தெறி -விஜய்


விக்கியுடன் ஆல்பர்ட் திரையரங்கில் தெறி படம் பார்த்தேன். அதன் 100 கோடி ரூபாய் வசூலில் எனது 140 ரூபாயும் சேர்ந்தது.

இயக்குனர் மகேந்திரன் பரிதாபம். பாவம். ஆக்சன் மசாலா படங்களுக்கு எதிராக திரைப்பட இயக்கத்தை பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்தினம், ருத்ரய்யா, ஜெயபாரதி போன்ற மேன்மை மிகக கலைஞர்களுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒரு ஜாம்பவான் அதே மசாலா படத்திற்கு வில்லனாக பலியாகியுள்ளார். சினிமா ரசிகர்கள் கண்ணீர் விட வேண்டும்.

மற்றபடி தெறி வழக்கமான விஜய் படம்தான்.  
easily predictable எளிதில் கணிக்க கூடிய காட்சியமைப்புகள், திருப்பங்கள். கிளைமேக்ஸ்.குத்து பாடல்கள்.  ஒரே ஒரு மெலடி பாடல் -உன்னாலே உன்னாலே அதுகூட ஜிவிபிரகாஷ்குமாரின் பழைய பாடல்களின் சாயலில். படத்தில் பிடித்தது ராஜேந்தர் என்ற விஜயின் அழைப்பும் ராஜேந்தராக நடித்த மொட்டை ராஜேந்திரனின் நடிப்பும்தான். சமந்தா அழகு. சிரித்துக் கொண்டே இருக்கிறார், விஜய் வழக்கம் போல தெறிதான். ஆக்சனும் ஆட்டமும் இருக்கும் வரை விஜய்க்கு என் செல்லக்குட்டி விக்கி போல ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள்.

வீட்டில் லீவு நாட்களில் போர் அடிக்குது தினமும் பத்து ரூபாய் டிக்கட்டாவது வாங்கி என்னை தெறியில் கொண்டு போய் விட்டு விடு என்கிறான் விக்கி.. பத்து ரூபாய் டிக்கட் எல்லாம் தியேட்டரி்ல் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
எனக்கு வீட்டுக்குப் போய் ரஜினியின் பாட்ஷா படத்தையோ  எம்ஜிஆரின் பழைய படத்தையோ பார்க்க வேண்டும் போல இருந்தது. விஜயின் உழைப்பும் ஹீரோயிசமும் பிடித்திருந்தாலும் நடிப்பில் இன்னும் அவர் கவரவே இல்லை. ரோமன்ஸ் காட்சிகள் போரடிக்கின்றன. ஆனாலும் அவர் ஒரு ஸ்டார். அவருக்கு விக்கி போன்ற பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனது கருத்து முக்கியமல்ல. மகேந்திரனே செல்லாக்காசான பிறகு என் கருத்துக்கு என்ன மதிப்பு

பின்குறி்ப்பு
ஒருவழியாக விக்கியின் ஆசையை நிறைவேற்றினேன். பின்னி மில்லில் விஜயின் 60வது படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்துப் போனேன் .பாதுகாவலர் விடவில்லை. ஆனாலும் பேசியதில் அவர் நட்புடன் விக்கியை அனுப்ப ஒப்புக் கொண்டார். நான் வெளியே காத்திருக்க உள்ளே போய் விக்கி ஆட்டோக்கார தோழர்களுடன் படம் எடுத்த விஜய்யை கண்டு ரசித்திருக்கிறான். வெளியே நின்ற நான் விஜய்க்கு திரண்ட ரசிகர்களைப் பார்த்து வியந்து நின்றேன். ஒரு மனிதன் மீது இத்தனை மனிதர்கள் பிரியம் வைத்திருப்பது அந்த மனிதருக்கு கடவுள் கொடுத்த வரமா சாபமா என்று புரியவில்லை. வரம் இத்தனை பணமும் புகழும் கொட்டுவதால், சாபம் தனிப்பட்ட வாழ்க்கை என எதுவும் இல்லாமல் எல்லாமே பொதுவாழ்க்கையாக ஆகி விடுவதால்.நான் நிம்மதியாக ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தி வீட்டுக்குத் திரும்பினேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை .என்ன ஒரு நிம்மதி....அடடா .....


Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்