Thursday 9 July 2015

பயணம் 4 -திருப்பதி, திருமலை


திருப்பதிக்கும் திருமலைக்கும் பலமுறை சென்றிருக்கிறேன். நாத்திகனாக, ஆத்திகனாக, இரண்டும் சமன் செய்த மனத்துடையவனாக என்று.
திருப்பதி யாத்திரை செய்யும் பக்தர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கில் வருவதும், அதை நம்பி கீழ்த்திருப்பதியில் பலலட்சம் குடும்பங்கள் வாழ்வதும் ஆழமாக யோசிக்க வைத்திருக்கிறது. மக்கள் ஆட்டு மந்தைகளா.....மடையர்களா.....கண்மூடித்தனமாக பக்தியின் வயப்பட்டவர்களா எனக் கேள்விகள் என்னைத்துளைத்ததுண்டு.தெளிவான பதில்கள் இல்லை. பதில்கள் மேலும் கேள்விகளையே எழுப்புகின்றன. 
கடவுளை நம்பாத சிறுவயதில் ஒரு முறை வீட்டுடன் முறுக்கிக் கொண்டு இரண்டு நாள் வீட்டை விட்டு செல்ல வேண்டிய மனநிலையுடன் திருப்பதிக்குப் புறப்பட்டு விட்டேன்.இரண்டு நாள் என் வீட்டார் என்னைத் தேட வேண்டும் என்பதுதான் நோக்கம். அப்போது எனக்கு  பதினெட்டு வயது இருக்கும்.இளமையின் அலைபாயும் விழிகள் திருப்பதிக்கு வந்த அழகழகான ஆந்திர பெண்களையும் வட இந்தியப் பெண்களையும் வட்டமிட்டது. திருமலையில் உள்ள குளத்தில் பெண்கள் அரை நிர்வாணமாக அப்போது குளித்துக் கொண்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்களும் பெண் காவலர்களும் இல்லாத காலம் அது. பெண்களும் பொது இடம் என்பதை மறந்து விட்டனர். பல மணி நேரம் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் நானும் குளித்து தரிசனம் செய்தேன். பெருமாளை முதன் முறை தரிசிக்கும் போது உடலில் ஒரு சிலிர்பபு ஏற்பட்டது. அந்த சிலிர்ப்பை இன்றும் பெருமாளை தரிசிக்கும்போது உணர்கிறேன். அன்று திருப்பதியிலிருந்து திரும்பும் போது திருத்தணியில் இ்றங்கி விட்டேன்.திருத்தணியில் கோவில் திருவிழா நடந்த நேரம்,நள்ளிரவு வரை தெருக்கூத்து, நாடகம் என கலகலத்தது, அங்கேயே ஒரு மரத்தை ஒட்டிய மேட்டில் தூங்கிவிட்டேன். காலையில் கண்விழித்தபோது என் கைக்கெடிகாரம் காணவில்லை. புதிதாக சம்பாதிக்க ஆரம்பித்து வாங்கியது. மனது கஷ்டமாக இருந்தது. பலரிடம் கேட்டுப் பார்த்தேன். பலரும் தங்கள் நகையைக் காணவில்லை, பர்சை காணவில்லை எனப் புலம்பினர். பின்னர் திருத்தணியில் சாமி கும்பிட போனப்போது குளக்கரையில் ஒருவர் வழி கேட்டார். சொன்னேன். அப்புறம் மலைக்குன்றின் படிமீது நடந்த போது நாலைந்து பேர் என்னை சுற்றி வளைத்தனர். நான்தான் கோவில் திருவிழாவில் திருடியவன் என்றும் வழிகேட்டவன் என் கூட்டாளி என்றும் அவனிடம் திருடிய பொருட்களை நான் தந்து அனுப்பிவிட்டேன் என்றும் பழி சுமத்தப்பட்டது. ஊரே கூடி நின்று உதைத்தது. தரும அடிதான். என் தரப்பு நியாயத்தை யாரும் கேட்பதாக இல்லை. திருப்பதி லட்டு காட்டிய போதும் யாரும் நம்பவில்லை.மனது ஓ வென கதறி அழுதது. அடிவாங்கி முகம் இறுகிக்கிடந்தது. போலீசில் ஒப்படைப்பதாக சொன்னார்கள். அதாவது பரவாயில்லை. அடித்தே கொன்றுவிடக்கூடிய வெறியர்கள் இவர்கள். இவர்களிடம் சிக்கியவனின் நியாயத்தை கேட்கும் கருணை யாரிடமும் இல்லை. வெறி பிடித்த ஒரு வேங்கைக்கூட்டத்திடம் சிக்கிய மானின் நிலைதான் என் நிலை.அப்போதுதான் பெருமாளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டேன். பெருமாளே உன் கோவில் குளத்தில் குளித்த பெண்களை வக்கிரமாக பார்த்ததற்கு எனக்கு சரியான தண்டனை தந்து விட்டாய்.இனி நான் உன் கோவிலுக்கு புனிதமான மனசுடன்தான் வருவேன். என்னைக்காப்பாற்று என்று உளம் உருகக் கேட்டுக் கொண்டேன். திருத்தணி முருகனையும் வேண்டிக் கொண்டேன். 
அப்போது வெங்கடேசன் என்பவர் என்னை அழைத்துச் சென்று தன் வீட்டில் தங்க வைத்தார். சாப்பாடும் போட்டார். பிறகு பொறுமையாக என்னைப்பற்றி விசாரித்தார்.நான் திருடவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. என்னை பஸ்சுக்கு பணம் தந்து சென்னைக்கு பேருந்து ஏற்றி விட்டார்.

