Monday 23 April 2012

சனிப் பெயர்ச்சி

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல முக்கிய கோவில்களைப் பார்த்திருக்கிறேன். தெய்வ நம்பிக்கையும் 40 வயதுக்குப் பிறகு இயல்பாக வந்து விட்டது. ஆனால் கடவுளிடம் எனக்காக எதையும் கேட்டதில்லை. எப்போதாவது கொஞ்சம் பணம் கேட்டிருக்கலாம். பணத்தால் பட்ட அவமானங்கள்தான் அதற்கு காரணம். ஜெயமோகன் அழைத்தார் என்று உதகைக்கு ஒருமுறை பயணம் போனேன். அது ஆன்மீகப் பயணம். அப்போது நாராயண குருவின் வழி வந்த குரு நித்ய சைதன்ய யதி உயிருடன் இருந்தார். அவரது ஆஸ்ரமத்திற்கு கவிஞர் தேவதேவன், சூத்ரதாரி, ஆர்.கே., மோகனரங்கன் உள்ளிட்ட நண்பர்கள் சென்றோம்.குரு என்ற வார்த்தையே எனக்கு விலகலை தந்துவிட்டது. அப்போது கடவுள் நம்பிக்கைக்கு முழுதாக ஆட்பட்டுவிடவில்லை இந்த மனம். அகந்தையாலும் அறிவாலும் அது ததும்பிக் கொண்டிருந்தது. குரு என ஒருவரை ஏற்பதும் அவர் காலில் விழுந்து வணங்குவதும் அதுவரை நான் என் வாழ்நாளில் செய்ததே இல்லை. நான் வணங்கியதெல்லாம் பெற்றோரையும் வயதில் பெரியவர்களான சில உறவினர்களையும்தான். அதுவும் அரைமனத்துடன். ஜெயமோகனே காலில் விழுந்து குருவை வணங்கியதைப் பார்த்ததும் அதுவரை யார் என்றே தெரியாத நித்ய சைதன்ய யதியின் காலில் நானும் விழுந்து வணங்கியபோது என் அகந்தை நொறுங்கிப் போயிருந்தது. கடவுள் நம்பிக்கை வளர்ந்து ஒரு நாவல் எழுதும் அளவுக்கு அது பெருகியிருக்கும் நிலையில் சனிப்பெயர்ச்சி பற்றியும் ராசிபலன்கள் பற்றியும் ஈடுபாடு வந்திருப்பது அபத்தமாக தோன்றியது.இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. சனிபகவான் ஏழரை வருடம் ஆட்டிப் படைப்பார் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் முப்பத்திஏழரை வருடம் ஆட்டிப் படைத்தார். ஆம் நாற்பது வயதுவரை நிம்மதியே இல்லை. அதன்பிறகு ஆறேழு ஆண்டுகள் சுமுகம். ஆனால் மீண்டும் சனிபகவான் வக்ரமாகிவிட்டார். வாழ்க்கையைப் பற்றி பலவிஷயங்கள் புரியவே இல்லை. எதை நம்புவது எதை நம்பக் கூடாது என்று இந்த நடுத்தர வயதில் குழப்பம் வருவது அதுவும் இத்தனை புத்தகங்களைப் படித்து தேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இத்தகைய குழப்பம் எங்கு கொண்டுபோய் முடிக்கும் என்றே தெரியவில்லை. சரி எழுதி வைப்போம் என அதையே நாவலாக எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுத எழுத தெளிவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஒருமுறை கோயமுத்தூர் போயிருந்தேன். கோவை என் மனதுக்குள் அலையெழுப்பும் நகரம். இலக்கியம், காதல், நட்பு சார்ந்த எத்தனையோ நினைவுகள் அந்த நகருடன் கலந்துள்ளன. கோவையில் என் தோழியுடன் ஒரு கோவிலுக்குப் போயிருக்கிறேன். அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால் அப்போது எனக்கு நம்பிக்கை இல்லை. மழையில் நனைந்தபடி நாங்கள் ஒரு கோவிலில் ஒதுங்கினோம்.அந்தக் கோவில் வாசலில் நான் நின்றுவிட்டேன். உள்ளே போகவில்லை. ஆனால்அவள் வற்புறுத்தி அழைத்துப் போய் விபூதியும் வைத்துவி்ட்டாள். அதன் பிறகு அவளை நான் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்துப் போய் அவளும் என் வாழ்க்கையில் இருந்து விலகிப் போய்விட்டாள். திடீரென இம்முறை அந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஏன் என்றே புரியவில்லை. அன்று சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்குப் போகணும் என்ற போதும் அன்று காலை நான் பாட்டுக்கு மருதமலை முருகனைப் பார்க்க கிளம்பிவிட்டேன். மருதமலை மாமணியே முருகையா என்ற மதுரை சோமுவின் குரல் என் மனமெங்கும் நிறைந்திருந்தது. மருதமலை