Sunday 10 July 2016

ஜெயமோகனின் திசைகளின் நடுவே சிறுகதைகள் விமர்சனம்

ஜெயமோகன் சிறுகதைகள்

திசைகளின் நடுவே...



 

ஜெயமோகனின் சிறுகதைகள் தமிழ்ச்சூழலுக்கு புதிய காற்றை கொண்டு வந்தன. இது கேரள மண் மணத்துடன் குமரிமாவட்டத்து ஈரத்தை சுமந்த காற்று.சிக்கலும் துயரமும் மிக்க வாழ்வின் கணங்களை மிகவும் நுணுக்கமாக அணுகும் முறைதான் அவரது எழுத்தின் உத்தியாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும் அந்த கதை நடக்கும் இடம் , பாத்திரம்,காலம் ஆகியவற்றை மீறிய ஜெயமோகனின் தேடல்கள். அவரே குறிப்பிடுவதைப் போல் அரபுக்கடலின் ஓசைகளில் சொந்த ஊர் நதியின் சலசலப்பை அடையாளம் காணும் நிகழ்வுகள்.

கதைக் கலையை இப்போது யாரும் மதிப்பதில்லை. சிறுகதைத் துறையில் சாதனையாளர்களாக கருதப்படுகிற அசோகமித்திரனும், லா..ரா.வும், ஜெயகாந்தனும், .மாதவனும், பிரபஞ்சனும், சுஜாதாவும் வாசகர்களுக்கு சுவையான ஈடுபாடு அளித்து வந்தனர். ஆனாலும் நாவல்களில் கவனம் செலுத்திய பல எழுத்தாளர்கள் சிறுகதைகளை கைவிட்டனர்.

கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதாக கூறி வந்த சா.கந்தசாமி கூட கதையம்சத்தை பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

புதுமைப்பித்தன், கு..ரா, .பிச்சமூர்த்தி, மௌனி, ஆதவன் போன்ற பல எழுத்தாளர்களின் கதைகள் இன்றும் விரும்பப்படுவதற்கு காரணம் இந்த கதையம்சம்தான். ஜெயமோகனும் கதை சொல்லலை விட்டு விலகாமல் தனது புனைவை கட்டமைக்கிறார். அக உலகமும் புற உலகமும் சந்திக்கிற கணங்களை தனது படைப்புலகில் செலுத்துகிறார் ஜெயமோகன். கதையிலிருந்துநழுவாமல், தன் தத்துவார்த்த தேடலை நோக்கிய பயணத்தையும் மேற்கொள்கிறார்.இதனால் பல சிறந்த சிறுகதைகளை அவரால் படைக்க முடிந்தது.வாழ்க்கையைக் குறித்த ஆழமான மன அலைக்கழிப்புகளுடன் பல கேள்விகளை இக்கதைகள் உருவாக்குகின்றன.

ஜகன்மித்யை இலகுவான கதைகளைப் படித்துப் பழகிய வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடும். விஞ்ஞானத்தையும் வாழ்வியலையும் கலந்த நடை கொஞ்சம் வாசகனை தடுமாறச் செய்தாலும் வாசிப்பு பயிற்சி மிக்க வாசகன் இத்தடையை எளிதாக கடந்து செல்கிறான். எட்டர்னல் ரெக்ரன்ட் நம்பூதிரி தான் சாகும்போது தனது வாழ்க்கை வீணாகிவிட்டதாகப் புலம்புவதும் கூட தானே தன் தியரிக்கு முரண்படும் விசயம்தான். ஆனால் அதை நம்பூதிரி உணரவில்லை.அதுவரை நம்பூதிரியை மறுத்து வாதிட்ட கதையின் நாயகனான ஆசிரியர், மனிதாபிமானத்தால் அவரை அங்கீகரிப்பதும் மீண்டும் எப்போதும் நிகழாத ஒரு கண நிகழ்வு.அதைத் தொட்டதனாலேயே தன் கோட்பாட்டுத் தெளிவில் மட்டுமின்றி கதையிலும் வெற்றி பெற்று விடுகிறார் ஆசிரியர்.

இன்று இதை விட சிறப்பான கதை லங்காதகனம்.அதிகம் அறியப்படாத கதகளியைப் பற்றி இதில் பேசுகிறார். ஒரு கதகளி கலைஞனின் கலை ஈடுபாட்டைப் பதிவு செய்யும் கதை இது.ஒரு மலையாளக் கதையின் மொழிபெயர்ப்பு கதை போல் தெரிந்தாலும், சிறந்த கதைதான். இக்கதை கொஞ்சம் புராணத்தையும் தொட்டுக் கொள்கிறதுஆசானின் கலைப்பித்து .லங்கா தகனம் ஆனந்த நாயர் என்றே என்னைச் சொல்வார்கள் எனும் அளவுக்கு கலையுடன் ஒன்றிப் போனவர்.அனுமனாக அவர் கதகளியில் வேடம் கட்டுகிறார். அனுமன் ஒரு குரங்கு. ஆனால் அவனை ஒரு கோமாளியாக்கி விட்டார்கள். ராமனுடைய காரியதரிசி ஆக்கிவிட்டார்கள் என்று வருத்தப்படும் ஆசான், கலைக்காக லங்கா தகனம் காட்சியில் நிஜமாகவே தகனம் செய்து தன்னை எரி்த்துக் கொள்கிறார். ஒஷோ கூறுவது போல் ஆடுபவரும் ஆட்டமும் ஒன்றாகி விடும் தருணம். அது ஒரு மர்ம நிலை. தியானமாக கலையை உயர்த்துகிற ஆனந்தத் தாண்டவம். கலை வித்தையாக காசு பண்ணும் கருவியாக மாறிய காலக்கட்டத்தில் தன்னையே கலைக்காக ஜோதியாக்கி எரிக்கிற கலைஞர்களை மேன்மைப்படுத்தும் கதை இது.

கொஞ்சம் அசந்தாலும் நாவலாகி விடக்கூடிய பிற கதைகளைப் போல் அல்லாமல் உருவ அமைதி கொண்ட கதை பல்லக்கு. எல்லாக் கதைகளிலும் தானும் தன் அறிவுமாக முன்வந்து கதாபாத்திரங்களை சில நேரம் பின்னுக்குத் தள்ளுகிற ஜெயமோகன் தன்னை அடக்கி வைத்து கதாபாத்திரங்களை அவரவர் இயல்பில் நடமாடச் செய்ய வேண்டும். அது தான் திசைகளின் நடுவே தொகுப்பை படிக்கும் போது ஏற்படும் ஒரு எண்ணம்.

(கதிரவன் இதழில் பிரசுரமானது.)



 


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...