எம்.ஜி.ஆர். போல் செல்வாக்கு இல்லாதவர், சிவாஜி கணேசனைப் போல் நடிப்பாற்றலில் உச்சங்களைத் தொட்டவரில்லை. தமது காலத்தில் கோலோச்சிய ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்ததில்லை.ரவிச்சந்திரனைப் போல் ஸ்டைலிலோ நடனத்திலோ பேர் வாங்கியவரில்லை. ஆனால் இத்தனை குறைகளையும் மீறி ஜெய்சங்கர் என்ற நடிகரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர் என்பதுதான்.
poor man's MGR என்றும் ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். நீதிபதியின் மகனாக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய். சுப்பிரமணியம் சங்கர் என்ற பெயரைத் திரைப்படத்துக்காக ஜெய்சங்கர் என்று மாற்றிக்கொண்டார். இயக்குநரும் நடிகருமாக இருந்த சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவில் பணியாற்றிவந்தவர், ‘இரவும் பகலும்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மூன்றாவது இடம்
‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ என்ற பாடலால் பட்டி தொட்டியெல்லாம் ஜெய்சங்கர் பிரபலமானார். அதே படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய ‘இரவும் வரும் பகலும் வரும்’ என்ற பாடலும் ஜெய்சங்கர் என்ற நடிகரை வாழ வைத்தது. ‘தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்’ என்று பாடிய போது எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு அடுத்த இடத்தை எளிதாக ஜெய்சங்கர் பெற்றுவிட்டார். ‘பொம்மலாட்டம்’, ‘யார் நீ’, ‘பூவா தலையா’, ‘நீ’, ‘வைரம்’, ‘செல்வமகள்’, ‘டீச்சரம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘கண்ணன் வருவான்’, ‘மன்னிப்பு’, ‘அவசர கல்யாணம்’, ‘பட்டணத்தில் பூதம்’ போன்ற படங்களில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் மென்மையான காதல் உணர்வுகளை ஜெய்சங்கர் அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
ஆனாலும் சண்டைக் காட்சிகள் மிக்க அந்தக் காலத்து ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் ஜெய்சங்கருக்குத் தனி அந்தஸ்து பெற்றுத் தந்தன. ‘சிஐடி சங்கர்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘கங்கா, ஜக்கம்மா’, ‘ஜம்பு’ , ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஒரே தந்தை’, ‘காலம் வெல்லும்’ போன்ற படங்கள் ஜெய்சங்கரை ஆக் ஷன் ஹீரோவாக்கின.
வசூல் நாயகன்
நூறு படங்களைக் கடந்தபோதும் அவர் நடித்த வண்ணத்தில் வெளியான படங்கள் மூன்றோ நான்கோ என்று இருந்த நிலை. காரணம் அவர் படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தன . தயாரிப்பாளர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக விளங்கினார் ஜெய்சங்கர். கருப்பு வெள்ளைப் படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பிறகு இத்தனை வெற்றிப்படங்களைக் கொடுத்த சாதனையாளர் ஜெய்சங்கர்தான்.
தமிழ்நாட்டின் ராபர்ட் டி நீரோவாக கௌபாய் படங்களில் நடித்த ஜெய்சங்கர் இறுக்கமான முகத்துடன் எதிரிகளைப் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்தினார். ஜெய்சங்கர் நடித்ததில் மிகச்சிறந்த படம் ‘கங்கா’ என்றுதான் தோன்றுகிறது. நான்கு வில்லன்களைக் கொன்று சவக்குழியில் புதைக்கும் அந்த வன்மம் மிக்க ஜெய்யின் முகம் நீண்ட காலம் நினைவிலாடிக் கொண்டிருந்தது. இந்தப் படங்களில்தான் தமிழ்நாட்டின் சோபியா லாரன்களும் ராக்வெல் வெல்ச்சுகளுமாக ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா ( நடிகை மீனாவின் அம்மா) போன்ற நடிகைகள் முதல் முறையாகத் தமிழ் சினிமாவில் படுகவர்ச்சியாக நடித்தனர்.
