Monday 16 April 2012

தவற விட்ட இரங்கல்கள்

சுந்தர ராமசாமி எனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்த நாளில் இருந்தே அவரைப் போலத்தான் எழுத வேண்டும் என்பது தீர்மானமாகி விட்டது. எனது நாவல் கிடங்குத் தெருவும் அதன் தாக்கம் கொண்டிருப்பதுதான்.
சுஜாதாவுடன் நிறைய முரண்பாடுகள் இருந்தபோதும், அவரது கணேஷ் வசந்த் முதல் ஜீனோ வரை பலதரப்பட்ட பாத்திரங்களிலும் உட்காரச் சொன்னால் படுக்கிற பெண்களிடமும் மனதை பறிகொடுத்திருக்கிறேன்.
எம்.வி.வெங்கட்ராம்- மணிக்கொடி எழுத்தாளர்களில் கடைசியாக மறைந்தவர். இரண்டுமுறை அவர் வீட்டில் சந்தித்த நினைவுகள் என்றும் மறவாதவை.
எனது சமகாலத்தவரான இந்த மூன்று பெரிய எழுத்தாளர்களின் மறைவுச் செய்தி என்னை மிகவும் அலைக்கழித்தது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் மூவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துக் கொள்ள என்னால் முடியவில்லை. இன்றும் அந்த வருத்தம் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது.
சுந்தர ராமசாமி என்னைக் கவர்ந்த எழுத்தாளர். அவரை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் சந்திக்கும் போது ஏற்பட்ட பரவசம் இன்றும் உடலில் உணர முடிகிறது. திரு.வேதசகாயகுமார் என்னை அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைத்தார்.அவரும் என்னைப் பற்றி அறிந்திருந்தார். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது. தீவிரமாக எழுதும் இளம்படைப்பாளிகள் யார் என்ன புத்தகம் எழுதியிருக்காங்க என்று ராமசாமி ஒரு குழந்தையைப் போல ஆர்வமாக கேட்டார்.தான் அதிகம் பேசாமல் என்னை பேசவிட்டு பொறுமையாக கேட்டார். இது எனக்கு தந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் சொல்லிமாளாது. நானாக கேட்ட பிறகு ஜி.நாகராஜன், கிருஷ்ணன் நம்பி, க.நா.சு பற்றி கூறினார். ஜி.நாகராஜன் பற்றி சொல்லும்போது குடிகாரர் என்பது போல் சுந்தரராமசாமி பேசினாரோ என்று தோன்றுகிறது. வீட்டிற்கு வந்து ஜி.நாகராஜன் அடிக்கடி பணம் கேட்பார் என்றும் கூறியதாக ஞாபகம். ஆனாலும் ஜி.நாகராஜன் மீதான சுந்தர ராமசாமியின் அபிமானம் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரம்பியிருந்தது.
க.நா.சுவின் மொழிபெயர்ப்புகள் பற்றி எனக்கிருந்த மனக்குறையை கூறினேன். ஆழ்ந்த யோசனையில் மூழ்கிய அவர் சில நிமிடங்கள் கழித்து, கநாசுவின் மொழிபெயர்ப்பு முழுமையானதாக இல்லை என்று கூறினாலும் அவர் மொழிபெயர்க்க தேர்வு செய்த புத்தகங்களும் படைப்புகளும் அற்புதமானவை அல்லவா என்றார். மேலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களை மூல நூலுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரைகூட எழுதப்படவில்லை என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டார். உண்மை என்று நானும் ஒப்புக் கொண்டேன்.
கணையாழியில் தாம் எழுதி வந்த கேள்வி பதில் பகுதியை பற்றி அபிப்ராயம் கேட்டார் சுந்தர ராமசாமி. அது தசரா கணையாழி. சார் அதில் எழுதுவது உங்கள் தகுதிக்கு உகந்தது அல்ல. அது பழைய கணையாழி மாதிரி இல்லை என்றேன்.அப்படியா என்று சிரித்த அவர் அடுத்த சில இதழ்களுக்குப் பின்னர் கேள்வி பதிலை முடித்துவிட்டார்.
சொல்புதிது வெளியிட ஜெயமோகன் எனக்கு பொறுப்புகளை தந்தார். ஆனால் பணம் இல்லை. எப்படியும் சுந்தர ராமசாமியை அழைத்து தான் வந்துவிடுவதாக கூறியிருந்தார் ஜெயமோகன். நான் ஜெயகாந்தனை அழைக்க முயன்றேன். ஒரே மேடையி்ல் சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன் ஆகியோரை நிறுத்திப் பார்க்க ஆசைப்பட்டேன்.
சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர். ரஜினியும் கமலும் ஒரே படத்தில் நடிப்பதுபோல் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் பங்கேற்ற ஒரே இலக்கிய விழா என்ற பெருமையை சொல்புதிது விழா பெற்றது. ஜெயமோகனால் வரமுடியவில்லை என்றாலும் வஐ.செ.ஜெயபாலன், சா.கந்தசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதி உரையை சுந்தரராமசாமி பேசுவதா ஜெயகாந்தன் பேசுவதா என எங்களுக்குள் ஒரே பரபரப்பு. சுந்தர ராமசாமியே ஜெயகாந்தன் இறுதியாக பேசட்டும் என கூற இல்லை இல்லை சுந்தர ராமசாமி இறுதியாக பேசட்டும் என ஜெயகாந்தன் கூற இருபெரும் எழுத்தாளர்களின் பண்பையும் ரசித்தபடி சுந்தர ராமசாமியை பேசவிட்டு பின்னர் ஜெயகாந்தன் இறுதி உரை நிகழ்த்தினார்.
சுந்தர ராமசாமி மறைவுச் செய்தி கேட்ட போது யாராவது நாகர்கோவில் வரை போய் வர செலவுக்குப் பணம் கொடுத்திருந்தால் போயிருப்பேன். என் சக்திக்கு தினமணியில் படித்து தெரிந்துக் கொண்டேன்.
 சுஜாதாவுடன் 3 அல்லது 4 முறை நேரிலும் சிலமுறை தொலைபேசியிலும் உரையாடியிருக்கிறேன். 90 களில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்த அவர் ஞானியுடன் பேசும்போது அருகில் நானும் இருந்தேன்.ஞானி என்னை சுஜாதாவிடம் அறிமுகம் செய்தார்.உங்கள் கதைகள் எல்லாவற்றையும் இவர் படித்திருக்கிறார் என்று ஞானி கூறிய போதும் சுஜாதா அதைப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வாரம் பாக்யா இதழில் வந்த அவர் கதையைப் பற்றி நான் பேசுவதையும் அசுவாரஸ்யமாகவே கேட்டார்.ஞானியிடம் மட்டும் பேச அவர் விரும்புவதாகவும் தன்னை விட குறைந்த புகழ் உள்ளவர்களிடம் பேச விரும்பவில்லை என்பது போலவும் அவர் புறக்கணிப்பு என்னை துன்புறுத்தியது.
அப்போது நானும் என் நண்பர்களும் கடும் சிரமத்தில் தவித்துக் கொண்டிருந்தோம். சிறுபத்திரிகை நடத்துவதும் கூட்டம் நடத்துவதுமாக எங்கள் இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தோம்.
நண்பர் பண்ருட்டி ரவி, சிறகு என்றொரு பத்திரிகை கொண்டு வந்தார்.அவரிடம் சுஜாதாவுக்கு ஒரு பிரதியை அனுப்பும்படி சொன்னேன். அப்போது கணையாழி கடைசி பக்கத்தில் சுஜாதா எழுதி வந்தார். அதனால்  ரவியும் ஆர்வமாக அனுப்பி வைத்தார். அதன்படியே சிறகில் வந்த நண்பர் ஒருவரின் கவிதையை பிரசுரித்த சுஜாதா சிறகு பற்றி எழுதியதுடன் ரவிக்கு சிந்து பதிப்பகத்தின் பணிக்கு நியமனமும் செய்தார். நாங்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டோம். சிந்து பதிப்பகம் அப்போது கமல்ஹாசன், புவியரசு, காந்தி கண்ணதாசன், சுஜாதா போன்ற பெரிய பெயர்கள் சம்பந்தப்பட்ட பதிப்பகமாக மாறியது. புத்தகம் போட வசதியற்ற ஏழை படைப்பாளிகளின் முதல் நூலை வெளியிடுவதுதான் அவர்களது நோக்கம். முதல் புத்தகமாக சிறகில் கவிதை எழுதிய நண்பரின் கவிதைத் தொகுப்பு வெளியிட திட்டமிடப்பட்டது. அந்த நண்பர் அப்போதுதான் கவிதை எழுத பழகிக் கொண்டிருந்தார். அதிகமான கவிதைகளும் அவரிடம் இல்லை.சுஜாதா தொகுப்பு போடுவார் என அவரும் அவசர அவசரமாக எழுதிக் குவித்தார். எப்படியோ தொகுப்பு வந்துவிட்டது. ஆனால் எந்த நோக்கத்துக்காக சிந்து பதிப்பகம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. காரணம் அந்த நண்பர் ஏழை அல்ல.