Monday 4 April 2016

சார்லி சாப்ளின் பேட்டி

 

 

 

 

'நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம்!'' - சாப்ளினுடைய இறுதி நேர்காணல்

யதார்த்தம் என்று சொல்லப்படுவதன் மீது எனக்கு ஆர்வமே கிடையாது. 'Make Beleive' தான் என் படங்கள். சில நேரங்களில் உண்மையின் உள்ளே ஊடுருவிப் போவது ரொம்பவும் போரடிக்கிற விஷயமாகிவிடும். எனவேதான் சிட்டி லைட்ஸ்-ல் ஓர் அழகான இளம் பெண் எப்படி ஒரு ஏழையை நேசிப்பாள் என்று யோசித்து, யதார்த்தத்திற்காக நம்பத்தகுந்த சூழ்நிலைகளை தேவையின்றி திணிக்க வேண்டியதாகிவிட்டது. 
தி கவுன்டஸ் படமெடுக்கிற போது நான் கோமாளித்தனமான காட்சிகளே எழுதவில்லை. கசப்பான விஷயங்களைப் போதுமான அளவு உருவாக்கத் தெரிந்தால் அதை எல்லோரும் விரும்புகிறார்கள் போலும். எனது இந்தப் படம் அப்படிப்பட்டதுதான். ரொம்பவும் யதார்த்தபாணி படம். படப்பிடிப்பின் போதே கூட யாராவது ஏதாவது வேடிக்கை செய்தாலும் படப்பிடிப்பை கேன்சல் செய்து விடுவேன். என் சுய உற்சாகம் கூட அடைப்பட்டுப்போனது. 
நாம் படைக்கிற கதாபாத்திரத்தின் ஆழத்துக்குப் போனால் அது நம் சுய உற்சாகத்தையே அல்லவா கொன்றுவிடுகிறது! எனக்கு ஆழங்கள் வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். அவை சுவாரஸ்யம் மிக்கவை என்றும் நான் நம்பவில்லை. இந்தப் படம் எனக்கு ஒரு சாகசம். 
இதற்கு முன் நான் பெரிய நட்சத்திரங்களைப் போட்டு படமெடுத்ததில்லை. நான்தான் என்னுடைய நட்சத்திரம். இதைச் சொல்வதில் எனக்கு ஒளிவு மறைவு ஏதுமில்லை. மார்லன் பிராண்டோவை இப்படத்தில் போட்டதற்கு காரணமே அவர் நகைச்சுவை உணர்வற்ற இறுகிய மனிதராக இருந்ததுதான். அவர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று தோன்றியிருந்தால் நான் அவரைப் போட்டிருக்க மாட்டேன் போலும்! 
மிகவும் கட்டுக் கோப்புடன் யதார்த்த பாணியில் உருவாக்கப்பட்டதாலோ என்னவோ இப்படம் என் மற்ற படங்களைவிட அதிக கோமாளித்தனமானதாகத் தோன்றுகிறது. 
சிந்தனை என்பது ஜடமானது. அது தேங்கிய குட்டை. அறிவு ஜீவித்தனமும் பெரிய விஷயமல்ல. தே ஆர் ஸ்டேல். வெரி ஸ்டேல். அப்புறம் - விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ''இது நிஜ வாழ்வைப் பிரதிபலிக்கிறது'' என்பார்கள். ஆனால் வாழ்க்கை என்பது ஒரு கல்லறையிலிருந்து இன்னொரு கல்லறைக்கு போவதல்ல. அதைப் போலவே மனிதர்களும் வாழ்க்கையைக் கூடுமானவரை அசிங்கமாகவும், துயரமாகவும் சித்தரிப்பது, நன்மைக்காக என்று சொன்னால் கூட அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் அது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும். எனவே நாம் ரொமாண்டிஸத்தை விரும்புகிறோம். 
சாகசமும் கற்பனையுமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட சிறையில் கிடப்பதோ, பூமிக்கடியில் பிணமாக இருப்பதே மேல். 
