இந்திய சினிமா - ஆனந்த் - ஆனந்தம் அழிவற்றது.

குமுதம் தீராநதி ஏப்ரல் 2016 இதழில் வந்த எனது கட்டுரை இது....

இந்திய சினிமா


ஆனந்தம் அழியாதது - ANAND
செந்தூரம் ஜெகதீஷ்

இறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய 100 இந்திய படங்கள் வரிசையில் நிச்சயமாக இப்படம் இடம்பெற்றிருக்கும். அந்தளவுக்கு மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இந்தி படம் இது.

புனே நகரில் சில வடநாட்டு நண்பர்களுடன் உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன். நீங்கள் பார்த்த இந்திப்படங்களிலேயே மி்கச்சிறந்த படங்கள் எது என்று...ஷோலே, கபி கபி போன்ற படங்களை ஓரிருவர் கூறினாலும் மற்ற அனைவரும் கோரஸாக கூறியது ஆனந்த் படத்தைத்தான்.

ஆனந்த் என்ற இப்படம் 1970ம் ஆண்டு வெளியானது. இதனை எழுதி இயக்கியவர் பிரபல இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி. வங்காளியான இவர் நேரடியாக பல இந்திப்படங்களை இயக்கியுள்ளார். ராஜ்கபூரின் அனாரி இதில் முக்கியமான படம். ஆனந்த் படத்தை அவர் தமது நண்பரான ராஜ்கபூருக்கும் மும்பை நகருக்கும் காணிக்கையாக்குகிறார். ஏன் மும்பை....? படத்தில் ஆனந்த் பேசும் ஒரு வசனம் இது." மும்பை மாதிரி ஒரு நகரமேஇருக்க முடியாது.எத்தனை உயிர்ப்புடன் மனிதர்கள் நடமாடுகிறார்கள் ."-ஆனந்த் இப்படி கூற காரணம் உண்டு .அவன் புற்றுநோயால் 3 அல்லது 4 மாதங்களில் இறந்துவிடப் போகிறான்.

படத்தின் ஒவ்வொரு காட்சியாக விவரித்தால்தான் இந்தப்படத்தின் அழகும் ஆழமும் புரியும். ஆனந்தாக அப்போதைய சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கன்னாவும் , அவன் நண்பன் பாஸ்கராக புதிய சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வந்த அமிதாப் பச்சனும் இணைந்த படம். இரண்டு பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் சண்டைக்காட்சிகளோ காதல் டூயட்டுகளோ இப்படத்தில் இல்லை. இப்படத்திற்கு வசனம் எழுதியவர் குல்சார். பாடல்கள் குல்சார் மற்றும் யோகேஷ். இந்த யோகேஷ்தான் மனோஜ்குமார் படங்களுக்கும் அற்புதமான பாடல்கள் எழுதியுள்ளார். படத்தின் இசை திரையுலகின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவரான சலீல் சவுத்திரி. இப்படத்தில் வரும் நா ஜியா லாகே நா....என்ற லதா மங்கேஷ்கரின் தனிப்பாடலை பாலு மகேந்திரா தமது அழியாத கோலங்கள் படத்தில் நான் எண்ணும் பொழுதே ஏதோ சுகம் ஏதோ சுகம் கொள்ளும் மனதே என்று தமிழ்மக்களுக்கு வழங்கினார். தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கங்கை அமரனின் பாடல் இது.

இப்படத்தில் முகேஷ் பாடிய இரண்டு அமரத்துவம் மி்க்க பாடல்கள் இடம் பெற்றன. கஹி தூர் ஜப் தில் சல்ஜாயே என்ற பாடலும் மேனே தேரே லீயே ஹி சாத் ரங்கு கே சப்னே சுனே சுரீலே சப்னே என்ற பாடல்கள் இன்றும் கேட்க தேனாக இனிப்பவை. இத்துடன் மறைந்த மன்னாடே பாடிய அபாரமான பாடல் ஒன்றும் உண்டு. அந்தப்பாடல் ஜிந்தகி கெஹ்சி ஹை பஹேலி ஹாயே.....

படத்தின் கதை இது....

படத்தின் ஆரம்பத்தில் டாக்டர் பாஸ்கர் ( அமிதாப் பச்சன் ) எழுதிய ஆனந்த் என்ற நூலுக்கு சரஸ்வதி புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. தான் பெரிய எழுத்தாளன் இல்லை என்று கூறும் பாஸ்கர், ஆனந்த் என்ற நண்பனைப் பற்றிய இக்குறிப்புகளே இந்த நாவல் என்கிறார். படம் பிளாஷ்பேக்கில் நகர்கிறது.

