Sunday 13 December 2020

அஞ்சலிகள்

அஞ்சலி பிரபஞ்சன், கவிஞர் மு.நந்தா, பேராசிரியர் பெரியார்தாசன், கோவை ஞானி செந்தூரம் இதழுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த மூன்று ஆளுமைகள் கடைசியாக வந்த இதழ் வரை துணை நின்றனர். இப்போது புதிய வடிவில் இதழ் வருகிறது. இவர்கள் மூவரும் இல்லை. மிகவும் வேதனையுடன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். என் இலக்கிய ஆசானாக விளங்கிய கோவை ஞானிக்கும் என் அஞ்சலி – செந்தூரம் ஜெகதீஷ் பிரபஞ்சன் பிரபஞ்சன் விடை பெற்றார் அன்பு நண்பரும் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பிரபஞ்சன் காலமான சேதியை அச்சத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.ஆனால் அந்தக் கணம் வந்ததும் மனம் கனத்தது. அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து உயிர் மீண்டு வந்தார்.நண்பர் சூர்யராஜனுடன் பிரபஞ்சனை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் சந்தித்து நலம் விசாரித்த போது கூறினேன் உங்களுக்கு இப்ப வாழ்க்கை போனஸ் கொடுத்திருக்கு சார் என்று . மிகுந்த யோசனையுடன் ஆமோதித்த அவர் ஆம் மீண்டும் மரணம் என்னைத் தொடுவதற்கு முன்பு பல காரியங்களை முடிக்க வேண்டும் என்று கூறினார். எத்தனையோ காரியங்களை முடிக்காமல்தான் அவர் விடைபெற்றுவிட்டார் என்று தோன்றுகிறது. நிறைய எழுதவும் அவர் திட்டமிட்டிருந்தார். எழுதியதே நிறைவாக இருப்பினும். புதுச்சேரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரபஞ்சனை காண நானும் சூர்யராஜன், நிமோஷிணி ஆகியோர் திட்டமிட்டோம். அன்று காலை புதுச்சேரி ரயில் ரத்தாகி விட்டது. திரும்பிவிட்டோம். மீண்டும் போக முயற்சித்த நேரத்தில் அவர் விடை பெற்று விட்டார். பிரபஞ்சனை 80 களின் இறுதியில் ஜானி ஜான் கான் வீதியில் உள்ள ஒரு மேன்ஷனில் முதல் முறையாக சந்தித்து பசுமையாக நினைவில் உள்ளது.அதன் பிறகு பல முறை பலவீடுகளில் அவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன். என் நூல்வெளியீட்டு இலக்கிய நிகழ்ச்சிகளில் பணமே வாங்காமல் அன்புடன் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தி தமது செலவில் ஆட்டோ பிடித்துப் போன உன்னதமான மனிதர் அவர் பிரபஞ்சனிடம் பழகிய யாரும் அந்த அன்பை உணர்ந்திருக்க முடியும். நண்பர் யுகபாரதி சொன்னது மாதிரி எல்லோரும் அவருடன் ஒரு காபியை சரவணபவன் ஓட்டலில் சாப்பிட்டிருப்போம். படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் மனம் திறந்து பேசுவார். பெண்கள் அவர் உலகத்தின் படைப்பின் மூலக்கண்கள் .அவர்கள் இல்லாமல் அவர் உலகம் இல்லை. ஆனால் காமத்தை கடந்த ஒரு தெளிவும் வாழ்க்கையை குறித்த தீவிரமான ஒருபார்வையும் அவரிடமிருந்ததை பல பெண்கள் விரும்பினர். பிரபஞ்சனின் மறைந்த உடலுக்கு நண்பர் ஆர்.