என் ட்ராம்ப் கதாபாத்திரம் வெற்றியடைந்ததன் ரகசியமே அதுதான். எதையும் எளிதாக்கிக் கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், எந்த விஷயத்தையும் ரசிக்கப் பழகுதல். இதுவே நான் மிகவும் அனுபவித்து செய்த கற்பனை. விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 
1914-ல் நான் ஹாலிவுட்டுக்குப் போனேன். அப்போது என் வயது 24 ஆன போதும் 18 வயது இளைஞனைப் போல இருப்பேன். மிகவும் மெலிந்த இளைஞன் - ரொம்பவும் சீரியஸ், அடிக்கடி நெர்வஸாகி விடுவேன். முதன் முதலாக நான் நடித்தக் காட்சி ஒரு பார்ட்டியில் இடம் பெற்றது. அங்கு நான் ஒரு ஏழை. எனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி எல்லாவித அசட்டுத்தனங்களும் செய்வேன். பெண்களைப் பார்த்து தொப்பியை உயர்த்துவேன். எனக்கு உண்மையில் தேவை ஒரு இடம். அதைத்தேடி உட்காருவேன். ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைப்பேன். ஒரு அழகான இளம் பெண் என் காலை மிதித்து விடுவாள். அவள் 'ஸாரி' சொல்லும் முன்பு எழுந்து என் தொப்பியை எடுத்து ஸாரி என்பேன். இதுதான் அக்காட்சி. இதில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று எனக்குள் உயிர்ப்பு வந்தது. என் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்துவிட்டது. இதுதான் - இந்தக் கதாபாத்திரம்தான் எனக்கு ஏற்ற ஒன்று. இத்தனை நாள் நான் தேடிக்கொண்டிருந்தது இதைத்தான். இந்த டிராம்ப் கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. யாரிடமும் எதுவும் வெளிக்காட்டாமல் பரபரப்பாக நடித்து முடித்தேன். 
டிராம்ப் கதாபாத்திரம் என்னையே பிரதிபலித்தது. ஒரு காமிக் மனநிலையை, இயல்பாக என்னுள் இருந்த ஒன்றை அது தட்டிவிட்டது. அதன் அசட்டுத்தனம் என்னை ஈர்த்தது. எந்த கோமாளிக் கூத்தையும் நான் செய்யலாம் அல்லவா? 
மனிதர்கள் இக்கட்டான சந்தர்ப்பங்களில் தான் வேடிக்கையாக நடந்துகொள்கிறார்கள். ஒருமுறை கென்னடி ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் அமர்ந்திருந்த அவரது கட்சிக்காரர்கள் சிலர் அவருக்கு எதையோ தெரிவிக்க அவர் இன் பண்ணியிருந்த சட்டையை இழுத்துவிட்டனர். கென்னடி பேச்சை நிறுத்தாமலே, திரும்பிக் கூட பார்க்காமலேயே ஒரு அனிச்சைச் செயலாய் அதைச் சரிசெய்துகொண்டார். 
மீண்டும் அவர்கள் அவருடைய சட்டையை இழுக்க, மீண்டும் அதை அவர் சரிப்படுத்தினார். இது மிகவும் வேடிக்கையாகவும் மனித இயல்பாகவும் இருந்தது. தன் சட்டையை அப்படியே விட்டு விடவும் அவர் தயாராக இல்லை. அதை ஒரு பெரிய பிரச்னையாக்கவுமில்லை. 
மனிதம் எனும் பூமத்திய ரேகையை யாராலும் அழித்துவிட முடியாது. தன் இருப்பை வெளிப்படுத்திவிடும் அது. சக மனிதனுக்காக அனுதாபமின்றி ஒருவன் நகைச்சுவை செய்ய இயலாது. இந்த அனுதாபம், பணிவு, விட்டுக் கொடுத்தல் எல்லாவற்றையும் நான் பணமில்லாத ஒரு சராசரி மனிதனின் மீது அமைத்துக்கொண்டு என் ட்ராம்ப் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டேன். 