பெண் ரசிகர்கள் இழப்பும் முரண்பாடும்
இதுபோன்ற மசாலா படங்களே ஜெய்சங்கரின் இமேஜைக் கெடுத்துவிட்டன. பெண்கள் அவர் படங்களை நிராகரிக்கத் தொடங்கினர். ‘குழந்தையும் தெய்வமும்’ போன்ற படங்களில் கிடைத்த ரசிகர்களை ஜெய் இழக்கத் தொடங்கினார். இதன் காரணமாக அவர் கலர் படங்களில் நடித்தாலும் கூட ‘எடுப்பார் கைப்பிள்ளை’, ‘டாக்சி டிரைவர்’, ‘மேளதாளங்கள்’, போன்ற பல படங்கள் நிராகரிக்கப்பட்டன. ‘மேயர் மீனாட்சி’ , ‘துணிவே துணை’ போன்ற சில படங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் ஜெய்சங்கரால் தாக்குப் பிடிக்க முடிந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் வருகையும் ஜெய்சங்கர் பின்னடைய ஒரு காரணமாக அமைந்தது. ‘காயத்ரி’ படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், எழுத்தாளர் சுஜாதா கதையெழுதிய இந்தப் படத்தில் ஜெய்சங்கரை விடவும் கூடுதலாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் (?) படவாய்ப்புகளை இழந்த ஜெய்சங்கர், திமுக தலைவர் கருணாநிதியின் பக்கம் சாய்ந்தார். ‘வண்டிக்காரன் மகன்’ போன்ற படங்கள் அவரை மேலும் பின்னுக்குத் தள்ளிவிட்டன. சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினி, ஏ.வி.எம். சரவணன் தயவில் வில்லனாக நடிக்க ஜெய்சங்கர் ஒப்புக் கொண்டார். ‘முரட்டுக்காளை’ படத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டிவிட்ட ரஜினியுடன் வி்ல்லனாக நடித்த ஜெய்சங்கர் தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ‘ஊமை விழி’களில் தமது வயதுக்கேற்ற பத்திரிகையாளர் வேடத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
அலேக் ஆனந்த் படத்தில் விஜயலலிதா, ஜெய்சங்கர்
வள்ளல் நெஞ்சம்
61 வயதில் காலமான ஜெய்சங்கர், கடைசி வரை நடித்துக்கொண்டுதான் இருந்தார். விஜயகுமார், ஜெய்கணேஷ் போல் ஹீரோவாகத் தோன்றி வெகு விரைவாக வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் மாறியவர் அல்ல ஜெய். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் கதாநாயகன்தான். இன்றும் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளன.
சீனியர்களை ஓரம் கட்டுவதும் நேற்று அடித்த காற்றில் முளைத்த காளான்கள் மேலே வருவதும் எல்லாத்துறைகளிலும் நடப்பதுதான். ஆனால் ஜெய்சங்கரை ஓரம் கட்டியவர்கள் கமலும் ரஜினியும்தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற போட்டிகளைச் சமாளித்த ஜெய்யால் வயது முதிர்வு காரணமாக கமல் , ரஜினியின் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. இரு வல்லவர்களிடம் ‘வல்லவன் ஒருவன்(ர்)’ பின்னடைவு கண்டார்.
ஆயினும் தனித்துவம் மிக்க நடிப்பாலும் தோற்றத்தாலும் கபடமற்ற வாழ்க்கையாலும் உதவிகள் தேவைப்படும் பலருக்கும் அள்ளித்தந்த வள்ளல் நெஞ்சம் கொண்டவராக இருந்ததாலும் ஜெய்சங்கர் என்ற மனிதரும் கலைஞரும் உயர்ந்து நிற்பதைக் காண முடிகிறது.

-------------------------------------------------------------------