Thursday 5 November 2020

இன்று வாசித்த புத்தகம் 11-15

இன்று வாசித்த புத்தகம் 11 நான் வடசென்னைக்காரன். பாக்கியம் சங்கர். நண்பர்கள் சூர்யராஜன்,மு.நந்தாவுடன் பாக்கியம் சங்கரை சந்தித்து பேசிய போதெல்லாம் அவர் இத்தனை நல்ல எழுத்தாளராய் வருவார் என நினைத்தது இல்லை .ஒரு முறை எழுத்தாளர் பிரபஞ்சனுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது பாக்கியம் சங்கரை குறிப்பிட்டு நன்றாக எழுதுவதாக கூறினார். அதன் பின்னர் பாவையர் மலர் இதழில் அவர் எழுதி வந்த தொடர் தேநீர் இடைவேளையின் சில பக்கங்களை படிக்க நேர்ந்தது .சங்கரிடம் மிடாஸ் டச் என்ற மந்திரம் ஜாலம் செய்யும் தங்க செங்கோல் இருப்பதை அறிந்துக் கொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை.ஆனந்த விகடனில் நான்காம் சுவர் தொடராக வந்த போது அவருக்காகவே விகடனை வாரம் தவறாமல் வாங்கினேன். பல அத்தியாயங்களைப் படித்து சிலவற்றை தவற விட்டேன். அது நூலாக வந்து பெரும் வரவேற்பை பெற்றதையும் அறிந்தேன்.நண்பர் நிமோஷினி விஜயகுமாரன் அழைப்பின் பேரில் பெரம்பூரில் நடைபெற்ற நூல் விமர்சனம் கூட்டத்தில் பார்வையாளனாக இரண்டு மணி நேரம் அமர்ந்து இருந்தேன்.காரணம் சங்கரின் எழுத்து ஏற்படுத்திய நம்பிக்கை. தொடர்ந்து என் அழைப்பை ஏற்று எனது இரண்டு சினிமா நூல்களின் வெளியீட்டு விழாவில் பாக்கியம் சங்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் கலந்துக் கொண்டு சிறப்பு செய்தார்.இதனிடையே எப்போதோ பழைய புத்தகக் கடையில் வாங்கிய பாக்கியம் சங்கரின் நான் வடசென்னைக்காரன் என்ற இந்தப் புத்தகம் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.பாவையர் மலரில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இது.ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளது.அசோகமித்திரன் கூறியது போல நன்றாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை சிறுகதைக்கு நிகரானது.அப்படித்தான் இந்த கட்டுரைகள் எடுத்ததும் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் வாசிக்க வைத்தன.இந்த தொகுப்பில் வடசென்னையின் வாசம் அதிகம்.அதில் சில மதுக்கடை வாசனைகளும் இல்லாமல்லி, சசிகலா,ஆனந்தி போன்ற சில பெண்களின் மேனி வாசமும் இருக்கிறது.கானா கலைஞனின் பாடலுடன் ஜேசுதாஸ் காதல் கீதங்களும் இருக்கின்றன. கவியரங்குகள்,நண்பர்கள், காதலிகள் வந்து போகின்றன. ஆத்மாநாமும் கலாப்ரியாவும் பாபுவும் ஏனைய கவிஞர்களும் வருவதால் இதில் இலக்கிய வாடையும் வீசுகிறது. தண்ணீர் கேட்டு போன வீட்டில் நாராயண குருவும் நித்ய சைதன்ய யதியும் விவாதிக்கப்படுகின்றனர் .தன் வாழ்வையும் தன்னை சுற்றிச் சூழ்ந்து சுழலும் மனிதர்களையும் பாக்கியம் சங்கர் உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி எழுதவும் செய்கிறார்.எழுத்து இயல்பாக வருகிறது. நான் படிக்கும்போது எந்தவித இடையூறையும் அது செய்யவில்லை.படித்து முடித்ததும் தபால்தலை மீது அழுத்தமாகப் பதித்த ஒரு முத்திரையாக மனத்தின் மீது அவர் எழுத்து பதிகிறது. அவர் அறிந்த வடசென்னையை நன்றாக அறிவேன்.அவர்கள் அந்நியர் அல்லர்.