என் இளமைப் பருவம் துயரமானது. விரக்தி, ஏமாற்றம் இவற்றுடன் பட்டினியும் கிடந்தேன். என்னைச் சுற்றி நிறைய வெண்ணையும் ரொட்டியும் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பட்டினி கிடந்தேன். வறுமையின் சோர்வும் அவமானமும் மட்டுமின்றி நோயுற்ற என் தாயையும் சுமந்து வீதி வீதியாக அலைந்திருக்கிறேன். எனது இந்த ஆரம்பச் சூழல்களால் துயரத்தில் நகைச்சுவை என்பது என் இன்னொரு இயல்பாக ஆகிப் போனது. குரூரம் கூட காமெடியின் அம்சமாகிவிட்டது. 
நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம். ய·ப்ளோர் வாக்கர் படத்தில் வயதான ஒரு கிழவன் உடல் நடுங்க தள்ளாடியபடி வருவான். நான் அவனிடத்தில் ஒரு இசைக் கருவியைத் தந்து வாசிக்கச் சொல்வேன். நடுங்கும் கரங்களால் அதை வாங்கி வாசிக்க இயலாமல் அவன் உடம்பே ஆடிக் கொண்டிருக்கும். முதுமையின் இந்த கோரத் தாண்டவம் உண்மையில் அழ வைக்கும் விஷயம். ஆனால் திரையில் இக்காட்சியைப் பார்த்த எல்லாருமே சத்தம் போட்டு சிரித்தார்கள். 
ஒரு சூழ்நிலைக்கு ஆட்படுகிறபோது ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட எண்ணம் ஏதும் இல்லையெனினும் இருப்பது போல காட்டிக் கொள்வான். அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிற பாசாங்கு அது. என் டிராம்ப் கதாபாத்திரம் அப்படிப்பட்டதுதான். அவன் எப்போதும் இயல்பாகவும், பரபரப்பின்றியும் இருப்பான். ஒரு கடையில் ஸ்டாக்கிங் போட்ட ஒரு செயற்கைக் காலைப் பார்த்தாலும் ரொம்பவும் மென்மையாக தொட்டுப் பார்ப்பான். 
அவன் எண்ணம் அப்பாவித்தனமான ஒரு பாசாங்கு. அப்போது நான் மிகமிக குரூரமான செயல்களை செய்தாலும் மக்கள் கரவொலி எழுப்புவார்கள்! 
பல நேரங்களில் எனது இந்தத் தொழில் துணுக்குகள் என் துயரமிக்க நாட்களின் வெளிப்பாடாய் அமைந்தது. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை. 
என் கதாபாத்திரம் இதுதான் என்று தீர்மானித்து விட்டேன். பணம் எனக்கு மிகவும் தேவைப்பட்டது. ஒரு வெற்றிதான் வறுமைச் சிறையிலிருந்து என்னை விடுதலை செய்யும் என்று உணர்ந்தேன். என் காமிக் உலகை நான் படைக்கத் தொடங்கினேன். அப்போது எதுவும் செய்ய முடியும் என்ற தைரியம் எனக்குப் பிடிப்பட்டது. ஒரு கதையை வைத்திருந்தேன். இதை நன்றாக பண்ண முடியும் என்று தோன்றியது. அதில் டிராம்ப் ஒரு போலீஸ்காரன். அவன் தன் லத்தியால் ஒரு தடியனை அடிக்கிறான். அந்தத் தடியனோ போலீசைவிட பலசாலி. அவன் என்னை திரும்பி அடிப்பான். அவன் அடிக்க, நான் அடிக்க மீண்டும் அவன் அடிக்க, நான் அடிக்க காட்சி நன்றாக வந்திருந்தது. 
ஆனால் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது? எப்படி இந்தத் தடியனை நான் அடித்து வீழ்த்தப் போகிறேன்? அப்போது தான் அந்த விளக்குக் கம்பத்தைப் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை உதித்தது. நான் அவனை அடிப்பேன். அவன் அசையாமல் நிற்பான். தன் பலத்தைக் காட்ட அவன் விளக்குக் கம்பத்தை வளைப்பான். நான் சட்டென்று அவன் முதுகின் மீது தாவி ஏறி அவன் தலையை விளக்கின் உள்ளே திணித்து கேஸை திறந்து விடுவேன். இது பிரமாதமாக அமைந்து விட்டது. 
