Monday 11 April 2016

சந்திப்பு 10 - ஷாராஜ்

ஒரு மீள் பதிவு
தமிழுக்கு என் வணக்கம் 

கவிஞர் ஓவியர் - ஷாராஜ் Shahraj Strokes

எழுத்தாளர், கவிஞர், ஓவியர் என்று பன்முகத்தன்மை கொண்ட நண்பர் ஷாராஜை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. அதற்கு காரணம் எதைப்பற்றியும் மனம் விட்டு வயது வித்தியாசம் பாராமல் அவருடன் உரையாட முடியும். சம அளவில் மனத்தை அவருடன் பொருத்தி வைக்க முடியும். அவர் பேசுவதில் அர்த்தமும் அழகும் இருக்கும். ஆனால் சற்று விரக்தியும் கலந்திருப்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறேன். முட்டாள்கள் கோலோச்சும் உலகில் நுட்பமான அறிவாளிகள் ஓரம் கட்டப்படுவதும் ஒதுக்கப்படுவதும் அடையாளமற்றுப் போவதும் குறித்த பிரக்ஞை கூட அவருக்கு இருக்குமா என்பதும் சந்தேகம்தான். ஆனால் விரக்திக்கு அதுதான் காரணமா என யோசித்திருக்கிறேன்.
கோவையில் 2016 ஏப்ரல் மாதம் 7ம் தேதி சந்தித்தேன். போன் செய்ததும் என்னை சந்திக்க கேரள எல்லையில் அமைந்துள்ள வேலந்தாவளம் தாண்டிய தனது சொந்த ஊரான ஒழலபதியிலிருந்து பஸ்பிடித்து கோயமுத்தூருக்கு வந்து சேர்ந்தார். டூவீலரில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அவரை அழைத்துச் சென்று ரயில் நிலையம் எதிரே இருந்த கே.ஆர்.எஸ் பேக்கரியில் டீயும் கேக்கும் சாப்பிட்டபடி அவருடன் பேச ஆரம்பித்த போதே அந்த பழைய நட்பு அப்படியே அட்சரம் பிசகாமல் இருப்பதை உணர முடிந்தது. உருவத்தில் ஷாராஜ் மிகவும் இளைத்துப் போயிருந்தார் என்றாலும் எண்ணங்கள் வலிமை பெற்ற நபராக என் முன்னே அமர்ந்திருந்தார்.
தொண்ணூறுகளில் கோவை ஞானியின் நிகழ் இதழுக்கும் அவர் வ.உ.சி பூங்காவில் ஞாயிறுதோறும் நடத்திய களம் கூட்டத்திற்கும் ஒரு அதிதியைப் போல் அடிக்கடி கலந்துக் கொண்டிருக்கிறேன். அப்போது பலர் எனக்கு நட்பாகினர்.குறிப்பாக வை.கி.துறையன் என்ற பெரியவர் .திருக்குறள் அபிமானி. உள்ளத்தால் பொன்னானவர்.
இந்த களம் கூட்டத்தில் வந்த முக்கியமான சிலரில் ஷாராஜ் வித்தியாசமானவர். நிறைய விவாதிக்கக்கூடியவர். நன்றாக வாசிப்பவர். எளிதில் பழகக்கூடியவர் .
அப்போது அவர் பணியாற்றிக் கொண்டிருந்த வெரைட்டி ஹால் ரோட்டிற்கு அடிக்கடி போவேன். நிறைய டீ சாப்பிட்டபடி நிறைய பேசுவோம். காதல், காமம், இலக்கியம், ஆன்மீகம், சினிமா என எதைப்பற்றியும் ஷாராஜூடன் பேசுவது இயல்பாக இருக்கும். சந்திப்பை சாக்காக வைத்து பணம் பறிக்கும் நண்பர்களில் அவரை சேர்க்க முடியாது. ஒரு ரூபாய் கூட கேட்க கூச்சப்படுவார். என்னை மாதிரியேதான். சென்னையில் என்வீட்டிற்கும் ஷாராஜ் வந்திருக்கிறார்.சினிமாவில் எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருந்திருக்கும். திடீரென வணிக ரீதியான எழுத்துக்களை எழுத முயற்சிப்பார். எல்லாமே ஒரு பரிசோதனைதான் அவருக்கு
இம்முறை சந்தித்த போது அவர் கவனம் முழுவதும் தாந்திரீகம், யோகா, ஆன்மீகம் மற்றும் அவை சார்ந்த ஓவியங்களின் பால் திரும்பி நிலைகொண்டிருப்பதை அறிந்தேன். சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர சுகன் இதழில் வெளியான அவர் பேட்டியிலும் ஓவியங்களைப் பற்றியே அதிகம் பேசியிருந்தார்.
வ.உ.சி பூங்கா மூடியிருந்த உச்சிவெயில் வேளையில் அருகில் இருந்த வனவிலங்குப் பூங்காவுக்குள் டிக்கட் வாங்கி நுழைந்தோம். வாடையை மறைக்க முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக் கொண்ட ஷாராஜ் அங்கு தனது சிறிய லேப் டாப்பில் பதித்த ஓவியங்களை எனக்குக் காட்டினார். ஓவியம் பற்றி அதிக ஞானமில்லாத நான் சில கோடுகளை மட்டும் புரிந்துக் கொள்ள முயற்சித்தேன்.
எனக்கு ரயிலுக்கு நேரமாகும் வரை பேசிக்கொண்டிருந்து விட்டு பிரிந்த ஷாராஜின் நினைவுகள் நாங்கள் சாப்பிட்ட காந்திபுரம் ஹரிபவனம் உணவின் ருசியைப் போல சென்னை வரை என்னுடன் வந்து சேர்ந்தது.
பின்னர் ஒரு பேருந்து விபத்தில் நண்பர் ஷாராஜ் படுகாயம் அடைந்து தனது காலை இழந்த துயரமான செய்தியை அறிந்து இன்றுவரை வேதனைப்படுகிறேன். கோவை அரசு மருத்துவமனையில் நானும் நண்பர் ஆர்.கே. ரவியும் சந்தித்து பேசினோம். அவரது குடும்பத்தினருக்கும் அன்பு சகோதரிக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் நான் பிரார்த்தனைகள் செய்தேன். ஷாராஜ் உயிருக்கு ஆபத்து நேராதிருக்க மருதமலை முருகனை வேண்டிக் கொண்டேன். அவருக்கு உதவ மனம் கோடி இருந்தாலும் பையில் சில நூறுகளே இருக்கின்றன. என்ன செய்ய.....

நான் நம்பியபடியே ஷாராஜ் மீண்டு வந்துவிட்டார் .மீண்டும் முகநூலில் அவர் பதிவுகளைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியடையும் உள்ளங்களில் எனதும் ஒன்று. அவர் நீடுழி வாழவும் நலம் பெறவும் என்றும் வாழ்த்துவேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...