இனி சங்கரின் எழுத்தும் அந்த மனிதர்களுடனான உறவுக்கு ஒரு நட்புப் பாலமாக இருக்கும். -------- இன்று வாசித்த புத்தகம் 12 . A writer's commonplace book. என் அன்பு நண்பர் ஷாராஜ் Shahraj Strokes நாவல் எழுதுவது குறித்த ஒரு புத்தகம் படித்து முகநூலில் சிலாகித்து எழுதினார். ஆங்கிலத்தில் சுய முன்னேற்ற நூல்களை போல மிகவும் அதிகளவில் பேப்பர் பேக் பதிப்பாக கிடைப்பவை இத்தகைய போதனை நூல்கள் தாம்.இவற்றை நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன்.இலக்கியக் கோட்பாடுகள் அல்லது எழுத்தின் நுட்பங்கள் குறைவாகவும் எழுத்தை விற்பனை பண்டமாக்குவது எப்படி என்றும் கூறத்தக்க நூல்களே அதிகம் காணப்படும். அதே போன்று பொன்மொழி தொகுப்பு நூல்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான்.அபூர்வமாக சில நல்ல புத்தகங்களை காண முடிகிறது. அதில் இந்த நூலும் ஒன்று. எழுதும் கலை குறித்து உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கருத்துக்களை தொகுத்து தந்துள்ளார் இதன் ஆசிரியர் ரோஸ்மேரி ஃப்ரீட்மேன்.எழுத்தாளன் மனநோய் பிடித்த பிராணி என்றும் எழுதுவதன் வாயிலாகத்தான் தன் நோயைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். எழுதத் தெரியாத சாமான்ய மனிதர்கள் எப்படி தங்களது மனநோயை எதிர்கொள்கிறார்கள் என்று வியப்புடன் கேட்கிறார் ஒருவர்.எழுத்துக்கான ஊதியம் குறைவு உழைப்பு அதிகம் என்றும் ஓர் எழுத்தாளர் கூறுகிறார். நல்ல நாவல் குறித்த சில டிப்ஸ்களையும் இந்நூல் தருகிறது.அதில் ஒன்று... ஒரு நல்ல நாவலை எழுத நிறைய உத்திகளும் தொழில் நுட்பமும் தேவையில்லை. ஒரு எழுத்தாளர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். இன்று வாசித்த புத்தகம் 13 இன்று மழையால் பேருந்து பயணம். மதியம் எனக்குப் பிடித்த நேஷனல் ஆந்திர மீல்ஸ் சாப்பிட்டு அண்ணாசாலை ஹிக்கன்பாதம்ஸ் போனேன். தமிழ் நூல்களை தனி அறையில் வைத்துள்ளனர்.ஒவ்வொரு அலமாரியாகப் பார்த்தேன். அசோகமித்திரனின் செகந்திராபாத் சிறுகதைகள், புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, மு.மேத்தாவின் சோழ நிலா,மகுட நிலா, கண்ணதாசன் எழுதிய நூல்கள், ஆத்மார்த்தி யின் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற நூல்கள் வாங்கும் ஆவலைத் தூண்டிய போதும் இப்போது வேண்டாம் என தள்ளிப் போட்டேன். ஆங்கில நூல்கள் பிரிவில் நீண்ட காலமாகத் தேடின பாஷோவின் பயண நூல் வாங்கத் தூண்டிய போதும் வைத்து விட்டேன்.விலை ₹350 .நான் படிக்க விரும்பும் ஏராளமான நூல்கள் இருந்தன. விலை ₹ 499 599 799 1200 என இருந்தது. என் சக்திக்கு ஆகாது.ஏதும் வாங்காமல் திரும்பி விட்டேன்.ஒன்றரை மணி நேர விரயம்.புத்தக வாசிப்பு குறைந்து வரும் காலத்தின் பிரக்ஞையுடன் பேருந்துக்கு காத்திருந்தேன். ஹிக்கின்பாதம்ஸ் கடையில் முன்பிருந்த களை இல்லை.வாடிக்கையாளர் ஓரிருவர் தான் இருந்தனர். தொழிலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இது போன்ற கடைகள் மூடுவிழா காணும்.சில பல ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டடம் பழுதாகி மூத்திரம் அடிக்கும் இடமாக மாறிவிடும்.அல்லது வணிக வளாகமாக இடித்துக் கட்டப்படும். அப்படித்தான் எதிரில் உள்ள அலங்கார் திரையரங்கின் ஞாபகம் வந்தது. பல அருமையான இந்திப் படங்களை அலங்காரில் பார்த்து ரசித்திருக்கிறேன். பக்கத்தில் ஒரு டீ க்கடை இருக்கும். சமோசா டீ சாப்பிட்டு படம் பார்க்கப் போன நினைவுகள் மனதில் நிழலாடின.