ஏழைகளுக்கு பல்வேறு சோதனைகளை நடத்தியும் கலர் கலராக மாத்திரைகளை கொடுத்தும் பணம் பறிக்கும் டாக்டர்கள் மத்தியில் மருத்துவத் தொழிலை சேவையாக கருதுபன் பாஸ்கர்.உப்பு வாங்கக்கூட காசில்லாத ஏழைகளிடம் மருந்து வாங்க சொல்ல முடியுமா என்று கேட்கிறான் பாஸ்கர்.

இவ்வுலகில் நாம் நோய்களை விரட்ட மருந்தை தருகிறோமா அல்லது ஒவ்வொரு அடியிலும் மரணத்தை தக்க வைக்க மருந்து தருகிறோமா என்றும் பாஸ்கர் கேட்கிறான்.

வீட்டில் பணியாள் திருமணம் செய்யும் படி பாஸ்கரிடம் கூறுகிறான். பாஸ்கர் ரேணு என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்போது காதல் வயப்பட்டவன். ஆனால் அது சொல்லாத காதல் மனதுக்குள் மறைத்து வைத்துள்ளான்.

இதனிடையே ஆனந்த் (ராஜேஷ் கன்னா) என்ற தமது நண்பனை சிகிச்சைக்காக பாஸ்கரிடம் அனுப்புகிறான் டாக்டர் பிரகாஷ் குல்கர்னி. ( ரமேஷ் டியோ ) ஆனந்துக்கு புற்றுநோய். இன்னும் 4 மாதம்தான் அவனுக்கு ஆயுள். காப்பாற்ற முடியாது. ஆனால் வலியில்லாமல் சாக மருத்துவம் உதவலாம். நாளைக்கு டெல்லியிலிருந்து மும்பைக்கு ஆனந்த் வருவதாக டாக்டர் குல்கர்னி கூறும் போதே ஆனந்த் வந்துவிடுகிறான். அவன் கலகலப்பானவன். தனது முடிவு தெரிந்தும் அழவிரும்பாதவன். ஒருநாள் முன்னதாக வந்ததற்கு அவன் விளக்கம் தருகிறான். என் தாய் வயிற்றில் இருந்தபோது 9 மாதத்திலேயே பிறந்துவிட்டேன். சாகும்போதும் எனது ஆயுட்காலத்திற்கு முன்பே செத்து விடுவேன்.

ஆனந்தின் உடைமைகள் ஒரு சிறிய சூட்கேஸ், ஒரு டேப் ரிக்கார்டர்

பாஸ்கரை ஆனந்த் பாபுமோசாய் என்றழைக்கிறான். இளம் பெண்கள் அவனை அப்படி அழைப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறானாம். பாபு மோசாய் என்றால் கூச்சமுள்ள நபர்.

தமக்கு மரணம் அருகில் இருப்பதை ஆனந்த் தெரிந்து வைத்திருக்கிறான். வாழ்க்கை மகத்தானதாக இருக்க வேண்டுமே தவிர நீளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது அவன் கருத்து.அவனுக்கு சாவுதெரிந்திருந்தும் உயிர்ப்புடன் இருக்கவே விரும்பினான்.

மருத்துவமனையில் செவிலியரான சிஸ்டர் டிசோசாவை தாயாக மாற்றுகிறான். தூங்கு என்று டீச்சரைப் போல் அதட்டும் அவரிடம் தூங்கினால் எனது 6 மாத ஆயுள் 3 மாதமாக குறைந்துவிடும் என்கிறான் ஆனந்த். அடுத்த பிறவியில் நான் உன் மகனாக வேண்டும் என்கிறான். மருத்துவமனை விதிகளை மாற்ற முடியாதா என்று கேட்கிறான். மருத்துவமனை சூழலே நோயாளியை தன்னை நோயாளி என உணர வைக்கிறது என்று கூறி தனியாக வாழும் பாஸ்கர் வீட்டுக்கே குடி வந்து விடுகிறான்.

பாஸ்கர் தனது டைரியி்ல் இவ்வாறு எழுதுகிறான். அவன் மரணத்தைக் கண்டு சிரிக்கிறானா அல்லது தன்னைக் கண்டு சிரிக்கிறானா...தன் வாழ்க்கையைக் கண்டு சிரிக்கிறானா....

பணியாளிடம் சாப்பாடு பற்றி விசாரிக்கிறான் ஆனந்த் .நான் நிறைய பேசுவேன். நல்லா சாப்பிடுவேன் என்கிறான்.