சொந்த வீடும் அரசு உத்தியோகமுமாக வசதியாகத்தான் இருந்தார். அவர் மனைவியும் அரசு ஊழியர். மாதம் 50 ஆயிரத்திற்கு வருமானம் இருந்தது. ஆனால் 1984 முதல் எழுதிவந்த நான் வேலையில்லாமல் சிரமப்பட்டு வந்தேன். எனது புத்தகம் எதுவும் வரவில்லை. கடைசியாக ஒருவழியாக சிந்து பதிப்பகம் மூடப்படும்போது அதன் கடைசி புத்தகமாக 1999ல் இன்னும் மிச்சமிருப்பவை என்ற என் கவிதைத் தொகுப்பு நண்பர் ரவியின் தனிப்பட்ட முயற்சியால் வெளியானது.ஆனால் அதில் சுஜாதாவுக்கு பங்கு இல்லை. கமலும் விலகி விட்டிருந்தார். சிந்து பதிப்பக உரிமையாளர் திரு முரளிதரனுக்கு மட்டும்தான் நன்றி கூற வேண்டும்.
இன்னும் மிச்சமிருப்பவை தொகுப்புக்கு ஞானி முன்னுரை எழுத ஜெயமோகனிடம் பின்னுரை வாங்கிப் போட்டிருந்தேன். அப்போது ஜெயமோகனை அதிகமாக யாருக்கும் தெரியாது.
அந்தப் புத்தகத்தை சுஜாதாவுக்கு நான் அனுப்பவில்லை. தமிழ்நாட்டிலேயே சுஜாதாவுக்கு கவிதைத் தொகுப்பு அனுப்பாத கவிஞன் நான் மட்டும்தான். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அய்யா.இதைப் பற்றி நானும் சௌந்தர சுகனில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
கவிதை நூலை வெளியிட ஒப்புக்கொண்ட ஞானக் கூத்தனும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ராஜமார்த்தாண்டன், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், பேராசிரியர் பெரியார்தாசன் ஆகியோர் கவிதைகளைப் பாராட்டினார்கள்.
இதனிடையே சுஜாதாவை இன்னும் சிலமுறை சந்திக்க நேர்ந்தது.
குங்குமத்தில் சாருப்பிரபா சுந்தர் ஆசிரியராக இருந்தபோது பிரபஞ்சன் அவர்களின் பரிந்துரையுடன் வேலை கேட்டு போனேன். சுஜாதா,ஜெயகாந்தன், வைரமுத்து ஆகியோரை சந்தித்து அவர்களை சமையல் செய்ய வைத்து அதை சாப்பிட்டு ரெவியூ எழுத வேண்டும் என்று சாருப்பிரபா சொன்னார். ஜெயகாந்தனிடம் கேட்ட போது என் மேல் உள்ள பிரியத்தால் அடிக்காமல் விட்டார். சுஜாதாவை தொலைபேசியில் கேட்ட போது, சாருப்பிரபாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்று நான் கேட்டதாக சொல்லுங்கள் என்றார் சுஜாதா. நானும் அப்படியே போய் சாருப்பிரபாவிடம் சொன்னேன்.
அந்த வேலை அத்துடன் போய்விட்டது.
இன்னொருமுறை சுஜாதாவை சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து ஹைகூ சிறப்பிதழாக வந்த செந்தூரம் இதழை கொடுத்தேன். மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.
இன்னொரு முறை ஜெயமோகன் விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்த போது அதை சுஜாதாவிடம் சில அத்தியாயங்கள் படித்துக் காட்ட விரும்பினார். அவருக்கு சுஜாதாவுடன் அறிமுகம் இல்லை. நான் அவரை அழைத்துப் போனேன். இருவரும் ஆழ்வார்கள் பற்றி நான்குமணி நேரம் பேசித் தீர்த்தனர். அதை ஒரு பார்வையாளனாக பசியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
குமுதம் ஆசிரியராக இருந்தபோதும் பார்த்திருக்கிறேன். நல்ல கவிதைகளை தொகுத்து வாரம் ஒன்றாக போட விரும்பி அந்த வேலையை எனக்கு தந்தார். நான் தந்த கவிதைகளையும் பிரசுரித்தார்.
