Friday 31 July 2015

அரிதினும் அரிதுகேள் 12- உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

சென்னையில் உள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் எனது மேல்நிலைக் கல்வி முடிவு பெற்றது. கடைசியாக படித்தது பதினோராம் வகுப்பு. அங்கு எனக்கு சில நண்பர்கள் இருந்தனர். சார்லஸ், ஜோசப், ரங்கராஜன், மேத்யூ போன்ற சிலரின் பெயர்களும் முகங்களும் நினைவில் உள்ளன.
ரங்கராஜன் வித்தியாசமானவன், அவன் கையெழுத்து கோழிக்கிறுக்கல் போல இருக்கும், ஆள் கருப்புதான். சுருட்டை முடி. இங்க் பேனாவை தனது மெல்லிய விரல்களால் அவன் அழகாகப் பிடித்து எழுதுவான். எனக்கு இங்க் பேனாவைப் பிடிக்கவே வராது. நான் வேறொருமாதிரியாக பிடித்து எழுதுவேன். ரங்கராஜனுக்கு எம்ஜிஆரைப் பிடிக்கும் எனக்கும் சிறுவயதில் எம்ஜிஆரும் ரவிச்சந்திரனும்தான் பிடித்த ஹீரோக்கள். சிவாஜியை எப்போதாவது பிடிக்கும். சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள மகாலட்சுமி திரையரங்க உரிமையாளர் மகன் பாலாஜியும் எங்களுடன் படித்து வந்தார். மாலை நேரங்களில் அவர் தயவில் இலவச சினிமாக்கள் பார்க்க முடியும். பட்டணத்தில் பூதம், ரகசிய போலீஸ் 115 போன்ற படங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன. எதிரே சரஸ்வதி தியேட்டர் இருந்தது. அதிலும் குறத்தி மகன், சரஸ்வதி சபதம் போன்ற படங்களைப் பார்த்த நினைவு இருக்கிறது. உலகம் சுற்றும் வாலிபனும் நேற்று இன்று நாளையும் மகாலட்சுமியில் பார்த்தேன்.
நான் படிப்பை முடித்த ஆண்டு 1978. ஆனால் 1976 ஆம் ஆண்டில் அன்னக்கிளி என்ற படம் வெளியாகியிருந்தது. ரங்கராஜன் சொல்லி நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். முதல்நாள் போன போது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த கெயிட்டி திரையரங்கம் காலியாக இருந்தது. படமும் கருப்பு வெள்ளி.சிவகுமார் சுஜாதா தேங்காய் சீனிவாசன் நடித்தது. இசை இளையராஜா என்ற புதியவர்

படத்தின் முதல் காட்சியில் சிவகுமார் கிராமத்துக்கு வருகிறார். எஸ்.வி.சுப்பையாவை சந்திக்கிறார். ஆசிரியர் வேலைக்கு வந்திருப்பதாக கூறுவார். கடிதம் எழுதியதாகவும் குறிப்பிடுவார். ஆனால் கடிதம் வரலேயே என சுப்பையா சொல்லும் போதே தபால்காரர் கடிதத்தை கொடுப்பார். அடடே நீங்க வந்த பிறகு உங்க கடிதம் வருதே என்பார் சுப்பையா. படம் கலகலப்பை ஏற்படுத்தி நிமிர வைத்தது. அடுத்து சுஜாதா அறிமுகம் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே....ஆறுமாசம் ஒன்பதேசம் ஆவரம்பூ மேனி வாடுதே என பாடுவார். வழக்கமான பி.சுசிலாவின் குரலில் இருந்து தனித்து ஒலித்தது எஸ்.ஜானகியின் அழகான குரலும் அவர் செய்த ஹம்மிங்கும். இசை மயக்கியது. அடுத்தடுத்து அந்தப்படத்தில் மச்சானைப் பார்த்தீங்களா, சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேண்டும், சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை என பாடல்கள் மெய் மறக்க வைத்தன. பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம்
ஆனால் கடைசியில் இடம் பெறும் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே என்ற இரண்டாவது சோகப்பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார். அந்தப் பாடல் என் உள்ளே புகுந்து என்னைக் கிழித்து காயம் ஏற்படுத்தியது. இனம் புரியாத அந்த பதின்பருவத்தில் ஒரு துன்பமும் இல்லாத பொழுதில் ஏதேதோ பல ஜென்மங்களாக சுமந்து வந்த காதலின் இழப்பையும் துன்பத்தையும் கண்ணீரையும் அந்தப்பாடல் எனக்குள் பெருகச் செய்தது.

அன்னக்கிளியே உன்னைத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றிலாடுதே

நதியோரம் பிறந்தாள் கொடிபோல வளர்ந்தாள்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தாள்
புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி புளியம் பூ சேலைக்காரி
நெல்லறுக்கப் போகையில் யார் கண்ணில் உந்தன் காதலடி

அன்னக்கிளியே உன்னைத் தேடுதே

கனவோடு சில நாள்
நினைவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
எனக்காக காத்திருந்தாள் என்னை நானே மறந்தேனே

இந்தப் பாடலைப் போலவே பி.சுசிலாவின் குரலில் ஒலித்த சொந்தமில்லை பந்தமில்லை பாடலும் மனத்தை பாதித்தது.

பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே
பாலும் இந்த குருவி மட்டும் பாவங்களை செய்ததென்று பரிசாக
கண்ணீரைத் தந்தானே நாள் முழுதும் கண்ணீரைத் தந்தானே
அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம்


பள்ளியின் இறுதிநாள் நிகழ்ச்சியில் ஆளுக்கொரு பாட்டு பாடினோம்.அப்போது நான் தேர்வு செய்த பாடல் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே என்ற டி.எம்.எஸ் பாட்டுதான். இன்று வரை அந்தப் பாடலின் சோகம் என்னை ஆட்கொண்டு விடுகிறது. இளையராஜாவின் இசை அன்று கேட்டது போல இன்றும் புதிதாக ஒலிக்கிறது.




No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...