டாக்டர் குல்கர்னியின் மனைவி சுமனை ( சீமா டியோ ) சகோதரியாக்கிக் கொள்கிறான். அவளுக்கு ஆனந்துக்கு என்ன நோய் என்று தெரியாது. மறைக்கிறார்கள். அவளோ புதிதாக உருவான சகோதரனுக்காக கடவுளை வேண்டுகிறாள். தனது குருஜியிடம் அழைத்துப் போகிறாள். ஆனந்தின்நோய் குணமாக ஆசி கேட்கிறாள். அந்த பாபா ஒரு மௌனி. வாழ்நாள் முழுவதும் பேசா மடந்தையாக வாழ்பவர். பேசாமல் வாழ என்னால் முடியாது என்கிறான் ஆனந்த். ஆனால் யாரையும் புண்படுத்தும் விதமாக நான் பேசாமல் இருக்க ஆசி கொடுங்கள் என்று பாபாவிடம் கேட்கிறான். பாபாவும் ஆனந்தின் கலகலப்பான சுபாவத்தைக் கண்டு மகிழ்கிறார். உடம்பு அழியக்கூடியது.ஆன்மா அழியாதது. ஆன்மாவை பீடித்த ஆனந்தம் அழியாதது. அழியாத ஆன்மாவுக்கு ஆசி கொடுங்கள் என்று கேட்கிறான் ஆனந்த்.

பணியாள் மூலம் டாக்டர் பாஸ்கர் ரேணுவை( சுமிதா சனியால் ) ஒருதலையாக காதலித்த விவரம் அறியும் ஆனந்த், ரேணுவின் வீட்டுக்கே தேடிப் போகிறான். அங்கு ரேணுவை சைட் அடிக்கும் வாலிபர்களை பயில்வான் தாரா சிங்கின் உதவியுடன் அடித்து விரட்டும் ஆனந்த் வயது வந்த பெண்ணை தனியா வீட்டில் வைக்கலாமா கல்யாணம் கட்டிக் கொடுங்கள் என்று ரேணுவின் தாயுடன் பாஸ்கருக்காக பெண் கேட்கிறான். ரேணுவிடமும் பாஸ்கரின் காதலைப் போட்டு உடைக்கிறான். ரேணுவும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறாள்.

ஆனந்துக்கு மற்றொரு பழக்கம் உண்டு. தெருவில் போகும் யாரையும் தனது பால்ய கால நண்பன் முராரி என பெயரிட்டு அழைப்பான். தான் முராரி அல்ல என்று அந்த நபர் விளக்கினாலும் நீ என் நண்பனாயிரு. முராரியாக இல்லாவிட்டால் என்ன என்பது ஆனந்தின் சுபாவம். அப்படி சிக்கிய ஒரு முராரிதான் நாடக நடிகரான இஷாரா பாய்.( நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர்) அவர் ஆனந்தை நாடகத்தில் நடிக்க அழைத்துச் செல்கிறார். குஜராத்தி மொழி மட்டும் பேசும் நடிகையை ஆனந்துக்கு அறிமுகம் செய்து காதலிக்கிறாயா என்று கேட்கிறான். காதலில் ஆசை வைத்து குஜராத்தி மொழி படிக்க ஆனந்த் புத்தகங்களை வாங்கி வருகிறான். கடினமான மொழி இது. கற்றுக் கொள்ள ஒருவருஷமாகும். அதுவரை நான் இருக்க மாட்டேன். பரவாயில்லை. அடுத்த பிறவிக்கு இவளை ரிசர்வ் செய்துக் கொள்கிறேன்.அடுத்த பிறவியில் குஜராத்தியாக பிறக்கிறேன் என்கிறான்.

இஷா பாயின் நாடகத்தில் நாடகத்தனமாக ஒரு வசனக்காட்சி....பிறப்பும் இறப்பும் ஆண்டவனின் கையில்.மனிதன் வெறும் பொம்மலாட்ட பொம்மை. அவனால் என்ன செய்ய முடியும்....ஆனந்த் பரவசத்துடன் கைத்தட்டுகிறான்.

ஆனந்துக்கு உடல் நிலை மோசமடைகிறது. நீ போய் விட்டால் உன் குரலை எப்படி கேட்பேன் என்று கலங்குகிறான் பாஸ்கர். சில மாதங்களாகவே உன் குரலை கேட்டு கேட்டு இனி மௌனத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறான் பாஸ்கர். அப்படியா சரி என் குரலை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து வைத்துக் கொள் என்கிறான் ஆனந்த்.

