Monday 4 April 2016

செந்தூரம் இதழுக்கு உயிர்மை விமர்சனம்

‘செந்தூரம்’ மாத இதழ்
பாண்டியன்

திரைப்பட இயக்குநர் ஸ்ரீதரை அட்டைப்படத்திலேயே போட்டு கௌரவ அஞ்சலி செலுத்தியிருக்கும் ‘செந்தூரம்’ மாத இதழ் (32 பக்க அளவு), இந்தி பின்னணிப்பாடகரான மகேந்திர கபூரைப் பற்றியும் கட்டுரை எழுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறது. இவ்விருவரின் சாதனைகளைப் படிக்கும்போது-அவர்கள் படைத்து நம் மனதைக் கவர்ந்த பாடல்கள் மலரின் வாசம் போல் மனத்தை நிறைக்கின்றன. மும்பைக் குண்டுவெடிப்பு பற்றிய தருண் தேஜ்பாலின் கட்டுரையின் சில பகுதிகள் அரசியலும் தீவிரவாதமும் தனி மனிதனை எப்படிப் பாதிக்கின்றன என்பதை ஆழமாக அலசுகிறது. ‘போன்சாய் வனம்’ என்ற குறுங்காவியம் கொடைக்கானல் தரும் அனுபவங்களை கவித்துவமாக விரித்துப் போடுகிறது.(‘வெப்பமண்டலர்களைப் பரவசிக்கும் தட்பநிலை’, ‘இவனுமோர் மனப்பிறழ்வன்’ என்ற உற்சாகமான வார்த்தைப்பிரயோகங்கள் சுவாரஸ்யமானவை) அதன் அடிக்குறிப்புத் தகவல்கள் (குளிர் பிரதேசங்களான மலைவாச ஸ்தலங்களில் விஷப் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. . ஆனால் உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் பல வருடங்களுக்குப் பின்னர் சமவெளிக்கு இறங்கினாலும், உள்ளார்ந்திருக்கும் விஷ விளைவால் மரணிக்க நேரும்)எனச் சில அபூர்வத் தகவல்கள் கொண்டனவாக இருக்கின்றன. ‘நெடுங்சாலை’ என்ற சிறுகதை தற்கொலையை நோக்கிச் செல்லும் ஒருவனின் மனமாறுதலை நயம்படச் சொல்கிறது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நேர்காணல் அவரது தனித்துவத்தை முழுமையாகக் கொண்டு வந்திருக்கிறது. அச்சமைப்பும் இதழ் நேர்த்தியும் கனத்த விஷயங்களுமாக மனதைக் கவரும் இதழாக ஜனவரி-2009 இதழ் வெளிவந்திருக்கிறது.

தொடர்புக்கு:
கே. ஜெகதீஷ்,
சிருஷ்டி,
6, புரசை நெடுஞ்சாலை,
சென்னை-600 007.

மின் அஞ்சல்:
senthooramjagdish@gmail.com

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...