Saturday 4 July 2015

உலக சினிமா - Definitely maybe நிச்சயமாக இருக்கலாம்

உலக சினிமா
நிச்சயமாக, இருக்கலாம் - Definitely Maybe



வாழ்க்கையில் எந்த முடிவையும் நிச்சயமாக எடுக்க முடிவதில்லை. எதிலும் சந்தேகம் தொக்கி நிற்கிறது.தாயின் அன்பும் மனைவியின் காதலும் சந்தேகத்திற்கு ஆளாகிவிட்ட காலம் இது.நிச்சயமாக அறிந்த உண்மைகளையும் குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை.இதன் விளைவுகளை இப்படம் விளக்க முயற்சி்க்கிறது.இது சற்று சிக்கலான பிரச்சினைதான். உளவியல் ரீதியானது.முடிச்சு மேல் முடிச்சு போட்டு மனத்தையும் அதன் ரகசியங்களையும் இறுகி மூடி வைக்கும் மனிதர்கள், ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே அப்பட்டமாக தரிசிக்கும் தருணங்களும் வாய்க்கின்றன.அவை உன்னதமானவையாகவும் இருக்கலாம், வலி தருவதாகவும் இருக்கலாம்.
இப்படத்தின் நாயகன் வில் ஹேஸ்.வயது 30 .மனைவியிடம் விவாகரத்து பெற்றவன். தனது பத்து வயது மகளுக்கு அவள் அம்மாவை சந்தித்த கதையை கூறுகிறான். 3 பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தில் அந்த குழந்தையின் அம்மா எந்தப் பெண் என சஸ்பென்ஸ் வைத்து திரைக்கதை நகர்கிறது.தனது தாய் யார் என அந்தக் குழந்தை கொண்ட ஆர்வம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. இதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு பள்ளிக்கூடம்.பாலியல் கல்வியை பள்ளிகளில் போதிக்கலாமா கூடாதா என விவாதங்கள் வலுவடைந்துள்ள நிலையில் அந்தப் பள்ளியில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது. இதனால் எட்டு வயது முதல் பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகள் எல்லாம் உடல் உறுப்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.உடல் உறவு, விந்து வெளியேறுதல், போன்ற பிரச்சினைகளை அந்தக் குழந்தைகள் வெட்கமே இன்றி விவாதிக்கின்றன. ஆசன உடல் உறவு என்பது குறித்தும் பேச்சு வருகிறது. நாயகன் வில் ஹேஸின் மகள் 10 வயது சிறுமி மாயா அந்தப் பள்ளியில் படிக்கிறாள். இயல்பாக அவளுக்கும் சிறுவயதிலேயே பாலியல் தொடர்பான விழிப்புணர்வும் வெட்கமின்றி விவாதிக்கும் மனமும் வாய்த்து விடுகிறது.தன் பள்ளியில் படித்ததை தந்தை முன்பு கூச்சமின்றி அந்த சிறுமி சத்தமாக  பொது இடத்தில் படித்துக்காட்டுகிறாள்.ஆண்குறி(penis)குறித்து அவள் படிக்கிற போது அந்தப்பக்கம் நடந்துப் போகிறவர்கள் அதிர்ச்சியுடன் அந்தக்குழந்தையை திரும்பிப் பார்க்கிறார்கள்.
" எனக்கு இப்போது காதல், கலவி பற்றியெல்லாம் தெரியும். நீ இத்தனை நாளாக நான் சிறுபிள்ளை என எண்ணிக் கூறாத உன் காதல் கதையை ஒரு கணம் கூட மறைக்காமல் கூறு.என் அம்மாவை சந்தித்த முதல் நாளிலிருந்தே கூறு ,நான் எப்படி பிறந்தேன். என் தாயை ஏன் விவாகரத்து செய்தாய்? என் தாய் யார்?" என அந்தச் சிறுமி அடுக்கடுக்காக தந்தையிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள்.