இது கடவுளின் கருணைதான் என வியந்தேன். மன்னிப்புக் கேட்ட அடுத்த பத்து இருபது நிமிடத்தில் இப்படியொரு விடுதலை கிடைத்தது. 
பின்னர் பலமுறை திருத்தணிக்கும் திருப்பதிக்கும் திருமலைக்கும் சென்று விட்டேன். பல நல்ல அனுபவங்களையும் ஆன்மீக பேறும் பெற்றேன். திருமலை வேங்கடாசலபதியைப் பற்றி நிறையப் படித்தேன். அதில் பக்தியும் வளர்ந்தது. அதிகமான நம்பிக்கை பிறந்து ஆண்டுதோறும் என்பிறந்தநாளில் திருப்பதி-திருமலை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பே எனது நடுத்தர வயதில் இளமைக்காலங்களின் நினைவுகளுடன் மீண்டும் என் மனைவி என் விக்கியுடன் திருமலை சென்று வந்தேன்.
திருப்பதி-திருமலை பயணம், அனுபவம், வாசிப்பு தொடர்பாக எழுதுவதற்கு ஆயிரமாயிரம் பக்கங்கள் உள்ளன. அதை ஒரு நாவலாக வடிக்க முயன்று வருகிறேன். அன்னமாச்சார்யா முதல் அலமேலுமங்கா புரம் வரை பல கதாபாத்திரங்களும் கதைகளும் பிணைந்த அந்த நாவலை ஜெயமோகன் போல் யாராவது முந்திக்கொண்டு எழுதி விட முடியும். ஆனால் அசோகமித்திரன் ஒருமுறை கூறியது போல என் கதையை நான் மட்டுமே எழுத முடியும்.
திருவேங்கடம் என்ற தலைப்பில் நான் எழுதும் நாவலை முடிக்க அந்த ஏழுமலையான் அருள் பாலிக்கட்டும்
திமலா என்ற சுஜாதாவின் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இன்னொரு நூற்றாண்டில் கணினியுடன் தானும் பணம் சம்பாதிக்கிற கணினியாகிப்போன ஒரு கணவனுக்கு கடந்த நூற்றாண்டின் சிந்தனை கொண்ட மனைவி திமலாவுக்கு அழைத்துச் செல்ல அடம்பிடிப்பதும், வான் டாக்சி ( ஹெலிகாப்டர்தான் டாக்சியாகிவிட்டது ) திமலா போவதும் கன்வேயர் பெல்ட்டில் நகரும் கியூவில் நின்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதும் ஆழ்வார் பாடல்களைப் பாடுவதும்தான் கதை.திமலா என்பது திருமலையின் கணினி சுருக்கப்பெயராம்.





No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...