இப்போது அலங்கார் இருந்த இடம் அலுவலக வளாகமாகி விட்டது .அருகில் இருந்த டீக்கடை மறைந்து கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளன.பிளாட்பாரத்தில் இருந்த பழைய புத்தகக் கடைகளும் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. அண்ணாசாலையிலும் அதைச் சுற்றியும் இருந்த வெலிங்டன், பிளாசா,எல்பின்ஸ்டன்,கெயிட்டி,சித்ரா,பாரகன், ஜெயப்பிரதா, மிட்லண்ட் என பல திரையரங்குகள் இன்று இல்லை.நியு செஞ்சுரி புக் ஹவுஸ் இப்போது இல்லை.கீதா கபே வெளியே கிடைக்கும் ருசியான மலாய் லஸ்ஸி போன்ற எத்தனை சுவைகளையும் சந்தோஷங்களையும் இழந்து இந்த அண்ணாசாலை இப்படி வெறிச்சோடி காணப்படுகிறது .எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு எதை இந்த நகரத்தில் ஆக்கப் போகிறோம் என்று தெரியவில்லை .என் போன்ற எத்தனை பேருக்கு புத்தகம், சினிமா அவசியம்? செல்போனிலேயே வாழ்கிற ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டோம்.முன்பு தேவி வளாகம் சாந்தி கேசினோ என இரவுக் காட்சிகள் முடிந்து வெளியே வரும்போது சுடச் சுட டீயும் பன்பட்டர் ஜாமும் சாப்பிட்டு வரிசையாக நிற்கும் இரவு சேவை பேருந்துகளை நோக்கி மக்கள் செல்லும் போது அண்ணாசாலையில் ஒரு திருவிழா நடைபெறுவது போல இருக்கும். ஒரு பெருநகரம் தனது திருவிழாவை எங்கே தொலைத்து விட்டது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.அடடா அதில் நானும் என் இளமைக்காலமும் அல்லவா தொலைந்து விட்டோம்! இன்று வாசித்த புத்தகம் 14 Death the greatest fiction. Osho. மரணம் ஒரு கலை. வாழ்தலைப் போல இதையும் பழகுதல் வேண்டும் என்றார் சில்வியா பிளாத் என்ற பெண்கவி.அவர் இளம் வயதில் தற்கொலை செய்துக் கொண்டார். ஓஷோ மரணம் ஒரு புனைகதை என்கிறார். இது ஓஷோவின் ஆரம்ப கால தொகுப்பு நூல்களில் ஒன்று. பகவான் ரஜ்னீஷ் பெயரில் வந்தது. பல நூல்களில் ஆங்காங்கே மரணம் பற்றி ஓஷோ கூறியதை அவரது சீடர்கள் தொகுத்தனர். தன் தாத்தாவின் இறுதி கணங்களைப் பற்றி கூறுகையில் தனது கலக்கத்தைப் பார்த்து பாட்டி சொன்னாராம். கலங்காதே.. தாத்தா நீண்ட காலம் வாழ்ந்து விட்டார்.இதற்கு மேல் ஆசைப்பட முடியாது. போதும்...என்று கூறினார். தாத்தா இறக்கும் போது பாட்டி ஒரு பாடலையும் பாடியதாக கூறுகிறார் ஓஷோ.பிரிவுக்கு தனி அழகு உள்ளது. பிரிவு கவித்துவமானது.அதன் மொழியைப் பயில வேண்டும். அதன் ஆழம் வரை வாழ வேண்டும். அதன் பிறகு அதன் துன்பத்திலிருந்து ஒரு புதிய வகை ஆனந்தம் உருவாகும் என்று கூறுகிறார் ஓஷோ. வாழ்க்கையில் திடீரென மரணம் நுழைகையில் வாழ்க்கையே அர்த்தமிழந்து விடுகிறது. அது அர்த்தமற்றது என்ற உண்மையைத் தான் மரணம் உணர்த்துகிறது.உன் ஒருவனுக்கு மட்டும் அல்ல அந்த மரணம். உன்னுடன் தொடர்பில் இருந்த எல்லோருடைய மரணமும் அது என்று விளக்குகிறார் ஓஷோ.மரண பயம்தான் மிகப்பெரிய பயம் என்றும் உன் துணிவை முற்றிலும் அழிக்கும் என்றும் கூறுகிறார். தியானம் மூலம் மரண பயத்தை வெல்ல முடியும் என்றும் வாழ்க்கையை கணந்தோறும் வாழ்ந்து அனுபவிக்க தியானம் மூலமே சாத்தியம் என்றும் கூறுகிறார் ஓஷோ.