Saturday 18 July 2015

அஞ்சலி- எம்.எஸ்.விஸ்வநாதன்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தமது ஆத்ம நண்பர் கண்ணதாசனுடன் சங்கமமாகி விட்டார். இந்த இருவரும் தமிழ்த்திரைக்கு அளித்த கொடை கொஞ்ச நஞ்சமல்ல இன்னும் ஓரிரு நூற்றாண்டுக்கு இவர்களின் புகழ் அழியாது என்றே தோன்றுகிறது.
எம்.எஸ்.வியை நேரில் பார்த்தது கிடையாது. பார்க்க பல முறை ஆசைப்பட்டு அவரது சாந்தோம் இல்லத்திற்கு சென்று சாலையின் எதிர்ப்பக்கம் நீண்ட நேரம் அவர் வீட்டையே பார்த்தபடி மணிக்கணக்கில் நின்று திரும்பி வந்திருக்கிறேன். கல்யாணமாகிப்போன ஒரு காதலியைக் காண வரும் முன்னாள் காதலன் போல.
அந்த மாபெரும் கலைஞர் முன் நிற்கக் கூட எனக்குத் திராணி இல்லை. இதே போன்ற ஒரு பிறழ்வு சுந்தரராமசாமியையும் ஜெயகாந்தனையும் சொல்புதிது வெளியீட்டு விழா மேடையில் பார்த்த போது எனக்கு நிகழ்ந்தது. கிட்டதட்ட எனது புற உலகம் முழுவதும் காலகாலங்கள்  யாவும் அந்த ஒரு கணப்பொழுதினில் உறைந்துப் போனது போல் கண்களில் எப்போது கண்ணீர் உதிருமோ என நின்றிருந்தேன். இதே போன்ற அனுபவம்தான் எம்.எஸ்.வி அவர்களைக் காணச் செல்லும் போது எனக்கு பலமுறை நிகழ்ந்தது.உள்ளே சீழ்ப்பிடித்து கிடந்த ரணங்கள் கதறிக்கொண்டிருந்தன. வலி வலி வலி என உள்ளே பிடித்து ஆட்டிய ஒரு பெரும் பேயை மெல்லிய தென்றல் போல ஏதோ ஒரு இசை தாலாட்டிக் கொண்டிருந்தது.
நண்பர் ஆர்.கே.ரவி ( சிற்றிதழாளர் ) ஒரு முறை வீட்டுக்கு வந்தபோது எம்.எஸ்.வியைப் பார்க்கலாமா எனக் கேட்டேன். அவரை வைத்தாவது என் கால்கள் மெல்லிசை மன்னரின் வீட்டை நோக்கி நடக்காதா என்ற ஆசைதான்.
எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதை எம்.எஸ்.வியால் தெளிவுபடுத்த முடியும் என்ற காரணமும் இருந்தது.
குடியிருந்த கோவில் படத்தில் குங்குமப் பொட்டின் மங்கலம் என்ற பாடலை குமாரி ரோஷனாரா பேகம் எழுதியதாகவும் தமிழ்த்திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். அந்த ரோஷனரா பேகம் பெயரில் இஸ்லாமியப் பெண் போல தெரிகிறது. ஆனால் குங்குமப் பொட்டின் மங்கலம் என பல்லவி எழுதியது முரண் அல்லவா.
என்னுடைய சந்தேகம் அந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார் என்று. ஏனென்றால் கண்ணதாசன் பாட்டை விஸ்வநாதன் உரிமைக்குரலில் வாலியின் பெயரைப் பயன்படுத்தி எம்ஜிஆரை ஏமாற்றியிருப்பார். விழியே கதை எழுது என்று அந்தப் பாடல் பின்னர் எம்ஜிஆரின் கவனத்தில் இது கண்ணதாசன் பாட்டு எனத் தெரிய வர பெருந்தன்மையுடன் ஒரு கலைஞனை இருட்டடிப்பு செய்யாதீர்கள் என கண்ணதாசன் பெயரைப் போட அனுமதித்தார்.
ஆனால் குடியிருந்த கோவில் பல ஆண்டுகள்  முன்னாடி வந்த படம். இந்தப் படத்தில் வாலி நீயேதான் என் மணவாட்டி, என்னைத் தெரியுமா, உன்விழியும் என் வாளும், துள்ளுவதோ இளமை போன்ற பாடல்களையும் புலமைப்பித்தன் நான் யார் நான்யார் என்ற பாடலையும் ஆலங்குடி சோமு ஆடலுடன் பாடலைக் கேட்டு, பாடலையும் எழுதினர். இதில் ரோஷனரா பேகம் பெயரில் வெளியான பாடல்தான் குங்குமப் பொட்டின் மங்கலம்.
சரி யார் இந்த ரோஷனரா பேகம். முதன் முதலாக எம்ஜிஆர்-ஜெயலலிதா படத்துக்கு எம்.எஸ்.வி இசையில் பாட்டு எழுதுவது என்பது லாட்டரியில் கோடி ரூபாய் கிடைத்த அதிர்ஷ்ட்டம் போன்றது. அதுவும் அந்தப்பாடல் சூப்பர் ஹிட்டானது. சுமாரான சில பாடல்கள் தந்த தாமரையே இத்தனை பாட்டு எழுதிக் குவிக்கும் போது முதல் பெண் பாடலாசிரியர் என்ற பெருமை வேறு பெற்ற ரோஷனரா பேகம் அதன் பின்னர் பாட்டு எழுதாமல் போனது ஏன்.
அவரைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை.
இதைப் பற்றி விஸ்வநாதனிடம் கேட்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. ஒருவேளை நான் சந்தேகப்படும் படி கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதியிருந்தால் இந்நேரம் சொர்க்கத்தில் கவிஞரும் மெல்லிசை மன்னரும் இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து சிரித்துக் கொண்டிருப்பார்களோ......

எம்.எஸ்.வியின் பாடல்கள் என் வீட்டில் தினமும் ஒலிக்கின்றன. என் வாழ்க்கையுடன் மட்டுமின்றி தமிழறிந்த ஏனைய மக்களின் வாழ்வுடனும் அவருடையே ஏதோ ஒரு பாடல் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக நான் அறிவேன்.

விஸ்வநாதன் பாடல்களில் சில நூறு பாடல்கள் மீண்டும் மீண்டும் டிவிக்களில் ஒலிக்கின்றன. இதில் கே.வி.மகாதேவன், வி.குமார் பாடல்களும் விஸ்வநாதன் பாடல்கள் என தவறாக பேசப்படுகின்றன. என்னுடைய வேண்டுகோள் அதற்கு அப்பாலும் மறைந்துக்கிடக்கும் பொக்கிஷம் போல விஸ்வநாதனின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. கிட்டதட்ட 40 ஆண்டுகளாக நான் திரையிசையில் ஊறியவன்.என் அனுபவத்தில் விஸ்வநாதனின் பல அரிய பாடல்கள் டிவிக்களில் வரவே இல்லை. தனியாக ஒரு கலெக்சன் வைத்து விஸ்வநாதனின் அரிய பாடல்களை சேகரித்துவிட்டேன். அதை இப்பகுதியில் அரிதினும் அரிது கேள் என்ற தொடரிலும் இதர கட்டுரைகளிலும் வெளிப்படுத்துகிறேன்.
மறைந்த எம்.எஸ்.வி அவர்களுக்கு ஒரு எளிய ரசிகனின் கண்ணீர் அஞ்சலி








No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...