Wednesday 20 April 2016

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.....

வழக்கம் போல பழைய புத்தகக் கடைகளில் எனது மாதச்சம்பளத்தின் எனது பங்கில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டிருக்கிறேன். கண்ட கண்ட புத்தகங்கள் வாங்குவதும் படிப்பதும் படிக்காமல் வீசியெறிவதும் படித்ததை பாதுகாத்து வைப்பதும் எனது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக மாறி விட்டது. படிக்கிற ஆர்வத்தால்தான் எழுதுவதும் குறைவாக இருக்கிறது.நிறைய நிறைய எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர்கள் மிகக்குறைவாகப் படிப்பவர்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.
ஒரு கட்டத்தில் பழைய புத்தகக் கடைகளிலிருந்து ஏராளமான மாத நாவல்களை அள்ளி வந்தேன். பாலகுமாரன், சுஜாதா, தமிழ்வாணன், ராஜேஷ்குமார். இந்திரா சவுந்திரராஜன், தேவிபாலா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணி சந்திரன், அருணா நந்தினி, இரா.கீதாராணி, ஸ்ரீஜா வெங்கடேஷ்,   என சுமார் 300 நாவல்களை பல நாட்களாக பொறுமையாகப்படித்தேன். மூன்று அல்லது நான்கு மட்டும் மனம் கவர்ந்தன.தாஜ்மகாலை குண்டு வைக்கப் போகும் காதலன் ஒருவன் கதையை சுபா எழுதியுள்ளனர். இதேபோல் கற்பனையில் கிறங்க வைக்கும் பரத்-சுசிலா வை ரசிக்க முடிந்தது.சங்கர்லால் நாவல்கள் மீது சிறுவயதிலிருந்தே மயக்கம். பெண் எழுத்தாளர்களின் கதைகள் பெரும்பாலும் முறையற்ற குடும்ப உறவுகள் அல்லது குடும்பச்சிக்கல்களை மையமாகக் கொண்டிருந்தன. சுஜாதாவின் அப்சராவும் நைலான் கயிறும் மாத நாவலாக வந்ததால் புறக்கணிக்க முடியாதவை. ஜெயகாந்தன் கூட ராணி முத்துவில் வாழ்க்கை அழைக்கிறது எழுதியிருக்கிறார். கல்பனாவிலும் அவருடைய ஊருக்கு நூறு பேர் போன்ற சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. குடும்ப நாவல் கல்கி, நா.பா. போன்றோரின் படைப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்துகிறது. விலை 30 ரூபாய் என்பது அதிகம்தான்.
இதே போல் ஆங்கிலப் புத்தகங்கள். பைபிள் முதல் சூபியிசம் வரை நான் தேடித்தேடிப் படித்த தேர்ந்த புத்தகங்கள் பட்டியல் மிகப்பெரியது. ஆனால் அதற்கு ஈடாக குப்பைகளையும் நிறையவே படிக்க நேர்ந்தது. மிகப்பெரிய குப்பை என்றால் ஆங்கிலத்தில் வெளியாகும் மில்ஸ் அண்ட் பூன்ஸ், மற்றும் சுய முன்னேற்ற நூல்கள்தான்.
நாவல்கள் அசத்துகின்றன. ஆங்கிலத்தில் பல நாவல்களை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். கண்களில் வழியும் நீரும்
( கண்கோளாறு ) மனச்சோர்வும் பணப்பற்றாக்குறையும் காரணம். ( பணம் தேவைப்படும் போது உடனடியாக கைகொடுத்து உதவி சில நூறு ரூபாய்களை தருவது ஆங்கில நாவல்கள்தாம் )

மருத்துவத்துறையை மையமாக வைத்த ராபின் குக்கின் கிரைம் கதைகள், ஹிட்லரின் காலத்திலும் ரஷ்யாவின் புரட்சி காலத்திலும் நிகழ்ந்த சம்பவங்களை எழுதிய டாம் கிளான்சியின் நாவல்கள், சுயசரிதையைப் போல் எழுதப்பட்ட சால்பெல்லோவின் ஹெர்சாக், ஹென்றிமில்லரின் டிராபிக் ஆப் கேன்சர், உளவாளிகளை வைத்து எழுதப்பட்ட ஜான் லீ கெரியின் நைட் மேனஜர் போன்ற நாவல்கள், வழக்கறிஞர் தொழிலை வைத்து நீதித்துறையின் குற்ற  வழக்குகளை ஆராய்ந்து எழுதப்பட்ட ஜான்கிரிசிமின் நாவல்கள் போல  ஏராளமான புத்தகங்கள் மனம் கவர்ந்தவையாக உள்ளன. டால்ஸ்டாய், தஸ்தயோவஸ்கி, காப்கா, சார்த்தர், ஆல்பர்ட் காம்யூ, ஹெமிங்வே, நபகோவ், என நீளும் இலக்கிய வாசிப்புகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த புத்தகங்களின் வரிசையில் தற்போது படித்துக் கொண்டிருப்பது  ஜான் கிரிசிமின் சேம்பர் என்ற நாவல் .

பெரும்பாலான ஆங்கில நாவல்கள் படமாகவும் எடுக்கப்படுகின்றன.ஜான் கிரிசிமின் 8 நாவல்கள் படமாகியுள்ளன. அத்தகைய படங்களையும் தேடிப்பிடித்து பார்த்து விடுகிறேன். டாம் கிளான்சியின் கிளியர் அண்ட் பிரசன்ட் டேஞ்சர், பேட்ரியட் கேம்ஸ் போன்ற நாவல்களை படமாகவும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

வாசி்ப்பது ஒரு வரம். ஒரு தவம். அதில் குப்பையும் வரலாம் மாணி்க்கப்பரல்களும் தெறிக்கலாம்,வைரங்களும் கிடைக்கலாம். யாராலும் கொள்ளையடிக்க முடியாத பெரும் செல்வம் இது.
விழித்திருந்து பெற்ற அறிவு கற்றலால் மேம்பட்ட ரசனை பயிற்சியால் பக்குவப்பட்ட எழுத்து என புதிய பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...