Thursday 7 April 2016

பயணம்-6 மருதமலை, கோவை




 
 மருதமலை மாமணியே முருகய்யா.....
தேவரின் குணம் காக்கும் வேலய்யா என்ற பாடல் தேவரின் தெய்வம் படத்தில் இடம்பெற்றது. மதுரை சோமு தாமே திரையில் தோன்றி பாடிய இப்பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எழுதியவர். கவியரசர் கண்ணதாசன்
35 வயது வரை கோவில்களுக்குச் செல்வதையே தவிர்த்து வந்த நாத்திகவாதியாகவும் மார்க்சீய ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்த என்னை மாற்றியதில் இந்தப் பாடலுக்கும் பங்கு உண்டு. ஓஷோவைப் படித்ததும், கம்பராமாயணத்தி்ல் திளைத்ததும் ஆன்மீக வாசலை எனக்குத் திறந்தன. மருதமலை மாமணியே முருகையா என்ற மதுரை சோமுவின் உருக்கம் என்னை தடுத்தாட்கொண்டது.மருதமலை கோவிலில் 90 களின் தொடக்கத்தில் சில நண்பர்களுடன் அதன் படிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நினைவுகள் தோன்றின. அப்போது எனது குடும்பத்தில் நிலவிய  துன்பம் தீர மருதமலை கோவிலில் வேண்டிக் கொண்ட ஒரு தோழியின் நினைவும் அலைக்கழித்தது. இம்முறை டூ வீலரில் மலைப்பாதையில் சென்றது தனி அனுபவம். சில்லிட்ட காற்றுடன் கண்ணுக்கு எட்டிய வரை திறந்த வெளியாக காட்சியளித்தது ஊர்.

 மதுரை சோமுவும் ஓஷோவும் இல்லாவிட்டால் நான் வறட்டு நாத்திகவாதியாகவே இருந்திருப்பேன் என்று நினைக்கையில் கண்ணீர் துளிர்க்கிறது. பக்தி என்பதை விட ஆன்மீக அனுபவம் என்றுதான் இதனைக் கூற விரும்புகிறேன்.

இத்திருத்தலம் பற்றிய குறி்ப்பு ஒன்றை காணலாம்.....

கோயமுத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன் இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.
முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.[1]
முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

 ( விக்கிப்பீடியா )

மருதமலை அருகிலேயே பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
பாரதியாரில் படித்த பல மாணவ-மாணவிகள் ,துணைவேந்தராக இருந்த திரு.சிற்பி உள்ளிட்ட பலருடன் நட்பு இருந்தது. அவர்களை சந்திக்க அடிக்கடி முன்பு அங்கு செல்வதுண்டு. இதே பாரதியார் பல்கலைக்கழகத்தில் எத்தனையோ காதல் கதைகளையும் பார்த்திருக்கிறேன். இப்போதும் எதிரே உள்ள மகளிர் விடுதியிலும் சாலைகளின் நிசப்தங்களிலும் காதலர்களின் நடமாட்டத்தை காண முடிந்தது. அன்று வேறு காதலர்கள். இன்று வேறு காதலர்கள்.ஆனால் காதல் மட்டும் அப்படியே உள்ளது. கல்வி உள்ள இடமெல்லாம் காதலாக மாற்றிய மாணவர் செல்வங்களுக்கு ஒரு வார்த்தை என்னை மாதிரி கண்ணீர் சிந்தும் காதல்களை வளர்க்காதீர்கள் . தெளிவாகவும் திடமாகவும் காதலியுங்கள். வாழ்ந்தால் சாதகப்பறவைகளைப் போல் காலம் முழுவதும் இணைந்து வாழுங்கள். அல்லது நட்பின் கைக்குலுக்கல்களுடன் விலகி விடுங்கள். மன்மதன் அம்பு தைத்த இடங்களில் காயங்கள் ஆறுவதே இல்லை.

 எனனைப் போல அவளும் வந்ததுண்டா அந்த இடங்களுக்கு
அந்த கணங்களுக்கு ?


கோயமுத்தூர் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி சுற்றி வந்தேன். ரயில நிலையம், டவுண் ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட முக்கிய இடங்களுடன் எனது நினைவுகளில் தங்கிப் போன லாலி ரோட்டில் வடவள்ளி அருகே உள்ள தனபால் நூலகம், வேளாண் பல்கலைக்கழகம் அருகே உள்ள பயிரியல் பூங்கா, வ உசி பூங்கா, உ்க்கடம் பேருந்து நிலைய பழைய புத்தகக் கடைகள், கிராஸ்கட் ரோடு என இலக்கில்லாமல் எங்கெங்கோ திரிந்த போது கோவை அன்றைக்குப் பிடித்தது போலவே இன்றைக்கும் பிடிக்கிறது. கோவை மக்கள் அருமையானவர்கள். உணவோ ருசியிலும் ருசி. பேக்கரிகள் பிரமாதம். வெயில் மட்டும் தான் நினைவுகளைப் போலவும் சென்னையைப் போலவும் சுட்டது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...