கே.ரவியுடன் சென்று அஞ்சலி செலுத்தி வந்தேன். அவர் தலை முடி யாவும் கொட்டியிருந்தது. பிரவுன் அல்லது வெண்ணிற சிறு ரோமங்கள் மட்டும் தெரிந்தன. கண்கள் ஆழமான தியானத்தில் இருப்பது போல் மூடியிருந்தன. அழுகை வந்தது .எத்தனையோ அழுகைகளை இதயம் புதைத்துக் கொண்டது போல் இதனையும் புதைத்துக் கொண்டேன். எனக்காக வானம் அழுதது மழை கொட்டியது. வருகிறேன் பிரபஞ்சன் சார் என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். அவர் மறைவு வாழ்க்கை இவ்வளவுதானா என்ற கேள்வியை மீண்டும் மனசுக்குள் எழுப்பியது. இதற்கு பதில் தெரியாமல் சென்னை வந்து சேர்ந்தேன். இன்று வரை அந்த பாதிப்பு நீங்கவில்லை.இருப்பதற்கென்று வருகிறோம்..இல்லாமல் போகின்றோம். -நகுலன் கவிஞர் மு.நந்தா கவிஞர் மு.நந்தா புதுவண்ணைப் பகுதியைச் சேர்ந்தவர். நாளை வேறு சூரியன் என்ற அவர் கவிதைத் தொகுப்பில் எந்த ஊர் எந்த பஸ், காசி மேடு, போன்ற கவிதைகள் இன்னும் மனதில் நிழலாடுகின்றன. தலைக்கு எண்ணெய் இல்லாத சிறுமியின் சிகையில் உள்ள சிக்குகளில்தான் இந்திய பொருளாதாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்த மகத்தான படைப்பாளி அவர். புத்தனின் கொள்கையில் என்ன குறை அவன் போதி மரத்திலா ரத்தக் கறை என சிங்களர்களிடம் கேள்வி எழுப்பியவர். எல்லாவற்றுக்கும் மேலாக 30 ஆண்டுக்கும் மேலாக .இனிய நண்பர். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் எழுதுவதிலும் அடங்காத ஆசை கொண்டிருந்தார். கை விரல் நடுங்க பேடில் வெள்ளைத் தாள்வைத்து எழுதிக் கொண்டிருந்தார். எப்போது சந்திக்கும் போதும் என் சட்டைப் பையில் இருக்கும் அழகான பேனாக்கள் மீது அவர் கவனம்செலுத்துவார்.நானும்விரும்பியே பல பேனாக்களை அவரிடம் தாரை வார்த்தேன். அவர் எழுத வேண்டும் என்று தீராத ஆவல் எனக்கிருந்தது. நந்தாவும் சூர்யராஜனும் நானும் ஒருதிரிசூலத்தின் மூன்றுமுனைகளாக கன்னிமாரா நூலகத்திலும் சென்னை திரையரங்குகளிலும் கையேந்தி பவன்களிலும் வலம்வந்த நாட்கள் மறக்க முடியாதவை. சினிமா கனவுகளும் நிறையவே இருந்தன  அவருக்கு நான் கற்றுக் கொண்ட பல வற்றில் நந்தாவின் பங்கும் சூரியராஜனின் பங்கும் முக்கியமானது. அதை மறுக்கவும் மறக்கவும் மாட்டேன். நந்தாவின் இழப்பு மிகவும் வருத்துகிறது. போய் வா நண்பா...நந்தாவின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டு திரும்பும் போது பைபிளின் வாசகம் கண்களை சந்தித்தது. மரித்தேன்ஆனால் மீண்டும் உயிர்த்தெழுவேன் உயிர்த்தெழு நந்தா உன் புகழ் வாழ்க. பேராசிரியர் பெரியார்தாசன் ந்தூரம் கைப்பிரதியை அச்சு இதழாக்க வேண்டும் என்று அவர்தான் முதலில் ஊக்கம் அளித்தார். பணமும் அளித்து அச்சகத்தையும் தெரிவித்து உதவினார். அவரையே சிறப்பாசிரியராக கொண்டு செந்தூரம் வெளியானது .