ஏப்ரல், சம்மர், மிச்சேல் ஆகிய மூன்று பெண்களை தான் காதலித்த கதையை கூறுகிறான் தந்தை.
அமெரிக்க அதிபராகப் போட்டியிடும் பில் கிளிண்டனுக்குப் பணிபுரிய வேண்டும் என்ற காதலி மிச்சேலின் ஆசையை நிறைவேற்ற நியுயார்க் செல்கிறான் வில். முதலில் எடுபிடி வேலைகள் செய்யப் பணிக்கப்படுகிறான். பில் கிளிண்டனுக்கு தேர்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கி படிப்படியாக அவன் தேர்தல் ஆலோசகராக பதவி பெறுகிறான். ஒரு புத்தகக் கடைக்கு அடிக்கடி செல்லும் போது அங்கு பணிபுரியும் ஏப்ரல் என்ற அழகான பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது.ஏப்ரல் அருமையான சிநேகிதியாக மாறுகிறாள். இருவரும் மழையை ரசிக்கிறார்கள். புகை பிடிக்கிறார்கள். ஜேன் ஆஸ்டினின் நாவல்கள் பற்றி பேசி மகிழ்கிறார்கள்.
ஏப்ரலின் தந்தை சில வரிகளை எழுதி பரிசளித்த ஜேன் ஆஸ்டினின் நாவலை பொக்கிஷம் போல் ஏப்ரல் பாதுகாக்கிறாள். ஆனால் அந்தப் புத்தகம்  தந்தையின் மறைவுக்குப் பிறகு எப்படியோ தொலைந்துவிடுகிறது. பல மாதங்களாக அதைத் தேடி வருவதாக கூறுகிறாள் ஏப்ரல்.அந்தப் பிரதியை என்றைக்காவது கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில்தான் பழைய புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாக கூறுகிறாள் ஏப்ரல்.அந்தப் புத்தகம் "நிச்சயமாக உனக்கு அந்தப் புத்தகம் கிடைக்கும் என்று நீ நம்புகிறாயா" என்று கேட்கிறான் வில். may be என்பது அவள் பதில்( படத்தின் தலைப்பு)
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. எல்லாமே மே பி தான். சந்தர்ப்பம் எப்படி என்பதைப் பொருத்துதான். எந்த கணம் என்ன நிகழும் என்ற மர்ம முடிச்சு அவிழ்ந்துவிட்டால் வாழ்க்கையின் சுவையே போய்விடும். கடந்த காலத்தை நாம் பின்னோக்கி பல ஆண்டுகளாக அசை போட முடியும் மிக அருகில் இருக்கும் அடுத்த நொடியை நம்மால் சரியாக கணித்துவிட முடியுமா? சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் அந்த கணத்தை அறிந்திருந்தால் எத்தனை உயிர்கள் பிழைத்திருக்கும்?
ஏப்ரலும் வில்லும் பேசும் ஒரு காட்சியில் வைர மோதிரம் வாங்கி வரும் வில் தனது காதலி மிச்சேலுக்கு அளித்து தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்கப்போவதாக கூறுகிறான். இப்ப நீ தான் மிச்சேல் நான் வில் , வா நாம் ஒரு ஒத்திகை பார்க்கலாம் எனத் தன் தோழியை அவன் அழைக்கிறான்.
அவள் மிச்சேலாக, அவன் வில்லாகவே தனது திருமண ஆசையை வெளிப்படுத்த நாடகம் என்பதை மறந்து நிஜமாகவே அவர்கள் அந்தப் பாத்திரங்களாகவே மாறிப்போகின்றன. அவர்கள் அறியாத அடுத்த கணம் அவர்களை நட்பிலிருந்து காதலுக்கு தள்ளி விடுகிறது.