சூழலிலிருந்து உருவானதால் அது நிஜமாகவே நல்ல காட்சியாகி விட்டது. ஒரு நல்ல காட்சி என்பது தன்னுடன் நிற்பதில்லை. அது மேலும் மேலும் அலையெழுப்பிச் செல்லும். 
மூடைப் பொறுத்தே ஒருவனுக்கு படைப்பாற்றல் எழுகிறது என்று நான் நினைக்கிறேன். இசை, அமைதியான கடல், ஆக்ரோஷமான கடல், ஓர் அழகான வசந்தகாலப் பகல் நேரம், இப்படி இருக்கிறபோது 'ஓ! நான் ஏதாவது செய்ய வேண்டுமே' என்ற உந்துதல் எழுகிறது. 
படைப்புக்குரிய இன்ஸ்பிரேஷன்களால் ஒரு படைப்பாளி எப்போதும் களைப்படைவதில்லை. திடுமென எழுந்து யாரும் எதுவும் படைத்துவிடுவதுமில்லை. நீ உன் மன நிலையால் கதவுகளைத் திறக்கும் போதுதான் படைப்பு நிகழ்கிறது. ஒரு எலும்புக்கூடு கிடைக்கும். 
அப்புறம் அதற்கு சதை கூட்ட ஒவ்வொரு நாளும் சிரத்தை எடுக்கலாம். உனக்குள் ஒரு மகத்தான சுய உற்சாகம் வேண்டும். தன்னிலை உணர்கிற பிரக்ஞை வேண்டும். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பிறக்கிற ஒற்றைப் பிள்ளை! திடீரென்று வாழ்க்கையைக் கண்டு பிடித்தல் - வாழ்க்கையைப் பிரதிபலித்தல். 
நான் என் டிராம்ப் கதாபாத்திரத்தை ரொம்பவும் நேசிக்கிறேன். அதை இனி எப்போதும் என்னால் மறு பரிசீலனை செய்ய இயலாது. அவன் எப்படி பேசுவான், என்று அவனுக்கே தெரியாது. அவன் குரல் எது? அவன் ஒரு வாக்கியத்தை எப்படி உச்சரிப்பான்? ஸாரி. 
டிராம்ப் ஒசையை விரும்புபவனல்ல. அவன் மெளனமானவன். அதற்காக அவனை நீங்கள் பின்புறம் உதைக்கலாம். 
இந்த மெளனம் என்கிற படைப்பைப் படைத்த படைப்பாளி யாரோ எனக்கு தெரியாது. ஆனால் அதைவிட அதிகம் பேசகிற வார்த்தையை நான் அறிந்ததில்லை. மெளனத்தில் அற்புதங்கள் செய்யலாம். அது நம்பும்படி இருக்கும். வெறும் அசைவு போதும். அதுவே ஒரு பறவையின் சிறகைப் போன்றது. பேசிய வார்த்தைகள் எரிச்சலூட்டுபவை. ஒலி என்பதே செயற்கையானது - வெளிப்படையானது. அது எல்லாவற்றையும் நிஜமற்ற போலித் தன்மைக்கு சுருக்கி விடுகிறது. மெளனம் கவிதையின் வெளிப்பாடு. என்னுடையது காமிக் கவிதை. பேசும் படங்களில் நான் என் சொல்வன்மையை இழந்து விடுவேன் என்று எனக்கு நன்கு தெரிகிறது. 
Countess படத்திலும் ஒரு காட்சி இருந்தது. மார்லன் பிராண்டோ தன் அறையில் அமர்ந்திருப்பார். அவர் மனைவி வருவாள். அவர் டிராயரில் இருக்கிற பிராவை பற்றி விசாரிப்பாள். அவர் பேச மாட்டார். தன் தலையைத் தொடங்கப்போட்டு அறையை விட்டு வெளியேறி விடுவார். அவர் முகத்தை உயர்த்தி புருவம் விரித்து ஒரு பார்வை பார்ப்பார். ஒரு பார்வையைவிட பெரிய அசைவு எது? 
