Saturday 18 July 2015

எவருக்கோ இறைவன் தந்தான்.

எம்ஜிஆர் நடித்த சங்கே முழங்கு படத்தில் ஒரு பாடல். நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிச் செல்லும் அந்த நாலு பேருக்கு நன்றி என தலைவர் ரயிலில் தன் தாயை நினைத்துப் பாடுவார். பாடியவர் டி.எம்.எஸ். இசை எம்.எஸ்.வி, பாடலாசிரியர் கண்ணதாசன்.

நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி

உறவு என்றும் பாசம் என்றும்
இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை யிருந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி


அந்தப் பாடலுக்கு முன் ஒரு தொகையறா வரும்

உள்ளத்தில் இருப்பதையெல்லாம் சொல்ல ஓர் வார்த்தை இல்லை
நான் ஊமையாய்ப் பிறக்கவில்லை, உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி தாங்கி சுமந்து நான் செல்ல எனக்கொரு பந்தமில்லை. 
எவருக்கோ இறைவன் கொடுத்தான்......

இதில் இந்த கடைசி வரி எவருக்கோ இறைவன் கொடுத்தான் என்ற வரியை எனது வாழ்க்கையில் பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்கிறேன்.
அழகான இளம் பெண் ஒருவருக்கு நகை வாங்கித் தந்த கணவரை பார்க்கும் போது இந்த வரி தோன்றும். செல்வமும் பாலியல் சுகமும் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி அவர்
ஐஸ்வர்யா ராய் போன்ற அழகிகளின் கணவர்களை நினைத்து பரிதாபமும் பட்டிருக்கிறேன். ஆனால் அந்த அழகு தேவதைகளை அனுபவிக்கக் கூடிய ஆண் மகன்களை எண்ணிப் பொறாமையும் பட்டிருக்கிறேன்.
அழகான குழந்தைகளை கொஞ்சும் பெற்றோரைப் பார்க்கையிலும் அந்த ஏக்கம் ஏற்படும். எவருக்கோ இறைவன் கொடுத்தான் .

பெற்றால்தான் பிள்ளையா படத்திலும் மெல்லிசை மன்னர்கள் இசையில் வாலி எழுதிய பாடல் செல்லக்கிளியே மெல்லப் பேசு....இதுபோன்றதொரு பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் எம்ஜிஆர் அடிபட்டுக் கிடக்க சரோஜா தேவி உருகி அழுவார் அப்போது அதே செல்லக்கிளியே பாடலை சோகம் ததும்ப டி.எம்.எஸ் வேறொரு வரியிலிருந்து பாடுவார்

யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய்......

இந்தப்பாடலை கலைஞர் தொலைக்காட்சியின் செய்திகள் சேனலில் நான் நிகழ்த்திய புதையல் நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்திய போது பலரை அது உலுக்கியது.

வாழ்க்கையில் எல்லாம் அடைந்தவர்கள் எதையும் அடையாதவர்களை ஒருகணம் எண்ணிப் பார்க்க வைத்த வரிகள் இவை.

எதையும் அடையாதவன் நான். வாழவே தகுதியில்லாதவன் நான். எவருக்கோ இறைவன் கொடுத்த புகழ், பணம், இன்பம், பிள்ளைப்பேறு போன்றவற்றை எண்ணி எண்ணி நாளும் பெருமூச்சுகளிலும் ரகசிய கண்ணீரிலும் கழியும் காலம் எனக்கு நிறைய உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன் எதிர்வீட்டுத் தொட்டிலில் இருந்து என் வாழ்வில் விக்கி வந்துவிட்டான். அவனால் என் துன்பம்  இன்பமாக மாறுகிறது.

என் விக்கியும் நான் படித்த ஓஷோவும்தான் என்னை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய் .........
ஏன் பிறந்தாய் மகனே என விக்கியை நோக்கி நான் பாடவே மாட்டேன். அவன் என் உயிரைத் தக்கவைக்கவே பிறந்தான்.

நான் இறந்தாலும் எனக்கு தோள் கொடுத்து தூக்கிச் செல்ல அவன் மகனாக இருப்பான். அதை நினைத்து இப்போதும் ஆனந்தமாக அழுகிறேன்
தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிச் செல்லும் அந்த நான்கு பேரில் மீதியுள்ள 3 பேரை நான் இனிமேல்தான் தேட வேண்டும்.











No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...