முதலில் நீ கவிதை வாசி என்கிறான். பாஸ்கர் கவிதை வாசிக்கிறான். ஒலிநாடா ஓடிக் கொண்டிருக்கிறது. கவிதை முடிகிறது. ஒலி நாடா ஓடுகிறது. ஆனந்த் பேசவில்லை. வெறுமனே ஒலி நாடா ஓடுகிறது. பேசு என பாஸ்கர் செய்கையால் கூறுகிறான். ஆனந்த் பேசவில்லை. தாமதிக்கிறான். மேக்கப் போடுகிறான் பவுடர் போடுகிறான் நாடக நடிகர் பாணியில் மேக்கப் போட்ட பின்னர் தாம் நாடகத்தில் கேட்ட வசனத்தைப் பேசுகிறான்.

பிறப்பும் இறப்பும் ஆண்டவனின் கையில் இருக்கிறது. மனிதன் வெறும் பொம்மலாட்ட பொம்மை...அவனால் என்ன செய்ய முடியும்....ஹா ஹா ஹா என்று ஆனந்த் பேசுகிறான். ஒலி நாடா சுழன்று முடிவடைகிறது.

ஆனந்தின் நோய் பற்றி சுமனும் இஷா பாயும் அழுகிறார்கள், சுமன் சாய்பாபாவை வேண்டுகிறாள். இஷா பாய் அல்லாவை தொழுகிறார். டிசோசா ஏசுவிடம் பிரார்த்திக்கிறாள். பணியாள் குல தெய்வத்தை பிரார்த்திக்க ஊருக்குப் போகிறான். மருந்துகளின் பணி முடிந்து விட்டது. இனி ஆனந்தை மருந்து அல்ல பிரார்த்தனையாவது காப்பாற்றுமா என ஒவ்வொரு மனிதரும் விரும்பும் நிலை உருவாகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத பாஸ்கர் கூட கடவுளிடம் ஆனந்த் உயிரைக் கேட்டு அழுகின்றான்.

ஆனந்துக்கு வலி இல்லையா....துன்பம் இல்லையா...இருக்கிறது. தனது கவிதைப் புத்தகத்தில் வாடிய ஒரு ரோஜா மலரிதழ் ஆனந்தின் இழந்த காதலை ஒரு கட்டத்தில் ரேணுவுக்கு விளக்குகிறது. அவன் காதலிக்கு திருமணமாகி மூன்றுமாதம் 7 நாட்களாகிறது. அவன் டெல்லியிலிருந்து மும்பை வந்தும் மூன்றாண்டுகள் ஏழு நாட்களே ஆகின்றன என்பதை அறிகிறாள் ரேணு.

துன்பத்தை தனக்குள் வைத்துக் கொண்டு சந்திக்கும் மனிதர்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியையே தர விரும்பிய ஆனந்த் கடைசியில் எல்லோரையும் அழவைத்து உயிரிழக்கிறான். இந்த இறுதிக்காட்சி திரையுலக கிளைமேக்ஸ்களில் அற்புதமானது .

ஆனந்த் உயிருக்குப் போராடுகிறான். பாஸ்கர் மருந்து வாங்கி வர வெளியே போகிறான். டாக்டர் குல்கர்னி, ரேணு சுமன் ஆகியோர் ஆனந்த் அருகில் இருக்கிறார்கள். சாகும் முன்பு தான் பாஸ்கரின் கவிதையை கேட்க வேண்டும் என்று விரும்புகிறான் ஆனந்த் ......ஒலிநாடா ஓடுகிறது. பாஸ்கரின் குரலில் மரணம் ஒரு கவிதை, விளங்காத புதிர் என்ற கவிதை வரிகள் ஒலிக்கின்றன. ஆனந்த் அலறலுடன் உயிர் துறக்கிறான். பாஸ்கர் ஓடி வருகிறான். ஒலிநாடாவில் டேப் சுழல்கிறது. குரல் இல்லை( ஆனந்த் விட்ட இடைவெளி ) உன் பேச்சை நீ நிறுத்தக்கூடாது பேசு என்று கதறுகிறான் பாஸ்கர். பாபுமோசாய் என்று ஆனந்தின் குரல் டேப்ரிக்கார்டரில் பாஸ்கரை அழைக்கிறது...

பாபு மோசாய்.....பிறப்பும் இறப்பும் மனிதர்கள் கையில் இல்லை. இது ஆண்டவனின் கையில் இருக்கிறது. மனிதன் வெறும் பொம்மலாட்ட பொம்மை....அவனால் என்ன செய்ய முடியும்....ஹா..ஹா...ஹா என ஆனந்தின் குரல் ஒலிக்க ஒலிநாடா சுழன்று முடிவடைகிறது.

ஆனந்தம் அழிவற்றது. ஆனந்த் அழிவற்றவன் என்று படம் முடிகிறது.


 

 
 
 

Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்