என் கதை அறிவு சொல்லப்படாதவற்றின் மீதுள்ளது. மிகவும் சாதாரண இடத்தில், உள்ளுக்குள் இழையோடும் மெளனத்தின் மீது தான் என் ஆர்வம். மரபுரீதியான வார்த்தைகளிலும் செயல்களிலும் இல்லாத மெளனம். நான் மிகவும் விரும்பிய காட்சி ஒன்று உள்ளது. இதைச் செய்ய எனக்கு ரொம்பவும் விருப்பம் உள்ளது. 
ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகி பிரிய நேரிடுகிறது. அவள் தன் கணவனுடன், அவன் தன் மனைவியுடன், அவர்கள் வெறுமனே ''ஹலோ'' என்று நலம் விசாரித்துக் கொள்வார்கள் - ஒரு தலையசைப்பு - ஒரு பார்வை அப்புறம் நகர்ந்து விடுதல். அந்த அற்புதமான நெருக்கம், அந்தக் கொடூரமான பிரிவு எல்லாமே அந்த அசைவில், அந்த மெளனத்தில் தெரிந்துவிடும். 
'த கவுண்ட்ஸ்' தவிர என் மற்ற படங்களில் 'சிட்டி லைட்ஸ்' தான் என் மிகச் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன். கண்ணில்லாதவரின் கதை ஒன்றை எடுப்பது என் நீண்ட நாள் ஆசை. 
பிரியமானவள் இதில் பூ விற்கிற குருட்டுப்பெண் ஒரு ரோஜாவை எடுத்து நீட்டுகிறாள். நான் அவள் கண்ணில்லாதவள் என்றறியாமல், ''நான் இந்தப் பூவை எடுத்துக்கொள்கிறேன்'' என்று வேறொரு பூவைக் காட்டுகிறேன். ''எது?'' என்பாள் அவள். ''முட்டாள் பெண் இது கூடவா அவளுக்குப் புரியவில்லை'' என்று எண்ணுவேன். அவள் கையிலிருந்த பூ தரையில் விழுந்துவிடும். அவள் அதை தன் கைகளால் துழாவியபடி தேடுவாள். நான் அதை எடுத்துக் கொள்வேன். அவள் இன்னமும் தேடிக் கொண்டிருப்பாள். அப்போது நான் உணர்ந்துகொள்வேன். அந்த டிராம்ப் (நான்) அப்போது அந்தப் பூவை கண்ணருகில் வைத்துப் பார்ப்பான். தன் கண்ணிலும், அவள் கண்ணிலும் வைத்து வெறுமனே ஒரு பார்வை பார்ப்பான். 
'கோல்ட் ரஷ்' வேறுவித அனுபவம். அது வேதனையான காலமாகிவிட்டது. கோல்ட் ரஷ் என்றால் தங்கத்தைத் தேடுவது. அப்புறம் என்ன? இந்த வடதுருவக் கதைகள் தான் எத்தனை மந்தமானவை? இதில் எப்படி காமெடி பண்ணுவது? நான் பனியைப்பற்றி யோசித்தேன். 
டோனர் என்பவரின் குழு பனியின் மீது பயணம் செய்த போது பசியில் வாடி சாவு, நரமாமிசம் சாப்பிடுதல், ஷூவை சாப்பிடுதல் என்றெல்லாம் அவதிப்பட்டதைப் படித்தேன். 
எனக்கு இது பிடித்துப்போனது. இதிலும் காமெடிக்கான விஷயம் இருக்கிறது. 
என் ஷூவை குழம்பு வைப்பது போன்ற காட்சியை நான் எடுக்க முடிவு செய்தபோது எனக்கு அதில் தயக்கம் இருந்தது. இது மிகையானது போல தோன்றியது. ஆனால் இது ஒரு உண்மை சம்பவத்தின் ஆதாரத்துடன் அமைந்த காட்சி, மேலும் ஒரு சீரியஸான சூழ்நிலையை வேடிக்கையானதாகப் பண்ணுவது சுவாரஸ்யமானது என்று எண்ணினேன். அந்த ஷூ கடினமானது. இரண்டு நாட்களாகப் படப்பிடிப்பு தொடர்ந்தது. அந்த பெரிய தடிமனான மனிதராக என்னுடன் நடித்தவர் இனிமேலும் இந்த எழவெடுத்த ஷூவை சாப்பிட என்னால் முடியாது'' என்று சொல்லி விட்டார். 
