Sunday 10 July 2016

சு.வேணுகோபால் கூந்தப்பனை விமர்சனம்

சு.வேணுகோபாலின்

கூந்தப் பனை - குறுநாவல்கள்

செந்தூரம் ஜெகதீஷ்

சமகாலப் படைப்பாளிகளில் கவனத்துக்குரியவர் சு.வேணுகோபால். அவருடைய கூந்தப்பனை என்ற புத்தகம் அடர்த்தியான கதைகளுடையது.கண்ணிகள், வேதாளம் ஒளிந்திருக்கும், அபாயச்சங்கு, கூந்தப்பனை ஆகிய நான்கு குறுநாவல்கள் அல்லது நீண்ட சிறுகதைகள் கொண்ட இந்த நூலி்ல் நான்கு கதைகளும் தனி்த்தனி விஷயங்களை எடுத்துக் கொண்டாலும், அவற்றின் பூகோளம் திண்டுக்கல், பழனி, மதுரை, செங்கிப்பட்டி எனச் சுழல்கிறது.மண்ணையும் மண் சார்ந்த மனிதர்களையும் மிக எளிமையாக அவர்களின் ஆசைகளையும் அக்கறையுடனும் அன்புடனும் அணுகுகிறார் ஆசிரியர். வேணுகோபாலுக்கு எழுத்துத் தேர்ச்சியாகிஇருப்பது இக்கதைகள் மூலம் தெளிவாகிறது. கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மையும் எழுத்தின் சரளமும் கதைகளின் பலம். நிறைய கதைகளுடைய ஒரு கிழவனைப் போல வலம் வருகிறார் வேணுகோபால்.

கண்ணிகள் விவசாயக் கடன் அதன் கந்துவட்டி குறித்த பதிவு.தோட்டத்தை எழுதித்தர நேர்ந்திடும் போது,ரெங்கராஜன் படும் வேதனை எழுதப்படாத வரிகளூடாக கதையை நிறைவு செய்கிறது.

வேதாளம் ஒளிந்திருக்கும் கதையில் ஈஸ்வரியின் கையகலக் கனவுகளைக் கூடப் பொருட்படுத்தாமல் காது தோடு கிழிய அடிக்கும் விஸ்வநாதனின் ஆதிக்கம் குறித்தது. ஒரு கணம் நின்று நிதானித்துப் பேசினால் தீரக்கூடிய பிரச்சினைகள் ஏராளம். ஆனால் அந்த ஒரு கணம் தான் யாருக்கும் வாய்ப்பதில்லை. பேசப்படாத சிக்கல்கள் பெரிதாகிப்போகின்றன. சிக்கல்கள் வலுத்து தாம்பத்திய வாழ்க்கையில் மட்டுமின்றி சமூகத்திலும் இது ஆதிக்கமாகவும் வன்முறையாகவும் பரவுகிறது.

ஆதிக்கத்தின் மேல் நின்றுதான் நம்மால் அன்பைச் செலுத்த முடிகிறது.விடாப் பிடியான மாய கௌரவ தடிமன் அது. இல்லையென்றால் ஆண்களும் இல்லை என்ற பின்னல் கொடி எங்கும் வியாபித்துக் கிடக்கிறது.அந்தப் பின்னலின் வேரைக் கண்டுதான் கேள்வி கேட்கிறாள் ஈஸ்வரி.

அபாயச்சங்கு சிக்கலாகிப் போகும் உறவுகளின் கதை. சுரேந்திரனிடம் வேலை இருந்த போது கோகிலாவை நெருங்கிப் பழக விட்ட உறவினர்கள், அவன் வேலையை இழக்கும் போது,அவளை விலக்கியது என்ன நியாயம் என்று சுரேந்திரன் கேட்டாலும் அவனுக்கும் ரத்னமணிக்கும் வயதை மீறிய காம உறவு ஏற்பட்டது என்ன நியாயம் என்று அவனுக்கும் உறைக்கத்தான் செய்கிறது.எனவே விஷமருந்தி உயிரை மாய்க்கிறான்.

கூந்தப்பனை அற்புதமான கதை. உடலுறவில் மனைவியை திருப்திப்படுத்த முடியாதவனின் அலைக்கழிப்பு, தியாகியைப் போல மாறிமனைவியை பாலுச்சாமி என்ற நண்பனுடன் இணைப்பது கதையின் தன்மையை மிகவும் சிதைத்து விடுகிறது.அனாவசியமான தியாகம் போல. விவாகரத்து, தற்கொலையை விட இது மேல்தான் என்பதான சமாதானம் செய்வதை விட வேறு வழியில்லை.எனினும் காமம்தான் இல்லறத்தின் மீது ஆட்சி செலுத்துகிறது. இந்த தெளிவு அவனுக்கு அவன் மனைவி நண்பனுடன் இணைந்த பிறகுதான் நிதர்சனமாகப் புரிகிறது.அம்மிக்கல்லைக் கூட நகர்த்த முடியாத தனது சொத்தை பலம்,கூந்தப்பனை மரம் போல காய் தராத மலட்டுத்தனம், தகிக்கும் காமத்துடன் தகிக்கும் தனிமை மனம் இந்த வாழ்வு என்ன வாழ்வு? ஊரை விட்டு ஓடி வரும் சதீஷ் லாட்ஜில் கிழவனிடம் ஞானோதயம் பெறுவதும், மீண்டும் இளையராஜா பாடல் போன்ற எத்தனையோ மகிழ்ச்சிகளை தனக்காக மீட்டுக் கொள்வதுமாக கதை முடிகிறது.முக்கியமான கலவி சந்தோஷம் பெறவில்லைதான் என்றாலும் என்ன...இயற்கை இழைத்த அநீதிக்கு வாழ்வில் யார் மீது வழக்குப் போட முடியும்? வாழ்வு என்பது அதுமட்டும்தானா?

தமிழில் மிகவும் வலிமையாக எழுதப்பட்ட மனவியல் கதைகளில் கூந்தப்பனைக்கு முக்கிய இடம் உண்டு.மிகவும் நுட்பமாக எழுதப்பட்ட இக்கதையைப் படிக்கிற நிமிடங்களில் வாசகனின் மீது ஒரு இடியைப் போல் இத்துயரை இறக்கி வைப்பதில் சு.வேணுகோபால் அபாரமான வெற்றி பெறுகிறார்.

(கூந்தப்பனை வெளியீடு தமிழினி பதிப்பகம் சென்னை)

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...