இத்தகைய சூழலி்ல் உண்மையான மிச்சேல் நியுயார்க் வந்துவிடுகிறாள். அவளை சந்தித்து வில் பேசுகிறான். " என் அப்பா அம்மாவை சந்திக்கும் போது காதலுடன்தான் இருந்தார். ஆனால் மணமுடிக்கும் போது அந்தக் காதல் இல்லை. அவர் மனத்தில் வேறு பெண் இடம் பிடித்துவிட்டாள். எனவே திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதா இல்லையா என முடிவெடுக்க முடியாமல் அவர் தவித்தார்.கடைசியில் குடும்பத்தின் விருப்பத்திற்காக அந்தப் பெண்ணுக்குத் தர வேண்டிய  திருமண மோதிரத்தை கடைசியில் என் தாயிடம் கொடுத்து விட்டார். இப்போது நானும் உன்னை திருமணம் செய்யும் படி கேட்டு இந்த மோதிரத்தை உனக்கு அளிக்கிறேன் " என்று வில் மிச்சேலிடம் மோதிரத்தை கொடுக்கிறான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த மோதிரத்தை ஏற்க மிச்சேல் மறுத்துவிடுகிறாள். அவள் ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறாள். "நானும் வேறொரு ஆணுடன் உடல் உறவு கொண்டு விட்டேன்." என்று கூறி திருமண அழைப்பை நிராகரித்து விடுகிறாள்.
ஆனால் மிச்சேல் வந்துவிட்டதால் ஏப்ரலும் சுற்றுலா சென்று விடுகிறாள்.சுற்றுலாவிலிருந்து திரும்பி வரும் போது அவள் புதிதாக ஒரு பாய்பிரண்டுடன் வந்துவிடுகிறாள்.
அப்போதுதான் சம்மர் என்ற பெண் மீது வில்லின் கவனம் திரும்புகிறது. சம்மருக்காக திருமண மோதிரம் வாங்க அவன் ஏப்ரலை அழைக்கும் போது உன் புதிய காதலியை ஏன் எனக்கு அறிமுகம் செய்யவில்லை என அவள் கோபிக்கிறாள்.
மிச்சேல், ஏப்ரல் ஆகியோர் விலகிச்சென்றதையடுத்து சம்மரையே திருமணம் செய்துக் கொள்ள எண்ணும் வில்லின் மனத்தை உடைத்தெறிந்து, அவன் காதலையும் நிராகரித்து,சம்மர் அவன் வாழ்விலிருந்து வெளியேறுகிறாள்.
இப்போது வில்லின் மகள் தந்தையிடம் ஒரு கேள்வி கேட்கிறாள். " நீயோ மூன்று பெண்களையும் தனித்தனியாக உண்மையாக காதலித்தாய். யாருமே உன் காதலை மதிக்கவில்லை, உன்னை ஏமாற்றி விட்டார்கள்.தங்கள் சுயநலத்திற்காக உன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் இல்லையா?"
மனம் உடைந்த விரக்தி நிலையில் மீண்டும் சம்மரை சந்திக்கிறான் வில்,அப்போது சம்மரும் மிச்சேலும் பால்ய கால தோழிகள் என்றும் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் வில் அறிகிறான். இன்னொருவனுடன் உடல் உறவு கொண்டதாக மிச்சேல் கூறியது பொய் என்றும் அவளுடைய ஓரினச் சேர்க்கை தோழி சம்மர்தான் என்றும் அவன் தெரிந்துக் கொள்கிறேன். தன்னால்தான் மிச்சேலும் வில்லும் பிரிந்தனர் என்ற குற்ற உணர்வைப் போக்க மிச்சேலை சந்தித்துப் பேசும் சம்மர் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறாள்.
மிச்சேலும் வில்லும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆகா என் தாய் மிச்சேல்தானே என்று துள்ளி குதிக்கிறாள் சிறுமி மாயா.ஆனால் வில் புதிர் போடுகிறான்.நான் பெயர்களை மாற்றியல்லவா கதையை சொன்னேன் என்கிறான்.
rewind the scene என்கிறாள் மகள்.