போய் திரும்பி வந்து, காந்திபுரம் புறநகர்ப் பேருந்து நிற்கும் பகுதியில் நின்றிருந்த போதுதான் அருகில் அந்தக் கோவில் இருப்பது நினைவுக்கு வந்தது. பழைய நினைவுகளை அசைபோட்டபடி நான் அந்தக் கோவிலை நாடி சென்றேன். என்ன ஆச்சரியம் அது பெருமாள் கோவில்தான். அதுவரை அது எந்தக் கோவில் என்ற நினைவே இல்லை. ஆனால் தோழி விபூதி கொடுத்தாளே அது எப்படி என்ற கேள்வியுடன் கோவிலுக்கு உள்ளே நுழைந்த போதுதான் ஒருபுறம் விநாயகர் சன்னதியும் மறுபுறம் பெருமாள் சன்னதியும் அமைந்த சமய நல்லிணக்க கோவில் என்று புரிந்தது. கோவிலுக்குப் போய் பிள்ளையாரையும் பெருமாளையும் வணங்கி திரும்பி வெளியே வந்தால் ஒரு கிளி ஜோசியக்காரன் கண்ணில் பட்டான். கிளிக்கு ஒரு நெல்மணியாவது கிடைக்கட்டும் ஜோசியம் பாருங்கள் என்ற நண்பன் எஸ்.அறிவுமணியின் கவிதை ஞாபகம் வந்து அவனிடம் போனேன். அப்புறம் பார்த்தால் அவன் கைரேகை கூட பார்ப்பானாம். அவன் வரைந்த ரேகை படங்கள் கவனத்தைக் கவர்ந்தன. அதுவரை கைரேகையை பார்த்தது இல்லை. சரி பார்ப்போம் என கையை நீட்டினேன். அதற்கு முன்பே அவனிடம் எவ்வளவு காசு என கேட்டுவிட்டேன். 20 ரூபாய் என்றான். சரிதான் என்று கையை நீட்டியதும், நம்புங்கள் அதுவரை கண்ணில் படாத ஒரு விநாயகர் சிலை அந்த கிளிக் கூண்டின் மீது இருந்தது.அதை எடுத்து உள்ளங்கையில் வைத்து மந்திரம் சொன்னான். பிறகு கிளியை சீட்டெடுக்க சொல்லி ரேகையும் பார்த்தான். போன வருடம் கடும் கஷ்டம் சோதனை எல்லாம் சந்திச்சிருப்பீங்க, உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றான். அடப்பாவி என மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். சனிபகவான், குரு, செவ்வாய் எல்லாமே உங்களுக்கு எதிரான கிரகத்தில்இருந்து தொல்லை கொடுத்திருப்பாங்க என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டே போனான். கைரேகையில் மூன்று கோடுகளைக் காட்டி இது புத்தி ரேகை, இது தனரேகை. இது ஆயுள் ரேகை என்று சுட்டிக்காட்டினான். புத்திரேகை நல்லா இருக்கு நீங்க பெரிய கலைத்துறை சாதனையை செய்வீங்க என்றான். சந்தோஷமாக இருந்தது. ஆயுள் ரேகையும் கெட்டி. இனி உங்கள் உயிருக்கு ஒரு ஆபத்தும் விபத்தும் பயமும் கிடையாது என்றான். அப்பாடி நிம்மதி. அடுத்து தனரேகை அதில்தான் சிக்கல். இரண்டு முக்கோணங்கள் தனரேகை அருகில் காட்டி இதுதான் தடங்கல் என்றான். இப்படி பேசிப்பேசியே மேலும் 150 ரூபாய் கவர்ந்துவிட்டான் அந்த ஜோசியக்காரன். முக்கோணத்தை அழிக்க பழனிமுருகன் கோவிலில் தரப்படும் நாகபூஷணம் என்ற பிரசாதத்தை உள்ளங்கையில் வாங்க வேண்டும் என்றான். நாகபூஷணம் உள்ளங்கையில் முக்கோணம் உள்ள இடத்தில் படும்போது அந்த தோஷம் நீங்கும் என்றும் கூறி அவனே நாகபூஷணத்தை பொட்டலம் கட்டி தந்துவிட்டான். கையிலும் கொடுத்தான். அவன் சொன்னபடி அதில் தண்ணீரைக் கலந்து என் முகத்தைப் பார்த்து நெற்றியில் பூசியும் தலைவிதி மாறவில்லை. முக்கோணமும் அழியவில்லை.ஏப்ரல் மாதம் முதல் மறுமலர்ச்சி வரும் என்றும் அந்த சோதிடன் சத்தியமாக தெரிவித்தான். ஏப்ரலும் வந்துவிட்டது. ஒருபக்கம் பியூர் ஹம்பக் என தெரிகிறது. மறுபுறம் மனசு விடைதெரியாத கேள்விகளுக்கு ஏதேனும் ஒரு விடையை அறிந்துவிட அலைபாயுகிறது. சனிபகவான் இப்போது எங்கே பயணம் மேற்கொண்டுள்ளாரோ... சனியும் குருவும் ராகுவும் கேதுவும் உள்ளங்கை ரேகையில் இருப்பது உண்மையானால், நாகபூஷணம் என்ற பழனியாண்டவன் சன்னதி பிரசாதத்திற்கு மகிமை இருப்பது உண்மையானால் என் வாழ்க்கையை உன்னிப்பாக கவனிக்கிறேன். மறுமலர்ச்சி வருமா என்று பார்க்க.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...