இந்த இதழ் நிச்சயம் அடுத்த இதழ் லட்சியம் என்று சிற்றிதழ்களின் அமர வாசகத்தை அவர்தான் அப்போது உச்சரித்தார். அடையாளமற்று திரிந்த எனக்கு செந்தூரம் ஜெகதீஷ் என்ற அடையாளம் அவரால்தான் உருவானது. எந்த புத்தக விழாவுக்கு வர அழைத்தாலும் வரிவிடாமல் புத்தகத்தை படித்து வந்து ஆழமாகப் பேசுவார். எனது கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவில் வருவதாக ஒப்புக் கொண்ட ஞானக்கூத்தன் போன்றவர்கள் வராதபோதும் அக்குறை தெரியாத வகையில்அபாரமாகப் பேசி என்னைக் கண்கலங்க வைத்தார். கடைசியில் அவர் அல்லாதாசனாக குரானிடம் சரண் அடைந்தது பற்றியும் எனக்கு ஆச்சரியமில்லை. அவருக்குள் இருந்த பகுத்தறிவு வாதியை உலகம் அறிந்தது போல அவருக்குள் இருந்த ஆன்மீகவாதியையும் நான் புரிந்துக் கொண்டேன். பலமுறை திருமந்திரத்தையும் திருவாசகத்தையும் ஆன்மீகவாதிகளை விடவும் அழகாக ஒப்புவிப்பதைப் ர்த்திருக்கிறேன்.அவர் மீது கூறப்பட்ட அவதூறுகள் விமர்சனங்கள் எனக்கு ஒரு பொருட்டல்ல...நல்லதொரு ஆசானாகவே அவர் எனக்கு இருந்தார். எத்தனைக் காலம் அவருடன் இருந்தேனோ அத்தனைக் காலமும் புதிதாக கற்றுக்கொண்டேன். அத்தனைக் காலமும் நான் வளர்ந்துக் கொண்டிருந்தேன். பெரியார்தாசனின் இறுதிச்சடங்கில்அவர் முகத்தைப் பார்க்கவும் துணிவில்லைஅவரது இறந்த உடலையோ பேசாது மௌனி்த்த உதடுகளையோ வெளிறியமுகத்தையோ காணவும் கண்டு அழவும் எனக்குத் துளிக்கூட விருப்பமில்லை எனவே இறுதிச்சடங்கிற்குக்கூட போகவில்லை. அவர் என்றும் எனக்குள் அணையாத அறிவுச் சுடர். பின்குறிப்பு இந்த நபர்கள் மறைந்து பல ஆண்டுகளாகிவிட்டிருந்த போதும் தாமதமாக அஞ்சலி செலுத்துவதற்கு காரணம் செந்தூரம் மீண்டும் வரும் போது இவர்கள் இல்லை என்பதுதான். தமிழுக்கு என் வணக்கம் கோவை ஞானிக்கு அஞ்சலி - செந்தூரம் ஜெகதீஷ் கோயமுத்தூருக்கு நைட்டியும் சுடிதாரும் விற்பதற்கு கடை கடையாக செல்லும் பணியின் நிமித்தமாக அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். நிகழ் இதழ் ஆசிரியர் கி.பழனிசாமி முகவரி காளீஸ்வரன்நகர் காட்டூர்.... என்பதைப் பார்த்து விசாரித்த போது சில நண்பர்கள் அழைத்துப் போனார்கள். ஒற்றைப் படிக்கட்டு ஏறி முதல் மாடியில் மேலே போனால் ஒரு சிறு அறை. அறை முழுக்க புத்தகங்கள். சில நாட்களில் ஞானியின் குடும்பத்தினருள் ஒருவராக ஆகிப்போனேன். அவருக்கு புத்தகம் படித்து காட்டுவது, நிகழ் பணிகளில் படைப்புகளைத் தேர்வு செய்வது, புதிய புத்தகங்களைப் பற்றி அவருக்கு தெரியப்படுத்துவது ஆகியவை முக்கியமானவை. நிகழ் பணியில் நான் கூட இருந்த