கலவிக்கு முந்தைய காதல் லீலைகளை வாழ்க்கை என்றும் மரணம்தான் உச்சம் அதுதான் உடலுறவு என்றும் அவர் தெரிவிக்கிறார்.ஒருவர் சாகாமலேயே மரணத்தை உணர முடியும் என்றும் ஓஷோ கூறியுள்ளார். ஒரு மனிதன் உயிரை விடும் அந்த சில நொடிகள் முக்கியமாவை .கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் கதைதான். ----------- இன்று வாசித்த புத்தகம் 15 நடிகை ஸ்ரீ தேவியை நம்நாடு,பாபு போன்ற படங்களில் குழந்தை உருவில் பார்த்திருந்த போதும் 16 வயதினிலே என்ற பாரதிராஜா படத்தில் முதன் முறையாக பருவமங்கையாகப் பார்த்த போது தூக்கத்தில் ஸ்ரீ தேவியை கனவுகண்ட பல லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்.அந்த அழகு அந்த சிரிப்பு செந்தூரப் பூவே என்று வெண்ணிற ஆடையில் ஊஞ்சல் ஆடிய காட்சி மயக்கம் இன்று வரை தெளியவில்லை.தொடை தெரிய பாவாடை யை தூக்கி யும் மாராப்பை நழுவ விட்டும் டாக்டர் பலவந்தப்படுத்தும் காட்சியில் இடுப்பை காட்டி யும் ஸ்ரீ தேவி தெளித்த கிளாமர் மழையை முற்றும் துறந்ந பல நடிகைகளாலும் ஈடு செய்ய இயலவில்லை. அப்போதே தெரிந்து விட்டது இந்தப் பெண் பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என்று. நடுவயதில் திடீரென தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விடுவார் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மரணம் கொடூரமாக ஒரு கனவை பல லட்சம் கண்களில் இருந்து பறித்துச் சென்றது.ஸ்ரீ தேவி பற்றி சத்யார்த் நாயக் எழுதிய பயோகிராஃபி புத்தகம் ஒன்று பல முறை வாங்கத் தூண்டி விலை அதிகம் என்பதால் வாங்கவில்லை.இன்று என்னால் வாங்க முடியும் விலைக்கு ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார். இதன் பக்கங்களைப் புரட்ட ஒரு வண்ண தேவதையின் வசீகரமான திரைவாழ்க்கை கண்முன் காட்சிகளாக விரிகிறது.ஸ்ரீ தேவி நவரஸங்களையும் திரையில் வெளிப்படுத்திய நட்சத்திரம் என்கிறார் நூல் ஆசிரியர். அந்தக் கால சினிமா பத்திரிகைகளில் ஸ்ரீ தேவி பேசியவையும் அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியவையும் புத்தகம் முழுக்க பொங்கலில் கிடைக்கும் முந்திரி பருப்பைப் போல சிந்தி கிடக்கின்றன. இந்த சிறந்த புத்தகத்தில் இரண்டு குறைகள்.ஒன்று ஸ்ரீ தேவியின் படப் பட்டியல் இல்லை. பல அழகான படங்களும் இல்லை.இருக்கும் சில படங்கள் குட்டி ஸ்டாம்ப் சைசில் உள்ளன.நாலு வயதில் தொடங்கி ஐம்பத்து நான்கு வயதில் சாகும்வரை திரையுலக ரசிகர்களை தன் அழகால் வசீகரித்த தேவதையின் வண்ணமயமான படங்கள் எத்தனை எத்தனை ஆயிரம் இருக்கும் .இந்தப் புத்தகத்தில் கிடைக்கவில்லை.

1 comment:

  1. சின்ன வயசில ஸ்ரீதேவி/கமல்தான் எனது ஜோடி…. நீண்ட நாட்களாக அதை மாற்ற முடியவில்லை… பிற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீதேவியை என்றால் ஏற்கமுடியவில்லை…. நிஜவாழ்வில் இருவரும் அண்ணன் தங்கையா… நண்பர்களா…. காதலர்களா… யூகங்களும்… கிசுகிசுக்களும் இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த காட்சிகளை அழகியல் படுத்திய பாலுமகேந்திரா ஞாபகத்திற்கு வருகிறார்….. https://youtu.be/SwFq7wVBKfc

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...