சுஜாதா மறைந்த செய்தி கேட்ட போது என்னால் சென்னையில் இருந்தும் போக முடியாத காரணம் என எதைச் சொல்வது என்றே புரியவில்லை.மேற்கண்ட சம்பவங்களில் ஏதாவது ஒன்றாக அல்லது என் வறுமை உள்ளிட்ட துன்பங்களையும் மனச்சோர்வையும் காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
எம்.வி.வெங்கட்ராமை அவருடைய கடைசி சில ஆண்டுகளில்தான் சந்திக்க முடிந்தது. காதுகள் நாவல் வெளியான நேரம் அவரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற உந்துதலுடன் கும்பகோணம் சென்றேன். தோப்புத் தெருவில் உள்ள அவர் வீட்டைத் தேடி கண்டுபிடித்தேன். சிறிய அறிமுகத்திற்குப் பின்னர் ஒரு மரநாற்காலியை கொண்டு வந்து போட்ட அவர் இது கு.ப.ரா. உட்காரும் நாற்காலி என்றார்.எல்லாரும் போயிட்டாங்க.நான் மட்டும் இருக்கேன் என தன் மணிக்கொடி நண்பர்களை நினைத்து ஆதங்கப்பட்டார்.என் மூதாதையரின் நாற்காலி என்ற பயபக்தியுடன் அதில் உட்கார்ந்து அவரிடம் மணிக்கணக்கில் பேசினேன்.தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகள் ஆகியவை பற்றி தீராத துன்பத்துடன் பேசிய அவர் தமிழ்நாட்டில் எழுத்தாளனாகப் பிறக்கவே கூடாது என்றார்.
இந்த அனுபவத்தை கட்டுரையாக்கி அப்போது சுபமங்களாவுக்கு அனுப்பி வைத்தேன். எம்.வி.வியும் காதுகளும் என்ற கட்டுரை சுபமங்களாவில் பிரசுரமானது. அதன் பின்னர் கோவையில் கோமல் சுவாமிநாதனை சந்தித்த போது, நான் எழுத நினைச்ச கட்டுரையை நீங்க எழுதிட்டீங்க.
என கையைப் பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
இதையடுத்து எம்.வி.விக்கு சாகித்ய அகடமி அறிவிக்கப்பட்டது. அவருக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதினேன்.பதில் எழுதினார். பிறகு மீண்டும் ஒருமுறை கும்பகோண் போய் அவர் வீட்டை அடைந்து, அய்யா என்னை நினைவிருக்கிறதா என்று கேட்ட போது, உங்களை எப்படி மறக்க முடியும் உங்களால்தான் எனக்கு சாகித்ய அகடமியே கிடைத்தது. சுபமங்களாவில் நீங்கள்தான் காதுகள் பத்தி சிறப்பா எழுதியிருந்தீங்க என்றார். அது அதிகப்படியானது போல் எனக்கு கூச்சமாக இருந்தது,
அவருடன் பேசி திரும்பி வந்த சில மாதங்களில் அவர் காலமான செய்தி கிடைத்தது. அப்போது என்னால் கும்பகோணம் செல்ல இயவில்லை.
மாதந்தோறும் இரங்கல் செய்திகள் வருகின்றன. சிவாஜி கணேசன் முதல் பிரமிள் வரை, சுகந்தி சுப்பிரமணியன் முதல் ஸ்டெல்லா புரூஸ் வரை பலரது மரணச் செய்திகள் மனதை அலைக்கழித்தன. மாதந்தோறும் அஞ்சலிக் குறிப்புகள் வருகின்றன. கடைசியாக மறைந்த ஹெப்சிபா ஜேசுதாசன் பற்றி குங்குமம் இதழில் இரண்டு பக்கம் செய்தி வர வைத்த நிம்மதி இருக்கிறது. கோபி கிருஷ்ணன் போன்ற சிலரது இறுதி நிகழ்ச்சிக்குப் போய் வந்திருக்கிறேன். அடுத்த மாதம் எனக்கே கூட இரங்கல் குறிப்பு வெளியாகலாம். வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.
நான் விரும்பிய, நேசித்த சிலரை மீண்டும் பார்க்க முடியாது என்பதைத் தவிர சாவு எதை சாதித்து விடமுடியும்.
பலரது உணர்வுடனும் எழுத்துடனும் கலந்துவிட்ட நானும் கூடுமானவரை அவர்களை என் விழிகளில் நிலை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்து விட இயலும். 









No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...