Thursday 5 November 2020

புத்தகக் கடைகள்

மீண்டும் மீண்டும் ஒரு மனிதன் புத்தகக் கடை நோக்கி செல்ல வைப்பது எது என்று புரியவில்லை. படித்து தேவைப்படாத 30 ஆங்கில புத்தகங்கள் ஒரு பையில் போட்டு வைத்திருந்தேன் .அதை ஒரு புத்தக வியாபாரியிடம் கொண்டு போனேன்.₹ 300 தருவதாக கூறினார் .எல்லாம் பெரிய புத்தகங்கள். ஓஷோ நூல்கள் சிலதும் இருந்தன.கொடுக்க மனமில்லாமல் திருப்பி சுமந்து வீட்டுக்கு வந்தேன்.மறுபடியும் இன்று காலை நல்ல வெயில் காயுது என அண்ணாசாலை சிவா புத்தகக் கடைக்கு எடுத்துச் சென்றேன். சகோதரன் இறந்த துக்கத்தில் பல நாட்களாக கடையைத் திறக்க மனமின்றி இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தான் கடையைத் திறந்தார்.கொரோனா அச்சம் காரணமாக யாரும் புத்தகங்களை வாங்க வருவதில்லை என்று சொன்ன அவர் புத்தகங்களை வாங்க மறுத்து விட்டார். பின்னர் பணம் மெதுவாக அடுத்த மாதம் வாங்கிக் கொள்வதாக சொன்னதும் எடுத்துக் கொண்டு கணக்குப் போட்டார்.₹ 680 என சொன்னார். குறைவாக தெரிந்தும் கொடுத்து விட்டேன்.அவரிடம் ₹ 140க்கு இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு ₹ 520 பாக்கி விட்டு திருவல்லிக்கேணி சென்றேன். அதற்குள் வானம் இருட்டியது.வெயிலை நம்பி கடை போட்டவர்கள் அவசரமாக புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தனர் .கிடைத்த சில நிமிடங்களில் 3 கடைகளைப் பார்த்து ₹400க்கு புத்தகங்களை வாங்கினேன். அவை சிறந்த புத்தகங்கள். குறைந்த விலையில் மழை காரணமாக பணத்தேவை யின் பொருட்டு கொடுத்து விட்டார்கள் வியாபாரிகள். குறைந்த விலையில் புத்தகங்கள் விற்ற போது எழுந்த வருத்தம் குறைந்த விலையில் வேறு முக்கிய புத்தகங்கள் வாங்கியதால் மகிழ்ச்சியாக மாறியது.முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் புத்தகக் கடைகளை நாடிச் செல்வது எதற்காக? குடும்பத்தில் இருந்து அந்நியமாதல். நட்புகளின் இழப்பு, காதல் கலவிக்கு ஒரு பெண்ணையும் அடையாத தனிமை,சுய கழிவிரக்கத்தை மறைக்க தன்னையொரு தனி மேதையென கருதுதல், மனிதர்கள் மீதான கோபம், வெறுப்பு , விலகல், அச்சம்,கசப்பு... கண்பார்வை முற்றிலும் இழந்து மடியும் வரை தவணை யில் சிறுக சாதல் என எத்தனை காரணங்கள் இருப்பதாக நான் கூற முடியும். என்னுடன் பேச யாருமில்லை. புத்தகங்களுடனே என் வாழ்க்கை முழுவதும் உரையாடிக் கொண்டிரூக்கிறேன்.அந்த உரையாடலுக்காவே இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.அதில் ஒரு சந்தோஷம் கூட கண்டு விட்டேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...