'த கிரேட் டிக்டேட்டர்' எடுக்கையில் நான் ஹிட்லரைப் பற்றி அதிகம் படிக்கவில்லை. அவன் நகைச்சுவை உணர்வில்லாத மனிதன் என்றும் தன் அதிகார பலத்தினால் அவன் மிகவும் ஆபத்தானவன் என்றும் அறிந்திருந்தேன். அவனது அந்த அகன்ற பார்வை, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் புருவத்தை அசைத்தல், தன் கையை மடக்கி முஷ்டியை உயர்த்துதல் எல்லாமே அவன் எத்தனை தன்னம்பிக்கை அற்றவன் என்று எடுத்துக்காட்டியது. அவனுக்கு உதவியாளனாக ஒரு கறுப்பன் ''நீங்க செய்தது சரி பாஸ்'' என்று சொல்வது போல படத்தில் அமைத்தேன். நிஜத்தில் அப்படி ஒரு ஆள் அவனுக்கு இருந்திருக்கக் கூடும். 
இன்னொரு பெரிய காமெடியை செய்யவும் எனக்கு விருப்பம் உள்ளது. அது பெரிய பாசாங்குகளைக் கிண்டலடிப்பது. பைபிள், மைக்கலாஞ்சலோ, புராதன ரோம் நகரம் மாதிரி... 
இதில் நான் ஒரு சின்ன ரோல் மட்டும் செய்யலாம் என்று நினைக்கிறேன். பேசும் படத்தின் யுகத்தில் வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க ஆரம்பித்தால் இயக்கத்தில் கறை விழுந்துவிடும். ஏற்கனவே சாப்ளினுக்கு வயதாகிவிட்டது. அவர் டெக்னிக் பழைய பாஷனாகிவிட்டது என்கிறார்கள் என் விமர்சகர்கள். அதற்காக, நாம் கேமராவைத் தலை கீழாகப் பிடித்தோ, தட்டாமாலை சுற்றியோ படமெடுக்க முடியாதே! Box Office எனும் மாயாஜாலம் அப்படியெல்லாம் நிகழ்ந்துவிடுவதில்லை. ஒரு கேமரா செய்கிற எல்லா வித்தைகளையும் கொண்டு மனித உணர்வுகளை பிரதிபலிக்க என்னால் முடியும். 
மக்கள் எளிமையை விரும்புகிறார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலகம் ரொம்பவும் சிக்கலானது. மனித இதயங்களில் எத்தனையோ ஆக்கிரமிப்புகள். (அப்புறம் இந்த சினிமா வெடி குண்டுகள் வேறு... இவை நிஜமல்ல). 
மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் பிரக்ஞையின்றியே நல்ல தீர்ப்பு வழங்கி விடுகிறார்கள். அவர்களின் விமர்சனமும் மென்மையானதுதான். பொதுவாக அவர்கள் விமர்சிப்பதே இல்லை. இது மோசமான படம். இதை எடுத்தவன் மிகவும் மட்டமானவன், என்று விமர்சகன் ஒருவன் எழுதக் கூடும். மக்கள் அப்படியல்ல. ''அந்தப் படத்துக்கு போக வேண்டாம் அந்தப் படம் சரியில்லை!'' என்று மட்டும் சொல்வார்கள். 
