டில் அழும் அமிதாப்புக்கு ஒரு சூஃபீ பக்கீர்( காதர் கான்) ஆறுதல் சொல்வார். துன்பம் வரும்போது அழாதே, சிரிக்கப்பழகு. துன்பத்தைக் கண்டு சிரிப்பவன்தான் விதியை வெல்லும் வீரனாக மாறுவான்(( முக்கந்தர் கா சிக்கந்தர் ))
சிறுவன் சிரிப்பான். சிரிக்க சிரிக்க மும்பையின் நெடுஞ்சாலையில் பெரியவனாகி, அமிதாப் பச்சன் ரோத்தே ஹூவே ஆத்தே ஹை சப் என கிஷோர் குமார் குரலில் பாடிக் கொண்டே வருவார்.அழுதுக் கொண்டே பூமியில் பிறக்கிறார்கள், சிரித்துக்கொண்டே போகிறவன் எவனோ அவனே விதியை வெல்லும் வீரனாவான். என பாடலை எழுதியிருப்பவர் அன்ஜான்.
அந்தப் பாடலை பஸ் ஸ்டாண்டில் நின்று கேட்பார் ராக்கி. அதே பஸ் ஸ்டாண்டில் நிற்கும் வினோத் கன்னாவும் பாடலின் வரிகளைக் கேட்டு வியப்பார்

ஒரு சவ ஊர்வலம் அமிதாப்பின் மோட்டார் பைக்கை கடந்து செல்லும். அமிதாப் மிக ஸ்டைலாக ஒரு காலை தரையில் ஊன்றி நிற்பார். பாடல் இப்படி தொடரும்
ஜிந்தகி தோ பேவபா ஹை.....அதாவது வாழ்க்கை ஒரு துரோகி ஒருநாள் உன்னைக் கைவிட்டு விட்டு போய் விடும்
மரணம் உன் காதலியைப் போல் உன்னைத் தழுவிக் கொண்டு அழைத்துச் செல்லும்.
இறந்தபின்னும் வாழ்பவன் எவனோ அவன்தான் உலகத்திற்கு பாடமாக இருப்பான்.

இந்தப் படத்தில் ரேகாவின் கதாபாத்திரம் அற்புதமானது. ரேகா அற்புதமான நடிகையும் கூட. ஒரு கட்டத்தில் ரேகாவிடம் அமிதாப் மயங்கிக் கிடப்பதாக கருதும் நண்பர் வினோத் கன்னா உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் அவனை மறக்க என பேரம் பேசுவார். தொகையை உயர்த்திக் கொண்டே செல்ல அவ்வளவுதானா உங்கள் நண்பரின் விலை எனக் கேட்பார் ரேகா. அந்த விலைக்கு அவருடைய புகைப்படத்தைக் கூட நான் விற்கமாட்டேன் என்பார்.

அமிதாப் ரேகாவை காதலிக்கவில்லை என்றும் தான் காதலிக்கும் ராக்கியைத்தான் சிறுவயது முதலே காதலிக்கிறார் என்றும் அறியாதவர் வினோத் கன்னா.
ஒரு நிகழ்ச்சியில் மேடையேறும் அமிதாப் பச்சன் சிறுவயதில் ராக்கி பாடிய அதே பாடலை மேடையில் பாடுவார்
ஓ சாத்தி ரே தேரே பினாபீ க்யா ஜீனா.....குரல் கிஷோர் குமார்

இந்தப் படம் என் நினைவில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. இதே படத்தை தமிழில் எடுத்தார்கள். அமிதாப் வேடத்தில் சிவாஜி கணேசன். ராக்கி வேடத்தில் மாதவி.நடனக்காரி ரேகா வேடத்தில் ஸ்ரீப்ரியா, வினோத் கன்னா வேடத்தில் ஜெய்கணேஷ், படத்தின் பெயர் அமரகாவியம். இயக்குனர் அமிர்தம். தற்போது ராஜ் வீடியோ விஷனில் இதன் டிவிடி அநியாய விலைக்கு கிடைக்கிறது.



இந்தியைப் போல தமிழில் பாடல்கள் அதிகமாகப் பிரபலமாகவில்லை. பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதினர். இசை மெல்லிசைம ன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் ஓ சாத்தி ரே பாடலுக்கு தமிழில் எழுதப்பட்ட பாடல் தனித்துவம் மிக்க பாடலாக அமைந்துவிட்டது. இதே பாடலை பெண் குரலில் எஸ்,பி.ஷைலஜா மிக அழகாகப் பாடியிருக்கிறார். என்றாலும் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமான குரலில் அடர்த்தியான துயரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆழமான காதலை, அன்பை கவியரசர் கண்ணதாசன் வரிகளாக வடித்திருக்கிறார்.




செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
இளவாடையில் தென்றல் வந்தாலும்
உன்னைத்தானே நினைக்கிறேன்
என் ஆசையின் ஊஞ்சலும் நீயே
அதில் ஆடிடும் கனவுகள் நீயே
அதில்தானே வாழ்கிறேன்.

நான்பாடும் கீதம்
நீ தந்த ராகம்
நீ சொல்லும் பாடம்
என் வாழ்வில் வேதம்
நாள்தோறுமே ஆதாரமே நீயல்லவோ
நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ


நீ எந்தன் வானம்
நான் அங்கு நீலம்
நீ எந்தன் வாசல்
நான் அங்கு கோலம்
பாலாறு நான்
தேனாறு நீ பூமன்றமே
காணாவிட்டால் ஆறாதம்மா என் நெஞ்சமே

இந்தப் பாடல் மனதுக்குள் அற்புதமான ரீங்காரம் செய்வதற்கு மெல்லிசை மன்னரின் தாலாட்டும் இசைதான் காரணம்
எப்போதும் பால்ய கால காதலுக்கு உள்ள துயரம் மிக்க ஒரு இனிமை இந்தப்பாடலிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
------------------------------------------------





No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...