மிச்சேலை திருமணம் செய்ய வில் கேட்கும் காட்சி.அப்போது மிச்சேல் தனது காதருகில் உள்ள தலைமுடியை ஒற்றை விரலால் கோதிவிடுகிறாள்.
இதே பழக்கம் தனக்கும் இருப்பதாக கூறும் சிறுமி எமிலி மிச்சேல் தான் தன் தாய் என்பதை மீண்டும் உறுதி செய்துக் கொள்கிறாள். விவாகரத்து பெற்று வேறு மணம் முடித்து வாழும் தன் தாயையும் சந்திக்கிறாள் சிறுமி மாயா.
பிறகு அப்பாவிடம் கூறுகிறாள்" நீ என் அம்மாவின் பெயரையும் சம்மர் என்ற இன்னொரு பெண்ணின் பெயரையும் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைத்தாய். ஆனால் ஏப்ரலின் பெயரை மட்டும் மாற்றாமல் அவளுடைய உண்மையான பெயரால் அழைத்தாய். நீ ஏப்ரலை அல்லவா உண்மையாக காதலித்தாய். பின் ஏன் முடிவெடுக்க முடியாமல் தவித்தாய்?"
மூன்று பெண்களையும் காதலித்து தனிமையில் வாழும் தனது தந்தைக்காக பரிதாபப்படுகிறாள் மகள்.
இதனிடையே அப்போது தற்செயலாக ஒரு புத்தகக்கடையில் ஏப்ரலின் தந்தை கையெழுத்திட்ட ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதியை வில் கண்டெடுக்கிறான்.அதை ஏப்ரலிடம் கொடுக்க செல்லும் போது அவள் வீட்டில் அந்த புதிய பாய்பிரண்ட் இருந்ததால் திரும்பி வந்துவிடுகிறான்.
அந்தப் புத்தகப் பிரதி உன்னைத் தேடி வந்து அடைந்தது ஏன் தெரியுமா என்று கேட்கிறாள் சிறுமி மாயா.போய் ஏப்ரலிடம் உன் உண்மையான காதலைக் கூறு என்றுவற்புறுத்துகிறாள். வில்லும் பாய்பிரண்டை விட்டு விலகி விட்ட ஏப்ரலை சந்திக்கிறான். ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதியை அவளிடம் கொடுத்து நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அவன் ஆசையை அவள் ஏற்க மறுக்கிறாள்.நாம் நண்பர்களாகவே இருப்போம் என்கிறாள் ஏப்ரல்.
ஏப்ரலிடம்தான் வில் உண்மையான காதல் கொண்டிருந்தான். ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்தாலும் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவன் ஆழ்மனத்தில் ஓயாமல் சுடர்விடும் முகம் ஒன்று இருக்கும். அந்த முகம் ஏப்ரலின் முகம்தான் என்பதை மகளின் சொற்கள் மூலமாக தரிசிக்கிறான் வில்.ஏப்ரல் மீது கொண்ட காதல் அவனுக்கே தெரியாமல் இருந்தது.தனது காதலியை அவன் சம்மரிடமும் மிச்சேலிடமும் தேடிக் கொண்டிருந்தான். அது ஏமாற்றம் அளித்தது. ஏப்ரலும் அதே போல் வில்லிடம்தான் உண்மையான காதல் கொண்டிருந்தாள். அவளும் தனது காதலை யாரிடமோ தேடி ஏமாற்றம் அடைந்தாள். வில்லுடனான காதலை நட்பு என அவள் எல்லை வகுத்துக் கொண்டாள்.சுற்றுலா சென்ற இடத்தில் வேறு ஒருவனுடன் பழகி அவனுடன் சிலகாலம் வாழ்ந்து பிரிந்துவிட்டாள். அப்போதுதான் வில்லின் அருமையை அவளும் உணர்கிறாள். ஆனால் வில்லின் காதல் மீது அவளுக்கு நிச்சயமில்லை. மே பி தான். சந்தேகிக்கிறாள். "நீதான் எப்போதும் கையில் மோதிரத்துடன் ஒரு காதலியைத் தேடிக் கொண்டே இருக்கிறாயே" என்று கிண்டலடிக்கிறாள்.ஆனால் தொலைந்து போன தனது தந்தையின் அன்புப் பரிசான ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதி மீண்டும் வில் மூலமே கிடைக்கும் போதுதான் அவளுக்கும் ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது.வில்லின் மகள் மாயாவும் தனது தந்தையை மணமுடிக்கும் படி ஏப்ரலிடம் கெஞ்சுகிறாள். மாயாவின் களங்கமற்ற அன்பில் கரைந்துப் போகும் ஏப்ரல் அவள் சொற்களில் உள்ள நிச்சயமான அன்பை புரிந்துக் கொள்கிறாள்.