சினிமாவில் மிகவும் முக்கியமானது 'க்ளோசப்'. யாராவது புன்னகைக்கிற போது, யாரையாவது பார்க்கிறபோது, ஒரு நல்ல க்ளோசப் உலகின் முடிவாகவும் எல்லாவற்றின் புதிய ஆரம்பமாகவும் ஆகிவிடுகிறது! ஒரு 'க்ளோசப்' வருகிற போது அதன் நாடகத்தன்மைக்காக அதற்கு இணையாக வேறொரு க்ளோசப் போடுவது என்கிற நவீன உள்ளடக்கத்தைக் கூட சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அப்படியாயின் மனிதர்கள் 'வளவள' வென்று பேசுவதையே காட்ட வேண்டி வரும். டயலாக் முடிந்து க்ளோசப் வருமானால் அது தன் முக்கியத்துவத்தையே இழந்து விடும். நடிகனின் மூக்கு நுனிமீது கேமராவை செலுத்த யாராலும் முடியும். அது எளிதான விஷயந்தான் ஆனால் சரியான உணர்வின் போது போக வேண்டுமே! நான் நடிப்பை மிகவும் நேசிக்கிறேன். கேமரா நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 
உண்மையிலேயே நான் 'க்ளோசப்' ஐ அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. மிகவும் அந்தரங்கமான, உணர்வுபூர்வமான கணங்களில் மட்டுமே அதைப் பயன்படுத்தி வருகிறேன். 
என் முந்தைய நாடக அனுபவம் கேமராவை ஒரு கூடுதல் பயனாகவே காணச் சொல்கிறது. நான் அதையே பின்பற்றுகிறேன். நாடக ஓட்டம் மீதுதான் என் நாட்டம். தூரத்தின் இடைவெளி முதலியவற்றை கேமராவின் மூலம் கையாள விரும்பியிருக்கிறேன். சினிமாவைப் பொறுத்தவரை என்னை யாராவது ஒரு சட்டம் இயற்றச் சொன்னால் உரை முதலிலும் கேமரா பின்னரும் என்றுதான் எழுதி வைப்பேன். 
கதை தன் மாய வலையை வளர்த்துக்கொள்ள நீ அவகாசம் தர வேண்டும். இல்லாவிட்டால் அது தன் நிஜத்தையே கூட இழக்க வேண்டிவரும். ஒரு விதையை மண்ணில் போட்டு வளர்ப்பது போன்றது இது. 
இசை, அமைதியான கடல், ஆக்ரோஷமான கடல், ஓர் அழகான வசந்தகாலப் பகல் நேரம், இப்படி இருக்கிறபோது 'ஓ! நான் ஏதாவது செய்ய வேண்டுமே' என்ற உந்துதல் எழுகிறது. 
நான் ஒரு நடிகனா? இயக்குனரா? நான் இயக்கனராகவே இருக்க விரும்புகிறேன். அது ஏனென்றால் எவ்வளவு பெரிய நடிகனுக்கும் தன்னால் இதைச் செய்ய முடியுமா என்ற பயம் வந்துவிடும். வேறு யாரோவாக தன்னை எண்ணிக்கொண்டு நடிப்பதில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நிமிடமும் உன் சுயம் உன்னை உறுத்தி இடைஞ்சல் செய்யக் கூடும். நடிப்பாற்றல் மிகவும் அபூர்வமான செயல். எப்போதாவது ஒரு முறை ஒரு நல்ல நடிகன் தனக்கும் தன் பாத்திரத்திற்கும் இடையில் அந்த பேலன்சை செய்து விடுவான். அது ஒரு மாயாஜாலம் போல நிகழ்ந்துவிடும். 
சில நேரங்களில் கேமரா மாஜிக் செய்துவிடும். ஒரு முறை ஒரு நாடகத்தில் என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை. ஆனால் அதையே திரையில் பண்ணிப் பார்த்த போது என் குறை புரிந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் கேமரா, க்ளோசப் முதலியவற்றை நான் நாடியிருக்கிறேன். 
'சிட்டி லைட்ஸ்' படத்தின் இறுதிக் காட்சியில் நான் ஒரு 'க்ளோசப்' வைத்திருந்தேன். அந்தக் குருட்டுப் பெண் தன் பார்வையை அடைந்துவிடுவாள். அவளுக்கு பார்வை வர பல சிரமங்கள் பட்ட டிராம்ப் ஒரு ஏழை. ஆனால் அவன் பெரிய வசதிமிக்க பணக்காரன் என்று அவள் எண்ணிக் கொண்டிருப்பாள். எனவே அவள் பூ விற்கிறபோது எதிரே நிற்கிற டிராம்ப் தான் தன் காதலன் என்று அவளுக்குத் தெரியாது. ஒரு கணம் அவள் கைகள் அவள் மீது படும். சட்டென்று அந்த ஸ்பரிசம் அடையாளம் காட்டிவிடும். ''அடக் கடவுளே! இவனா அந்த மனிதன்?'' என்பாள் அவள். 
