Thursday 5 November 2020

இன்று வாசித்த புத்தகம் 7- 10

இன்று வாசித்த புத்தகம் 7 குரல்களைப் பொறுக்கிச் செல்பவன். கவிஞர் ஆசு. ஆ.சுப்பிரமணியன் என்ற ஆசுவை பல வருடங்களாகத் தெரியும். ஆறேழு புத்தகங்கள் எழுதினார் என்றும் தெரியும்.என் புத்தக பரண்களில் அவர் நூல்கள் இருக்கும் என்றும் தெரியும்.ஏன் இத்தனை காலமாக ஆசுவைப் பற்றி ஓரிரு வரிகளைக் கூட எங்கேயும் குறிப்பிடவில்லை என்று வெட்கினேன். மன்னியுங்கள் ஆசு உங்கள் எளிமையில் ஏமாந்து விட்டேன்.ஆசுவின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிய போது என் முன்முடிவுகள் தகர்ந்தன.சிறப்பாக தன்னை வெளிப்படுத்திய ஒரு கவிஞனை அடையாளம் கண்டேன்.புத்தகத்தில் நுழையும் முன்பு கவிஞர் ஞானக்கூத்தன் வேறு மனம் திறந்து ஆசுவுக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் அளித்து முன்னுரை எழுதியுள்ளார். எனவே மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு கவிதையாக கடந்து சென்றேன்.ஆசுவின் கவிதைகள் அவரைப் போலவே எளிமையாவை.சில கவிதைகளில் சொல் விரயம் தெரிகிறது. சில கவிதைகள் சொல்லை ஆள்கின்றன. இதற்கு காரணத்தை ஆசுவே தன் முன்னுரையில் கூறுகிறார். மொழியின் வேருக்குள் என் கவிதை நீளுகிறதா என்றால் நான் கொண்டிருக்கும் சமூக உணர்வுள்ள பொறுப்பு மிக்க கவிதைக்கு எதுவரை மொழி நீளுகிறதோ அதுவே போதுமானது. மிகச்சிறந்த பார்வை ஆசு. கவிதையைப் பார்க்காமல் அவன் யார் எந்த சாதி எந்த குழு என்று பார்க்கும் தமிழ்ச்சூழலில் ஆசு போன்றவர்கள் அடையாளம் காணப்படும் நாள் தாமதமாகலாம்.ஆனால் கட்டமைக்கப் பட்ட பிரம்மாண்டங்கள் சரிந்து விழும் போது ஆசு போன்ற கவிஞர்கள் கவனம் பெறுவது நிச்சயம். --------- இன்று வாசித்த புத்தகம் 8 மகரந்தத் துகள்கள் கவிஞர் வானவன் 2002ம் ஆண்டு எழுதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. 18 ஆண்டுகளுக்குப் பிறகு கவிதை குறித்த மதிப்பீடுகள், ஹைகூ குறித்த பார்வைகள் நிறையவே மாறி விட்டதை வானவனும் உணர்ந்துக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் . இது அவர் கவிதை களை விமர்சிக்கவோ தலையில் வைத்து கொண்டாடவோ அல்ல. நல்ல வரிகள் பலவற்றை இந்நூலில் கண்டேன்.எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எனக்கும் என் வீட்டாருக்கும் உதவி வேண்டுமா எனக் கேட்டு முகநூல் வழியாக தொடர்பு கொண்ட அவரது தொண்டு உள்ளத்தையும் அன்பையும் நான் மறக்கவில்லை. இலக்கியக் கூட்டங்களில் விதைகளை இலவசமாக விநியோகம் செய்வதையும் பார்த்து மகிழ்ந்தவன் நான் . நண்பர் பா.உதயகண்ணன் கூறியது போல வானவனிடமிருந்து மேலும் சிறப்பான கவிதைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இரவு பயணம் துணைக்கு நிலா என்று ஹைகூவை நெருங்கிய கவிஞர் வளர என் வாழ்த்துகள். ----------- இன்று வாசித்த புத்தகம் 9 அப்ராவின் உப்பு நீர் . அன்பாதவனின் பெயர் நன்கு அறிந்த ஒரு பெயர்தான்.சௌந்தர சுகன் கல்வெட்டு பேசுகிறது போன்ற சிற்றிதழ் களில் வந்த ஆக்கங்கள் மூலமாக அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறேன்.அவருடைய இந்த கவிதை நூல் இன்னும் அதிகமாக அறியச் செய்தது.முன்னுரையில் வதிலை பிரபா கூறியது போல அன்பாதவனின்எழுத்து நடை ஒரு தேர்ந்த பயணியின் தெளிவான நடை என்று எனக்கும் தோன்றியது. அவர் குறிப்பிட்ட கவிதை வரிகளை நானும் விரும்பி னேன் . உலகின் மிக உயர்ந்த கான்கிரீட் சிகரத்திலிருந்து நோக்குபவனின் கண்களில் தேங்கிய ஏக்கம் கடல்தாண்டி தெரியுமோ காதலினை வதனம் என்ற வரிகள் சிறப்பு. கோலியாத் பறவை,பைரவர்கள் போல சில கவிதைகள் அபூர்வமாக முழுமையான கவிதைகளாக மணம் வீசுகின்றன. இன்று வாசித்த புத்தகம். 10 உதிரும் இலை...யாழினி முனுசாமி கவிதைகள். நண்பர் முனுசாமி ஒரு பேராசிரியர். கவிஞர். முரண்களரி படைப்பகம் நடத்தி வருபவர். அவருடைய முதல் கவிதை நூல் 2005ம் ஆண்டு கனிமொழியின் முன்னுரையுடன் வந்துள்ளது. தவற விட்டேன்.அண்மையில் பழைய புத்தகக் கடையில் அவரது உதிரும் இலை கிடைத்தது.அன்பினால் நன்றி என்ற நீண்ட பட்டியலில் என் பெயரும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியம். நான் அவருக்கு என்ன செய்துவிட்டேன்? கவிதைகளில் ஆங்காங்கே கணவனாக,காதலனாக,இயற்கையை நேசிப்பவனாக ,சாதிய எதிர்ப்பாளனாக பல பரிணாமங்களைக் காட்டும் கவிஞர் தன் வயக் கவிதைகள் மூலமும் மனதை நெருங்கி வருகிறார்.வகுப்பறைகளுக்கு மட்டும் வயதாவதில்லை என்பன போன்ற பல வரிகளை ரசிக்க முடிகிறது .இத் தருணத்தில் இக்கவிதை சற்று கூடுதலாகப் பொருந்தும். எதிரி நயவஞ்சகமாய்ப் போர்த் தொடுக்கையில் ஒளிந்து கொள்ளுங்கள் உன் சகோதரனைக் காட்டிக் கொடுத்தாவது நீங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள்.எதிரி தரும் பெரும் பரிசுப் பொருள் கொண்டு வளப்படுத்திக் கொள்ளுங்கள்.பிறகு பேசுங்கள் நீயும் நானும் சகோதரன் ஒரே இனம் ஒரே நிறம். ..

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...