Thursday 19 April 2012

மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா

மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா மணிக்கொடி பத்திரிகை முழுவதும் சிறுகதை பத்திரிகையாக மாற்றப்பட்டதில் ராமையாவின் பங்கு முக்கியமானது. சிறந்த கதைகளை தமிழுக்கு அளித்தவர் ராமையா. மலரும் மணமும் போன்ற அவரது கதைகளில் விதவைத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளுடன் ஆண், பெண் உறவில் நிலவிய உளவியல் ரீதியான சிக்கல்களையும் கையாண்டார். நல்ல இலக்கியம் எது என்பதில் மணிக்கொடி எழுத்தாளர்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருந்தது. சி.சு.செல்லப்பா அவர்கள் ஒருமுறை ராமையாவை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் போது மூத்த எழுத்தாளர் என்ற முறையில் ராமையா சொன்ன கருத்து முக்கியமானது. அது என்ன தெரியுமா ? எழுத்தாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். வாழ்க்கையில் துன்பம் இருக்கிறது.இன்பம் இருக்கிறது. அதே போல் தீமையும் நன்மையும் இருக்கிறது.புன்மை, கயமை ஆகிய தன்மைகளும் இருக்கிறது.இவை எல்லாவற்றிலும் அழகு இருப்பதாக எழுதிவிட முடியும், திறமை உள்ள எழுத்தாளனால். ஆனால் தீமையும் புன்மையும் கயமையும் எத்தனை அழகுபடுத்தப்பட்டாலும ; இலக்கியச் சரக்கு ஆகாது.அந்தத் தன்மைகளை சிறப்புப் படுத்திக் காட்டும் எழுத்து அப்போதைக்கு இலக்கியத் தரம் உள்ளதாக ஒரு மயக்கத்தை எழுப்புமேயன்றி நிலைத்து நிற்கவே நிற்காது. இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள எந்த நாட்டிலும் நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் இலக்கியங்களைப் பார்த்தால் விளங்கிவிடும். அசிங்கத்தை அழகுபடுத்திக் காட்டுவது அரிய திறமைதான். ஆனால் அறிவாளிகள் இதை மதிப்பதில்லை.வருங்கால தலைமுறைகள் அதை மதிக்கவே மதிக்காது தெளிவாகவே கூறுகிறார் ராமையா. அதுமட்டுமல்ல....வாசகர்களுக்கும் அவர் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். எழுத்தின் உயர்வு வாசகனின் ரசனையில்தான் உள்ளது. சாப்பிடுகிறவன் சுவைத் தகுதிக்கு அளவுதான் சமையல் ருசி அமையும் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. உங்களுக்குக் கிடைக்கும் இலக்கியத்தின் தரம் உங்கள் சுவைத் தகுதி அளவுக்குத்தான் இருக்கும். ராமையாவின் இந்தக் குரல் தரமான எழுத்தாளர்களை உருவாக்குவதில், அவர்களை அடையாளம் காண்பதில், அவர்களை பெருமைப்படுத்துவதில், வாசகர்களின் பங்களிப்பைக் கோருகிறது. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் பாடியது போன்ற நிலைமை உண்மையான எழுத்தாளனுக்கு இனி ஏற்படக் கூடாது என்பதுதான் பி.எஸ்.ராமையாவின் ஆதங்கம். திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பகுதியில் 1905ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி சுப்பிரமணியம்-மீனாட்சி அம்மாளின் மகனாகப் பிறந்தவர் ராமையா. வத்தலகுண்டுவை ஆங்கிலயேர் காலத்தில் பத்தலகுண்டு என அழைப்பது வழக்கமாக இருந்தபடியால் அவர் பி.எஸ்.ராமையா ஆனார். மகாத்மா காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக வளர்ந்த ராமையா ஜவுளிக்கடைகளிலும் அதுபோன்ற வேறு சில உத்தியோகங்களிலும் வேலை பார்த்தார். 1930ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் அவர் கலந்துக் கொண்டார்.தேசிய இயக்கங்களின் போராட்டங்களிலும் அவர் கலந்துக் கொண்டு சிறை சென்றார். சிறையை விட்டு வெளியே வந்த பிறகு அவர் ஒரு இலக்கியவாதியாக மலர்ந்தார்.ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவரது மலரும் மணமும் கதைக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. கதையில் பெயரைக் கூட எழுதாமல் அனுப்பி விட்டார். விகடன் அந்தக் கதையைப் போட்டு விட்டு ஆசிரியர் தனது பெயரை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டது.தொடர்ந்து ராமையாவின் கதைகள் விகடன்,கல்கி, தினமணி போன்ற பிரபல பத்திரிகைகளில் வெளியாகி ஆயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்தன.1935ம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்த மணிக்கொடி இதழுக்குப் புத்துயிர் அளித்து அதை சிறுகதைப் பத்திரிகையாக மாற்றினார் ராமையா. மாதம் இருமுறை சில ஆயிரம் பிரதிகள் வெளியான மணிக்கொடி மூலம் ஏராளமான எழுத்தாளர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி, எம்.வி.வெங்கட்ராம் போன்ற சகாக்களின் கதைகளைப் போட்டு அவர்களைப் பாராட்டி மகிழ்வதில் பேரின்பம் கண்டார் ராமையா. திரைப்படத் துறையிலும் ராமையாவின் கதைகள் பிரசித்தி பெற்றன.ஜெமினி ஸ்டூடியோவிலும் அவர் சிலகாலம் பணியாற்றினார். மதனகாமராஜன், பக்த நாரதர் படங்களின் திரைக்கதையை வடிவமைத்தவர் ராமையா. ஆனால் ஜெமினியில் அவர் பணி நீடிக்கவில்லை. திலீப்குமார் நடித்த ஆன் இந்திப் படத்துக்கு தமிழில் திரைக்கதை வசனம் எழுத எஸ்.எஸ். வாசனால் பணியமர்த்தப்பட்ட ராமையா புனேயில் தங்கியிருந்த போது குதிரைப்பந்தயம் மீது அவருக்கு நாட்டம் சென்றது. இது பற்றி எனக்கு பேட்டியளித்த திரு.அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன் ராமையாவுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்றும் நிறைய பணம் தந்தார் என்றும் தெரிவித்தார்,. ராமையாவுக்கு குதிரை ரேஸ் மீது பித்து என்றும் குதிரை பந்தயம் மூலம் தான் சம்பாதித்த பணம் அத்தனையும் இழந்ததாகவும் அசோகமித்திரன் தெரிவித்தார். பிற்காலத்தில் பிரெசிடன்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள் படங்களுக்கும் ராமையா கதை திரைக்கதை அமைப்பதில் பணியாற்றினார். போலீஸ்காரன் மகள் ஸ்ரீதர் இயக்கிய சிறந்த படம்.இப்படி எழுத்திலும் சினிமாவிலும் மாறி மாறி இயங்கி வந்த ராமையாதான் மணிக்கொடி எழுத்தாளர்களிலேயே அதிகமான கதைகளை எழுதியவர். அவர் எழுதிய கதைகளின் எண்ணிக்கை 304. இதைப்பற்றி விரிவாக சி.சு.செல்லப்பா பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி என்ற நூலை எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்றி, சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் ஒன்றையும் எழுதிய அவர் நா.பார்த்தசாரதி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, தீபம் இலக்கிய இதழில் மணிக்கொடி காலம் என்ற அற்புதமான இலக்கிய ஆவணத்தை நமக்கு அளித்தார். நான்கு பிள்ளைகள் மூன்று பெண்கள் என குடும்பம் நடத்திய ராமையா தமது 78 வது வயதில் 1983ம் ஆண்டு தொண்டையில் புற்றுநோய் உருவாகி காலமானார். புகையிலை போடுவதை நிறுத்தாத அவர் தன் வாழ்க்கையின் கடைசி நாள் வரை எழுதுவதையும் நிறுத்தவில்லை. பி.எஸ்.ராமையாவின் சில புத்தகங்களை அல்லயன்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ( கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் சேனலில் புதையல் என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் எழுத்து வடிவம் இது. டிவியில் ராமையா பற்றி திரு.அசோகமித்திரனின் 15 நிமிட பேட்டியும் இடம்பெற்றது )

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...