இந்தக் காட்சியை படமாக்க நான் பல டேக்குகள் எடுத்தேன் (கிட்டத்தட்ட 100 டேக்குகள் எடுத்ததாக ஒரு புள்ளி விபரக் குறிப்பு தெரிவிக்கிறது!) அவை எல்லாமே செயற்கையாகவும் மிகையாகவும் ஓவர் ஆக்டிங்காகவும் அமைந்தன. இம்முறை தவறக்கூடாது என்றொரு உறுதி எடுத்தேன். அது ஒரு அருமையான விழிப்புணர்வை எனக்கு அளித்தது. நான் என்னை விட்டு விலகிப் போய் அந்தக் கதாபாத்திரத்தை கவனித்தேன். 
அவள் என்னை நினைக்கிறாள் என்று அவன் எந்த முயற்சியுமின்றி கவனித்துக் கொண்டிருந்தான். எனக்கு பிடிபட்டுவிட்டது. அப்போதுதான் மிகவும் தூய்மையான ஓர் இடைச்செருகலாக அந்தக் 'க்ளோசப்' ஷாட் இடம் பெற்றுவிட்டது. ஆம்! நான் 'க்ளோசப்'-களை இடைச்செருகல்களாகவே கருதுகிறேன். நான் செய்தவற்றிலேயே ரொம்பவும் சுத்தமான இடைச்செருகல் இதுதான். 
எனக்கு வயதாகிவிட்டது. உண்மைதான். ஆனாலும் நான் ரொம்பவும் உற்சாகமானவன். என் வயதை நான் மிகவும் ரசித்து அனுபவிக்கிறேன். வயதின் காரணமாக பல பயங்களை என்னால் எளிதாக விட்டுவிட முடிகிறது. எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. நட்பினால் நான் கட்டுப்பட்டது கிடையாது. முதல் காரணம் நான் ரொம்பவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அடுத்து நான் பிஸியாக இருக்கிறேன். நான் ரொம்பவும் சோகமாக இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள்.இல்லை! துளி கூட சோகம் இல்லை. துணை நாடி நான் சிறுவயதில் தவித்திருக்கிறேன். இப்போது என் தனிமையே எனக்கு நிறைவளிக்கிறது. நான் அடுத்த மனிதனுடனோ, அடுத்தவன் என்னுடனோ உடன்பட்டு நிற்க முடியவில்லை. 
என்னை எப்போதும் தாங்கி நிற்பது சினிமாதான். என்னைப் பற்றி ஒரே ஒரு நபர்தான் மிகவும் சரியான கணிப்பு வைத்திருக்கிறார். அவர் 'ஜேம்ஸ்பாண்ட்' சீன் கானரி! 
இத்தனைக்கும் அவர் என் நெருங்கிய நண்பர் கூட அல்ல! ஒரு ஸ்டூடியோவில் சிறிது நேரம் பேசியதுடன் சரி. அவர் என்னைப் பற்றி நல்லதொரு விமர்சனம் செய்தார். 
''சாப்ளின் கவனமாக இருக்கிறார்!'' என்று கூறினார் அவர். ஆம்! நான் என் தொழிலைப் பற்றி கவனமாக இருக்கிறேன். என்னைப் பற்றி கவனமாக இருக்கிறேன். இதைவிட சிறப்பாக என்னால் செய்ய முடியுமா? முடியாது. எனவே இப்போது என் கையிலிருப்பது இந்த அருமையான தொழிலான சினிமா மட்டும்தான். இதில் உண்மையிலேயே நான் கவனமாக இருக்கிறேன். 
தமிழில்- செந்தூரம் ஜெகதீஷ்
செந்தூரம் சினிமா சிறப்பிதழில் பிரசுரமானது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...