போது தேர்வு செய்து சில படைப்புகளை வெளியிட்டோம். அதில் ஒன்றுதான் மனுஷ்யப்புத்திரனின் கால்களின் ஆல்பம் என்ற புகழ் பெற்ற கவிதை. அக்கவிதையை சுஜாதா எடுத்துக்காட்டிய பின்னர் மனுஷ் பிரபலமானார். புத்தகங்கள் படித்து விமர்சனம் எழுதிக் கொடுப்பேன். ஞானிக்கு என் மீது கூடுதலான பிரியம் இருந்தது. நிறைய படிக்கிறவனாகவும் அவர் என்னை புரிந்துக் கொண்டதன் விளைவாக தன்னுடன் அதிக நேரம் இருக்கும்படி கேட்டுக் கொள்வார். ஓஷோ கடவுள் நம்பிக்கை எல்லாவற்றையும் மார்க்சீய மெய்யியல் என்ற ஒற்றைக் கோட்பாட்டினுள் கொண்டு வர முடியும் என்று ஞானி என்னுடன் உரையாடுவார். கடவுள் நம்பிக்கையை எப்படி அய்யா மார்க்சீயத்துக்கு உட்படுத்த இயலும் என்று கேட்பேன் .அதையும் மார்க்சீய மெய்யியலுக்குள் கொண்டு வரலாம் என்று உரைப்பார் ஞானி. அந்தவகையில் தமிழில் அவர் தான் எனக்கு நேரடியான ஆசான். என் கவிதை நூலான இன்னும் மிச்சமிருப்பவைக்கு முன்னுரை எழுதித் தந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதையின் சரடு ஒன்று எனது கவிதைக்குள் ளும் ஓடுகிறது என்பது அவருடைய முக்கியமான விமர்சன வரி. கிடங்குத் தெருவை படிக்க வைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். ஞானியுடன் என் சந்திப்புகள் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னர் குறைந்துவிட்டன. காரணம் கோவை போனது குறைந்துவிட்டதுதான். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவை போயிருந்த போது இரண்டு பேரை பார்க்க மனம் துடித்தது. ஒன்று விபத்தில் சிக்கிய என் நண்பர் ஷாராஜை. இன்னொன்று கோவை ஞானியை. என்னிடம் இருந்த நேரமோ ஒன்றரை நாட்கள். ஆனால் நேரமின்மையால் ஷாராஜையும் பார்க்க முடியாமல் ஞானியையும் சந்திக்க முடியாமல் திரும்பி விட்டேன். அதற்குப் பின் கோவிட் 19 லாக் டவுன்கள் ரயில்கள் ரத்து இப்போது கூட போக முடியாத நிலை. ஞானியின் எழுத்துகள் வாழும். அதனுடன் இனி வாழ்வேன்.

2 comments:

  1. ஜெகதீஷ் சார் வணக்கம்….
    உங்கள் அனுபவத்தை கொண்டு இன்றைய சாமானியனுக்கு வணிக ஊடக உலகின் மூலமான பாதிப்புகளையும் செய்தி ஊடகத்தின் அவலங்களையும் எழுத்து மூலம் பதிவிடுங்கள்…. உங்களால் முடியும் என்று நம்புகிறேன்…

    ReplyDelete
  2. சந்தோஷமாக இருந்தது. ஆயுள் ரேகையும் கெட்டி. இனி உங்கள் உயிருக்கு ஒரு ஆபத்தும் விபத்தும் பயமும் கிடையாது என்றான். அப்பாடி நிம்மதி. இதை நம்பி நாலஞ்சு கொலை செய்து பார்க்கலாமா என்றும் நப்பாசை எழுந்து அடங்கியது..... எப்பையோ நீங்கள் எழுதியது...இப்போது படிக்கிறேன்.... எழுத்தை பார்த்ததும் சிரிச்சுடேன்.... சில வலிகளுக்கு இடையே...

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...