தந்தையை காதலியுடன் இணைத்து விட்டு மகள் வெளியேற காதலர்கள் இருவரும் முத்தமிடுவதுடன் படம் முடிகிறது.
மிகவும் நுட்பமான மனச்சிக்கல்களை நிச்சயமற்ற உறவுநிலைகளை நிச்சயப்படுத்த முடியாத மனங்களை மிகுந்த நேர்த்தியுடன் இப்படம் கையாள்கிறது. தமிழின் இந்த படத்தின் சாயலில் கேளடி கண்மணி என்றொரு படத்தை இயக்குனர் வஸந்த் இயக்கியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரை வசனங்களும் திரைக்கதையும் கூடுதல் பலம், வில்லாக நடித்துள்ள ரயன் ரெனால்டின் நடிப்பும் அபாரம். மாயாவாக வரும் சிறுமி பிரெஸ்லின் மறக்க முடியாத பாத்திரமாக மாறி விடுகிறாள்.
மூன்று காதல் கதைகளை இணைத்து பிணைத்து பாத்திரங்களில் ஏப்ரலை தனித்து இடம் பெறச் செய்கிறார் இயக்குனர். ஏப்ரலாக நடித்த இஸ்லா பிஷரும் சம்மராக நடித்த ராக்கெல் வேசும், மிச்சேலாக நடித்த எலிசபெத்தும் பேரழகிகள். மூவரையும் பார்த்து காதல் வசப்படாமல் இருக்க முடியாது.
உடல்ரீதியான ஈர்ப்புகளை மீறி உண்மையான காதலையும் கவித்துவம் மிக்க அன்பையும் அதற்கு இவ்வுலகில் நீங்காது இருக்கும் தனி மதிப்பையும் இப்படம் விளக்குகிறது. காணாமல் போன ஒரு புத்தகம் திரும்ப கிடைப்பதன் மூலம் பிரிந்துப் போன காதலர்களும் ஒன்று சேர்வதன் மூலம் இதனை இயக்குனர்  ஆடம் புரூக்ஸ் விளக்குகிறார். கிளிண்ட் மான்சலின் இசை படத்தின் மூடுக்கேற்ப மெதுவாக நம்மை வசீகரிக்கிறது. பீட்டர் டெஸ்சரின் தேர்ச்சி மிக்க எடிட்டிங்கும் பிளோரியனின் துல்லியமான கேமரா ஒளிப்பதிவும் இப்படத்தின் தரத்தை பலமடங்கு உயர்த்துகின்றன.
ஆனால் இப்படத்தின் இயக்குனரும் வசனகர்த்தாவும் திரைக்கதை எழுதியவருமான ஆடம் புரூக்ஸ்தான் எல்லோரையும் விட கவனத்தில் பதிந்துவிடுகிறார்.
மிகுந்த மனநிறைவைத் தந்த படம் இது. வாழ்க்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிச்சயமின்மை தொக்கி நிற்கும் போது நான் மே பி என அதை சந்தேகத்தால் ஒத்திவைப்பதை இனியாவது நிச்சயமாக நிராகரிக்க வேண்டும்.

நன்றி- குமுதம் தீராநதி ஜூலை 2015

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...